GITA TAMIL WORD INDEX 33 | Tamil and Vedas

துயரமும் கவலையும் இல்லாமல் இருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே என்றும் மாறாது இருக்கும் உண்மையை, இறைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். துயரமும் கவலையும் இந்த உடலோடு கூடிய இந்த உயிரை ஒரு சிறு வட்டத்திற்குள் வைத்து விடும். சிறு வட்டத்திற்குள் இருந்தால் மனமும் சின்ன விஷயங்களையே சிந்திக்கும். இப்படிப்பட்ட சின்ன மனதில் தான் ஆசைகள் பேராசை, பொறாமை, கோபம், வெறுப்பு, அசூயை போன்ற பல உணர்ச்சிகள் தோன்றும். கோபம் வரும்போது சிந்திக்க முடியாது. வெறுப்பு வந்தால் மனிதத் தன்மை போய்விடும். பேராசை எப்பொழுதும் பெருநஷ்டத்தையே ஏற்படுத்தும். பொறாமையோ வெறுப்பை வளர்க்கும். இவையே ஒரு மனத்தில் துயரத்தின் காரணமாய் அமையும்.

துயரம் தான் மனிதன் அனுபவிக்கும் துன்பத்திற்கு வழிகாட்டி. நாம் வாழ்க்கையில் ஒருநாளும் துன்பத்தை விரும்புவதில்லை. இன்பம் அல்லது மகிழ்ச்சியையே விரும்புகிறோம். ஆனந்தமாக இருப்பது நமது இயல்பு. அதனாலே ஒருவரும் ஆனந்தம் வேண்டாம் என்று சொல்வதில்லை. துன்பத்தை வரவேற்பதில்லை. ஆனந்தம் வேண்டும் என்று தான் பணம் சம்பாதிக்கிறோம். ஆனந்தத்திற்காகவே படிக்கிறோம், வேலை செய்கிறோம்; இனிப்பு சாப்பிடுகிறோம், ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறோம், சினிமா பார்க்கிறோம், இசையை அனுபவிக்கிறோம். ஆனால் இந்த சந்தோஷம் நிலையானதல்ல; சிறிது நேரமே இருக்கும். நம் செயல்கள் அனைத்துமே நம் மனம் சிறிது நேரமாவது மகிழ்ச்சியோடு இருப்பதற்காகத்தான்.

அப்படியென்றால் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஏன் நாம் அன்றாடம் செய்யும் செயல்களினால் நம்மால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை? துக்கமும் சந்தோஷமும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதைத் தானே நாம் பார்க்கிறோம்? அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே வெளியே சந்தோஷத்தைத் தேடி மனம் அலைவதைத் தான் குறிக்கும். நமக்குள்ளே இருக்கும் ஆனந்தத்தை நம்முள்ளே தேடினால் நிலையான சந்தோஷத்தை அடையலாம்.

சரி. நம்முள் ஆனந்தத்தை எப்படித் தேட முடியும்? சாதாரண மனிதனால் ஏன் இது செய்ய முடிவதில்லை? மனிதனுக்குள் இருக்கும் அழுக்குகள் என்று கூறப்படும் குணங்களான கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை போன்றவை தான் நம் மனம் நிரந்தர ஆனந்தத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன.. நம்மை துயர சாகரத்திற்கு இழுத்துச் செல்லும் இதே உணர்ச்சிகள்தான் நம்முள்ளே அழுக்குகளாக நிறைந்து உள்ளே இருக்கும் ஆனந்தத்தை மறைக்கும். இந்த அழுக்குகளை நீக்கினாலன்றி ஆனந்தத்தையும் உணர முடியாது; ஞானத்தையும் பெற முடியாது. நம்முள் இருக்கும் அழுக்குகளை நீக்க வழி சொல்லும் ஒரு சாதனையே கர்மயோகம் எனப்படும் ஞானத்தை நமக்கு சுட்டிக்காட்டும் வழியும் இதுவே.

