நீதிபதிகள் தங்கள் ஓய்வறையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
“பெண்கள் கிட்டேந்து வர பெடிஷனெல்லாம் ஸ்பெஷலா இருக்கு.”
‘பெண்கள் நம் வாசலைத் தட்டத் தொடங்கிட்டாங்க’
அறையில் குழுமியிருந்த அனைவரும் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனப் புரியாமல் திகைத்தனர்.
‘சில மாசங்களுக்கு முன்னாடி, ஒரு கேஸ் வந்ததே; அந்தப் பொண்ணு தன்னோட மூணாவது கர்ப்பத்தை, காலம் கடந்த அப்றமும், ‘எய்ம்ஸ்’ கலைக்கணும்னு மனு போட்டாங்க இல்லியா?’
“ஆமாமா, நம்ம தீர்ப்பு கூட பலமா அடிபட்டது.”
மற்றொரு நீதிபதி சொன்னார் “அது ஆச்சா, டிவோர்ஸ் ஆன பிறகு எதுக்கு தன் ஹஸ்பென்ட்டோட பேரை ஸ்கூல் அட்மிஷன்ல கேக்கணும்? என் பேரும் வேண்டாம், அந்தத் தகப்பன் பேரும் வேண்டாம், சிம்பிளா, என் புள்ள பேரு போறாதான்னு இன்னொரு வழக்கு.’
“இன்ட்ரஸ்டிங். இன்னிக்கி என்ன லிஸ்ட் ஆயிருக்குத் தெரியுமோ?”
‘வாங்க, கோர்ட் ஹால்ல அதத்தான விசாரிக்கப் போறோம்.’
நீதிபதிகள் வரும் போது சிறிது ஆரவாரம் எழுந்து அடங்கியது. ‘போறப் போக்கப் பாத்தா, ‘வாழ்க, ஒழிக’ கோஷமெல்லாம் வரும் போல இருக்கே.’
“அப்பீல் செய்தவர் வந்திருக்கிறாரா?”
‘யெஸ், யுவர் ஆனர்.’ என்றார் ஒரு இளம்பெண்.
“உங்கள் வழக்குரைஞர்?”
‘நானே சொல்வதுதான் சரியாக இருக்கும், யுவர் ஆனர்.’
அந்தப் பெண் மாநிறத்தில் இருந்தார். பூப்போட்ட கைத்தறிச் சேலையும், அதே வண்ண ரவிக்கையும் அணிந்திருந்தார். நடுத்தர உயரம், சற்றே மெலிந்த உடல் வாகு. சிறு சாந்துப் பொட்டு இட்டிருந்தார். கழுத்தில் மெல்லிய சங்கிலி, அதில் டாலர் எதுவுமில்லை. உதடுகளில் லிப்ஸ்டிக் பூசாத அதிசயப் பெண் இந்த டெல்லியில் இவளாகத்தான் இருப்பாள். ஒரு கையில் மெல்லிய தங்க வளையல்கள் இரண்டு, மறு கையில் வாட்ச். குதிகால் உயர்ந்த செருப்பு அணியவில்லை. அவள் நின்ற விதத்தில் பணிவும், உறுதியும் தெரிந்தன.
எதிர் வழக்காடும் வாலிபன் அவளது அண்ணன். அவன் இவளை விட நிறமாக இருந்தான். வெடவெடவென்ற உயரம். கன்னத்து தசைகள் இறுகியிருந்தன. கரு நிற தாடியை அழகாகக் கத்தரித்திருந்தான். மென்மையான உதடுகள் அவனுக்கும்.
‘உங்கள் வழக்கு என்ன?’
“என் தந்தையின் சொத்தில் எனக்கான பங்கு வர வேண்டும்.”
‘அம்மா, உங்கள் தந்தை ‘டிக்ளரேஷன்’ அதாவது ‘உறுதி ஆவணம்’ எதுவும் செய்யவில்லை. உயில் எதுவுமில்லை. நீங்களோ உங்கள் மதத்தை விட்டு வந்துவிட்டீர்கள்.’
