திருப்பு.. திருப்பு..

indianhistorypics on X: "1980s :: T.V Brands In India Teltronix Dyanora  Salora Weston Onida Bush Beltek Nelco Uptron Oscar BPL Which One You Had ?  https://t.co/pD9XhpyFHl" / X

பாக்டரியின் அரைத் தூக்க நைட் ஷிப்ட்..டில்தான் அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இடம், சேலம் மாவட்டம், மேட்டூர். 1986 என நினைக்கிறேன். அதிர்ச்சி என்றால் இன்ப அதிர்ச்சிதான்! – அது மேட்டூர்..க்கு டெலிவிஷன் வரப்(தெரியப்) போகிறது என்கிற தகவல். செய்தியைச் சொன்ன பட்டப்பா’வின் கிரெடிட் ரேட்டிங் சற்று கம்மிதான் என்பதால், என்னுடன் இருந்த சீனு கேட்டான்;

“பட்டா, ரீல் இல்லையே? DD மெட்ராஸ், இன்னும் செங்கல்பட்டே சரியா தாண்டலைனுதானே கேள்விப்பட்டேன்”

“அது பழைய கதை, என் கஸின் கொடைக்கானல் ட்ரான்ஸ்மிட்டர் ப்ராஜெக்ட்ல வேலை செய்யறான். டவரை நிமித்தியாச்சாம். டெஸ்ட் ட்ரான்ஸ்மிஷன் சீக்கிரம் தொடங்கப் போறாங்களாம்”

“அப்ப பக்கத்திலுள்ள எடப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம் எல்லாம் தெரியுமா?”

“அட உள்ளூர் கோழியாகவே இருக்கியேடா சீனு, இது பெரிய ரேஞ்ச், சேலம், மதுரை, தேனி, இராமநாதபுரம்.., என்று கனமழை வானிலை அறிவிப்பு போல, காட்சி தெரியப் போகிற மாவட்டங்களை அடுக்கினான்.

சிறிது நாட்கள் கழித்து, டவுன்(Down) மேட்டூர் கடைகளில், ‘கொம்பும் வாலும்’ உருவம் கொண்ட டிவி, சாலிட்டான டிவி, டயானா போல பிற்காலத்தில் மறைந்த டிவி மற்றும் ABL, BPL, CPL, IPL என எல்லாவித வகையறா டிவிக்களின் Advt. போர்டுகள் தலைகாட்ட, குடும்பத்தில் ஒரு எமெர்ஜென்சி மீட்டிங் போட்டு என்ன செட் வாங்கலாம்? என விவாதித்தோம்.

பிளாக் & வொயிட் அல்லது கலர் – இதில் எது? என நீண்ட பட்டிமன்ற விவாதத்திற்குப் பிறகு தங்கையின் வீட்டோ..படி கலர் டிவி எனத் தீர்மானமானது.

மொட்டை மாடியில், பல காக்கைகள் அமர வசதியாக அகலமான ஆன்டெனா அமைக்கப்பட்டது. எங்கள் கோடி வீட்டு போர்மன் மாமா வந்து ‘இத்தனை அகலம் போட்டிருக்கியே? ஒருவேளை டிவி தெரியலைனா வெத்தல கொடிக்கு உபயோகிக்கலாம், கவலை படாதே’..னார்.

Televisions of Yesteryears | Solidaire, Optonica, Bush, Keltron, Onida and  More - YouTubeசேலத்திலிருந்து தருவிக்கப்பட்ட, புது கலர் டிவிக்கு மங்கள தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. ஒரு அங்கவஸ்திரத்தை நான்காக மடித்து டிவியின் தட்டையான மேல் பரப்பில் சார்த்தி, அதில் ஒரு ப்ளவர் வேஸ் வைத்து அழகுபடுத்தினார் அப்பா.

“இன்னும் அவங்களே டெஸ்ட் பண்ணி முடிக்கல, அதுக்குள்ள யாராவது டிவி வாங்குவாங்களோ..?”- என்ற பாட்டியின் ஆசீர்வாதம் கிடைத்தது. இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆன்’ செய்தோம்..

வெறும் புள்ளிகள், கோடுகள். ஆன்டெனாவை, 360 டிகிரி அல்ல 460(!) க்கும் திருப்பியும், அலைகள் ஓயவில்லை!

அம்மாதான் விடாமுயற்சியாக, தினசரி சமையலுக்கு நடுவே டிவி..யை பரிசோதித்து, “இன்று, வெள்ளை – கரும் புள்ளிகளுக்கு நடுவில் ஒரு தாடிக்காரனைப் பார்த்தேன் ; ஹாக்கியா, புட்பாலா தெரியலை? இங்கயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்”, என அவ்வப்போது தகவல் சொல்வாள்.

