என். சி. சி. அலப்பறைகள் 5

என் . சி. சி. கேம்ப் புறப்படும் தேதி தெரிந்த உடனேயே ஒரு “ஷாக்”
கேம்ப் நடக்கும் நாட்களில்தான் எங்களுக்குக் கல்லூரியில் மிட் -டெர்ம் தேர்வு, லீவ் கிடைப்பது கடினம். என் வகுப்பு பேராசிரியரிடம் கேட்ட போது
“விடுப்பு எடுக்க அனுமதி இல்லை. நீ இங்க படிக்கறத்துக்குத்தான் மெயினா வந்திருக்க.. நேரம் இருந்தால்தான் மற்ற எக்ஸ்ட்ரா ஆக்ட்டிவிட்டீஸ். இப்ப மிட் -டெர்ம் டெஸ்ட் இருக்கு. இதுக்கு நடுவில் பத்து நாள் ஒனக்கு லீவு வேணுமா? நோ “ என்று மறுத்துவிட்டார் .
எங்க கல்லூரியிலிருந்து கேம்ப் க்கு செலக்ட் ஆனவங்க நாங்க ஆறு பேர்கள்; இரண்டு காமர்ஸ்; மூன்று எகனாமிக்ஸ் நான் ஒருவன் பாட்டனி. இதுவே என். சி. சி. தரைப்படை ( Army Wing) ஆக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. காரணம் அது எங்கள் கல்லூரியில் இருக்கிறது நூறு மாணவர் கொண்ட படை. அதற்கு எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியரே “கேப்டன்” அல்லது மேஜர் பதவி பெற்று இயங்குவார். அந்த மாணவர்களுக்கு என்ன தேவை என்றாலும் அவர் பார்த்துக் கொள்வார். எங்கள் கல்லூரியில் இல்லாத ஒரு என். சி. சி. மாணவர் படைப்பிரிவைத் தேர்ந்தெடுத்தது தவறு என அப்போது புரிந்தது.
என்றாலும் விமானப்படை ஆர்வத்தில் அதில் சேர்ந்துவிட்டோம். இனி எந்த சோதனையையும் சந்திக்க வேண்டியதுதான். எங்களைப் போலவே மாணவர் கப்பற்படை (Navy ) யில் சேர்ந்த சில மாணவர்களும் இருந்தனர். அவர்களுக்கும் இதே பிரச்சினை. அவர்கள் நான்கு பேர்கள். நாங்கள் பத்து பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். நாங்கள் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தனித்தனியாகத் துறைத் தலைவர்களை சந்திக்காமல் நேரே கல்லூரி முதல்வரையே பார்க்கலாம் என்று தீர்மானித்தோம்.
அந்தத் தீர்மானத்தில் ஒரு சிறு மாற்றத்தை நான் சொன்னேன், “ கல்லூரி முதல்வரை நேரே பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் நம் கல்லூரி என் சி. சி. பொறுப்பாளர் பேராசிரியர் மேஜர் சீதாராமனைப் பார்த்துப் பேசலாமே “என்றேன்.
“ நாம் தான் கல்லூரி தரைப்படை வேண்டாமென்று வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டோமே அவர் நமக்கு என்ன சப்போர்ட் செய்வார்? அதெல்லாம் வேண்டாம்” என்றான் எங்கள் சீனியர் ராஜேஷ் .
“ பிளீஸ் கேளுங்க! தரைப்படைப் பிரிவிலும் கேம்ப் உண்டு; அவர்களுக்கும் இது போன்ற பிரச்சினை வந்திருக்கும். அதற்கு ஏதாவது சொல்யூஷன் இந்த புரொஃபசர் சொல்லியிருப்பார். தெரிந்தால் நமக்கு நல்லதுதானே!” என்றேன்.
பத்து பேரில் எட்டு பேர் நான் சொல்வது சரியென்றார்கள். “ எல்லாரும் போலாம். ஆனா உள்ளே நீதான் அவரோட பேசணும்” என்றார்கள்.”சரி ஓகே” என்றேன். பிறகு மேஜர் சீதாராமனைப் பார்த்துப் பேசினோம். அதன் பிறகு வெளியே வந்ததும் எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். உள்ளே நடந்ததுதான் என்ன ?
“ எஸ் கம் இன் “ என்றார் மேஜர் சீதாராமன். வரலாற்றுத்துறைப் பேராசிரியர். எல்லோரும் உள்ளே சென்றோம்.