“ஆனால், நான் எந்த மதத்திலும் இல்லாவிட்டாலும், என் தந்தைக்கு நான் மகள் தானே?”
அப்போது அந்த இளைஞன் குறுக்கிட்டான்.
‘மன்னிக்க வேண்டும் ஐயா, மதம் வேண்டாம் என்றால், அதிலிருந்தவரின் சொத்து மட்டும் ஒருவர் கேட்க முடியுமா?’
“அதற்காக, எனக்கு உரிமையில்லாமல் ஆகுமா? யுவர் ஆனர், நான் என் அண்ணனை ஒன்று கேட்க விரும்புகிறேன். அவர் நம்பும் குரானின் மீது ஆணையாக அவர் பதில் சொல்ல வேண்டும்.”
‘யெஸ், ப்ரொசீட்’
“நன்றி யுவர் ஆனர். நமது தந்தை தவறாமல் தொழுபவரா அண்ணா?’
‘இல்லை’
“அவர் ஹஜ் யாத்திரை சென்றிருக்கிறாரா?”
‘இல்லை. நம் பெரிய அத்தா போனபோது கூட அவர் எவ்வளவோ கெஞ்சியும் மறுத்துவிட்டார்.’
“உங்களுக்கு அல்லாவின் மேல் நம்பிக்கை இருக்கிறதல்லவா?”
‘ஆம்.’
“நம் அத்தாவை, அவர்கள் கடவுளின் சந்நிதானத்தில் துரோகி என்று தீர்ப்பு நாளில் சொல்வார்கள் என்று சொன்னார்களா?”
‘ஒருக்காலும் இல்லை.’
‘ஆனால், அவர் மதத்தை பின்பற்றவில்லை அல்லவா?’
“அதில் தானே இறுதி வரை இருந்தார். உன்னைப் போல விட்டு விலகவில்லையே!”
‘மத நம்பிக்கையற்ற நம் அத்தாவின் சொத்து உங்களுக்கு வரலாமென்றால், எனக்கு ஏன் வரக்கூடாது?’
‘நீ மிகப் பெரிய படிப்பாளி. உனக்கு ஷரியத் சட்டம் தெரியாதா?’
‘நீங்கள் சொல்லுங்கள், நான் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன்.”
‘நம் தந்தை ‘டிக்ளேர்’ செய்யவில்லை. உயில் இல்லை, அதனால், 1937 சட்டம், முஸ்லீம்களின் ஷரியத் சட்டத்தின் விதிகள் தான் செல்லுபடியாகும். நீ இஸ்லாத்தைத் துறந்தவள். அது மிகப் பெரிய ‘அபாஸ்டசி’ தெரியுமா? அதற்கான தண்டனை என்ன தெரியுமா?’
நீதிபதிகள் குறுக்கிட்டனர். ‘மிரட்டும் வகையில் பேசுவது குற்றம். அதை நீங்கள் துணிச்சலாக இந்த நீதிமன்றத்திலேயே செய்கிறீர்கள். இது தொடர்ந்தால், நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.’
“மன்னிக்க வேண்டும், ஐயா. அவள் என் சகோதரி. அவளை நான் எவ்வளவு கொண்டாடினேன் தெரியுமா? இப்படி சமயத்திற்கு எதிராகப் போவாள் எனக் கனவிலும் நினைக்கவில்லை”
‘நம் அத்தாவே என்னைத் தடுக்கவில்லை.’
“அவர் சில மதச் சடங்குகளைச் செய்யாதிருந்திருக்கலாம். ஆனால், மத அடையாளத்தை விட்டுவிடவில்லை. ஒரு இஸ்லாமியரின் சொத்து, இஸ்லாமியர் அல்லாத ஒருவருக்குச் சேராது.”
“நல்லது அண்ணா, நான் எந்த மதத்தையும் சேராதவள். எனக்கு இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 செல்லுபடியாகும்.”
‘இல்லை. அது பொதுவானது; முஸ்லீம்கள் அதைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.’
“அப்படியில்லை, அண்ணா. நான் இந்தியக் குடிமகள். மதங்களில் நம்பிக்கை இல்லாதவள். ஆனால், உரிமைகளை விட்டுக் கொடுப்பவளில்லை.”
