அந்த வீட்டின் பெரிய ஹால், கலர் பலூன்களும்…. காகிதத் .தோரணங்களும் காற்றில் ஆட,
மின்னும் ஸீரியல் பல்புகளுடன் சொர்க்கம் போல் இருந்தது.
நடுவில்.. பெரிய மேஜையில் ” ஹேப்பி பர்த்டே டு டியர் வருண் ” என்ற
எழுத்துக்கள் நீல நிறத்தில் பளபளக்க….பிரம்மாண்ட கேக்..
பட்டுப் புடவை, வைர நெக்லெஸ், பார்லரில் போட்ட மேக்கப் அத்தனையும் மீறி..
முகத்தில் பொங்கிய கவலையுடன்… சூர்யாவின் அம்மா…. வாசலையும்… வாட்சையும்
பார்த்துக் கொண்டிருந்தாள். போனைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவின் அப்பா….. நிமிர்ந்து அவளை முறைக்க… …
‘ கோபப்படாதீங்க… நான் காலைலேயே சொல்லிட்டேன் . வீட்டில பார்ட்டி இருக்கு… ஃபிளாட்டில . எல்லாரும் வருவாங்க, சீக்கிரம் வந்துடுன்னு.. ஃபோனே எடுக்க மாட்டேங்கறான். “
” முக்கியமான மீட்டிங்… எல்லாம் விட்டுட்டு இவனுக்காக உட்கார்ந்திருக்கேன்…
தவமிருந்து வந்தாவன்னு தலைல தூக்கி வைச்சா இப்படித்தான்…. அவனுக்கு
எதும் வேணும்னாலும் கூட………..நீதான் தூது வர்றே…… ஒரே பையன்ங்கன்னு கெஞ்சிட்டு…”
” ஆமா…இப்போத் திட்டுங்க .. உங்க பிசினெஸ், மீட்டீங் ஃபோன் எல்லாம் தள்ளி வைச்சுட்டு .. சூர்யா… . எப்படிப் போகுது உன் படிப்பெல்லாம்… மேலே என்ன படிக்கலாம்னு இருக்கேன்னு உட்கார்ந்து என்னிக்காவது அக்கறையா அவன்கிட்டேப் பேசறீங்களா….எப்படிப்பா இருக்கேன்னாவது கேட்டிருக்கீங்களா ? வரவர இளைச்சுட்டே போறான்… சரியாவே சாப்பிடறதில்லை. அவனைக் கவனிச்சு பார்த்தாதானே தெரியும் ?
எத்தனை தடவை சொன்னேன் உங்ககிட்டே…. நைட் எப்போத் தூங்கறான்னே தெரியலை… ஃபோனும் கையுமாத்தான் இருக்கான். . கூடவே பிறந்தது மாதிரி அதுதான் அவன் கூட
ஒட்டிக்கிட்டு இருக்குது. ..வேண்டாததெல்லாம் அதிலதான் வருதுங்கறாங்க.. கொஞ்சம் பாருங்கன்னு எல்லாம் சொல்லியும் இப்போ வரை ஒரு வார்த்தை கூட அவன் கிட்டே கேட்காம… இன்னிக்கு… நாளைக்குன்னு தள்ளிப் போட்டுட்டு… இப்போ எல்லாம் என்னாலங்கறீங்க…
பணம் வேற கேட்டான்… பார்ட்டி குடுக்கணும்னு .ஃபிரண்ட்ஸ் கூடப் போயிருக்கானோ….
என்னவோ…. …
” பணமா? எவ்வளவு?
” பத்தாயிரம்… ”
” என்னடி சொல்றே….இவ்வளவு பணமா? எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டியா? இப்போ வந்து சொல்றே… “
” பிறந்த நாள்னு ஏதாவது ஸ்டார் ஹோட்டல்ல மதியம் ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிடுவான்னு நினைச்சேன்., னல்ல நாளும் அதுவுமா .நீங்க திட்டுவீங்க… இன்னிக்கு என்னவோ அவன் கேட்கறப்போ வேண்டாம்னு சொல்ல முடியலங்க….. “
“சரி…. புலம்பாத… இன்னிக்கு பார்ட்டி முடியட்டும்… அவன் கிட்டே பேசறேன்… எல்லாம்
சரி பண்ணிடலாம்… எவ்வளவு டீல் பார்த்திருக்கேன் பிஸினஸ்ல……. “
” உங்க பிசினஸும் பிள்ளை வளர்க்கறதும் ஒண்ணா?அதுக்குப் பணம்..உங்க பிஸினஸ் மூளை மட்டும் போதும்..
