கல்யாண விஷயத்தில ஒரு பொய்

கோவை ஒப்பணக்கார வீதி கிளையில் இரண்டு முறை பணி செய்துள்ளேன். ஆனால் வீதியின் பெயர் காரணம் எனக்குத் தெரியாது. யாரிடம் கேட்பது. இப்பொழுதுதான் கூகுளைத் தட்டினால் ஆதி அந்தம் எல்லாம் கக்கி விடுகிறதே.
விஜயநகர பேரரசின் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் (பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனராம் அவர்களை ஒப்பணக்காரர்கள் என அழைப்பராம். அவர்கள் அங்கு குடியேறியதால் வீதிக்கு ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்ததாம்.
1978 க்கு முன்னால் பழைய கிளையை நம்மில் பலருக்கு நினைவிருக்கும். ஒரு ஹாலுக்கு பின் நீண்ட பல அடுக்குகளுடன். நான் சேர்ந்த புதிதில் உடன் பணி புரிபவர் யார், வாடிக்கையாளர் யார் என தெரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆயிற்று. அவ்வளவு கூட்டம்.
எனக்கு மட்டுமல்ல அத்தகராறு மேனேஜருக்குக் கூட இருந்தது என்பது பின்னால் தெரிந்தது.
நான் ‘அவுவர்ட் பில் செக்ஷன்’ அருகே அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் ஓடியிருக்கும். கிளை மேலாளர், கண்டிப்புக்குப் பெயர் போனவர். அவர் ‘அவுட்வர்ட்பில்’ பார்த்த நண்பரை அழைத்தார். “ நான் ஒரு வாரமா பார்கிறேன். உங்க நண்பரை வேலை நேரத்தில் அருகே உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்றார்” . நம் நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ரொம்ப சந்தோசம். ஏனா? அந்த சமயத்தில் மெமோக்களும், சார்ஜ் ஷீட்களும் பறந்து கொண்டிருந்தன. நம்மள யாருன்னே மேனேஜருக்கு தெரியாட்டி நமக்கு மெமோ வராதே என்ற சந்தோசம்தான்.
கிளைதான் வயதாகி கிழப் பருவம் எட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பணி செய்த அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களும் இளைஞிகளும்தான்.
பழைய சேமிப்புக் கணக்கு ‘லெட்ஜர்’ ஞாபகத்தில் உள்ளது. தாள்களை விட இரு அட்டைகளும் கனமாக இருக்கும். மாதக் கடைசியில் தூக்க முடியாமல் தூக்கி சாந்தா ராஜகோபால் மேடம் ‘டேலி’ செய்வதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
உமா போல சற்று ஒள்ளியான உருவம் உடையவரை கரன்ட் அக்கவுன்ட் செக்ஷனில் போட்டால் லெட்ஜரை தூக்கிக் கொடுக்க ஒருவரைப் போட வேண்டியிருக்கும்.
அன்று வேலை செய்த அனைவரின் முகத்திலும் சந்தோசமும் தெரியும் கோபமும் தெரியும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் ஆர்.எஸ். புரம் கிரிக்கெட் மைதானத்தில் வங்கி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும், அனைவரும் பிக்னிக்காக ஊட்டி சென்றதும் மறக்க முடியாத நினைவுகள்.
ஒரு துடிப்பான நண்பர் கோவிந்தராஜ் கடைநிலை ஊழியராகப் பணி புரிந்தார். எதையும் சமாளிக்கும் திறமை பெற்றவர்.
சேர்ந்த புதிதில் ஒரு நாள் வங்கியில் மதிய உணவை முடித்து மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். நம் நண்பர் உள்ளே வந்தார்.
அவர்: “ ஏனுங்க இங்க யாரு சந்திரமோகன்”
நான்: நான்தாங்க. என்ன விஷயம்.
அவர்: உங்களைப் பார்க்க சென்னையிலிருந்து ஒருத்தர் வந்திருந்தாருங்க
நான்: எங்க இருக்கார்.
