சித்தன் போக்கு- சிறுகதைகள்- பிரபஞ்சன்

இந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பை ‘பிரமிக்க வைத்த எழுத்தாளுமைகள்’ என வைத்திருக்க வேண்டும் எனும் ஞானோதயம் இந்தச் சிறுகதைத் தொடரைப் படித்தபின்தான் எனக்கு ஏற்பட்டது.
பிரபஞ்சனின் எழுத்து வியக்க வைப்பது. அவருடைய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய இரு புதினங்களையே படித்திருக்கிறேன்; திரும்பத் திரும்பப் படித்து அவற்றை வியந்திருக்கிறேன். அதன் எழுதப்படாத மூன்றாம் பாகத்தைத் தேடி அலைந்திருக்கிறேன். இப்போது அவற்றைப் பற்றி எழுதலாமென்றால், திரும்பவும் படிக்க வேண்டும்.
பெங்களூரில் நடந்த தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டை வாங்கினேன். ஒரே மூச்சில் படித்ததுதான் ‘சித்தன் போக்கு’ எனும் தொகுப்பு.
‘நான் நிறைவு கொள்ளும் நாள் இது’ எனும் ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மெய்சிலிர்த்த்து என்றால் மிகையேயில்லை. எழுத்துலக ஆளுமை ஒருவர் ‘சிறுகதை என்றால் என்ன’ என ஊருக்கு உபதேசம் செய்வதல்ல அது. தன்னடக்கமும் தகுதியும் நிறைந்து வழியும் சொற்கள்:
“ஒரு மொழியின் பெருமைகளில் ஒன்று கதை; கதை ஓடிக்கொண்டே பேசிக்கொண்டும் இருக்கிறது; நல்ல கதை என்பது ஆறு போன்றது; நினைவுக் கிடங்கிலிருந்து வெளிவரும் ஒரு சம்பவம் சொற்களாகவே வெளியே வருகிறது. கதைகள் மூன்று காலத்தையும் உள்ளடக்கியவை. அ-காலம் என்று ஒன்றையும் உள்கொண்டது கதை” எனும் பிரபஞ்சனின் சொற்கள் சிந்திக்க வைப்பவை; சிறுகதை எழுதுவோர்கள் எண்ணத்தில் கொள்ளத்தக்கவை.
“நல்ல படைப்பிலக்கியம் காலம் கடந்து ஜீவித்துக்கொண்டே இருப்பதன் சூட்சுமம் இதுதான்,” எனவும் கூறியுள்ளார்.
——————————-
வாசனை-2 எனும் முதல் சிறுகதையிலேயே கதையின் நாயகனான வைத்தியை சங்கீதத்தை உபாசிப்பவனாக அறிமுகப் படுத்தியிருப்பது விந்தை; நியாயமான பொருத்தம். ‘சுருதியே சங்கீதம் தானா என அந்தக் காலைவேளையில் ஒரு அனுபவம் கிட்டியது வைத்திக்கு. சுருதி பாஷையற்றது. மோகனம், கல்குவியலில் இருந்து கீழே வழியும் நதிநீர்; ஓடை, வாய்க்கால் என்று சொல்வது இருளாண்டியின் வழக்கம்,’ இப்படியும் இசையை மதிப்பிட முடியுமா என்று உள்ளம் பொங்குகிறது.
இந்த இருளாண்டி அவனைப் பிரிந்து சென்று, தொடர்பற்றுப் போனபின் ஓராண்டு கழித்து அவருடைய இறப்பு பற்றிய துயரச் செய்தி கிடைக்கிறது. பிரகாஷ் எனும் ஒரு நண்பனுடன் பேசுகிறான் வைத்தி. “வாழ்க்கையை அதிகம் நேசித்தவர்கள் சின்ன வயதில் உதிர்வது அதை விடவும் சோகம்,” என்கிறார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தில் இருளாண்டியின் முகம் புகைப்படலத்தினுள் மறைந்ததுபோல இருக்கிறது. ‘அறையைக் கமழ வைத்துவிட்டுக் காணாமல் போகிற சாம்பிராணிப் புகை என நினைத்துக் கொள்கிறான் வைத்தி’ எனக் கதை முடிகிறது.