இதுக்குக் கொஞ்சம் பாசம்… அக்கறை எல்லாம் வேணுமே….” தொண்டை வரை வந்ததை விழுங்கிக் கொண்டாள்……. இன்னொண்ணும் இருக்கு சொல்ல முடியாமல்..………
கொஞ்ச நாள் முன்பு… ” வேலை முடிச்சுட்டேன்மா… என்று தயங்கி நின்ற லட்சுமியிடம்,
பணம் வேணுமா ? என்று கேட்க..
“இல்லங்கம்மா…. நம்ம தம்பி பத்தி… … “…
” யாரு… சூர்யாவா… … ?
” ஆமாம்மா … .ரெண்டு மூணு வாட்டி தம்பி காரை எங்க வீட்டுக்குப் போற வழில இருக்கற
பெரிய ஒயின் கடைல பார்த்தேன்மா…. அதே சந்தனக் கலரு…. .
” அது போலக் காரு ஊரில ஆயிரம் இருக்கு லட்சுமி… ? நம்பர் பாத்தியா?
” அதெல்லாம் தெரியாதும்மா… ஆனா.. நம்ம .. தம்பி கார் பின்னால சிரிக்கிறாப்போல
ஒரு மஞ்சக் கலர் பொம்மை படம் ஒட்டியிருக்கும்..
ஹாரன் அடிக்கறது வித்தியாசமா அலறல் மாதிரி இருக்கும்…அதை வைச்சுதாம்மா
கண்டு பிடிச்சேன். .. தம்பியை … அங்கேயிருந்து வெளில வரும்போது பார்த்தேன்மா… ..
அந்தப் பழக்கம் ஒண்ணு போதும்மா…. எல்லாக் கெட்டதும் தானா வந்து ஒட்டிக்கும்….. ரொம்ப தூரம் போறதுக்குள்ளே பிடிச்சு இழுத்துருங்கம்மா….. மெதுவா அய்யா காதிலயும் போட்டுடுங்க… .. “
அவள் சொன்ன செய்தியில் உயிரே போனது போல் ஆனாலும்…
அவன் வரும்போது தள்ளாடுகிறானோ…. வித்தியாசமா ஏதும் தெரியலையே?..
ஏன் . அவசரப்பட்டு அவரிடம் சொல்லணும்? அதுவும் இவள் சொல்வதை நம்பி… கொஞ்ச நாள் பார்க்கலாம் என விட்டதன் விளைவா.??
இவன் ஏன் இன்னும் வரவில்லை…? எல்லாரும் வேற இப்போ வந்துடுவாங்க….
சூர்யாவைப் பெற்றவர்கள் பதற்றத்தில் இருக்க… அவனை நாம் பார்க்கும் முன் .. வசந்தியைப் பார்க்க,,அவள் ஸ்கூலுக்குப் போவோம் .
ப்ளஸ் ஒன் படிக்கிறாள் என்று நம்ப முடியாத சிறுமியாகத் தெரிந்தாள் அவள். .
அழுக்கில்லாமல் ஆனால் … அங்கங்கே நைந்திருந்த யூனிஃபார்ம் . கயிறாகச் சுருண்டிருந்த ரிப்பன். .
பிளாஸ்டிக் வளையல்கள்… வயதிற்கேற்ற சத்தான உணவு…. இல்லாத வறுமையில்
மெலிந்திருந்தவள் முகத்தில் கண்களில் மட்டும் நட்சத்திர மின்னல்.. தலைமை ஆசிரியை முன் நிற்கிறோம் என்ற பயத்துடன் நின்றவளிடம்….
” வசந்தி … இருட்டிப் போச்சே.. வீட்டுக்குப் போகலை?
“ இல்லை மேடம்.. நாளைக்கு நடக்கப் போற கட்டுரை.. பேச்சுப் போட்டிக்குக் கொஞ்சம் குறிப்பெல்லாம் எடுத்துட்டு இருக்கேன்… நம்ம லைப்ரரி புத்தகத்தில இருந்து… அதான் லேட்டாயிடுச்சு “
“.எப்படியும் வசந்தி நம்ம ஸ்கூலுக்கு பரிசு வாங்கித்தந்துடுவான்னு… உங்க டீச்சர் கூடச் சொன்னாங்க . எல்லா ஸ்கூலும் கலந்துக்கற போட்டி….தெரியும்ல…
அடுத்த நொடியில் கட்டியிருந்த கைகளைப் பட்டெனப் பிரித்து விட்டு
“ஆமாம் மேடம்… எல்லாத்துலயும் பரிசு வாங்கி…. நம்ம ஸ்கூலுக்கு வின்னிங் கப் வாங்கிக் கொடுக்கணும்னு எங்க டீச்சர் சொன்னாங்க மேடம். நம்ம ஸ்கூல்தான் சாம்பியன்.. நாளைக்குப் பாருங்க.. .. “அந்தச் சிறுமியின் நம்பிக்கையில்…வியந்து போனவளாய்…
ஓ…. வெரி நைஸ்…… வசந்தி….கேட்கவே சந்தோஷமா இருக்கு.நல்லா பிராக்டீஸ் பண்ணு….ஆல் த பெஸ்ட்.”
