ஒரு வாழ்க்கை – பார்பரா வின்டன்
ONE LIFE – Barbara Winton
(The Life of Sir Nicholas Winton) ———————————
ஒரு புத்தகம் / கதை, சரித்திரம், நாவல் ஒரு ப்ரம்மாண்டமான திரைக்கதைக்கும் படத்திற்கும் அடிகோலியது என்பது பெரிய செய்தியல்ல. பல புத்தகங்கள் இவ்வாறு வெற்றிகரமான திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் மிகச்சில உண்மைக்கதைகளே விறுவிறுப்பான திரைக்கதைகளாக வெளிவந்து மக்களை பச்சாதாபத்திலும், இரக்கத்திலும், பிரமிப்பிலும் ஆழ்த்தியுள்ளன. போர்க்களத்தில் வாளெடுத்து வீசிப் பகைவர்களைக் கொன்று வெற்றிவாகை சூடுவதொரு வகை. ஆனால், கத்தியின்றி, ரத்தமின்றி, முகமும், பெயரும் தெரியாத பலருக்காக மனிதாபிமானச் செயல்களில் ஈடுபடுபவர்களை என்னென்று அழைப்பது? எவ்வாறு புகழ்வது?
அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. வழக்கமாக திரைப்படங்களால் ஈர்க்கப்படாத ஒரு மனிதப்பிறவி உண்டென்றால் அது நான்தான். ஆனால் நீண்ட விமானப் பயணங்களில் பொழுதைக் கழிக்க என்ன செய்வது? நல்ல திரைப்படங்களைத் தேடுவதுண்டு. ‘ஆன்தனி ஹாப்கின்ஸ்’ (Anthony Hopkins) எனும் பெயரைக் கண்டதும் (அவர் பிரமாதமான நடிகர் என்பதனால்), சம்பந்தமேயில்லாத ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் துணிந்தேன். அதுவே இதுவாகும். இது ஒரு புத்தகமாக வெளிவந்து பின்பு திரைப்படமாகவும் ஆயிற்று என அறிந்தேன்.
உண்மை வாழ்வோடு பின்னிப்பிணைந்த பல கதைப் புத்தகங்களை விடிய விடியப் படித்து அவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்து, பின் திரைப்படங்களாகவும் பார்த்து பிரமித்ததுண்டு. டாக்டர் ஷிவாகோ, Gone with the Wind ஆகியன இவற்றில் சில. ஆனால் இந்தப் படமோ வேறு எங்கோ நிற்கிறது.
கதைச்சுருக்கம் இதுதான்: இது ஸர் நிக்கோலஸ் வின்டன் என்பவரின் உண்மை வாழ்க்கைக் கதை! இவர் யூத இனத்தைச் சேர்ந்த 669 சிறு குழந்தைகளை, நாஸிகள் – கைப்பற்றிக் கொண்ட செக்கோஸ்லவாகியாவிலிருந்து இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் காப்பாற்றினார். காப்பாற்றி இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள தத்துப் பெற்றோரிடம் அடைக்கலப்படுத்தினார். இக்குழந்தைகளில் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோரைப் பின்பு பார்க்கவேயில்லை; காப்பாற்றப்படாத குழந்தைகள் ஹிட்லரால் கொலை செய்யப்பட்டனர். இந்தப் புத்தகமும் திரைப்படமும் அவர் வாழ்வைப் பற்றியதாகும்.
1938-ல் ‘நிக்கி’ தனது 29ம் வயதில் பனிச்சறுக்கு விடுமுறையை ரத்து செய்துவிட்டு அடுத்த ஆண்டு முழுவதையும் நூற்றுக்கணக்கான யூதக்குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றி அவர்களுக்கு பாதுகாப்பான தத்துப் பெற்றோரை இங்கிலாந்தில் அளிப்பதெனத் திட்டமிடுவதிலும் அதனை நிறைவேற்றுவதிலுமே கழித்தார். கிட்டத்தட்ட 6,000 பேர் அவரால் இன்று உலகில் உயிருடன் இருக்கிறார்கள். இவர் பங்குச்சந்தையில் ஒரு ப்ரோக்கராக வேலை பார்த்தவர்!
ஒரு தனி மனிதனை இவ்வாறு ஒரு இயலாத சாதனையைச் செய்யத் தூண்டியது எதுவாக இருக்கும்? இவருடைய வாழ்க்கை வரலாறு கூறும் பாடம் ‘எந்த ஒரு தனி மனிதனும் மனிதாபிமானத்துடன் முயன்றால் இந்த உலகின் வழிமுறைகளையே மாற்றலாம்’ என்பதுதான்.
‘எதனையும் செய்துமுடிக்க ஒரு வழி கட்டாயம் உண்டு’ என்பதே இவருடைய கொள்கை. இவர் காப்பாற்றிய குழந்தைகளில் பலர் பிற்காலத்தில் பெரிய பதவிகளை வகித்து உலகளவில் அறியப்பட்டவர்கள்.
