புத்தகம் : இரண்டு உலகங்கள் (காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள்)
எழுதியவர்: வண்ணநிலவன் (தொகுப்பாசிரியர் : கே.என்.செந்தில்)
270 பக்கங்கள் விலை ரூ. 325
2024 ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் என்னுடைய மகன் சதுர்புஜன் குடும்பத்துடன் தங்கி மகிழ கனடாவில் டொரன்டோ நகரின் அருகில் இருக்கும் பிக்கரிங் என்ற சிறுநகருக்குச் சென்றிருந்தோம் .அங்கிருக்கும் பிக்கரிங் பப்ளிக் லைப்ரரிக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அழகான, அருமையான, மனதை கொள்ளை கொள்ளும் லைப்ரரி. உள்ளே சுற்றி வந்தபோது “பன்மொழிப் புத்தகங்கள்” என்ற வரிசையில் சில தமிழ் புத்தகங்களைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அங்கே கண்ணில் தென்பட்டதுதான் இந்த “இரண்டு உலகங்கள்” என்ற வண்ண நிலவனின் காலடிச்சுவடு வெளியீடான சிறுகதைத் தொகுப்பு. ஏற்கனவே வண்ணநிலவனின் சிறுகதைகளையும் தொகுப்புகளையும் படித்திருந்தாலும் சமீபத்தில் என் நண்பன் கர்னல் முரளி வண்ணநிலவனின் எஸ்தரை மிகவும் ஸ்லாகித்து அலைபேசியில் உரையாடி இருந்ததால், ஆசை மேலிட இந்நூலை மறு வாசிப்புக்காக எடுத்து வந்தேன்.
காலச்சுவடு பதிப்பகத்திற்காக கே என் செந்தில் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கதைகளிலிருந்து 34 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஓர் அழகிய மாலையாக ஆக்கித் தந்திருக்கிறார். இதற்கு ஓர் ஆராய்ச்சி நோக்குடைய முன்னுரையும் அளித்திருக்கிறார் அந்த முன்னுரையில் அவர் சிறப்பான சிறுகதைகள் என்று 10 சிறுகதைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவையாவன : 1. மிருகம் 2. எஸ்தர் 3. பாம்பும் பிடாரனும் 4. மெஹ்ருன்னிசா 5. மனைவியின் நண்பர் 6. பிழைப்பு 7. அழைக்கிறவர்கள் 8. உள்ளும் புறமும் 9 .விருந்தாளிகள் 10 .பத்து உலகங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பார்வையும் ரசனையும் இருக்கும் என்றாலும், அவருடைய முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருந்த பரிந்துரையின் பின்புலத்தை என்னால் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடிந்தது. அதனால், முதலில் இந்த பத்து கதைகளைப் படித்துவிட்டு அதற்குப் பின் மற்ற கதைகளையும் படித்து ரசித்தேன்.
வண்ணநிலவனின் புனைவுகளைப் பற்றியும் அவருடைய சிறுகதைகளின் தரம் பற்றியும் புதிதாக நான் என்ன சொல்ல இருக்கிறது? ஆனால் படித்தபோது சில விசேஷத் தன்மைகள் எனக்கு புலப்பட்டது. இவருடைய கதைகள் தனிமையில் அமர்ந்து பொறுமையாக, அணு அணுவாக ருசித்து ரசிக்க வேண்டியவை .அவசரத்தில் படிக்கவோ, இன்னொருவர் சொல்லிக் கேட்கவோ ஏற்றவை அல்ல. அவருடைய கதைகள் “Slice of Life” போல் இருக்கின்றன. ஆனால் கருப்பு வெள்ளை சித்திரங்களாக பரிமளிக்கின்றன. சம்பவங்களும் திடீர்த் திருப்பங்களும் சுத்தமாக இல்லை. ஆனால் கதாபாத்திரங்களும், காட்சிகளும் ,கதை நடக்கும் பின்னணிகளும் நம் நினைவில் அழியாமல் தங்கி விடுகின்றன.
எஸ்தர், மெஹ்ருன்னிசா போன்ற மண்ணின் மைந்தர்களை நீங்கள் திரும்பவும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் கிளர்ந்தெழுந்தால் இந்த “இரண்டு உலகங்கள்” நூலைக் கையிலெடுங்கள். கடந்த வாசிப்பின்போது நீங்கள் தவறவிட்ட புதிய புரிதல்களை இந்த முறை வாசிப்பின்போது காண்பீர்கள் என்பது சர்வ நிச்சயம்.