‘உனக்கு உரிமையே இல்லை என்பதுதான் என் வாதம்.’
“இது மதத்தைச் சார்ந்த பிடிவாதம். எங்கே மதங்களின் பெயரால் சச்சரவுகள், பிளவுகள் ஏற்படுகிறதோ, அங்கே ஆன்மீகம் மரணமடையும் என்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். இதைக் கொஞ்சம் சிந்தியுங்கள், அண்ணா.”
‘எனக்கு எவரிடமும் பகையில்லை. அல்லாவின் ஆணைப்படி நடக்கிறேன்.’
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றவள் தொடர்ந்தாள்,
“யுவர் ஆனர், இந்திய இறையாண்மைச் சட்டத்தின் 25வது விதி என்ன சொல்கிறது? அவரவர், தமக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றலாம் அல்லது மதம் சாராதும் இருக்கலாம், இல்லையா?”
‘ஆமாம்’
“அப்படியாக மதமற்று இருப்பவர்களுக்கு சட்டத்தின் தீர்வு என்ன? சபரிமலைத் தீர்ப்பை நினைவில் வையுங்கள் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். மதமற்றவர்கள் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் தான் உரிமை பெறமுடியும் அல்லவா? மதங்களை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் தனி நபர் விருப்பம் என்று உரிமை கொடுத்துள்ள சட்டம், வாரிசுரிமையை மறுக்கிறதா என்ன?”
நீதிபதிகள் அசந்து போனார்கள். ‘மிகவும் முக்கியமானக் கேள்வி.’
அந்தப் பெண் அண்ணனைப் பார்த்து சிரித்துவிட்டு மேலும் தொடர்ந்தாள்.
‘யுவர் ஆனர். இறையாண்மைச் சட்டவிதி25 ஒரு விடுதலையைத் தருவதாகச் சொல்கிறது. ஆனால், ஒரு வெற்றிடம் அதில் இருக்கிறது. என் வழக்கே அதை முழுமையாக்கும் ஒன்றுதான். கேள்வி கேட்பதும், சில ஊகங்களை அசைத்துப் பார்க்கவும் தான் இந்த வழக்கு. சொற்களால் தான் ஒரு விதிமுறையைச் சொல்ல முடியும், ஆனால், அது சொல்ல விழையும் கருத்தையும் சேர்த்தால் தான் அந்தச் சொல்லிற்கே மதிப்பு. விதி 25ன் வெற்றிடத்தை நிரப்புங்கள், அதுதான் நம் இறையாண்மைத் தந்தையருக்கு நாம் செய்யும் மரியாதை’
“இல்லை ஐயா, என் சகோதரி வழக்கை திசை திருப்பப் பார்க்கிறாள்.”
அந்தப் பெண் அசரவில்லை. மெலிதாகச் சிரித்தாள்.
“யுவர் ஆனர், நாம் பிறக்கிறோம், அது நம் சுய விருப்பத்துடன் நடக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. தத்துவங்கள், கர்மா தியரி, விதி இவற்றை விட்டுவிடுவோம். எங்கே பிறக்கிறோமோ, அந்த இடத்தின் வாழ்க்கைக்கு அறிமுகப் படுத்தப் படுகிறோம். நாம் சிந்திக்க நமக்கு சற்று வயதாக வேண்டியிருக்கிறது, உலகத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறோம். எத்தனை மாறுபட்ட சமயங்கள், ஆனால், வாழ்க்கை ஒன்றுதானே? மனிதன் தனிப்பட்டவன். அவன் அந்தத் தனிமைக்கு பயந்தே குழுவானான். அதில் இருப்பவர் இருக்கட்டும், இல்லாதவரும் வாழ வேண்டுமல்லவா?”
‘இது கோர்ட். உங்கள் சிந்தனை இங்கே தேவையில்லை, தொடர்புடையதாக இருந்தாலும்’ என்றார் சிரித்துக் கொண்டே ஒரு நீதிபதி.