ஏண்டா, இது ‘கலர் டிவியானு நன்னா பாத்து வாங்கினியா? என்று பாட்டி வேறு அவ்வப்போது கமெண்ட் இட,

The story of Solidaire « Madras Musings | We Care for Madras that is Chennaiபல அவ நம்பிக்கைகளுக்குப் பிறகு, ஒரு வழியாகச் சோதனை ஒளிபரப்பு துவங்கியது. டெல்லியிலிருந்து ஆங்கிலச் செய்திகள், அத்தி பூத்தாற் போல் தமிழ்ப்பாட்டு வரும் ‘சித்ரஹார்’ போன்றவை கிடைத்தன. எப்பவாவது மாநில மொழிகளில் மகா பழைய தமிழ்ப்படம் மங்கலாகத் தெரியும்.

நிஜ ஒளிபரப்பு, ஒரு பொங்கல் நன்நாளில் (1987) மங்கள இசையுடன், கொடைக்கானல் வழியே துவங்கியது. ஷோபனா ரவியைப் பார்த்ததும் பாட்டி பரவசமாகி ஒரு கரண்டி சேமியா பாயசம் வச்சுடு..னு சொல்ல, வீடு பிரகாசமானது!

இருந்தாலும், எங்கள் வீடு, மழை மறைவு பிரதேசம் போல, மலை மறைவு பிரதேசத்தில் இருந்ததாலோ என்னவோ, ஸிக்னல் பிரச்சனை! அவ்வப்போது ஒளிபரப்பு விட்டு விட்டு வரும்.

அப்போதெல்லாம் உபாயம் : குத்து மதிப்பாக ஆன்டெனாவைத் திருப்புவது.

வேடிக்கை என்னவென்றால், சாரங்கி வாசித்தல், ஹம்லோக், புனியாத் போன்ற டப்பிங் சீரியல்கள் மிகத் தெளிவாகத் தெரியும், ஆனால் ராமாயணம் போன்ற சீரியல்கள் படுத்தும்; கைகேயி அழும் போது டிவியும் சேர்ந்து அழும். பாட்டி, “கொஞ்சம் மொட்டை மாடிக்குப் போய் ஆன்டெனாவை திருப்பேண்..டா..” என்பாள்.

அதுவும், கிரிக்கெட்டில், ஸிக்ஸ் அல்லது காட்ச் போன்ற தருணங்களில் டிவியும் நம் மனசைப் போலவே, பட படவென அடித்துக்கொள்ளும்.

ஒளியும் ஒலியும் பார்க்க, என் தங்கையின் நண்பிகள் பட்டாளம் வந்துவிடும். அந்த நேரம் பார்த்துத்தான் டிவி படுத்தும். அடியேன் உடன் அப்புறப்படுத்தப்பட்டு, ஆன்டெனா திருப்பும் பணி அளிக்கப்படும்..(?!)

ஞாயிறு மாலை திரைப்படத்திற்கு அக்கம் பக்க பார்வையாளர் கூட்டம் அதிகம் இருக்கும். கூட்டத்திலிருந்து எப்படியும் ஒருவர், “தம்பி கொஞ்சம் ஆன்டெனாவை அட்ஜஸ்ட் செய்கிறீர்களா?” என்பார்.

பொதுவாக டிவியில் அலைஅடிக்கும் போதெல்லாம் மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து, ‘திருப்பு.. திருப்பு ‘என்று சொல்லும்.

‘மை.ம.கா’ வில், கமல், ஊர்வசியை “த்திருபு… த்திருபு..” என்று பின் தொடர்வது போல, மொத்த குடும்பமும், ஆன்டெனாவைத் திருப்ப என்னைப் பின் தொடரும் நிலை..!

சில நாட்கள், நான் மொட்டை மாடியில் ஆன்டெனா திருப்பப் போனதை மறந்து(!), அவர்கள் சாப்பிட்டுவிட்டு, கதவைத் தாளிட்டு லைட்..ஐ அணைத்துப் படுத்து விடுவதும் உண்டு.

எப்படியோ பின்னாட்களில் கேபிள் வழி ஒளிபரப்பு வரத் துவங்கியதோ, பிழைத்தேன். இல்லாவிடில் ‘திருப்பி..திருப்பி..’ என் கைரேகை அழிந்து, தற்போதைய Biometrics பதிவுகளில், வெறும் ‘Outline’ கோடு மட்டுமே பாக்கி இருந்திருக்கும்..!