இலக்கிய வாத்தியை நினைக்கும் போது எனக்கு கோபம் கோபமா வந்தது. இவ்வளவு நேரம் நான் அவர் கூட கரடியாட்டம் கத்திக்கிட்டிருந்தேன். மனுஷன் வைஜயந்திக்கு பையன் பாக்குற விவரத்தையும் அவங்க வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரராங்க என்கிற தகவலைச் சொல்லவேயில்லையே ? நல்லூர் பாஷையில் சொல்லப்போனா சரியான கல்லுணி மங்கன் .
ஒருவேளை இந்த சினிமாவிலும் டிராமாவிலும் வருமே அதுபோல அவர் பார்த்த பையன் நான் தானோ? எங்க அம்மா அப்பாவும் எனக்கு சஸ்பென்ஸா இருக்கணும்னு அன்னிக்கு வர்ராங்களோ?
‘ஒரு வேளை இப்படி இருக்குமோ?’ என்று என் தியரியை அவளிடம் சொல்ல ஆரம்பிக்கும்போதே ‘ ‘நிச்சயமா இல்லை’ என்று அவள் மறுத்தாள்.
‘நான் என்ன சொல்ல வர்றேன்னு சொல்லவே இல்லையே?’
‘நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா?’
‘என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு’
‘உங்க அப்பா அம்மா தான் எங்க வீட்டுக்கு வரராங்களோன்னு நினைச்சே தானே?’
‘ஐயோ! வாத்திக்கு இப்படி ஒரு அறிவுக் கொழுந்தா?’
‘அத்தை விடு! உனக்கும் உங்க பெரிய வாத்திக்கும் அறிவு மட்டுன்னு ஊரில எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். என்னைப் பொண்ணு பார்க்க வரப் போறவான் கரந்தட்டாங்குடி டிரில் மாஸ்டர் பையனாம்.’
‘இங்கேயும் டிரில் அங்கேயும் டிரில்லா ?
‘ரெண்டு மாஸ்டர்களும் மிலிடரியில இருக்கும் போது பிரண்ட்ஸாம்’
‘இது இலக்கிய வாத்தின்னா அது இலக்கண வாத்தியா ?’
‘என்ன நீ இந்த விஷயத்தை சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கிறே !’
‘என்ன பண்ணலாமகிற? பேசாம நாம ரெண்டுபேரும் ஓடிப் போயிடலாமா?’
‘ஓடிப்போயி?’
‘ஓடிபோயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?’
‘கட்டி வைச்சு உரிக்கும் இந்த ரெண்டு மிலிடரியும்.’
‘அப்ப காதலுக்கு மரியாதை ஸ்டைலில விஜய் ஷாலினி கேட்ட மாதிரி ரெண்டு பெரும் பிரிஞ்சிடலாமா?’
‘மரியாதை கெட்டுப் போயிடும். விளையாடாம சீரியஸா பதில் சொல்லு! என்ன பண்ணலாம்?’
” எது செய்யறதா இருந்தாலும் இப்ப சாப்பிட்ட பில்லுக்கு காசைக் கொடுத்துட்டு நீங்க பிரிஞ்சு போங்க இல்லை ஓடிப்போங்க” என்று அங்கிருந்த சர்வர் மெதுவா எங்ககிட்டே சொன்னான்.
‘ நாங்க பேசரத ஒட்டு கேட்டியா? ‘
‘கேட்டதினாலே தான் நானே உங்களுக்கு ஐடியா கொடுக்க வந்திருக்கேன்.’
‘நாங்க கேட்டோமா?’
‘கேட்டுக் கொடுத்தா அது பிச்சை ; கேளாமல் கொடுத்தால் அது தானம்’
‘நல்ல வசனமாயிருக்கே ! நம்ம குறும் படத்துக்கு இவனையே வசனம் எழுதச் சொல்லலாமா? ‘ என்று யோசித்தேன்.
‘நிதானத்தோட தான் பேசறியா? – இது வைஜயந்தியின் குறுக்கீடு
‘வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரப்போற மாப்பிள்ளை கிட்டே இப்படியெல்லாம் பேசக் கூடாது செல்லம் !’
