காப்பு

நரி விருத்தம் | Buy Tamil & English Books Online | CommonFolks

1. பால்நிலா மதியம் மூன்று பன்மணி மிடைந்த பாங்காய்‌
மேல்நிலா விரித்த போலும்‌ விளங்குமுக்‌ குடையின் நீழல்‌
தேன்அவாங்‌ குளிர்கொள்‌ பிண்டிச்‌ செல்வன்சே வடியை வாழ்த்தி
ஊன்அவா நரியி னார்தம் உரைசிறி துரைக்க லுற்றேன்‌.

இதன்‌ பொருள்‌: பால்போலும்‌ வெண்மைநிறம்‌ பொருந்திய அமுதக் கிரணங்களைக்‌ கொண்ட மூன்று சந்திரர்கள்‌, பல இரத்தினங்கள்‌ தம்மிடத்தே நெருங்கியிருக்கின்ற விதமாக அழகுடன்‌ தோன்றி, ஆகாயத்தில்‌ ஒளியைப் பரப்பியது போல் பிரகாசிக்கின்ற மூன்று குடைகளின்‌ நிழலின்‌கண்‌ வண்டுகள்‌ விரும்புகின்ற குளிர்ச்சியைக்கொண்ட அசோகமரத்தின் அடியில்‌ வீற்றிருக்கின்ற சிறப்பை உடையவனாகிய அருகக்கடவுளின்‌ செம்மையாகிய பாதங்களைத் துதித்து மாமிசத்தை விரும்புகின்‌ற நரியினுடைய சொற்கள்‌ அடங்கிய கதையில்‌ கொஞ்சம் நான்‌ செய்யுள்களாகக்‌ கூறுகிறேன்‌.

அருகக்கடவுளுக்கு மூன்று குடைகளும்‌, அசோக மரநிழலும்‌ மிக உரித்தானவை ஆகும். ஆகையால் அவற்றை இக்காப்புச்‌ செய்யுளில்‌ ஆசிரியர் எடுத்துக்‌ கூறினார். மூன்று குடைகள் எனப்படுபவை சந்திராதித்தியம்‌, நித்தியவிநோதம்‌, சகலபாசனம்‌ என்பனவாகும்‌; இவை முத்தாலும்‌ இரத்தினத்தாலும்‌, பொன்னாலும்‌ அமைக்கப்பட்டவை ஆகும். மூன்று குடைகளும் மூன்று நிலவுகள் போல ஒளி பரப்புகின்றன. அக்குடைகளின்‌ நிழலில் அசோக மரத்தின் அடியில் அருகக் கடவுள் தங்கி இருக்கிறார். பிண்டி என்பது அசோக மரத்தைக் குறிக்கும். அவருடைய செம்மையான பாதங்களை வாழ்த்தித் துதித்து மாமிசத்தை விரும்புகின்‌ற நரியினுடைய சொற்கள்‌ அடங்கிய கதையில்‌ கொஞ்சம்‌ நான்‌ செய்யுள்களாகக்‌ கூறுகிறேன்‌.

 

நூல்

2. சென்றுஉயர்‌ மதியம் முட்டும்‌ சிகரம்மால்‌ வரைகள்‌ சூழ்ந்த
குன்றியில்‌ குறவர்‌ வாழும்‌ குறிச்சியுள்‌ ளான்ஓர்‌ வேடன்‌
கன்றிஊன்‌ கிழங்கு காய்தேம்‌ கனியொடு தேன்கள் துய்ப்பான்‌
நன்றியில்‌ செய்கை தம்மால்‌ நாரகர்‌ தம்மோடு ஒப்பான்‌.