நான் விறைப்பாக ஒரு சல்யூட் அடித்துவிட்டு பேசத் தொடங்கினேன். ( என் பேச்சை அவர் உற்றுக் கேட்டதற்கு அந்த ஸ்மார்ட் சல்யூட்டும் ஒரு காரணம் எனப் பிறகு அறிந்தேன்)
விவரங்களைப் பேசுமுன் என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் பள்ளியில் என். சி. சி. தரைப்படைப் பிரிவில் இருந்தேன் என்பதையும், அங்கே பொறுப்பில் இருந்தவர் ஆசிரியர் இராமசாமி என்பதையும் குறிப்பிட்டேன். இரண்டு விஷயங்களும் அவரது முகத்தை மலரச் செய்தன. இராமசாமி அவரது நண்பர் என்றார். பிறகு விமானப்படை, கப்பற்படை மாணவர் பிரிவுகளில் உள்ள எங்கள் கேம்ப் பற்றியும் “லீவ்” தர மறுப்பதையும் , முதல்வரை சந்திக்கலாமா ? என்பதையும் அவரிடம் கேட்டேன்.
“என். சி. சி. மாணவர்கள் கேம்ப் செல்ல என்ன விதிமுறைகள் என்பது பற்றி ஒரு சுற்றறிக்கை உள்ளது. அதன்படி உங்களுக்கும் அந்த சலுகைகள் செல்லுபடியாகும். நீங்கள் நிச்சயமாக கேம்ப் செல்லலாம். கல்லூரியில் உங்கள் வருகைப் பதிவேட்டில் “ஸ்பெஷல் பர்மிஷன்” என்று போட்டு விடுவார்கள். கவலை வேண்டாம்.
உங்கள் கேம்ப் அதிகாரியிடமிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய கடிதத்தை இணைத்து, நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கல்லூரி முதல்வருக்கு லீவ் விண்ணப்பம் ஒன்றை, உங்கள் துறைத்தலைவரிடம் கையெழுத்து வாங்கி என்னிடம் கொடுங்கள். நான் அதை பிராசஸ் செய்துவிடுகிறேன். முதல்வரைப் பார்க்கத் தேவையில்லை” என்று சொன்னார்.
எங்களுக்கெல்லாம் செம குஷி. நேரே கேண்டீன் னுக்குப் போய் டீயும் சமூசாவும் சாப்பிட்டோம்.
“ டேய் தேங்க்ஸ் டா நீ சரியா சொன்னே.. சீதாராமன் சார் செம ஜென்டில்மேன். ஒரே நிமிஷத்துல நம்ம பிரச்சினையை சால்வ் பண்ணிட்டார். இல்லன்னா பிரின்சிபாலப் போய் பாத்து விஷயம் சிக்கலாக கூட ஆயிருக்கும்” என்றான் ராஜேஷ்.
“ஆமாம்! இந்த இன்ஃபர்மேஷன் நம்ம டிபார்ட்மெண்ட் டீச்சர்களுக்கு ஏன் தெரியல.. நம்மை இப்படி சுத்த விடறாங்களே “
“ டேய்! இதுல யார் மேலேயும் தப்பு சொல்ல முடியாது .. எல்லாருக்கும் எல்லா ரூலும் தெரியணும்கற அவசியமில்ல.” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சீனியர் ராஜேஷ்.
என். சி. சி. என் வாழ்வில் ஒரு திருப்புமுனை என ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். விமானப்படை மாணவர் பிரிவில் சேர்ந்தது எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது என நான் சொல்லியிருக்கிறேன். மேற்படி கேம்ப் விஷயத்தில் என் ஆலோசனை வெற்றியடைந்ததில் எனக்குள் இன்னும் நம்பிக்கை வளர்ந்தது.
Planning, analysis, negotiation, discussion என்றெல்லாம் பின்னால் நான் அறிந்து கொண்டதை, செயலளவில் கற்றுக் கொண்ட இடம் என். சி. சி. என்றால் மிகையில்லை. குறிப்பாகத் தலைமைப் பண்பு. சின்னச் சின்ன விஷயங்கள்தான்; ஆனால் அதன் பாதிப்பு மிக ஆழமானது; அகலமானது. இதைத் தொடர்ந்து , கல்லூரி மாணவர் தமிழ் மன்றத்தின் உறுப்பினனாகி அதற்கு அடுத்த ஆண்டு அதன் செயலராக ஆனது எல்லாவற்றிலும் இதன் எதிரொலி உண்டு என்பதை இப்போது உணர்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மேஜர் சீதாராமனோடு பழகும் வாய்ப்புகள் பல நேர்ந்தன. அவர் மாணவர் பேரவையின் ஆலோசகராகவும் , பல மாணவர் பொது நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். எனவே எங்கு “வலாண்டியர்” தேவை என்றாலும் என்னைக் கூப்பிட்டுவிடுவார். கல்லூரியில் ஆசிரியர் மாணவர் உறவு எப்படி அமைய வேண்டும் எனச் சொல்லாமல் சொன்ன ஆசான் அவர். கல்லூரியின் பல செயல்பாடுகளில் எனது பங்களிப்பு இருந்தது.
