வழக்கம்போலப் பத்மநாபன் தன் காலை வாக்கிங்கை அந்தக் கடற்கரையில் தொடங்கியிருந்தார்.அது சென்னையின்  திருவான்மியூர்  பீச் !காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு யாருடனோ உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் பெண்,  உடற்பயிற்சி செய்து கொண்டே நடக்கும் உயரமான மனிதர்,  சீரான  ஸெட்ப்புகளுடன்  ஜாங்கிங்   செய்யும் இளம்பெண். தொலைவில், கடலருகில் இன்றைய  ட்ரெண்டிங்காகயிருக்கும்                  “வெட்டிங் ஷூட்டில்”  சினிமா காட்சிகளை விட  மோசமான  போஸ்களில ் தங்கள் காதலைச் சொல்லிக்கொண்டிருக்கும் காதலர்களை  வெள்ளைக்குடை,விளக்குகளுடன்,    இயக்கிக் கொண்டிருக்கும்  போட்டோகிராபர்கள், என்றுதினமும் காணும் காட்சிகளைப்   பார்த்தபடி நடந்துகொண்டிருந்தவர், சற்று தொலைவில் கண்ட காட்சியைக் கண்டு திடுக்கிட்டார்.

நல்ல பருமனும் உயரமும் கொண்ட ஒரு மனிதர் அருகிலுள்ள சிறிய மரத்தின் கிளையைப்  பிடிக்க முயன்று,முடியாமல் போக சரிந்து உட்காருகிறார். சில வினாடிகளில் தரையில் மல்லாக்க சாய்கிறார். பதறி அருகில் சென்ற பத்மநாபன்  ” சார்!  என்று அவரை  எழுப்ப முயற்சி செய்கிறார்.  தலை கழுத்தில் நிற்க வில்லை துவண்டு சாய்கிறது. கண்கள் சொருகிக்கொண்டிருக்கிறது  “ஹெல்ப்” என்று கத்துகிறார்.  வாக்கிங் சென்றுகொண்டிருந்தவர்களில் ஒரு பெண்மணி தன் கைப்பையிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துத் தருகிறார். முகத்தில்  தெளித்த நீர் வழிந்து  டீசர்ட் நனைகிறது.  ஆனால் கண் திறக்கவில்லை. நல்ல கலர், கட்டுமஸ்தான உடல் வழுக்கைத் தலையின் பின்புறம் நரைத்த முடி.பத்மநாபன் அவரை  தூக்கி நிற்க வைக்க முயல்கிறார்.  அவரால் முடியவில்லை மெல்லக் கூட்டம் சேருகிறது. ஆளாளுக்குயோசனை.  மராத்தான் ஓட்டத்துக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர்  போலீசா  மிலிட்டரியா, தெரியவில்லை. பாய்ந்து வந்து விழுந்த கிடப்பவரைப் பின்புறத்திலிருந்து கட்டி அணைத்துத் தூக்கி அருகிலிருந்த  தடுப்புச் சுவரில் படுக்க வைக்கிறார்.  .   ஹி வில் பீ ஆல்ரைட்”  டாக்டருக்கு போன் செய்யுங்கள்  என்று சொல்லிவிட்டு தன்  ஓட்டத்தைத்  தொடர்கிறார்.

அணிந்திருக்கும் நைக் டிராக் சூட், நைக் ஷூ டிஷர்ட் அவர் வசதியானவர்  என்பதைச் சொல்லிற்று.  அருகில் போன், டிஷ்ர்ட் பாக்கெட்டில் போன் பர்ஸ் எதுவுமில்லை. அந்தச்  சலனமில்லாத நிலையிலும் கம்பீரத்தை காட்டும் முகத்தை பார்த்துக்கொண்டே பத்மநாபன் யாருக்கோ  போன் செய்கிறார்.

கூட்டம் அதிகமாகிறது.எவருக்கும் அவர்  யார் என்று தெரியவில்லை.  “பாக்கெட்டில் போன் இருக்கிறதா   பாருங்கள்.  பர்ஸ் உள்ள ஐடி  இருக்கும்   பாருங்கள்”  தலைக்குத்  தலை யோசனைகள்,

சில நிமிடங்களில்  மோட்டார் சைக்கிளில் வருகிறார் அருகிலிருக்கும் சர்ச்சின் ஃபாதர். பின்னாலேயே காரில்  ஒரு டாக்டர். என்னாச்சு பத்மநாபன்? என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே  டாக்டர்  சோதனைகளை முடித்துவிட்டு  “மாசிவ் ஹார்ட் அட்டாக் , இறந்து 15 நிமிடம்ஆகியிருக்கலாம்”, அடுத்துச் செய்ய வேண்டியதை கவனியுங்கள். என்று சொல்லிவிட்டு காரில் திரும்புகிறார்.