‘மன்னிக்க வேண்டும், யுவர் ஆனர். எனக்கு ஏழு வயதான போது என் உம்மா இறந்தார். நான்கு திருமணங்களை அனுமதிக்கும் மதத்தில் என் தந்தை மறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. பெரும் செல்வந்தர் அவர். பல வழிகளில் அவரை வற்புறுத்திய போதும், அவர் மறுத்து விட்டார். ‘எதீம் கானா’விற்கு (அனாதை இல்லம்) அள்ளிக் கொடுத்தார். பத்துக் குழந்தைகளை, அவர்கள் விரும்பிய பள்ளிகளில் படிக்க வைத்தார், மதரஸாவிலும் படிக்கலாம், காலடியிலும் படிக்கலாம். பத்து பெண்களுக்கு கைத்தொழிலாக டைலரிங், கம்ப்யூட்டர் அடிப்படை படிப்பு கிடைக்க வழி செய்தார். நம் மத ஆட்களாகப் பார்த்துச் செய் என்ற போது, என் ஊர்க்காரர்களில் நான் பேதம் பார்ப்பதில்லை என்றார். அவரும் என்னைப் போல மதத்தை விட்டுவிட்டவர் தான். என்னவொன்று, வெளிப்படையாக அது தெரியும்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால், ஒவ்வொரு செயலிலும் அதைத்தான் மறைமுகமாகக் காட்டினார். அவரது பெண் நான். அவர் சொத்தில் எனக்கு உரிமை இருக்கிறது. மதத்தில் இல்லையென்றால், அந்த உரிமை பறிபோய் விடுமா? சரி, இப்படிக் கேட்கிறேன், அவர் சம்பாதித்ததெல்லாம் மதம் ஈட்டிக் கொடுத்ததா அல்லது அவரது உழைப்பா? மீண்டும் சொல்கிறேன், எங்கே பிறந்தோமோ, அது நம் தேர்வு இல்லை. எப்படி வாழ்கிறோமோ அது நம் தேர்வு தானே? இதில் மதம் எங்கிருந்து வருகிறது? ஏன் மகிழ்ச்சியாய் வாழ்வதை விட்டுவிட்டு, நம்மை, இனம், மொழி, மதத்தால் பிரித்துக் கொள்கிறோம்?”
‘அத்தனை மனித நேயம் இருந்தால், சொத்தில் பங்கு கேட்காமல் இருக்கலாமே?’
“அண்ணா, குழப்பிக் கொள்கிறாய். உரிமை என்பதை விட்டுக் கொடுக்கக் கூடாது, அதே நேரத்தில் குறுகிய எல்லைகளால் ஒரு பயனுமில்லை.”
நீதிபதி சொன்னார்: வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மீண்டும் நீதிபதிகளின் ஓய்வறை.
‘அவள் அண்ணனுக்கு அந்தப் பெண்lணிடம் அன்பு இருக்கிறது.’
“அவளுக்கும் அந்த நபரிடம் மதிப்பு இருக்கிறது.”
‘ஒத்துப் போனால் சச்சரவில்லை. அவர்கள் ‘காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும்’
“அது கஷ்டம். அவர் பெரிய ஜமாத்தின் தலைவராம். விசாரித்தேன். இஸ்லாமியர் அல்லாத ஒருத்தருக்கு அவர் சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்தார் என்றால், அவரைச் சாடி விடுவார்கள், சாடி.”
‘அந்தப் பெண்ணின் கோரிக்கை சரியான ஒன்றுதான். அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வேண்டும், சட்டத் திருத்த மசோதா வந்தாலும் கூட ஆச்சர்யப் பட மாட்டேன். சட்டப் பிரிவு 25 முழுமை அடைய வேண்டும்; இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நீதி வழங்க வேண்டும்; ஷரியத் சட்டம் சொல்வதையும் கவனிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் வேண்டும். இனிமையான மண்டைக் குடைச்சல் இது. இன்ட்ரஸ்டிங்கான வழக்கு.”

A very interesting presentation! However, it looks incomplete without the decision of the judges. Should we wait for the second part of this story?
LikeLike