ஐந்தாம் பாகம்
பாண்டியர் வரலாறு
சுந்தரபாண்டியன் -துவக்கம்

சோழ நாட்டு அஸ்தமனத்துக்குக் காரணம்: பாண்டிய நாட்டின் உதயம். அதுவும், முதலாம் சடையவர்மன் (ஜடாவர்மன்) சுந்தரபாண்டியன் என்ற சூரியனின் உதயம். 1251ல் பட்டமேற்ற சுந்தரபாண்டியன், 20 வருடங்களே ஆட்சி செய்தான். ஆனால், ராஜராஜன்-ராஜேந்திரசோழன் செய்த சாதனைகளை அந்த இருபது ஆண்டுகளில் செய்தான். இந்த குறுகிய கால ஆட்சிக்காலத்தில், இவன் செய்த பல அபாரமான வீரச்செயல்கள் காரணமாகவே, வரலாற்றில் சிறப்பிடம் பெற்றான்.
காலக்கட்டத்தைப் பார்க்கலாம்.
(கி.பி. 1026-1343) மைசூரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் கொண்ட போசள நாட்டைத் துவாரசமுத்திரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு, போசளர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். இவர்கள் மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில், சோழ நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அதைக் கண்ணனூர்க் கொப்பம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். (கண்ணனூர்க் கொப்பம் இக்காலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 12கி.மீ தொலைவில் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது). இப்போசளர் பாண்டியரோடும், சோழரோடும் மண உறவு கொண்டு தங்களது மேலாதிக்கத்தைத் தமிழக அரசியலில் நிலைநாட்டியிருந்தனர். தமிழகத்தை ஆதிக்கம் செய்து வந்தனர். ஒரு சமயம் சோழன் மூன்றாம் ராஜேந்திரனுக்கும், இன்னொரு சமயம் மாறவர்ம சுந்தரபாண்டியனுக்கும் போசள மன்னர்கள் உதவி செய்தனர். இரண்டு பக்கத்திலும் பெண் உறவு கொண்டிருந்தனர். அதன் காரணமாக இரு மன்னர்களும் அவனை ‘மாமாடி’ என்று அழைத்தனர்.
பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை விரிவாக்க முயன்றபோது சோழர்களுக்கு உதவி செய்து பாண்டியர்களை அடக்குவது, அதேபோல சோழர்கள் தங்கள் ஆற்றலை உயர்த்தியபோது பாண்டியர்கள் பக்கம் சாய்ந்து சோழர்களை வெற்றி கொள்வது என்று போசள மன்னர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு தங்களது எல்லைகளை விரிவாக்கினர். ஒரு கட்டத்தில், சோழநாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.
சோழன் மூன்றாம் ராஜேந்திர சோழன் எழுச்சி கொண்டு, சோழநாட்டை சாம்ராஜ்யமாக்க முயன்று வந்தான்.
சேரநாடு பெரிய அரணாக இருந்தது. யாரும் அந்த மலை நாடு சென்று எளிதில் வெல்ல முடியாத நிலை.
இலங்கையில் பராக்கிரமபாகு என்ற மன்னன் தனது நாட்டுப் பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்தான். தாமிரலிங்க நாட்டு (இன்றைய தாய்லாந்து) மன்னன் சந்திரபானு 1247 ல், இலங்கை மீது போர் தொடுத்து, பராக்கிரமபாகுவிடம் தோற்ற பின்னர், பாண்டியர்களுடன் நட்புப்பாராட்டி வந்தான். இதனால், பராக்கிரமபாகுவும் பாண்டியர்களுக்கு எதிரான அணியில் இருந்தான்.
இது தான் அன்றையத் தமிழகத்தின் நிலை. இந்தக் காரணங்களால் பாண்டியர்களின் பேரரசுக் கனவு செயல்பட முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்துகொண்ட சுந்தரபாண்டியன், ஒரு பெரும் படையைத் திரட்டத்தொடங்கினான்.
நேராக, மதுரைக்குச் செல்வோம். சுந்தரபாண்டியன் மந்திராலோசனை மண்டபத்துக்குச் சென்று பாண்டியனின் உள்ளக்கருத்தைப் பார்ப்போம். அங்கு, சுந்தரபாண்டியன், அவன் தம்பி இளவரசன் வீரபாண்டியன், மற்றும் தளபதிகள், உபதளபதிகள் வீற்றிருந்தனர். சுந்தரபாண்டியனின் மகள் இளவரசி முத்துக்குமரியும் இருந்தாள்.
சுந்தரபாண்டியன் ஆரம்பித்தான். “நான் மன்னனாகி ஒருவருடம் பூர்த்தியடைந்தது. நமது படையை நாம் இயன்ற அளவு பெரிது படுத்தியுள்ளோம். மேலும், நமது படையை நன்கு பயிற்சி கொடுத்து , பெரும் சக்தியாக உருவாக்கி வருகிறோம். நமது இலக்கு, பாண்டிய நாட்டை தென்னிந்தியாவின் ஒரே வல்லரசாக்க வேண்டும். பிறகு, நமது கோவில்களை அழகு படுத்த வேண்டும். தில்லை, திருவரங்கம் இரண்டும் பொன்னால் வேயப்பட்டு மின்ன வேண்டும். நமது ஆட்சியால் ஒரு பொற்காலம் உருவாகவேண்டும்” என்று சொன்ன மன்னனின் கண்கள் கனவுலகில் சஞ்சரித்தது.