அவர்: அவரை நானே பேசி அனுப்பிச்சுபிட்டேனுங்க.
நான்: என்னங்க இது. எங்கிட்ட சொல்லாம? என்ன சொன்னீங்க.
அவர்: அவர் பொண்னுக்கு உங்களை பார்க்கிறாராம். பையன் எப்படீன்னு விசாரிக்க வந்தார். நான் தங்கமான பையன். தைரியமா கொடுங்கன்னு சொல்லிப்பிட்டேனுங்க.
நான் : என்னை யாருன்னே உங்களுக்கு தெரியாது. ஏன் அப்படி சொன்னீங்க.
அவர்: கல்யாண விஷயத்தில ஒரு பொய் சொன்னா தப்பில்லை சார்!!
மேனேஜருக்கும், அக்கவுண்டன்ட் ஆக இருந்த திரு S.J சுப்ரமணிக்கும் நடக்கும் சண்டையை கேட்க காதுகள் பல கோடி வேண்டும். SJS காலையில் வெகு சீக்கிரம் வந்து விடுவார். எத்துனை மணிக்கு வருவார் என எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவருக்கு முன்னால் ஒரு நாள்கூட நான் வந்ததில்லை. அது போல இரவு கடைசி நபராகச் செல்வார். அவர் கதவைப் பூட்டும் பொழுது எனைப் போன்று புதிதாக நுழைந்தவர்கள் இரண்டு பக்கமும் காவலுக்கு நிற்பது வழக்கம்.
காலை கடிகாரத்தையும் வாசலையும் SJS பார்த்தார் என்றால் மணி பத்தாகப் போகிறது என்றும், மேனேஜர் இன்னும் வரவில்லை என்றும் அர்த்தம். சரியாக மணி 10.01 க்கு அவசரம் அவசரமாக CO, RO கவர்கள் அவரால் பிரிக்கப் படும். ஓலை என்ன வந்திருக்கிறது என தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவருக்கு. அவரை விட அவரைச் சுற்றி நிற்கும் கிளை நண்பர்களுக்கும்தான். மேனேஜர் வந்தவுடன் “ உன்னை யாருய்யா ஒபன் பண்ணச் சொன்னது” என ஆரம்பிப்பார். SJS சொல்லும் பதில் வேடிக்கையாக இருக்கும். இது ஒரு sample. அடிக்கடி நடக்கும் இது போன்ற காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கும். தான் அசையா விட்டால் ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணத்தில் மாய்ந்து மாய்ந்து ஏதாவது செய்து கொண்டே இருந்த நல்ல மனுஷன்.
SJS க்குப் பின் வந்தவர் திரு MS சுந்தர்ராஜன். இன்றும் எனக்கு வழி காட்டும் நல்ல நண்பர். வேலையில் அவரின் அர்பணிப்பு என்னை வியக்க வைத்தது. இரவு எட்டு மணி வரை வேலை பார்த்து விட்டு அப்படியே அவருடன் சினிமாவிற்கு போன நாட்கள் பல. அவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்னை வங்கியில் அடையாளம் காட்டியது. எழுத்தும் பேச்சும் சிறப்பாக இருக்கும். அவரது உழைப்பு அவருக்கு வெற்றிக் கனியை கொடுத்தது.
மதுரை, கோவை, Madras Main என அன்றைய மூன்று முக்கிய கிளைகளிலும் Accountant ஆக சாதித்துக் காட்டியவர். இந்தியன் வங்கியில் சேர்மன் ஆகியும் எளிமை மாறாதவர்.
கோவையில என் முதல் இன்னிங்சில் உடன் பயணித்தவர்களில் ராமதாஸ், பசுபதி ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன். இம்முக நூல் வாயிலாக முத்து கிருஷ்ணன், மலர்ந்த முகம் TNS, ஶ்ரீனிவாசன் ஆகியோரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. ஞான மூர்த்தி, ராமன், ஓடியாடி வேலைசெய்த ராஜேந்திரன் போன்ற பலரை பின்னர் சந்திக்கவே இல்லை.
