![]()
சந்திரா பெற்றோரின் ஒரே மகள். பட்டப் படிப்பில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். எங்கள் மருத்துவமனையில் விசாரித்து வந்து என்னைப் பார்க்க வேண்டும் என்றாள். மருத்துவர் தகவலைக் கேட்டவுடன் அனுப்பி வைத்தார்.
தன் தாயார் பற்றிய அச்சம் என்றாள். மேற்கொண்டு விவரிக்கப் பரிந்துரைத்தேன்.
தாயார் மோனா, அலுவலகம் ஒன்றில் காரியதரிசியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். தந்தை செல்வம் சொந்தத் தொழில் நடத்தி வந்தார். அன்பு பூத்துக்குலுங்க, கைநிறைய சம்பாதிப்பில் முடிந்த அளவிற்கு தானம்-தர்மம் செய்துவந்தார்கள்.
சுகமாகப் போய்க்கொண்டு இருந்த வாழ்வில் திடீரென மோனா ஒரு தீ விபத்தினால் முகம் காயப்பட, தன்னம்பிக்கையை இழந்தாள். வேலையை ராஜினாமா செய்து விட்டாள். வெளியே வர மறுத்தாள். தன் முகத்தைப் பார்ப்பவர்கள் உச்சுக் கொட்டுவதும், முகத்தைச் சுளிப்பதாகவும் சொன்னாள். சந்திரா வெளியே அழைத்துச் செல்ல முயன்றாலும் பயனில்லை.
சந்திரா கல்லூரிக்குச் செல்வதற்கு முன் முடிந்த வரை எல்லா வீட்டு வேலைகளையும் தானே முடித்து விட்டுச் செல்வதாகக் கூறினாள். மோனா ஏதோ வேலையைத் தானே செய்ய முன்வந்தாலும், அம்மாவைத் தான் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திரா அதை ஏற்றுக் கொள்வதில்லை.
பல ஸெஷன்களுக்கு இதை ஆராய்ந்தோம். ஆழ்ந்து சிந்தித்துக் கலந்தாலோசித்த பிறகு சந்திரா தெளிவு பெற ஆரம்பித்தாள். தோல் மருத்துவர் மோனாவின் நிலை நன்றாக ஆனதை உறுதிப்படுத்தி, வீட்டில் சிறு வேலைகளில் அவளுடைய பங்கேற்பின் முக்கியத்தை விளக்கியிருந்தார். இருந்தும் தான் இதைச் செய்யத் தொடங்கவில்லை என ஒப்புக்கொண்டாள் சந்திரா.
மாறாக, அம்மாவின் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புடன் வீட்டிற்கானதையும் விடாமல் செய்து வந்தாள் சந்திரா. அடைந்த மனத்திருப்தியால் அப்படியே தொடர்ந்து செய்துவந்தாள்.
பொறுப்பான சுபாவத்தை ஸெஷன்களுக்கு வருவதிலும் காட்டினாள் சந்திரா. கல்லூரி மாணவி என்பதால் சனிக்கிழமைகளில் ஸெஷன்களை அமைத்தேன்.
தான் செய்வதில் எவை மோனா செய்திருக்கக் கூடும் என்றதைப் பற்றிய சிந்தனையை எழுப்பினேன். கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். முதலில் விடை பெறவில்லை, பிறகு மெல்ல மெல்ல அம்மாவைச் சில சிறு வேலைகளில் சேர்த்துக் கொள்ளத் துவங்கினாள்.
தற்போது இருக்கும் சூழலில் செல்வம் எவ்வாறு செயல்படுகிறார் என்று நான் கேட்ட போது சந்திரா ஸ்தம்பித்து நின்றாள். அவர் எப்போதும் போல இருப்பதாக யூகித்துச் சொன்னாள்.
கணவன்-மனைவி நெருக்கம் இருந்ததால் அவள் இப்படி யூகித்துச் சொன்னது அர்த்தமற்றது, அப்படி இருக்க முடியாது என்று அதை ஏற்றுக்கொள்ள மறுத்தேன். தாயாரின் விபத்திலிருந்து சந்திராவுடைய கவனம் அனைத்தும் அம்மாவின் பக்கம் மட்டுமே இருந்தது என்பது பல வர்ணிப்பில் தென்பட்டது. தினசரி நடப்புகளை, கடந்த நிகழ்வுகளை விவரமாக வர்ணிக்கச் சொன்னதில், சந்திரா தன்னுடைய இந்த அணுகுமுறையைப் பற்றித் தெளிவு பெற்றாள்.
கவனித்தபோதுதான் உண்மையான நிலைமை தெரிய வந்தது. மோனாவின் விபத்திற்குப் பிறகு, செல்வம் தன் வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஏதோ காரணங்கள் சொல்லி, வீட்டில் சாப்பிடுவதைத் தவிர்த்தார்.
அவர் மிகச் சீக்கிரமாகப் போவதையும் தாமதமாக வருவதையும் சந்திரா இதுவரை கண்டுகொள்ளவில்லை. சந்திராவின் கல்லூரி வெகு தொலைவிலிருந்ததால் அவள் சீக்கிரமாகக் கிளம்பி விடுவாள், வருவது நேரமாகிவிடும். அம்மாவின் கவலையில் தந்தை என்ன செய்கிறார் என்று சிந்திக்கவில்லை. அம்மாவை மேம்படுத்த முடியவில்லையே என்ற ஒரே சிந்தனை.
இந்தக் குறுகிய பார்வையால் அப்பாவிடம் நேர்ந்த மாற்றத்தைக் கவனிக்கவில்லை. இதயம் இவரை யோசிக்கவில்லை.