ஓ.கே. மேடம்…”
” ஆமா… வசந்தி… உங்க . அம்மா…… அதே ஆஸ்பத்திரில தான் இன்னும் வேலை பார்க்கிறாங்களா? “
” ஆமாங்க மேடம்…. அப்பா முகம் கூட எனக்குத் தெரியாது. உடம்பு சரியில்லாம இருந்து நாங்க சின்னதா இருக்கும்போதே … போயிட்டாருன்னு சொல்லுவாங்க. அப்போக் கிடைச்ச இந்த ஆஸ்பத்திரி வேலைலைதான் ரொம்பக் கஷ்டப் பட்டு என்னையும் என் தங்கச்சியையும் படிக்க வைக்கிறாங்க.
சில சமயம் வீட்டுக்கு வர ராத்திரி ஒம்போது கூட ஆகும்.
நாங்க நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்…. அதான் அவங்களோட ஒரே லட்சியம்..
என்னால படிக்க முடியலை. அதான் நல்ல வேலை கிடைக்கலை… நீங்க ரெண்டு பேரும் நல்லாப் படிக்கணும்னு அம்மா எப்பவும் சொல்லுவாங்க… நல்ல வேலைக்குப் போயி எங்க அம்மாவை ராணி மாதிரிப் பார்த்துக்கணும்… மேடம்.
வாழ்க்கையிலே அடிபட்டுக் கீழேபோயிட்டாலும், தன் காலிலே நின்னு, கஷ்டப்பட்டு உழைச்சு… பொண்ணுங்களைப் படிக்க வைச்சு… சாதிச்ச…. சந்திராவோட பொண்ணுன்னு எல்லாரும் சொல்லணும் .அதான் என் ஒரே ஆசை ” என்று உறுதியுடன் சொன்ன .அந்தச் சிறுமியின் விஸ்வரூபம்… பிரமிப்பாய் இருந்தது.
“.வசந்தி….உங்க அம்மாவை நினைச்சு ரொம்பப் பெருமையா இருக்கு. உன் நியாயமான ஆசை நிறைவேற நானும் ப்ரே பண்றேன். ஓ. கே. நீ கிளம்பு,, “
அவள் ஓடி விட்டாள்.
சிறிது நேரம் ஆனதும்… அறையை விட்டு வெளியே வந்த அந்த ஆசிரியை வசந்தி தோழிகளுடன் சிரித்துப் பேசியபடி போனதைப் பார்த்ததும்… ” இந்தப் பெண்ணுக்கு எப்போதும் சந்தோஷத்தையே கொடு இறைவா…..”: என மனதார நினைத்துக் கொண்டாள்….
இப்போது நாம் நம் சூர்யாவப் பார்ப்போம் …
ஸ்டார் ஹோட்டலின் பார் அது. உள்ளே ஒரு டேபிளில்…. பாட்டில்களும்
நண்பர்களும் புடைசூழ…. அவன். . சூர்யா.!!!
“மச்சான்… இதாண்டா. பர்த்டே பார்ட்டி. செம்மடா.. சூர்யா கண்ணா… நீ ஹன்ரட் இயர்ஸ் இருக்கணும். இப்படி எல்லாருக்கும் டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்திட்டே இருக்கணும்… வாழ்க.”.. கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்த ஆகாஷின் ஃபோன் அடித்தது. “
” டேய்..ஃபோனை ஆஃப் பண்ணுடா…. இம்சை…… ” சூர்யா கத்த…
” டேய் சூர்யா.. … இம்சை உனக்குத் தாண்டா… உங்க அம்மாடா…. ஏழு மிஸ்டு கால்டா… “ஆகாஷ் அலற…
” சே. அவ்வளவுதான்… … ஏய்… கிளம்பலாம்டா.மாறி மாறி கால் பண்ணுவாங்க…….. கையில் இருந்த பாட்டிலை அப்படியே வாயில் சரித்துக் கொண்டு ,சூர்யா கார் சாவியை எடுத்தான். ….
அந்த ஸ்டார் ஹோட்டலை விட்டு அலறலான ஹாரனுடன்… கிளம்பிய சந்தன நிறக் காரின் அசுர வேகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றார். செக்யூரிட்டி. ஒரே நிமிடத்தில் வளைவில் திரும்பிய காரில் சிரித்துக் கொண்டிருந்தது மஞ்சள் நிற ஸ்மைலி….
