‘டும் டும் டும் டும்’ சங்கர் விமலாவின் கழுத்தில் தாலி கட்டி கல்யாணம் விமரிசையாக முடிந்தது.
‘மருமகளே மருமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா’ என்று வீட்டிற்கு ஆரத்தி சுற்றி கூட்டி வந்து குடும்பம் நடத்தத் தொடங்கிய சங்கருக்கு எல்லாமே விமலாதான்.
சின்ன வயதிலேயே அப்பா அம்மாவைப் பறிகொடுத்த சங்கர், தனது தாய்மாமனிடம் தான் வளர்ந்தான். தாய்மாமன் இவனுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தாலும், மாமி இவனை ஒரு பாரமாக நினைத்ததால், மாமன் தனது அன்பை முழுதாக வெளிக் காட்ட முடியவில்லை. இதனால் சங்கர் தூய அன்புக்காக ஏங்கிதான் கல்யாணம் செய்து கொண்டான்.
விமலாவை கூட்டி வந்த சங்கர் ‘நீ இந்த வீட்டில் நீயாக இருக்கலாம். இந்த இல்லறத்தை நல்லறம் ஆக்க வேண்டியது உன் கையில் தான் இருக்கிறது, நான் உனக்கு எதற்கும் ஒரு துணையாக இருப்பேன், நீ எனக்கு ஒரு மதியூக மந்திரி’ என்று மிகவும் மிருதுவாக, இனிமையாகக் கூறினான்.
ஒரே பெண்ணான விமலா பிறந்த வீட்டில் சீராட்டி வளர்க்கப்பட்டவள். அவள் தாய் தந்தையர் அவளை மிகவும் அன்பானவளாகவும் பண்பானவளாகவும் வளர்த்திருந்தனர். சிவந்த நிறம், அழகான கண்கள், நீண்ட கூந்தல், பளிச்சென்ற முகம், தளிர்நடையோடு விமலா சங்கரின் இல்லத்தில் புகுந்தாள். மாலையில் வீட்டிற்கு வந்து சங்கர் கவிதை, கதை எழுதுவதில் முனைந்து விடுவான். விமலா ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு வேண்டியதைச் செய்து தருவாள்.
இதோ நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. நிருபமா, நிரஞ்சன் என்று இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டனர். வருடங்கள் ஓட நிருபமா பாட்டிலும், நிரஞ்சன் புல்லாங்குழல் இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றனர். நிருபமா பாட, நிரஞ்சன் புல்லாங்குழல் இசைக்க, சங்கர் தாளம் போட, விமலா அபிநயம் பிடிப்பாள்.
இந்த இனிமையில் மெதுவாக புயல் வீசியது. விமலா லேசாக தலைவலி என்று படுத்து விட்டாள். பிறகு ஜுரம் அதிகமாகி இரண்டு மூன்று நாட்கள் குறையாமல் போகவே டாக்டரிடம் காட்டியதில் அவர் நிமோனியா என்று சொல்லி விட்டார். சங்கர் பதறி விட்டான். நிரஞ்சன், நிருபமா இருவரும் அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டனர். வீட்டு வேலைகள் செய்வதிலும், அம்மாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு செல்வதிலும், அவளுக்குப் பணிவிடை செய்வதிலும் மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. ஆனாலும் கடவுளின் அருள் வேறு விதமாக இருந்தது. விதியை யாரால் வெல்ல முடியும்!
ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலையில் சிறிது காபி குடித்துவிட்டு சோர்வாய் இருக்கிறது என்று படுத்த விமலாவை நிருபமா வந்து பார்த்தபோது அவ்வளவுதான் எல்லாமே முடிந்து விட்டது! அழுது அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவரோ! அந்த சிறிய கூட்டில் இருந்து ஒரு கிளி பறந்து விட்டது. சங்கர் நிலை குலைந்து மயானத்துக்கு சென்று எல்லாம் முடித்துவிட்டு வந்தான். ஒரு வாரம் ஒரே வாரம்! அவர்கள் மூவராலும் தாங்க முடியவில்லை. மறுநாள் சங்கர் இருவரையும் தன்னை மயானத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான். நிரஞ்சனும் நிருபமாவும் கவலைப்பட்டுக் கொண்டே சங்கரை மெதுவாக மயானத்துக்கு கூட்டிச் சென்றனர்.
‘முடிந்தது, கவலை எல்லாம் விட்டு வாருங்கள், நாம் மூவரும் வீட்டிற்குச் சென்று அடுத்த அத்தியாயத்தைத் தொடருவோம், ஏனெனில் பகவான் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கு எனக்கு மிகவும் சந்தோஷம்’ என்று கூறினான்.
ஒன்றும் புரியவில்லை அம்மா போனதில் அப்பாவின் மூளை குழம்பி விட்டதோ என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இல்லை, நான் நன்றாக உள்ளேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை, உங்கள் அம்மா என் கை பிடித்து வந்த பொழுது என்னதான் படித்திருந்தாலும் அவளுக்கு உலக அளவில் அனுபவம் இல்லை, நான் அவளுக்கு சாதாரண சுகங்களைக் கூடத் தரவில்லை, நான் எனது ஆபீஸ், எழுத்து என்று இருந்து விட்டேன், ஆனாலும் உங்கள் அம்மா மிகவும் சந்தோஷமாக இருந்தார், அப்பொழுது ‘கடவுளே இவள் மிகவும் மென்மையானவள், அன்பானவள், நான் இறந்து அந்த துக்கத்தை அவளால் அனுபவிக்க முடியாது, ஆகையால் எனக்கு முன்னரே அவளை உன்னிடம் எடுத்துக் கொண்டு விடு, எனக்குப் பிறகு இங்கு அவள் எந்த விதமான கஷ்டங்களையும் அனுபவிக்கக் கூடாது’ என்று கடவுள் முன் தினந்தோறும் பிரார்த்தனை செய்தேன், கடவுள் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டது எனக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது, வாருங்கள் வீட்டிற்குப் போகலாம்’ என்று சங்கர் கூறியவுடன் கனத்த மனத்துடன் இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்!
நியாயமான எந்த ஒரு பிரார்த்தனையையும் கடவுள் ஏற்றுக்கொள்வார்!