சுந்தரபாண்டியன் மேலும் தொடர்ந்தான். “சோழநாட்டில், முதலாம் ராஜராஜசோழன், மற்றும் முதலாம் ராஜேந்திரசோழன் இருவரும் தமிழகத்தை பெரும் ஆதிக்கம் செய்தனர். அது எப்படி சாத்தியமானது? “ என்று வினவினான். சபையை நன்கு ஊடுருவிப்பார்த்தான்.
வீரபாண்டியன் பதில் சொன்னான்: “மன்னா! அன்றைய சோழப்படை கடல் போல் இருந்தது. ராஜராஜசோழன் பல ஆண்டுகள் சேர்த்த படைகள் ஏராளம். அந்தப் பெரும் படை, சென்ற இடமெல்லாம் அழிவு நடந்தது” என்றவன், “அதைத்தவிர, மன்னர்கள் மாவீரர்களாக இருந்தார்கள். போர்த்திட்டம் புனைவதில் புலியாக இருந்தார்கள். படைபலத்துடன், அறிவுப்பலமும் சேர்ந்ததால், அவர்கள் வெற்றியாளராக இருந்தனர்” என்றான்.
“சரியாகக் சொன்னாய் தம்பி. மேலும், படைதிரட்டுவது என்றால், முதலில் பொருள் திரட்டுவது என்பது அவசியம். ஒவ்வொரு வெற்றியிலும், அவர்கள் பெரும் பொருளை ஈட்டி வந்தனர். அது படைகளை பெருக்குவதற்குப் பயன்பட்டது. இதெல்லாம் தவிர, மற்றொரு முக்கிய காரணமொன்றுள்ளது” என்றான். மன்னன் சொல்வதை ஆவலுடன் அனைவரும் கேட்டனர்.
“கூட்டணி அரசியல்” என்ற மன்னன். “சரியான கூட்டணி அரசியல், மன்னர்களுக்கு வெற்றிகளைத் தேடித்தரும். அது உண்மைதான். நமது நாட்களிலேயே, போசளர்கள் சோழர்களுடனும், நம்முடனும் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து, வெற்றியடைந்து, இன்று தமிழகத்தில் ஆட்டம் போடுகின்றனர். ஆனால் பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவவேண்டுமென்றால், கூட்டணி உதவாது. சுற்றி இருக்கும் பகைகள் அனைத்தையும் ஒன்று ஒன்றாக, வேரோடு வேராக, முழுவதுமாகத் துடைத்தெறியவேண்டும். ஒவ்வொரு வெற்றியால் கிடைத்த பொருளிலும், படையைப் பெருக்கவேண்டும். அறிவான, வீரமுள்ள தலைவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற படைகள் இருந்தால் வெற்றி வேறு எங்கு போகும்? ராஜராஜரும், ராஜேந்திரனும் சாதித்ததை நான் இருபது ஆண்டுகளில் சாதிக்க விரும்புகிறேன்” என்றான். கரகோஷத்தால், மந்திராலோசனை மண்டபம் அதிர்ந்தது. அனைவரும் அடங்கியபின் தொடர்ந்தான்.
“எதிரிகள் கூட்டணி அமைக்கட்டும், நாம் அவர்களைப் பிரித்து வெல்வோம். முதலில் நமது பிரச்சினை: பொருள் தான். பொருளில்லாதோர்க்கு இவ்வுலகம் இல்லை என்று தெய்வப்புலவர் சொன்னது நினைவிருக்கட்டும். நமது செல்வம், கொற்கையில் இருக்கும் முத்து. அந்தச் செல்வத்தைக்கொண்டுதான் நமது படை பெருக்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு பெரும் முத்துக்குவியல், கொற்கையிலிருந்து களவு போயுள்ளது. இதைச் சேர, ஈழ, போசள நாடுகள் மூன்றும் சேர்ந்து, கூட்டுக்களவாணியாக, செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இழப்பினால், நமது படைப்பெருக்கம் தடைபெறுகிறது. எதிரிகளின் படைப்பெருக்கம் அதிகரிக்கிறது. களவாடப்பட்ட முத்துக்குவியல் மீட்கப்படவேண்டும். அதுவும் விரைவில் செய்யப்படவேண்டும். ஏனென்றால், களவாடியவர்கள் அதை விரைவில் யவன நாடுகளுக்கு விற்றுவிடக்கூடும். அதைப் பிடிப்பதற்காக, நாம் சேரநாட்டுக்குப் படையெடுப்பது அவசியமென்றால், அதையும் செய்வோம். நமது வெற்றிப்பயணத்துக்கு, அது முதல் படியாக இருக்கட்டும். வீரபாண்டியா! நீ உடனே கொற்கைக்குப் போய், இந்தக்களவைக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபடுவாய், என் மகள் இளவரசி முத்துக்குமரியையும் உனக்கு உதவியாக அழைத்துச்செல். கொற்கைக் கோட்டைக்காவலனைச் சந்தித்து அவனுக்கு உதவி செய்” என்றான்.
வீரபாண்டியன் கொற்கைக்குச் செல்கிறான். அங்கு நடந்த நிகழ்வுகள், தமிழகத்தைப் புரட்டிப்போடுவதற்கான அஸ்திவாரமாக இருந்தது. அங்கு பயங்கரங்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை சாண்டில்யன் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
அது ராஜமுத்திரையின் கதை.
அந்தக்கதையைச் சுருக்கிச் சொல்வோம்.
பொறுத்திருங்கள்..