‘என்னது நீ நீங்கதான் அந்த மிலிடரியோட பையனா?’
‘ஆமா நான் தான் அந்த கரந்தட்டாங்குடி டிரில் மாஸ்டரோட பையன். என் பேரு பிசிற் ;
‘என்னது பிசின்னு ஒரு பேரா?’
‘பிசின் இல்லை! பிசிற் .. பிசிறாந்தையார் முழுப் பேரு! செல்லமா பிசிற் அப்படின்னு எல்லாரும் கூப்பிடுவாங்க!.. இடையினம் பிசிர் இல்லே. வல்லினம் பிசிற் .. பிசிற் !
‘ நான் சொன்னேன் இல்ல ; இவர் இலக்கிய வாத்தி அவர் இலக்கண வாத்தி !’ என்றேன்.
‘ரொம்ப முக்கியம்? எங்களை உங்களுக்குத் தெரியுமா?’
‘ரொம்ப நல்லா தெரியும். நீங்கதான் இங்கே அடிக்கடி வருவீங்களே !’
‘நாங்க உங்களைப் பாத்ததே இல்லையே?’
‘நான் எப்பாவாவதுதான் வருவேன். அந்த ரூமில உக்கார்ந்து உங்களைப் பாப்பேன். இந்த ஒரு மாசத்தில நான் நாலு தடவை வந்தேன். ஒவ்வொரு தடவையும் உங்களைப் பாத்தேன்.
‘நாங்க உங்களைப் பாத்ததேயில்லையே ?
‘ஏன்னா நீங்க ரெண்டு பெரும் லவர்ஸ். லவ் ஈஸ் பிளைண்ட்!
‘சர்வருக்கு தனி ரூம் கொடுத்திருக்காறா உங்க முதலாளி?
‘அது சர்வர் ரூம்தான்! கம்ப்யூடர் சர்வர் ரூம் ! முதலாளி ரூம் ! ஆனால் நான் சர்வர் இல்லே! ஏன்னா நான் தான் முதலாளியோட தம்பி. என் கஸின் தொல்காப்பியரோட கடை இது.
‘ரொம்ப பழைய கடையா இருக்கும்போதே நினைச்சேன். இப்படி ஒரு வில்லங்கம் இருக்கும்னு
‘நாம மூணு பேரும் ஏதோ காமெடி சீன்ல வற்ர சந்தானம் , யோகிபாபு, சதீஷ் ஸ்டைலில பேசிக்கிட்டிருக்கோம். நான் என்ன சொல்ல வர்ரேன்னு நீங்க ரெண்டு பெரும் கேட்டா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.
‘பிசிரோட குரல் அப்பப்ப கொஞ்சம் பிசிர் அடிச்சாலும் புத்தி நல்ல ஷார்ப்பா இருக்கற மாதிரி முகம் சொல்லுது.
‘வைஜயந்தி! நாம் கொஞ்சம் சீரியஸா அண்ணன் பிசிற் சொல்றதைக் கேட்போமா?
“நானும் அண்ணன் பிசிற் சொல்றதைக் கேட்க ரெடி!” என்று அண்ணனை போல்ட் லெட்டரில் பேசினாள் வை ஜெ .
‘நாம இங்க இந்த ஹோட்டலில் பப்ளிக்கா பேசறது தப்பு. உள்ளே வாங்க தொல் ரூமில் உட்கார்ந்து பேசலாம். அவன் வற்றதுக்கு இன்னும் மூணு மணி நேரம் ஆகும்.
மூவரும் போனோம்.
‘காப்பி சாப்படறீங்களா ? என்று பிசிர் இல்லாமல் கேட்டான்.
‘ஏற்கனவே எனக்கு வயத்தைக் கலக்குது. அதுக்குக் காரணம் கொஞ்சம் முன்னாடி சாப்பிட்ட காபியா இல்லே போனில் இவளுக்கு வந்த மெஸ்ஸேஜா இல்லே உங்கள் திடீர் வரவா எதுன்னு புரியலை. அதனால் இன்னொரு காப்பி வேண்டாம்.’
