(ஓர் அடியார்- ஒரு வெண்பா)
48) நின்றசீர் நெடுமாற நாயனார்.

நின்றசீர் நெடுமாறர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்த பேரரசர்.
இவர் சமணர்களின் சூழ்ச்சி வலையில் அகப்பட்டு அவர்களின் தடுமாற்றம் கொண்ட நெறியைப் பின்பற்றி வந்தார்.
திருஞானசம்பந்தரின் முயற்சியால், அவர் சமணரின் வலையிலிருந்து விடுபட்டுச் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டு பெருமையுற்றார்..
ஆளுடைய பிள்ளையாரின் அருளால் பாண்டிய நாட்டில் சைவத் திருநெறி பெருகியது.
நின்றசீர் நெடுமாறர் அறநெறி வழுவாது செங்கோல் செலுத்திச் சிவ நாமத்தைச் சொல்லும் சைவ நெறியைக் காத்து நல்லாட்சி புரிந்து வந்தார்.இந்திரனிடம் பொன்மாலை பெற்றுச் சிறந்து விளங்கினார்.
ஒப்பற்ற முறையில் ஆண்டு வந்த அவரை எதிர்த்து வடபுலத்துப் பகை மன்னர்கள் போர் செய்ய வந்தனர்.
திருநெல்வேலிப் போர்க்களத்தில் பகைவரின் படையை அழித்து நெடுமாறர் வெற்றி பெற்றார்.
சோழ மன்னரின் திருமகளாரான மங்கையர்க்கரசியை மணம் செய்து கொண்ட நெடுமாறர் பிறையணிந்த பெருமானுக்குத் திருத்தொண்டுகள் செய்து சிறந்த முறையில் ஆட்சி செய்தார்.
திருநீற்றின் நெறிவிளங்க நீண்ட காலம் புகழுடன் ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாற நாயனார், இறைவன் திருவருளால் சிவலோகத்தை அடைந்து இன்பமுடன் பணிந்திருக்கும் பெருமையைப் பெற்றார்.
“நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கு அடியேன்” என்று
திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது.
நின்றசீர் நெடுமாறர் வெண்பா
தென்மதுரைப் பாண்டியரின் சீர்விளங்க நெல்வேலி
முன்மலைந்து போர்வென்ற மொய்ம்பினார்- கன்மனத்துப்
பொய்யமணர் தம்முறவைப் பூம்புகலிக் கோன்நீக்க
மெய்யடியார் ஆனார் விழைந்து.
(மலைந்து – எதிர்த்து)
( மொய்ம்பினார்- வலிமை கொண்டவர்)
(புகலிக்கோன்- திருஞானசம்பந்தர்)
49) வாயிலார் நாயனார்