மூங்கில்களால் சூழப்பட்டதும்‌ மேலேவளர்ந்து உயர்ந்த சந்திரனில்‌ மோதுகினற கொடுமுடியை உடையதுமாகிய பெரிய மலைச்சாரலிலே வேடர்கள்‌ வாழ்கின்ற குறிஞ்சி நிலம் சார்ந்த ஊரில் உள்ளவனாகிய ஒரு வேடன்‌ மிருகம்‌ முதலியவைகளைக்‌ கொன்று அவற்றின்‌ மாமிசத்தையும்‌, கிழங்குகளையும்‌, காய்களையும்‌, தித்திப்பாகிய பழங்களையும்‌, தேனையும் புசிப்பவனாயிருந்தான். அவன்‌ நன்‌மையில்லாத தன்னுடைய கொடுஞ்செய்கைகளினாலே நரகலோகவாசிகளுக்குச் சமமானவனாக இருந்தான்.

வரை என்பது மூங்கிலைக் குறிக்கும். மலையானது சந்திரமண்டலம்‌ வரை வளர்ந்தது என்பதைக் குறிக்க, “சென்றுயர்‌ மதியமுட்டுஞ்‌ சிகரமால்‌ குன்றி” என்று காட்டப்பட்டுள்ளது. மலை அருகே இருக்கும் ஊருக்குக் குறிச்சி என்று பெயர்‌. “கன்றி”, என்பதற்கு மிருகம்‌ முதலியவற்றைக்‌ கொன்று என்பது பொருள்.” நரகலோகத்தில் இருப்பவர்கள் பாவச்செய்கை உடையவர்கள். எனவே கொலை முதலிய தொழில்களையுடைய
வேடனும்‌ அவர்களுடன்‌ ஒப்பிடப்பட்டான்‌ .

3. வாங்குவில்‌ கலப்ப வீசி வளைகடன்‌ முகந்து வானம்‌
பாங்கினால் எழுந்து மின்னிப்‌ படுமழை பொழிந்த காலைத்‌
தேங்கமழ்‌ சிலம்பின்‌ வாழுங்‌ குறவர்கள்‌ நறவு மாந்தி
வேங்கைபூ விரித்த நன்னாள்‌ விளைவுநாட்‌ செய்ய லுற்றார்‌.

[சிலம்பு=மலை; நறவு=கள். மாந்தி=குடித்து]

இவ்வாறு வேடன்‌ இருக்கும்போது வேங்கை மரங்கள் பூக்கும் காலம் வந்தது. மேகமானது பூமியைச்‌ சுற்றி யிருக்கின்ற கடல்‌நீரைமொண்டு கொண்டு அதனால்‌ ஏற்பட்ட அழகுடனே மேலே சென்றது. மின்‌னலை உண்டாக்கியது. தன்னிடத்தே உண்டாகிய
மழையைப் பொழிந்தது. வாசனை நிரம்பிய மலையிடத்தில் வாழும் வேடர்கள்‌, கள்ளைக் குடித்து மகிழ்ந்தனர். தினைப்பயிர்‌ விதைப்பதற்குரிய நல்லநாளிலே தினையை விதைத்தார்கள்.

வாங்குவில் என்பது இந்திரவில்லைக் குறிக்கும். அதாவது மழைபெய்யும் காலத்தில்‌ மேகத்தால் இடப்‌படும்‌ வானவில்‌. வேங்கைமரம்‌ பூ வைக்கும் காலம்‌ தினை விதைத்‌தற்குரிய பருவமாகும். அக்காலத்தில்‌ மழைபெய்தவுடன்‌ வேடர்கள்‌ கூடினர். தினைப்பயிர்‌ செய்வதற்கு நாள்விட்டார்கள்‌; நாட்‌செய்தலாவது: நல்லநாளில்‌ குறிஞ்சி நிலக்‌ கடவுளுக்குச்‌ சிறப்பு‌ செய்து தினைப்பயிர் நன்றாக விளைய வேண்டுமென்று அவனைப்‌ பணிந்து தினைவிதைக்கும் நாளையும் குறித்து தினை வித்தை எடுத்து வைத்தலாம்‌. நாள் குறிப்பிடுதலுக்கு நாட்‌செய்தலென்றும்‌, முதலில்‌ நல்லநாளில்‌ ஏருழத்‌ தொடங்குவதற்கு ஏரிடுதல்‌ என்றும்‌ சொல்லுதல்‌ பாண்டி நாட்டு வழக்கு.