“இந்த ஏரியாகாராகத்தான் இருப்பார் கண்டுபிடித்துவிடலாம்.” என்று சொல்லுகிறார்  பத்மநாபனின் நண்பர் பாதர்  சேவியர்..  அவர்கள்  பேசிக்கொண்டிருக்கும்போதே  அந்தப் பகுதியின் போலீஸ் ரோந்து வாகனம் வருகிறது.  அதிலிருந்த  சப் இன்ஸ்பெக்டர்  ஃபாதர்  சேவியரைபார்த்து  குட்மாரினிங்ங்   என்று சொல்லியவண்ணம் இறங்குகிறார். விபரங்களைச்சொன்ன ஃபாதர்  இவர் யார் என்று கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் சேர்க்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இதை உங்கள் இன்ஸ்பெக்ட்டரிடம் சொல்லிவிடுங்கள். டாக்டர்  சர்டிபிகேட்டுடன்   விபரங்களை பத்மநாபன் உங்கள்  ஸ்டேஷனில்  தருவார் என்கிறார்.  பேசிக்கொண்டிருக்கும்போதே தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது.  உடலை  சுமந்துகொண்டு பறக்கிறது.  அமெரிக்கா,  ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல இறந்தவர்களின் உடலை உரியவர்கள் வந்து  இறுதிச்சடங்குகள் செய்ய வரும் வரை ஐஸ்  பேழைகளில் பாதுகாத்துக்  கொடுப்பதற்கான  பார்லர்கள்  இப்போது இந்தியாவிற்கும், சென்னைக்கும் வந்துவிட்டது. அதில் ஒன்றுக்குத்தான்  ஃபாதர் சேவியர் போன் செய்து ஏற்பாடு செய்திருக்கிறார்.

“எனக்கு சர்வீஸுக்கு நேரமாகிவிட்டது.சர்ச்சில் பிரார்த்தனையின் முடிவில்  செய்தியை அறிவிக்கிறேன்  யார் மூலமாவது கர்த்தர் உதவுவார்,  நீங்களும் முயற்சி செய்யுங்கள். போன் செய்யுங்கள்” என்று சொல்லி தன்  மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறார்.

ஒரு  மோசமான காலையுடன் தொடங்கியிருக்கிறது இன்றைய நாள், என்று எண்ணியபடி வீட்டிற்குப் போகும் பத்மநாபன் காலை உணவை முடித்து ஏடிஎம்மில் பணம் எடுக்கக் கிளம்புகிறார். எதிரில் போஸ்ட் மேன் மூர்த்தி” குட்மாரினிங்” என்கிறார். அவரைப் பார்த்தவுடன் ஒரு மின்னல்.  தன் போனிலிருக்கும் படத்தைக் காட்டி கேட்கிறார். “தெரியுமே சார்!”, இவர் எல்ஐசியிலிருந்து ரிட்டையர்ட்  ஆன ஜி.எம். சண்முகம் பிள்ளை.   வால்மீகி நகர் 4 வது தெருவில் தான் வீடு என்கிறார். விஷயம் அறிந்து மிகவருத்தத்துடன்,  நல்ல மனுஷன் சார்.  என் பையனுக்கு காலேஜ் அட்மிஷன் வாங்கிக் கொடுத்தார்.   மகனும் மகளும் அமெரிக்காவில்இருக்காங்க. இங்கே இவரும் மேடமும் மட்டும்தான் என்று  சொல்லித் தன்  டிவிஎஸ் பிப்டியில்  அந்த வீட்டுக்கு பத்மநாபனைக் கூட்டிச்செல்கிறார்.

சிறிய  தோட்டத்துடன் இருக்கும் அந்த அழகான வீடு பூட்டப்பட்டிருக்கிறது.எதிரில் இருக்கும் இஸ்திரி செய்யும்  பெண்ணிடம் போஸ்ட் மேன்  விசாரிக்கிறார். “அய்யா வாக்கிங் போயிருக்கிறார். அம்மா வெளியூர் போயிருக்காங்க. அவங்க போன் நம்பர்  தெரியாது. “  என்ற பதில் கிடைக்கிறது.  “ஆனா அவங்க  வீட்லே  வேலை  செய்யற லஷ்மியின்  போன் நம்பர் இருக்கு.  அவங்களைக்  கூப்பிடுகிறேன் என்கிறார்..  சில நிமிடங்களில் ஸ்கூட்டியில் மஞ்சள் ஹெல்மெட்டுடன் வந்த நடுத்தரவயதுப்பெண்  லஷ்மி.  “என்ன சார் ஆச்சு?

விபரம் அறிந்து ஐயோ! அம்மாவுக்கு  நான் எப்படிச்சொல்வேன்? என்று  அழும் குரலில் சொல்லும் அவரிடமிருக்கு போனை வாங்கி பெயர் கேட்டு கூப்பிட்டு பத்மநாபன் பேசுகிறார்.  சுருக்கமாக வருத்தமான விஷயத்தைச் சொல்லுகிறார். மறுமுனையில் விம்மும் ஒலி கேட்கிறது.

பத்மநாபனிடமிருந்து  தகவல் அறிந்த  ஃபாதர்  சேவியர் பார்லருக்கு தகவல் சொல்லுகிறார் பேழையில்  சண்முகத்துடன் பார்லரின்  ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது..

மிஸஸ் சண்முகம். பாலக்காட்டிலிருந்து  கோவைக்கு வந்து  விமானத்தில் சென்னை வந்து கொண்டிருக்கிறார்,

மகன் சிகாகோ ஒஹேர் விமானநிலையத்தில் சென்னைக்கு  எமர்ஜென்சி  டிக்கெட் வேண்டி நிற்கிறார்.

லஷ்மி  தன்னிடமிருக்கும்  சாவியால் வீட்டை திறந்து தன் எஜமானர்களில் வரவுக்காக காத்திருக்கிறார்.