சூர்யாவின் வீட்டில் … காத்துக் கொண்டிருந்த விருந்தினரை… முதலில் சாப்பிடச் சொல்லி விட்டு, அவன் பெற்றோர்கள் மகனுக்காகக் காத்திருக்க…..
வசந்தியின் வீட்டிலோ…
அவளும், தங்கையும் இன்னும் ஆஸ்பத்திரியில் இருந்து வராத அம்மா சந்திராவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருக்க…….
கடிகாரம் ஒன்பதைத் தொட்டது…..
மணி ஒன்பது என்றதும்…. பதட்டத்துடன் காரின் வேகத்தை அதிகமாக்கினான் சூர்யா.
அளவுக்கு மீறிக் குடித்திருந்ததால்.. காரைக் கட்டுப் பாட்டில் கொண்டு வர முடியாமல்…. .
வேகக் கட்டுப் பாடில்லாமல்… .போனது.
பார்த்து விட்ட போலீஸ் காரை நிறுத்தச் சொல்லியும் கேளாமல் அவன் கார் பறக்க….
டிராஃபிக் போலீஸ் துரத்தியது. .
இவனுக்கு நிகரான வேகத்துடன் வந்து கொண்டிருந்த போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும்…. . சூர்யா பயந்து விட்டான்.
” மாட்டினால் தொலைந்தோம் ” என்ற பயம் மட்டுமே அவன் மனதில் … அந்தப் பதட்டத்தில் தாறு மாறாக அவன் ஓட்டிய கார்…. ஒரு கட்டத்தில் அவன் கட்டுப் பாட்டை மீறி .. அதி ..வேகமாய் ஓடி.. பெரிய சத்தத்துடன் அருகேயிருந்த பஸ் ஸ்டாப் கம்பத்தில் மோதி நின்றது.
மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு…….சாலை நடுவே… சிதறிய கண்ணாடித் துகள்களுடன் … விழுந்தவள்… .. வேலை முடிந்து வீட்டுக்குப் போக பஸ்ஸ்டாண்டில் காத்திருந்த வசந்தியின் அம்மா சந்திரா…..!! தன் அன்புப் பெண்களின் பேரைச் சொல்லிக் . கத்தக் கூட முடியாமல் தலை பிளந்து ஒரே நொடியில் இறந்து போனாள்…… கண்ணெதிரே நடந்து முடிந்த கோரத்தைப் பார்த்து அலறக் கூட முடியாமல் வாயை இறுக மூடிக் கொண்ட பூக்காரியின் கண்களில் இருந்து நிற்காமல் கொட்டியது கண்ணீர். தன்னிடம் தினம் பூ வாங்கும் பெயரே தெரியாத ஆஸ்பத்திரி அம்மாவுக்கு அவளால் ஆன அஞ்சலி…… !!
ஆசைப்பட்டு பிறந்த நாளுக்கு வாங்கிய ஸீ ப்ளூ ஜீன் முழுக்க ரத்தச் சேறு அப்பியிருக்க, சிவப்புப்புள்ளிகள் தெறித்திருந்த சந்தன நிறக் காரின்… முழுக்க .நசுங்கிப் போன கதவு வழியே தள்ளாடி .வெளியே… வந்த சூர்யா… அதிர்ச்சியில் உறைந்தவனாய் சாலையில் கிடந்தவளைப் பார்த்தான். அந்தப் பெயர் தெரியாத பெண்ணின் கண்களோ… “ நான் என்னடா தப்பு செய்தேன்.. “ எனப் பரிதாபமாக அவனைக் கேட்டபடி உயிரற்று வெறித்திருந்தன.…. இனி வாழ்நாள் முழுக்க துரத்தப்போகும் அந்தப் பார்வையிலிருந்தும்… கேள்வியிலிருந்தும் தன்னால் தப்பவே முடியாது … என்ற உண்மையில் அவன் மனமும் உடலும் நடுங்கின.
தங்கள் வாழ்வின் ஒளியாய் வந்து என்றும் வீட்டின் கதிரவனாய் இருப்பான் என்று தேடித் தேடிப் பெயரிட்ட அவன் பெற்றோர் கனவிலும் அவன் வாழ்விலும் இருள் மெல்லக் கவியத் தொடங்கியது.
மோதிய வேகத்தில் அலற ஆரம்பித்திருந்த அவன் காரின் விநோதமான ஹார்ன்.. இன்னும் அலறிக் கொண்டிருக்க……அதே அலறல் அவன் மனதிலும் …. இனி எப்போதும் அவன் முகத்தில் இயல்பாக வர முடியாத . புன்னகை மட்டும் காரின் பின்னால் சிரித்துக் கொண்டே இருந்தது…ஸ்மைலியாக…..!!.