 

4. கருவியால் அகிலொடு ஆரங்‌ கற்புரந்‌ திமிசு நூறி
மருவியாங்‌ குறவர்‌ நீக்கி வளைத்தன காடு மாணப்‌
பரவியாங்‌ கருவி வீழும்‌ சாரல்பைந்‌ தினையை வித்திக்‌
குருவியும்‌ கிளியும் ஓப்பிக்‌ குறமகள்‌ காக்கு நாளாள்‌.

[கருவி-ஆயுதங்கள்‌; ஆரம்=சந்தன மரம்; திமிசு=வேங்கை மரம்; ஓப்பி=விரட்டி; காட்டில் பயிர்‌ செய்வதற்கு, காட்டை வெட்டி இடத்தைச்‌ சீர்படுத்துதல் வேண்டும்.]

அக்‌ காட்டில்‌ தங்கள்‌ தொழில்களிலே சார்ந்து பழகி வாழ்ந்து வரும்‌ அந்த வேடுவர்கள்‌, கோடரி அரிவாள்‌ முதலிய ஆயுதங்களினாலே, அகில்‌, சந்தனமரம்‌, கற்பூரமரம்‌, வேங்கைமரம்‌ முதலான மரங்களை வெட்டியழித்து விலக்கி வட்டமாகச்‌ சீர்ப்படுத்தித் தினைப்புனங்கள் ஆக்கி வைத்துள்ளார்கள். அங்கே மலையருவிகள்‌ வீழ்ந்து பாய்கின்ற மலைச்சாரலான இடங்களிலே தினைவிதையை விதைக்க அது முளைத்துப்‌ பயிராகி விளைந்தது. குருவிகளையும்‌, கிளிகளையும்‌ அங்கு வந்து பயிரைச் சேதம் செய்யாமல் அவற்றை விரட்டிக் குறமகள் காத்து வருகிறாள்.

 

5, விண்ணினார்‌ வரையின்‌ தாழ்வில்‌ வேழம்மெல்‌ தினையை மாந்த
நண்ணினான்‌ குறவன் நண்ணி நனிவெகுண்டு ஓடி ஏறி
மண்ணினார்‌ புற்றின் உச்சி நின்றுவார்‌ சிலையை வாங்கிக்‌
கண்ணினால் அமர்ந்து நோக்கிக்‌ களிற்றின்மத்‌ தகத்தின் எய்தான்‌.

[வரை=மலை; வேழம்=யானை; மாந்த=தின்ன; நண்ணினான்=வந்து சேர்ந்தான்; வார்சிலை=நீண்ட வில்]

வளர்ச்சியினாலே ஆகாயத்தில்‌ சென்று பொருந்தியுள்ள, அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள மென்மையாகிய தினைக்கதிரை ஒரு யானை வந்து தின்றது. அதைக்கண்ட வேடன்‌ அங்கே வந்து சேர்ந்தான்‌. அவன் மிகுதியாகக் கோபித்து, விரைந்து போய்‌, பூமியில்‌ பொருந்தியிருந்த ஒரு பாம்புப் புற்றின் மேலே தாவிப்போய்‌ நிமிர்ந்து நின்று, நீண்ட வில்லை வளைத்து தன் பார்வையினால் அமைதியாகக்‌ குறிவைத்துப் பார்த்து அந்த யானையினுடைய நெற்றியிலே, அம்பை ஏவினான்.,

மலையானது மிகவும்‌ உயர்ந்ததென்பதைக் காட்ட ஆகாயத்தில் பொருந்தியது எனக் கூறப்பட்டது. “மண்ணினார்புற்று” என்பதற்கு, மண்‌ணாலே உண்டாகிய புற்று எனப்‌ பொருளும் கொள்ளலாம். ”அமர்ந்து நோக்கி,” என்பது “அவசரப்‌ படாமல்‌ பொறுமையாகக்‌ குறிபார்த்து,” என்பது பொருளாகும்

 

(மற்றவை அடுத்த இதழ்களில்  )