‘அஞ்சலி இந்தா உன்னுடைய சம்பளம்’
‘என்னதிது! சம்பளத்தை வாங்கிக் கொண்டு எண்ணிப் பார்க்கவில்லையே!’
‘அம்மா நீங்க சம்பளம் கொடுத்தால் சரியா தான் கொடுப்பீங்க’
‘இல்ல இல்ல என் எதிர்த்தாப்புல ஒரு தடவை எண்ணிப் பார்த்து விடு, அதுக்கப்புறம் இவ்வளவுதான் கொடுத்தேன் என்று சொல்லக்கூடாது’
‘அம்மா இதில் 600 ரூபாய் குறைந்து இருக்கேம்மா’
‘ஆமா நீ போன வாரம் நாலு நாள் லீவு எடுத்த, அதைக் கட் பண்ணிட்டு கொடுக்கிறேன்’
‘நான் சொல்லிட்டுதானேம்மா போனேன், என்னுடைய மாமியார் மாமனார் வந்துருக்காங்க அவங்கள கூட்டிக்கிட்டு கோவிலுக்கு போகணும்னு’
‘சொல்லிட்டு போன தான், ஆனா இதுக்கெல்லாம் லீவு எடுத்தா எப்படி?’
‘ஆமாம்மா, உண்மையை சொல்லிட்டு தானே போனேன்!’
‘உண்மையோ பொய்யோ, நீ லீவு எடுத்த, அதனால சம்பளம் குறைச்சு தான் கொடுப்பேன்’
‘சரிம்மா நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன், பார்த்துக் கொள்ளுங்கள்’
‘சரி நீ போய்க்கோ’
‘மாதவா, நீ ஆபிசுக்கு போகும் வழியில் நமது வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இப்போது கட்டிக் கொண்டிருக்கிறார்களே அங்கே ஒரு பிளாட்டை புக் பண்ணிடு’
‘என்னம்மா விளையாடுகிறாயா? அங்கே ஒரு ஒரு பிளாட்டும் ஒரு கோடி, அட்வான்ஸ் பாதி இப்பவே கட்ட வேண்டும், 50 லட்சத்துக்கு நான் எங்கே போவேன்?’
‘ஏன் உன் பொண்டாட்டி கிட்ட தான் நிறைய பணம் இருக்கே!’
“என்ன சொல்ற நீ? அவளிடம் பணம் எப்படி இருக்கும்?’
‘மாசா மாசம் வேலைக்காரர் கிட்ட இருந்து 500, 600 கட் பண்றாளே அந்த பணம் எல்லாம் எங்க போறது?’
‘அப்படியா! எனக்குத் தெரியாதே, ஆமாம், புனிதா, நீ என்ன சம்பளத்தை கட் பண்ணுகிறாயா?’
‘ஆமாம், வாரத்துக்கு ஒன்று இரண்டு நாளும் லீவு போடுகிறாள், நான் முழு சம்பளமா கொடுக்க முடியும்? வேலைக்கு வராத நாட்களுக்கு கட் பண்ணிடுவேன்’
‘ஆமா, இப்ப நீங்க இரண்டு பேரும் வேலைக்குப் போகலையா?’
‘இல்லைமா, எங்களுக்குக் கொஞ்சம் வெளியில வேலை இருக்கு நாங்க ரெண்டு பேரும் வெளியில் போயிட்டு வந்துடறோம்’
‘அப்ப இன்னிக்கு ஆபீஸ் லீவ் போட்டுட்டீங்களா?’
‘இல்லம்மா, ரெண்டு பேரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் எடுத்து இருக்கோம்’
‘சரி அப்ப வீட்டில் இருந்து வேலை செய்யலையா?’
‘இல்லம்மா, இரண்டு பேரும் லாகின் பண்ணிட்டோம், ஏதாவது அவசரம்னா போன்ல இருந்து அப்டேட் பண்ணிப்போம், இது ஆபீஸ் வேலை பார்க்கிற மாதிரி தான் அர்த்தம்’
‘அப்ப இது பொய் மாதிரி தானே?’ நீங்கள் பொய் சொல்லி விட்டு வேலை செய்கிறீர்கள், அதற்கு உங்களுக்கு முழு சம்பளமும் வந்து விடுகிறது, ஆனால் உண்மையை சொல்லி விடுப்பு எடுத்த அஞ்சலியின் சம்பளத்தில் கை வைப்பது என்னா நியாயம்? நாளைக்கு அவளும் உடம்பு சரியில்லை என்று ஏதாவது பொய் சொல்லி லீவு போட்டால் என்ன செய்வது? உண்மை பேசுவதற்கு அதன் பலனை நாம் அவசியம் தந்து விட வேண்டும், நமக்கு அந்த 600 ரூபாய் பணம் ஒரு தடவை பெட்ரோல் போடுவதற்கோ இல்லை ஒரு பீட்சா வாங்கி தின்னுவதற்கு ஆகும், ஆனால் இந்த 600 ரூபாய் அஞ்சலிக்கு 15 நாட்களுக்கு உணவாகும்’
‘அஞ்சலி எங்கே இருக்கிறாய்?’
‘மேல் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன், ஏனம்மா ஏதாவது வேலை பாக்கி இருக்கிறதா?’
‘இல்லை நீ ஒரு நிமிடம் வந்து விட்டுப் போ’
‘என்னமா கூப்பிட்டீர்களா?’
‘ஆமாம் இந்தா உன்னுடைய பாக்கி சம்பள பணம்’
‘அம்மா, ரொம்பவும் நன்றி அம்மா, நான் இப்பொழுது என்னுடைய பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டி வரும் எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன், தாங்கள் இந்த முழு சம்பளத்தை கொடுத்து விட்டதால் அந்த பீஸ் கட்டுவது சுளுவு’
‘நன்றி எனக்கல்ல, என் மாமியாருக்குச் சொல், என் கண்களைத் திறந்த மாமியாருக்கு நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!’