முக்கியமாக, வடக்கு அயர்லாந்தின் அண்டர் செக்ரடரியாக இருந்த அல்ஃப் டப்ஸ் (Alf Dubs) இவர்களுள் ஒருவர். 6 வயதுச் சிறுவனாக இருந்த அல்ஃப் இந்தச் சிறுவர் புகைவண்டி மூலம் இங்கிலாந்தை அடைகிறார். அதிர்ஷ்டவசமாக, யூதரான இவரது தந்தையும் அங்கிருக்கிறார். சில மாதங்கள் கழித்துத் தாயும் இவர்களுடன் வந்து இணைந்து கொள்கிறார்.
வீரா கிஸ்ஸிங்க் (Vera Gissing) எனும் எழுத்தாளப் பெண்மணி மற்றொருவர். இவர் தனது குழந்தைப்பருவ நிகழ்வுகளை “குழந்தைப்பருவத்தின் முத்துகள்’ (Pearls of Childhood) எனும் பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
இப்போது நிக்கோலஸ் வின்டனைப் பற்றிப் பார்க்கலாம். இவரும், இவருடைய சில நண்பர்களும் செக்கோஸ்லவாகியாவில் நாஸிகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றனர். ஒரு ஹோட்டலில் தங்களது ஆபீஸை இயக்கினர். நிக்கோலஸ் குழந்தைகளுக்கான ‘விஸா’க்களை வாங்குவதிலும் அவர்களை புகை வண்டிகளில் கொண்டு ஏற்றுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டார். இவருடைய தாயும் இவருக்கு இந்தப் பணியில் உதவி செய்தார்.
நீண்ட நாட்களின்பின் இந்த உலகப்போரும், ஹிட்லரும் நாஸிப்படைகளும் சரித்திர நிகழ்வாகி விட்டபின்பு, நிக்கோலஸ் தனது சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த முதுமையில் பி. பி.சி (BBC) அவரை ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கிறது. அவரது மனைவி ‘இது உருப்படாத நிகழ்ச்சி’ எனக்கூறி வர மறுக்கிறார். ஆகவே நிக்கோலஸ் தான் மட்டும் செல்கிறார். அங்கு நிகழ்ச்சி இனைப்பாளர் நிக்கோலஸ் இளமையில் செய்த (யூதக் குழந்தைகளைக் காப்பாற்றிய) செயல்களை விவரித்துப் பின் அவரை வாழ்த்த அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப்பெண்மணியை அழைக்கிறார். அவர் முன்பு நிக்கோலஸால் காப்பாற்றப்பட்ட ஒரு குழந்தை. கண்களில் நீர் பெருக நிக்கோலஸும் அப்பெண்மணியும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கின்றனர். இவ்வாறே அங்கு அமர்ந்துள்ள அத்தனை பார்வையாளர்களுமே நிக்கோலஸினால் காப்பாற்றப்பட்ட குழந்தைகள். நிக்கோலஸ் வின்டனுக்கு இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் அவர் சந்தித்த பலரும் அவருடைய இறுதிக்காலம்வரை அவருடன் தொடர்பில் இருந்தனர். ‘நிக்கோலஸின் குழந்தைகள்’ எனவே அவர்கள் அறியப்பட்டனர். அவர் தனது 106-வது வயதில் காலமானார். எலிஸபெத் அரசியால் ஸர் எனும் உயரிய பட்டத்தை அளிக்கப் பெற்றார்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான இவர் தமது கடைசி மகனை ‘டவுன்ஸ் ஸின்றோம்’ (Down’s syndrome) எனும் மரபணு சார்ந்த நோயினில் அவனுடைய ஆறாவது வயதில் இழந்தார். இது அவரது உள்ளத்தை மிகவும் வருத்தியது.
இந்தப் புத்தகத்தில் பிரமிக்க வைத்த பகுதிகள் எழுத்தாளரின் சொல்நயமோ அல்லது திடுக்கிடும் சொல்நயங்களோ அல்ல. ஸர் நிக்கோலஸின் வாழ்வே, அவரது செயல்களே நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஒரு 29 வயது இளைஞன் யூதக் குழந்தைகளைக் காக்க முனைந்தது எதனால்? இவ்வாறு சில அசாதாரண மனிதர்களின் இருப்பினால்தான் இவ்வுலகம் உலகமாக உள்ளது. தன்னுடன் சம்பந்தமேயில்லாத குழந்தைகளைக் காப்பாற்ற அவருக்கு எது தூண்டுதலாக இருந்தது?
இதுவல்லவோ பயனுள்ள வாழ்க்கை; திரைப்படம் முடிந்ததும் கண்ணீர் வழிந்தபடி எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் என எனக்கே தெரியாது.
இந்த நூலை எழுதிய பார்பரா வின்டன் என்பவர் இவருடைய மகள்.
புத்தகம் அமேசானில் கிடைக்கிறது.
(விரைவில் மீண்டும் சந்திப்போம்)


