முனைவர் தென்காசி கணேசன் 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா

 

 

நவம்பர் 16ஆம் தேதி  சனிக்கிழமை மாலை, (16,11,2024), தி நகர் – கிருஷ்ண கான சபாவில்

முனைவர் தென்காசி கணேசன் அவர்களின் நான்கு நூல்களை, ரசிகாஸ் கலை அமைப்பின் சார்பில்,   பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்வெளியிட்டார்கள்.  வானதி பதிப்பகம் சார்பில் கண்ணதாசனில் கண்ணன் மற்றும் நானா எழுதுவது நானா என்ற இரண்டு புத்தகங்களும்,  குவிகம் பதிப்பகம் சார்பில் மாதா + பிதா + தெய்வம் + குரு, மற்றும்  எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம் என்ற இரண்டு புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

மேடை முழுவதும் மிகப் பெரிய ஆளுமைகளால் நிரம்பி வழிந்தன. பத்மஶ்ரீ நல்லி செட்டியார், ஆடிட்டர்  ஜெ பாலசுப்ரமணியன், L & T Valves முதன்மை அதிகாரி திரு எஸ் கல்யாணராமன், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் புவனேஸ்வரி, காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் ஸ்தானிகம் திரு நடராஜ சாஸ்திரிகள், கலைமாமணி  காத்தாடி ராமமூர்த்தி, மக்கள் குரல் ராம்ஜி,இலக்கியப் பீடம் திரு விக்ரமன் கண்ணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.

பதிப்புலகச் செம்மல் , விடுதலை வீரர் திரு சின்ன அண்ணாமலை அவர்களின்  பெயரன் கரு. மீனாட்சிசுந்தரம், தொழில் அதிபர் திரு ஸத்யவாகீஸ்வரன், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ்  எம் சுவாமி எனப் பலர் வாழ்த்தி மகிழ்ந்தனர். .

தென்காசி கணேசன் அவர்களின் புத்தகங்களுக்கு, திரு அண்ணாதுரை கண்ணதாசன், சாய் சங்கரா திரு பஞ்சாபகேசன், உரத்த சிந்தனை திரு  உதயம்ராம், கவிஞர் மீ விஸ்வநாதன்,  மதிப்புரை வழங்கினார்கள். பதிப்பகம் சார்பில் வானதி ராமநாதன் மற்றும் குவிகம் கிருபானந்தன், புகைப்படக் கலைஞர் யோகா வந்து சிறப்பித்தார்கள்.  முனைவர் பால. சாண்டில்யன் விழாவைத் தொகுத்து வழங்கினார்.

முனைவர் தென்காசி கணேசன் ஏற்புரையில் பேசும்போது, புத்தகங்கள் தான் ஒருவனுக்கு உற்ற நண்பன் என்றும், புத்தகம் என்பது தாய், தாரத்திற்கு இணையானது என்று கூறியதுடன், வந்திருந்த அனைவருக்கும் , குறிப்பாக தனது பெற்றோர், மனைவி, மகன்கள் எல்லோர்க்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். இதுவரை வெளிவந்த ஒவ்வொரு புத்தகத்தையும் தனது பெற்றோர் உட்பட தன் மனதில் நிற்கும் உறவுகள் மற்றும் நட்புகளுக்கு என்ற நினைவுகளைப் பகிர்ந்திருப்பது சிறப்பு.

உரத்த சிந்தனை மற்றும் குவிகம் அமைப்புகளிலிருந்து டாக்டர் ஜெ பாஸ்கர், முனைவர் தி விஜயலக்ஷ்மி எழுத்தாளர் நாணு, இந்திரநீலன் சுரேஷ், கணேஷ்்கிருஷ்ணன், கண ராமச்சந்திரன் மடிப்பாக்கம் வெங்கட், ஆர் கே,, சிவாஜி மன்றத்தைச் சார்ந்த திரு முரளி ஶ்ரீநிவாஸ், ராகவேந்தர்,சேது வெங்கடாசலம்,நரசிம்மன், உமா ரவிமாறன், பாஸ்கர் எனப் பலர் வந்திருந்ததும்,  அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் ரசித்ததும், மனதைக் கவரும் காட்சிகளாக  இருந்தன.

இத்தனை ஆளுமைகள் இருந்தும், அனைவரும் பேசியும், நிகழ்ச்சி சரியான நேரத்தில் தொடங்கி, மிகச் சரியான நேரத்தில் (சரியாக 2 மணி நேரம்) முடிவுற்றது அனைவரின் பாராட்டைப் பெற்றது

தென்காசி கணேசனின்  புத்தகங்கள் மூலம் வருகின்ற வருமானத்தைத் தனது பெற்றோர் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளையில் சேர்த்து, தகுதி உள்ள மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், மற்றும் வேதப் படிப்பு, ஓதுவார்கள் மற்றும் நாத்ஸ்வர வித்வான்கள் இவர்களுக்காக செலவிடப்படுவதை ஆடிட்டர் டாக்டர் ஜெ பாலசுப்ரமணியன் உட்படப் பலர் பாராட்டியது, அனைவரின் கவனத்தைக் கவர்ந்தது.

 

டாக்டர் ஜெ பாஸ்கரனின் 3 புத்தகங்கள் வெளியீட்டு விழா