‘தங்கச்சி உனக்கு காப்பி வேணுமான்னு’ அவன் கேட்டபோது காபியிலும் வயித்திலும் ஒரே சமயத்தில் பாலை வார்த்தது போல இருந்தது.
‘சரி! காப்பி வேண்டாமுன்னா நாம மூணு பேரும் ஜூஸ் சாப்பிடலாம். ‘என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமேலேயே அந்த ரூமில் இருந்த ஃபிரிட்ஜிலிருந்து ரெண்டு பாட்டில் பேண்டா கொண்டு வந்து கொடுத்தான். மறுபடியும் போய் தனக்கும் ஒண்ணு கொண்டு வந்தான்.
“அட தம்பி ! உனக்கு பேன்டான்னா ஊசிரா? அதுக்குள்ளே குடிச்சிட்ட ! இன்னொன்னு வேணுமா?’
‘ வேண்டாம் !
பிசிர் குடிக்க ஆரம்பித்ததும் வைஜயந்தியும் மரியாதைக்காகக் குடிக்க ஆரம்பித்தாள்.
” இங்க பாருங்க! நான் சொல்ல வேண்டியதை யூடியூப் ஷார்ட்ஸ் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லிடறேன். எங்க அப்பா பாத்து வைச்ச பொண்ணை அதாவது உன்னைக் கட்டிக்க எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லே. ஏன்னா நான் ஏற்கனவே .. ‘
‘ ஒரு பொண்ணை லவ் பண்ணரீங்க, கரெக்ட்? “
வை ஜெ க்கு கவுண்டர் கொடுக்காம சும்மா இருக்க முடியாது.
‘தப்பு! என்னா நான் ஏற்கனவே கல்யாணமானவன்.’
‘இந்த ட்விஸ்டை நானும் எதிர்பார்க்கவில்லை. ‘
‘அப்புறம் எப்படி வெள்ளிக்கிழமை?’
‘அதெல்லாம் இந்த ரெண்டு மிலிடரி தீவட்டிகள் இருக்கே ! அதுக ரெண்டும் நாம எல்லாம பொறக்கறதுக்கு முன்னாடியே தீர்மானம் பண்ணிடுச்சுங்களாம்! அதாவது மிலிடரியில் ரெண்டு பேரும் சந்திச்சு நல்ல நண்பர்களானதும் தீர்மானம் பண்ணினாங்களாம். அவங்க நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடராணும்னு ! ரெண்டு பேருக்கும் குழந்தைங்க பொறந்தா அவங்களுக்கு கல்யாணம் செஞ்சுடணும்னு லடாக் எல்லையில ஒரு மக் ரம் மேல சத்தியம் பண்ணினாங்களாம்!”
‘ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பையனோ பொண்ணோ பொறந்தா என்ன செய்வாங்க?’
‘இப்படி எந்த மடையனாவது கேட்பான்னு தெரிஞ்சு அதுக்கும் ஒரு மாத்து வெச்சிருந்தாங்க! ரெண்டு பேரையும் பார்ட்னரா போட்டு ஒரு பெரிய ஹோட்டல் வைக்க திட்டம் தீட்டியிருந்தாங்க.’
‘இந்த மாதிரி ஹோட்டலா ? ‘ கவுண்டர் மணி அடித்தாள்.
‘சொல்றேன் ! ஜூசை குடியுங்க’ என்று சொல்ல அவள் ஒரே மடக்கில் குடித்துவிட்டு இப்ப சொல்லுங்க என்றாள். .
“சொல்றேன்! முடிஞ்சா சரியா கேட்டுக்கங்க! உங்க ஜூசில மயக்க மருந்து கலந்திருக்கேன். இன்னும் ரெண்டு நிமிஷத்தில ரெண்டு பேரும் மயங்கி விழப் போறீங்க. அதுக்கப்பறம் என் திட்டப்படி எல்லாம் நடக்கப் போகுது ” என்று அண்ணன் வில்லன் மாதிரி ஹா ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான்.
சிரிக்கும் போது கொஞ்சம் கூட பிசிர் தட்டவேயில்லை.
முதலில் வைஜயந்தி மயங்கி விழ , எனக்கு வயிறு கலங்கியது.
(தொடரும்)