இந்த கர்ம யோகத்தைப் பற்றித் தான் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். சனாதன தர்மத்தின்படி நாம் செய்யும் நல்ல அல்ல தீய வினைகளின் விளைவுகள் நம்முடன் ஒரு பந்தத்தினால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. இதையே கர்ம பந்தம் என்று கூறுவர். இவையே முறையே நல்வினை என்றும் தீவினை என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிறப்பிலும் நம்முள் இருக்கும் ‘நான்’ என்னும் அகங்காரம், மற்றும் நம் பொருட்கள் மற்றும் சொந்தங்களின் மேல் நாம் வைக்கும் பற்றுதல், நமது மனத்திற்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகள் – இவை எல்லாமே புதிது புதிதாய் கர்ம பந்தங்களை ஏற்படுத்தும். இவை எல்லாம் சேர்ந்து கர்மவினையாக மாறும்.

இப்படிப்பட்ட கர்ம வினையிலிருந்து விடுதலை பெற நமக்கு உதவுவது கர்ம யோகம். சரி. இந்தக் கர்ம யோகம் என்றால் என்ன? செய்யும் செயலை எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி இறைவனுக்கான ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே கர்ம யோகம். சாதாரண மனிதன் எந்தச் செயலையும் எதையாவது எதிர்பார்த்தே செய்வான். எந்தப் பயனையும் எதிர்பாராது ஒரு செயலைச் செய்வது என்பது எளிதல்ல. நாம் சாதரணமாக ஒரு பாட்டு பாடினாலோ அல்லது ஒரு உணவைச் சமைத்தாலோ யாராவது ‘நன்றாக இருக்கிறது’ என்று சொல்ல மாட்டார்களா என்று மனம் ஏங்கும். நம்மைப் பாராட்டினால் நமக்கு மகிழ்ச்சி; நம் செயலில் குற்றம் கண்டுபிடித்து விமர்சித்தாலோ வருத்தமும் கோபமும் மிஞ்சும். இதுதான் சாமானியனின் வழக்கமான அணுகுமுறை. இது மாறவேண்டும் என்றால் மனம் மாற வேண்டும். மனம் எப்படி மாறும்? சுயநலத்திலிருந்து தன்னலம் அற்ற மனத்தோடு செயலாற்ற முயல வேண்டும்.

மனிதன் ஏன் தன்னலத்தோடு செயல்படுகிறான்? தன் பொருட்களை தன்னிடமே வைத்துக் கொண்டு பிறரிடம் பங்கு போட்டுக் கொள்ள மனம் ஒத்துழைக்காததால்; தன் ஆசைகளைப் பூர்த்தி செய்ய எந்த எல்லைக்கும் போவதால்; தன் மகிழ்ச்சியை பிரதானமாக்கி மற்றவர் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தராததால் – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருப்பது மனத்திற்குள் இருக்கும் அழுக்குகள். இந்த அழுக்குகளை நீக்குவது எளிதல்ல. இந்தக் கஷ்டமான செயலைச் செய்ய நமக்கு உதவ வருவது, ஸ்ரீகிருஷ்ணரின் கர்ம யோக தத்துவம். இறைவனை நம் எண்ணங்களில் கொண்டு வந்து, நம் செயல்கள் அத்தனையையும் அவனுக்கே அர்ப்பணிப்பது இந்தக் கர்ம யோகத்தின் முக்கிய அங்கம். இது ஒரு சாமானியனுக்கு சாதாரணமாக இயலாத காரியம். இதற்கு இறைவன் அருள் வேண்டும்.

இதனாலேயே பக்தியும் கர்மயோகமும் ஒருசேரப் பார்க்கப்படுகின்றன. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு தன்னலம் இருக்காது. இதை ஒரு அம்மாவின் அன்பில் பார்க்கலாம். காதலிக்காக காதலன் விட்டுக் கொடுப்பதில் பார்க்கலாம். ஒரு அண்ணன் தன் தங்கைக்காகச் செய்யும் பாசமான செயல்களில் பார்க்கலாம். எல்லாம் உணர்ந்த இறைவனிடம் நீயே சரணம் என்று நம் கவலைகளையும் துயரங்களையும் அவனடியில் போடும்போது, கருணைக்கு இருப்பிடமான அந்த பரமாத்மா நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறான். இது கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையை நமக்கு அரணாக மாற்றி அவன் உதவியுடன் மன அழுக்குகளைக் களைய உதவும்.