சொற்சிலம்பங்களும் விவரிப்புகளும் ஒருவரின் குணத்தை எழுத்தில் படம் பிடிக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆனால் இங்கு அவற்றையும் மீறிய சொல்லாற்றலை உணர முடிகிறது. சோகம், இயலாமை, ஆற்றாமை இவற்றைக் கூறத் தேர்ந்தெடுத்துள்ள சொற்களும் பிரயோகங்களும் பிரமிக்க வைக்கின்றன.
——————————
அடுத்து ‘ஜப்தி’ எனும் சிறுகதை. அழகர்சாமி ஒரு அரவை மில்லின் சொந்தக்காரர். ஊராருக்கு எப்போதும் நல்லது செய்ய நினைப்பவர்; செய்பவர்; எல்லோராலும் மதிக்கப்படுபவர். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப அவரும் ஒரு சினிமா நடிகையிடம் தன்னை இழந்து விடுகிறார். கண்டபடி அவளுக்காகச் செலவு செய்து, அவள் வீடு கட்டவும் பல லட்சங்களைத் தன் அரிசி மண்டியையும், ஆலையையும் பிணையாகவைத்து வாங்கிக் கொடுக்கிறார். பணத்தைத் திரும்ப வேண்டி நடையாக நடக்கும்போதும், அவள் பங்களாவினுள்ளே அனுமதிக்கப் படாதபோதும்தான் தன் நிலை உணர்கிறார்.
அவரிடைய மாமனார் வியர்வையும் ரத்தமும் சிந்தி அங்குலம் அங்குலமாக வளர்த்த ஆலை ஏலத்திற்கு வந்துவிட்டது. அவர் மனதினுள் என்ன எண்ண ஓட்டங்களோ, அப்போது அந்த நடிகை கெங்குலட்சுமி கையில் பணத்துடன் வந்து இறங்குகிறாள். ஏலம் தொடங்க வேண்டும்.
‘அழகர்சாமி தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கிற, நிற்கிற கூட்டத்தைக் கண்டார். எல்லாருமே அவளையும் அவரையும் மாறிமாறிப் பார்த்த வண்ணமிருந்தார்கள். ஒரு நிமிஷம் யோசித்தார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். ஏல அதிகாரியைப் பார்த்துச் சொன்னார்: “ஏலம் நடக்கட்டும்.”
இந்தக் கடைசிச் சொற்களே அவருடைய மன ஓட்டங்களை அழுத்தமாக அடிக்கோடிட்டு விளக்கிவிடுகின்றன. ஆகா! இதுவல்லவோ சிறுகதை! பாத்திரங்களின் உளவியலை அவர்கள் சொற்களின் மூலமும் செய்கைகள் மூலமும் உணரவைப்பதும், ஒரு அழுத்தமான எதிர்பாராத முடிவில் கதையை நிறுத்துவதும் கைவந்த கலையோ? வாசகன் பிரமித்து நிற்கிறான்.
————————-
அடுத்து புத்தகத்தின் தலைப்பான ‘சித்தன் போக்கு’ எனும் சிறுகதை. ஒரு ஊருக்கு ஒரு மௌன சாமியார் வந்து சேருகிறார். தன் போக்கில் இருக்கும் அவரை ஊர் மக்கள் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர் கூறுகிறார்: ‘சாமியார், ஒரு மௌன சாமியார் என்பது முக்கியமான விஷயம், சாமியாரை, சாமியாராக, அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான்.’
‘சாமி கோயிலுக்குப் போய் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் அவர் நாஸ்திகர் என்று யாரும் சொல்ல முடியாது. யாசகர்கள் மாதிரி கைநீட்டும் ஜனங்களுக்கு சாமி, மண்ணைக் கொத்தாக எடுத்து நீட்டியது; மக்கள் மகிழ்ச்சியாக, “சாமி வரம் கொடுத்துச்சு” என்றபடி போனார்கள். மனத்துயரங்கள் போனால் மற்ற துயரங்கள் போன மாதிரி தானே!’ என்கிறார் ஆசிரியர்.
இப்படிச் செல்லும் கதை சாமி கைவைத்தால் எல்லாம் துலங்கும் என்பதில் வந்து நிற்கிறது. ஊரில் எங்கும் செல்லும் சாமி, சுப்புணியின் கடைக்கு மட்டும் போகவேயில்லை. சுப்புணிக்கு இதில் பெரும் வருத்தம். சுப்புணி ஒழுக்கமான, நேர்மையான மனிதரல்ல. ஆனாலும், அவ்வூரில் உள்ள அத்தை என ஒருத்தி சொல்லுக்குக் கட்டுப்பட்டு சாமியார் சுப்புணி கடைக்குச் செல்கிறார். சுப்புணிக்கு ஆனந்த அதிர்ச்சி.
