
ஒரு சிறு இடைவேளை ….
திரும்பிப் பார்க்கையில் எனக்கே மலைப்பாக இருக்கிறது – ஏழரை வருடங்களாகத் தொடர்ந்து என் கடைசிப் பக்கக் கட்டுரைகளைப் பொறுமையாக வாசித்து வந்திருக்கும் இலட்சக் கணக்கான… சரி..சரி.. நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
வழக்கமான தன் புன்னகையுடன் குவிகம் சுந்தரராஜன், குவிகம் மின்னிதழில் ‘கடைசிப் பக்கம்’ எழுதுங்களேன் என்று சொல்ல, ‘எதைப் பற்றி?’ என்று நான் அவரிடம் அசடு போலக் கேட்க, ‘எதைப் பற்றி வேண்டுமானாலும்!” என்று அவர் சொல்லிப் பச்சைக் கொடி காட்டினார். “புதுமையாகவும், புதியதாகவும் இருந்தால் நல்லது!” என்று அவர் ஒரு வரியைச் சேர்த்துச் சொல்ல, பின்விளைவுகளை சிறிதும் சிந்திக்காமல் (எப்போதுதான் அதைச் செய்திருக்கிறேன்?) தலையாட்டி விட்டேன்.
முதல் ‘கடைசிப் பக்க’க் கட்டுரையில் நான் எழுதியது, கு.க.ப. த்தின் 90 கட்டுரைகளுக்கும் பொருந்தும்! “புகழ் வாய்ந்த கடைசிப் பக்கங்களை எழுதியவர்கள் நினைவுக்கு வந்ததும் உதைப்புக்கு ஒரு காரணம்.கல்கியின் கடைசி பக்கங்களில் கவிஞர் கண்ணதாசன், சமீபத்தில் மாலன், கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா, தற்பொழுது இ.பா. என்று இந்த சிங்கங்களின் உறுமல்களில், என் ‘மியாவ்’ காணாமல் போய்விடுகின்ற காமெடியை வாசகர்கள் ரசிக்கக்கூடும்!”
ஒவ்வொரு மாதமும் எதைப்பற்றி எழுதுவது என்பதும், எப்படி எழுதுவது என்பதும் 90 மாதங்களும் பெரிய சவாலாகவே இருந்தது! “கடைசிப் பக்கம் என்பதால் கடைசியில்தான் எழுதி அனுப்ப வேண்டும் என்பதில்லை” என்று ஆசிரியர் சீண்டும் அளவிற்கு, மாதந்தோறும் 14 அல்லது 15 ஆம் தேதியில்தான் எழுதிக்கொடுக்க முடிந்தது (15 ஆம் தேதி வெளி வருகிறது குவிகம் மின்னிதழ் என்பது இங்கு நினைவூட்டப்படுகிறது!).
கடைசிப் பக்கம் என்பது ஒரு பக்கமே இருக்கவேண்டிய பத்தி என்ற பொது விதியை மாற்றி, சிறிது நீளமான கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். மின்னதழ் என்பதனால், பக்க அளவைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை! குவிகம் மின்னிதழின் ‘கடைசி பக்கக் கட்டுரை’ என்று வேண்டுமானால் கொண்டாடிக்கொள்ளலாம்!
ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது, ஒரு நேர்க்கோட்டில் இல்லாத கட்டுரைகளாக அமைந்திருப்பது கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக அமைந்துள்ளது. அழகிய சிங்கர் தொகுதி இரண்டினை அறிமுகம்செய்து எழுதியுள்ளதில் இதனைக் குறிப்பிடுகிறார்.
“ஒரு கட்டுரை மாதிரி நிச்சயமான வடிவம் இல்லாமல், எதைப் பற்றி வேண்டுமானாலும் சில வரிகள், விவாதம், முடிவுகள் எதுவும் இல்லாமல், ஒரு சின்ன நிகழ்வு, மனநிலை அல்லது ஐடியா பற்றி எங்கிருந்தோ வழிந்து வந்து, வந்த மாதிரியே மறைந்து விடுவது போல எழுதுவது” – ‘Table-talk’ in “Salt and Dust”(Penguin Books) by RK Narayan. கடைசிப் பக்கத்தில் வருகின்ற பத்திகள், இப்படி அமைவது சிறப்பு. மீண்டும் இந்தத் தொகுப்புகளை வாசிக்கும்போது, பல கட்டுரைகள், ஆர் கே. நாராயண் கூறியுள்ள வரைக்குள் வருவதுபோலத் தோன்றுகின்றன.
தொடர்ந்து எழுதும்போது, வாசிப்பவர்களுக்கும், எழுதுபவனுக்கு ஒரு அலுப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது – அதுவும் தொடர்பில்லாத பல விஷயங்களைத் தொட்டு எழுதும்போது இந்த சலிப்பு நியாயமானதே! ஒரு நல்ல நாவல் அல்லது தொடர்கதையில் அல்லது ‘சுயமுன்னேற்றம்’ போன்ற ஒற்றைத் தலைப்பில் எழுதப்படும் கட்டுரைகளில் இந்த சலிப்பிற்கு வாய்ப்புகள் குறைவு என்பது என் எண்ணம்.
‘போதும்’ என்ற குரல்கள் எழும் முன், ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குவிகம் மின்னிதழில் அடுத்து வித்தியாசமாக ஏதாவது எழுத வேண்டுமென எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
அதுவரையில்….. தற்காலிகமாக விடைபெறுகிறேன்!
மீண்டும் சந்திப்போம்!
ஜெ.பாஸ்கரன்.