தொண்டை நன்னாட்டில் வளமையும் வாய்மையும் மிக்கதும், பல பெருங்குடிகள் வாழ்ந்து வருவதுமான செல்வம் நிறைந்த பதி திருமயிலாபுரியாகும்.
அங்குக் கடற்கரைக் கானலில் பல நாடுகளைச் சேர்ந்த மரக்கலங்கள் யானைக் கன்றுகள், எருமைக் கன்றுகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து இறக்கும். சாலைகளில் வெண்மையான மாளிகைகளும்,
தெருக்களில் திருவிழாக்களின் அலங்காரங்களும் காணப்படும்.
நிலை பெற்ற சிறப்பைக் கொண்ட மயிலாபுரியில் தவச் சிறப்பு மிக்க வாயிலார் என்பவர் தோன்றினார்.அவர் வாயிலார் என்னும் பழைமையான பெருங்குடியில், தூய்மையான பெரு மரபின் முதல்வராக விளங்கினார்.சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதில்
மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்.
இறைவனைத் தம் உள்ளமெனும் கோவிலின் உள்ளிருத்தி, அவனை உணர்கின்ற ஞானம் என்ற ஒளிவிளக்குச் சுடரேற்றி, அழிவில்லா ஆனந்தம் என்னும் நீரினால் திருமஞ்சனமாட்டி, அன்பு என்னும் அமுது அமைத்துப் பூசனை செய்துவந்தார்.
இவ்வாறு வாயிலார் நாயனார், அகம் மலர்ந்த அர்ச்சனையால் நாளும் அன்பு நிறைந்த வழிபாட்டை விடாமல் நெடுங்காலம் செய்து, சிவபெருமான் திருவடிகளின் கீழ்ப் புகலாக அடைந்து தொழுதிருந்தார்.
“ துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை வாயிலாரை வாழ்த்திப் போற்றுகிறது
நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற பெருந்தகையார்”
என்று சேக்கிழார் வாயிலார் நாயனாரைப் போற்றி வணங்குகிறார்.
வாயிலார் வெண்பா
உள்ளமெனும் கோயிலின் உள்ளிருத்தி ஈசனை
விள்ளும்மெய்ஞ் ஞான விளக்கேற்றி – அள்ளியள்ளி
ஆனந்த நீராட்டி அன்பமுதைத் தாம்படைத்து
மோனநல் பூசைசெய்வார் முன்.
50) முனையடுவார் நாயனார்

காவிரி ஆறு பாய்கின்ற சோழ நாட்டில், மலர்மணம் வீசும் சோலைகளின் அரும்புகள் இதழ் விரித்து வடியும் தேன்,
ஆறாகப் பெருகி ஒடுவதால் சேறான வயல்களில் உழவர்கள் உழுவதால் சேறு மணம் வீசும். இத்தகைய செல்வ வளம் நிறைந்த ஊர் திருநீடுர் ஆகும்.
இவ்வூரில் வேளாளர் மரபின் தலைமைக் குடியின் முதல்வராகத் தோன்றியவர் முனையடுவார்.
இவர் கண்ணுதல் கடவுளின் கழல் செறிந்த திருவடிகளின் மேல் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்.
தம்மிடம் நட்பில்லாதவர்களைப் போர்முனையில் வென்று அதனால் பெறும் பெரும் வளத்தை அடியவர்க்குத் தவறாமல் அளிக்கும் தன்மையுடையவர்.
போர்முனையில் மாற்றாரை அடுதொழில் செய்து வெல்லுவதால் முனையடுவார் என்ற பெயரைப் பெற்றார்.
போரில், பகைவரிடம் தோற்றவர் வந்து பெருஞ்செல்வம் தந்து உதவி கேட்டால், அதனை நடுவு நிலையில் நின்று ஆராய்ந்து ஒப்புக் கொள்வார். பிறகு கூற்றுவனும் அஞ்சி ஒதுங்குமாறு போர் செய்து வென்று அக்கூலியான பொன்னைப் பெற்றுக் கொள்வார்.
இப்படி வென்ற செல்வம் அனைத்தையும் சிவனடியார்கள் சொன்னபடித் தந்து, சர்க்கரை, நெய், தயிர் , பால், கனி எல்லாம் நிறைந்திருக்கும் திருவமுது செய்து அளித்து, அன்பு மாறாத திருத்தொண்டைச் செய்து வந்தார்.
இத்தகைய திருத்தொண்டைப் பலகாலம் செய்து வந்ததால் சிவனருள் பெற்றுச் சிவலோகத்தில் அமர்ந்திருக்கும் நிலையான உரிமையைப் பெற்றார்.
“ அறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க்கு அடியேன்’
என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது
முனையடுவார் வெண்பா
போரில் பகைவென்று பொன்பொருள் கொண்டதனை
ஊரில் அடியார்க்(கு) உவந்தளிப்பார் – சேரும்நெய்
கன்னல் தயிர்பால் கனியமுதைத் தாமளிப்பார்
மன்னும் முனையடு வார்.
( தொடரும்)