இந்த நினைவுப் பயணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். மேஜர் சீதாராமன் எனக்கு சில பொறுப்புகளைக் கொடுத்த போது, ஒருநாள் இதே கல்லூரியில் நான் ஆசிரியனாவேன் என அப்போது தெரியாது. ஆனால் அவையெல்லாம் பின்னாளில் எனக்கு உதவியது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. மாணவர் விரும்பும் ஓர் ஆசிரியனாக என் பணிக்காலம் முழுவதையும் நான் கழித்தேன் என்றால் அதற்கு மேஜர் சீதாராமன் ஒரு முக்கிய வழிகாட்டி. அதற்கும் கூடக் காரணம் அவருக்குக் கிடைத்த என். சி. சி. பயிற்சி என்றால் மிகையில்லை. இதை நான் சொல்லக் காரணம் உண்டு.
நான் கல்லூரி முதல்வராகப் பணி செய்யும் போது கல்லூரிப் பேராசிரியர்களை என். சி. சி. பொறுப்பாளர்களாகத் தேர்வு செய்யும் அமைப்பில் என்னை உறுப்பினராக நியமித்தார்கள். தமிழ்நாடு முழுதும் உள்ள கல்லூரிகளில் ஆண்டுதோறும் பதவிமாற்றம், இடமாற்றம், ஓய்வு பெறுதல், போன்ற பல காரணங்களால் கல்லூரிகளில் உள்ள என். சி. சி. பொறுப்பாளர் பதவியில் காலி இடங்கள் உருவாகும். அந்தந்தக் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் யார் வேண்டுமானாலும் ( வயது வரம்பு ,உடல் தகுதி உண்டு) விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து முதல் நிலைத் தேர்வு செய்து, நிறைவாக ஒரு நேர்முகப் போட்டி மூலம் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனை நடத்துவது, தமிழ்நாடு என். சி. சி. தலைமை இயக்ககம். இந்தத் தேர்வுக் குழு நடத்திய நேர்முகப் போட்டியில் நடுவராக இருந்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிஜமான “ஆர்மி கேம்பில்” இரண்டு முறைகள் கலந்துகொண்டு பயிற்சி பெறவேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப லெப்டினன்ட் ,கேப்டன் அல்லது மேஜர் போன்ற “ரேங்க் அளிக்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் இது போன்ற பயிற்சி பெற்ற பேராசிரியர்களால் மாணவர்கள் நிச்சயம் பயன் பெறுகிறார்கள் என்று எனது அனுபவச் சான்றோடு உரைக்கின்றேன்.
உடலையும் உள்ளத்தையும் நல்ல பயிற்சிகளோடு பண்படுத்தும் என் சி. சி. போன்ற மாணவர் அமைப்பு எல்லாக் கல்லூரி மாணவ மாணவியருக்கும் கண்டிப்பாக வேண்டும் என்று 1962 இந்தோ-சீனா போருக்குப் பிறகு இந்தியாவில் பின்பற்றப்பட்டது . 1963- முதல் 1968 வரை இக்கொள்கை பின்பற்றப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. எங்கள் கல்லூரிக்காலத்தின் பிற்பகுதியில் இது கைவிடப்பட்டுவிட்டது. போர் அச்சம் மறைந்துவிட்ட காலத்தில் , பொருளாதாரக் காரணங்களாலும் , அரசியல் இடையுறுகளாலும் இக்கொள்கை கைவிடப்பட்டது பெரிய துரதிர்ஷ்டம்.
நான் முதல்வராக இருந்த ஆண்டுகளில் எங்கள் கல்லூரியில் என். சி. சி. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் பிரிவில் சேர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினேன். என். சி. சி , ஸ்போர்ட்ஸ், ஃபைன் ஆர்ட்ஸ் , ஸ்பீக்கர்ஸ் கிளப் என்று ஏதாவது ஒன்றில் மாணவர் சேர்ந்து பயன் பெறவேண்டும். அதற்கு மதிப்பெண்களும் உண்டு. நான் முதல்வராகப் பணிபுரியும் போதுதான் எங்கள் கல்லூரி “தன்னாட்சி” (Autonomy) பெற்றது என்பதால் இதையெல்லாம் என்னால் செய்யமுடிந்தது.
சரி! என். சி. சி. கேம்ப் என்ன ஆச்சு? கிளம்பினீங்களா ?
ஓ அருமையான கேம்ப். அதைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. அடுத்த இதழில்.. இப்ப ஒரு டெயில் பீஸ்
கேம்ப் போக அனுமதி அளித்த என் துறைத்தலைவர் ஒரு கண்டிஷன் போட்டார். திரும்பி வந்த பிறகு நான் டெர்ம் டெஸ்ட் எல்லாத்தையும் ஒவ்வொரு நாளும் எக்ஸ்ட்ரா ஒருமணி நேரம் வகுப்பு முடிந்த பிறகு அமர்ந்து எழுதவேண்டும் என்றார்.
என்ன செய்தேன் என்றா கேட்கிறீர்கள் ? எழுதினேன். வேற விதி !
(தொடரும்)