அவரின் இந்த நடத்தை மாற்றத்தைக் கண்டுகொண்டதும், தந்தையைப் பற்றியும், அவருடைய தவிப்பையும் புரிந்து கொண்டாள். அவர் நிலைமை புரிய வர, சந்திரா மீண்டும் மீண்டும் கேட்டது, நான் “எப்படிக் கவனிக்கவில்லை?” என்றே.
செல்வம் பற்றி மோனாவிடம் கேட்கும்படி அமைத்தேன். சந்திரா வியந்தாள், பல நாட்கள் அப்பா நடுவில் வீட்டிற்கு வந்து மோனாவிற்குக் காஃபி போட்டு அத்துடன் பலகாரமும் செய்து தந்ததை மோனா கூறினாள். ஆனால் இருவரிடையில் பேச்சு ஓரிரு சொற்கள் மட்டுமே இருக்கும்.
இதன் காரணத்தை ஆழமாகக் கலந்து ஆராய்ந்தபோதுதான் புரிந்தது. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் மோனாவிடம் முக நரம்புகளுக்குச் சிரமம் அதிகம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். நெடுநாட்கள் கழிந்த போதிலும் மோனாவும் செல்வமும் அதையே மனதில் வைத்துக் கொண்டு அதிகம் பேசுவதைத் தவிர்த்தனர்.
மூவருக்கும் உள்ளூரத் தவிப்பு. ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு வழியில் கையாண்ட விதத்தால் ஏற்பட்ட உணர்ச்சிகள் பல.
பல வாரங்களுக்கு செஷன்கள் போன பிறகே சந்திரா தன்னுடைய குறுகிய கண்ணோட்டத்தை அடையாளம் கண்டுகொண்டாள். மூவரின் பாசவலையினால் ஒவ்வொருவருக்கும் உள்ளூர நேர்ந்த கீறல்களும் மனக்கசப்பும் புரிய வந்தது.
மோனாவை அவள் வீட்டில் சந்தித்து வந்தேன். மோனா, தன் தவிப்பே பெரிது என எண்ணினாள். மகளுக்கும் அவ்வாறே “அம்மா மிகவும் தவிக்கிறாள்” எனத் தோன்றியது. இருவரும் செல்வம் பற்றி ஏன் சிந்தனை செலுத்தவில்லை என்றதை எடுத்துக் கொண்டோம்.
பாதிக்கப்பட்ட மோனாவின் இன்னல், தவிப்பு கண்ணுக்குத் தென்பட்டது. அவள் தவிப்பைத் தாங்க முடியாமல் தவித்த செல்வம் மௌனம் காத்ததால் அந்த மௌனத் தவிப்பு தென்படாமல் போனது எனச் சந்திரா மற்றும் மோனா இப்போது உணர்ந்தார்கள்.
சந்திரா, அம்மா முன்போல ஆகவேண்டும் என்று முயன்றதில், தந்தையின் உதவியும் தேவை என்ற முக்கியமான ஒன்றை விட்டு விட்டாள்.
கணவன் மனைவி உறவில் விரிசல் நுழைந்தது. சந்திரா இவ்வளவு செய்கையில், அதைச் செல்வத்தின் மௌனத்துடன் தான் ஒப்பிட்டது எந்த அளவிற்கு இருவரையும் பாதித்திருக்கிறது என்பதை மோனா உணர்ந்தாள்.
எங்கள் துறையில் பலமுறை நேரடியாகக் கேள்விகள் கேட்டோ சொல்லியோ ஒன்றை உணர்த்துவதற்குப் பதிலாக, வேறு ஒரு யுக்தியைப் பிரயோகிப்போம். க்ளையண்ட்டைத் தானாகச் சிந்திக்க வைத்துப் பகிரச் சொல்வோம். அது பயன் தந்தது. அதன்படி மோனாவையும் செல்வத்தையும் இந்த சூழலில் பிடித்தது, பிடிக்காததை விவரிக்கச் செய்தேன்.
பதில்கள் வர வர, அதற்கான விவரிப்புகளும் வளர, கூடவே மாற்றத்தைப் பற்றிய கலந்தாலோசனைகள் ஆரம்பமானது. இந்தத் தருணமே ஒரு ப்ரோஃபஷனலுக்கு ஆனந்தம்! ஏனெனில் அவர்களை தங்களின் இலக்கைத் தொடுவதற்குத் தாமாகவே சிந்தித்து, ஒன்றிணைந்து தாமாகவே வழி அமைக்கச் செய்வது எங்கள் அணுகுமுறை.
இதன் மூலம் மெல்ல மெல்ல மோனா வீட்டில் பல வேலையில் பங்கேற்பு கொடுத்து மற்றும் தானாகச் செயல் பட விட்டதில் அவளின் மறைந்திருந்த தைரியம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. முதல் மூன்று மாதங்கள் வீட்டுத் தோட்டத்தில் சில மணித்துளிகள் ஈடுபட்டு, பிறகு மெதுவாக நேரம் நீண்டது. இதுவும் சிறிய முன்னேற்றம்.
அடுத்த கட்டமாக, மோனாவைத் தன் எதிர்காலத்தைப் பற்றி எண்ணி, வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். அதை அடைவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பட்டியலிட முன்வந்தாள். தன் முன்னேற்றம் தன் கையில் என்ற உணர்வே பெரிய பலம் ஆனது!
தன்னால் எவ்வளவு முடியும், எப்படிச் செய்வது என்பதை குடும்பமாகப் பேசி வந்தார்கள். இதன் பலன், செல்வத்தின் நிலையும் மேம்பட்டது.
துன்பத்தில் சிக்கிக்கொண்டோரின் தவிப்பு புலப்படுகிறது.
உருகுகிறோம், உதவுகிறோம்!
மற்றவரும் பாதிக்கப்படுவது கண்களுக்குத் தெரிகிறதா?