“சாமி, எவ்வளவு வேணா கல்லாவிலிருந்து எடுத்து பிச்சைக்காரங்களுக்குப் போடுங்கோ,” என்கிறார். சாமி கொத்தாகப் பணத்தை அள்ளி, சுப்புணியைப் பார்த்துச் சிரித்தவண்ணம் சுப்புணியிடமே நீட்டி, அவருடைய நீண்ட கையில் தன் இடக்கையால் பணத்தைப் போட்டது,’ என்கிறார் ஆசிரியர்.
இதுவே சித்தன் போக்கு, சிவன் போக்கு அல்லவா? ஆசிரியர் சொல்லாமல் சொன்னது எவ்வளவு? அதியற்புதமான எழுத்தல்லவா இது? உருகிப்போனேன் நான்.
—————————–
கடைசியாக ஒன்று. வெளியேற்றம் எனும் கதை.
ஆத்மானந்தா எனும் ஒரு மடாதிபதி, அவர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதனை, அதனை நிறைவேற்ற அவர் படும் துயரங்களை விலாவாரியாக விளக்குகிறது.
ஒரு மடாதிபதி, பொதுத்துறையில் மற்ற ஜனங்களுடன் நீராடக்கூடாது (அப்படிச் செய்தால், அது அவரின் க்யாதியைக் குறைக்கும்; மரியாதை தாழும்). இன்னும் இதுபோலப் பலப்பல கட்டுப்பாடுகள். மடாதிபதிக்கு, மற்ற மனிதர்களே விதித்தது.
ஆறுமுகம் என்னும் துறுதுறுப்பான இளைஞன், முந்தைய பெரியவரான மடாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆத்மானந்தாவாகி, அவருக்குப்பின் மடாதிபதியாகவும் ஆகிவிடுகிறார். இங்கு ஆசிரியர் ஒரு சிந்தனைக் கோவையை வாசகர்களிடம் வைக்கிறார்: “துறவு என்பது மண்ணையும், பொன்னையும், பெண்ணையும் வெறுப்பதா? வெறுப்பவன் எவ்வாறு துறவியாக முடியும்? உலகின் அனைத்து மனிதர்களையும், மரம் மற்றும் மிருக வர்க்கங்கள் அனைத்தையும் நிபந்தனைகள் அற்று நேசிப்பவன் அல்லவோ துறவி?”
சாதியில் கடையர் என்பது மடத்தில் பெரிதாகக் கடைப்பிடிக்கப் படுவதறிந்து திகைக்கிறார். மற்றும் மடத்தினுள் நடக்கும் தில்லுமுல்லுகளை அறிந்தவர் அதிர்ச்சிகளுக்கு உள்ளாகிறார். மாற்றம் தேவை என எண்ணுகிறார் ஆத்மானந்தா. மாற வேண்டியது அவசியம். அதற்கு முதற்படியாகத் தான் மாற வேண்டும் என முடிவெடுக்கிறார். ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மடத்தை விட்டே வெளியேறுகிறார்.
‘ஆத்மா, நதியைக் கடந்து இப்பக்கம் வந்து சேர்ந்தார். இருட்டு சுத்தமாக அகன்றிருந்தது,’ எனக் கதை முடிவுறுகிறது.
அவர் மனதிலிருந்து இருட்டு அகன்று விட்டது. ஆனால் மற்ற மனித மனங்களிலிருந்து?? இதற்கு வெகுநாட்கள் பிடிக்குமே!
இருப்பினும், நேர்மையான எழுத்தாளன் என்பவன் தன் நேர்மையான எண்ணங்களை ஆணித்தரமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி எழுதிய கருத்துக்கள் இவை; அதுவே பிரமிப்பைத் தருகிறது.
இந்நூலில் இன்னும் பன்னிரண்டு கதைகள் உள்ளன. வாங்கிப் படியுங்கள். அருமையான தொகுப்பு.
(விரைவில் மீண்டும் சந்திப்போம்)