நம்மில் பலருக்கு கடவுளை இப்படித் தேட வேண்டும் என்று கூடத் தோன்றுவதில்லை. கஷ்டம் வந்தால் கோயிலுக்குப் போய் இறைவனிடம் முறையிடுவது சாமானியனின் வழக்கம்.. இவ்வாறு செய்வதன் தாத்பர்யம் என்ன? நாம் எல்லாரும் நம்புவது, நான் வேறு, கடவுள் வேறு என்பதைத்தான். நம்முள்ளேயும் வெளியேயும் இருப்பது ஒரே கடவுள் தான் என்பதை எவனொருவன் உணர்கிறானோ அந்த மனிதன் உள்அழுக்குகளை நீக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறான். .

இறைவனைப் பற்றி அறிய வேண்டும் என்ற அவா ஒருவனுக்கு வர வேண்டும் என்றால், தனக்கு இருக்கும் பிரச்னையைப் பற்றி அந்த மனிதனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனுடன் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தாகமும் ஏற்பட வேண்டும். எப்படி ஒருவன் நீரில் மூழ்கும்போது எப்படியாவது மேலே வந்து மூச்சு விடவேண்டும் என்று தவிப்பானோ அதேபோல் இறைவனை அறிய வேண்டும் என்ற தவிப்பும் இருக்கவேண்டும். அதோடு இந்தப் பிரச்னையைத் தன்னால் தனியாகத் தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும். ஒரு குருவால்தான் இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து, குருவிடம் சரணடைய வேண்டும். குருவின் உதவியுடன் இறைவனை அறிய முடியும்.

ஒரு பள்ளியில் சேர வேண்டுமானால் அதற்குரிய தகுதி இருக்கிறதா என்ற பரீட்சை வைக்கின்றனர். பொறி இயல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது. இதில் ஜெயிப்பவனே கல்வி கற்க முடியும். அதேபோல், ஞானம் பெறுவதற்கும் நுழைவுத்தேர்வு இருக்கிறது. எவருக்கெல்லாம் ஞானத்தின் மேல் உண்மையான நாட்டம் இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காக வருவதே கர்மயோகம். மனத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும். மனத்தை உள்முகமாகத் திருப்புவதற்கும் கர்ம யோகம் உதவும்.

ஒரு சாமானியனின் மனம் வெளியே இருக்கும் பொருட்களினால் அலைபாயும். தன்னைச் சுற்றி இருக்கும் உறவுகளோடு இருக்கும் பாசப் பிணைப்பினால் அலைபாயும். மனதை உள்முகமாக்கும்போது உறவுகள் மற்றும் பொருட்கள் மேல் இருக்கும் பாசப் பிணைப்பிலிருந்து விடுபட முடியும்.. மனம் எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சார்ந்தே இருக்கும். இறைவன் பக்கம் இந்த மனத்தைத் திருப்பினால் தீய எண்ணங்களிலிருந்து விடுபடலாம். இறைவனைச் சார்ந்து இருக்கப் பழகினால் மனம் தீய எண்ணங்களிலிருந்து விடுபடும். தீய எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. ஊக்கம் தரும் பயனுள்ள ஏதேனும் ஒரு நல்ல நெறியைப் பிடித்துக் கொண்டால் பயனற்ற தீய நெறிகள் மெல்ல மெல்ல மறையும்.

இவ்வாறு இறைவன் பக்கம் மனத்தைத் திருப்புவதற்காகத் தான் பஜனை, ஜபம், பூஜை, நமது தர்ம சாஸ்திரம், கீதை உபநிஷதங்கள் ஆகிய வழிமுறை நூல்களைப் படிப்பது போன்ற பல சாதனைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை ஆன்மீக மொழியில் சாதனா என்பர். இந்த வழிமுறைகள் மனத்தை ஒருமைப்படுத்த உதவும். பூஜையிலோ பஜனையிலோ மனம் ஒன்றினால் அங்குமிங்கும் அலைபாயாது.

மனம் ஒருமைப்படும்போது மெல்லமெல்ல ‘நான்’என்னும் அகங்காரம், மறையும்; அகங்காரம் இல்லாமல் பற்றற்ற நிலையில் செய்யப்படும் எந்தச் செயலும் கர்ம பந்தத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு செயல்படுவதை சமநிலையில் இருப்பது என்பர். மனம் தூய்மை அடையும். சம்ஸ்க்ருதத்தில் இதனை சித்த ஷுத்தி என்பர், சமநிலையுடன், கர்மபந்தங்களைக் குறைக்கும் வகையில் செயல்படும்போது உள்ளம் அமைதி அடையும்; உள்ளம் தூய்மை அடையும், அதாவது சித்த சுத்தி சாத்தியமாகும். நமக்கு உள்ளம் தூய்மை அடைந்திருக்கிறது என்பதை எப்படி உணருவது? ஆத்மஞானத்தில் மனம் லயிக்கும். ஆத்மஞானத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும்போது குருவின் அருளும் கிடைக்கும். அப்போதுதான் மனது குருவைத் தேடும்; ஞானத்தைத் தேடும்.

கர்மயோகம் என்பதிலுள்ள கர்மம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்ட உயர்ந்த கடமைகளைக் குறிக்கும். யோகம் என்பது சமநிலையோடு இருப்பதைக் குறிக்கும். சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள், நாம் நல்ல நெறிகளில் நின்று செய்யப்படும் கர்மங்கள் நாம் வங்கியில் போடும் சேமிப்பைப் போன்றது. நாம் செய்யும் தீய செயல்கள் நமது வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் போன்றது என்று கூறுவார்.

கர்ம யோகம் என்பது நல்வழிப்பட்ட செயல்களை சரியான, நியாயமான அணுகுமுறையுடன் செய்வது. சமநிலையுடன் செயல்படுவது என்பது செயல்களிலிருந்து தப்பிப்பது அல்ல; செயல்கள் செய்யும்போது மனம் சமநிலையுடன் இருப்பது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த நேரத்தில் யோகம் என்பது செய்யும் செயலைச் செவ்வனே, திறம்படச் செய்வது என்கிறார். திறம்பச் செய்தல் என்றால், செயலில் நிபுணத்துவம் என்பது அல்ல; சரியான அணுகுமுறையுடன் செய்வது.

ஸ்ரீகிருஷ்ணர், பயனைக் கருதாது சமநிலையுடன் செயலாற்றுவதால், புதிய கர்மங்கள் ஏற்படாது என்றும், இது கர்ம பந்தத்தை மெல்ல வீரியம் இழக்கச் செய்யும் என்கிறார். கர்மயோகத்தால் ஏற்படும் கர்மவினைக் குறைப்பு, இப்பிறப்பில் மட்டுமல்ல, மறுபிறப்பிலும் தொடரும் என்கிறார்.

ஒருவர் குருவிடம் வரும்போது, அவர் கர்ம யோகத்திலிருந்து ஞானயோகத்திற்குத் தயாராகி விட்டார் என்பது உண்மை. அதாவது ஞானயோகத்திற்கான நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டார் என்று பொருள். இப்படிப்பட்டவர் செய்யும் செயல்கள் பந்தத்திற்கு வழிவகுக்காது; மாறாக பந்தத்திலிருந்து விடுவிக்கும்.

இறுதியாக, கர்ம யோகத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் செயல் செய்யும்போது அதை இறைவனுக்கு அர்ப்பணிப்பதான பாவனையில் செய்கிறார். அந்தச் செயலின் இறுதியில் வரும் பயனை இறைவன் அருளிய பிரசாதமாக ஏற்கிறார். இதன் மூலம் செய்யும்போதும் பற்றற்ற மனோநிலை ஏற்படும்; பயனை ஏற்கும்போதும் பிரசாதமாகக் கருதும்போது எந்த விதக் குற்றச்சாட்டோ அல்லது முறையீடோ இருக்காது. இத்தகைய மனம் லேசாக இருக்கும்; கவலைகளும் துயரங்களும் இந்த மனத்தை ஒன்றும் செய்யா. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கர்ம யோகத்தை நாம் கொண்டு வருவோமாக.

*****************