புத்தகம் : “?” ( லா.ச. ராமாமிர்தம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ) தொகுப்பு : லா. ச. ரா. சப்தரிஷி ( வம்சி புக்ஸ், திருவண்ணாமலை ) பக்கம் : 416  விலை : ரூ.390

Writer LA. SA. RA. Centenary | திருமதி.லா.ச.ரா ( ஹைமவதி ), திரு. சப்தரிஷி (லா.ச.ராவின் மகன்) உரை

வண்ணநிலவனின் “இரண்டு உலகங்கள்” சிறுகதைத் தொகுப்பை கனடாவிலுள்ள பிக்கெரிங் பப்ளிக் லைப்ரரியில் காண நேர்ந்த அதே நாளில் வினோதமான “?” என்று தலைப்பிடப்பட்ட லா.ச. ராமாமிர்தம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பும் என் கண்ணில் பட்டது. பாலைவனத்தில் சுனையைக் கண்டது போல் மகிழ்வுற்றேன். எத்தனை முறை லா.ச.ராவின் கதைகளை ஏற்கனவே ரசித்து ருசித்திருந்தாலும், மறுவாசிப்பும் அதே ஆனந்தத்தை அள்ளித் தரும்தானே ?

லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷியால் தொகுக்கப்பட்டுள்ள இப்பொக்கிஷத்தில் 22 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் முன்னுரையில் லா.ச.ரா சப்தரிஷி அவர்கள் லா.ச.ராவின் எழுத்தின் விசேடத்தன்மையை அவரால் முடிந்தவரை எடுத்துரைக்க முயன்றுள்ளார். அவர் எழுதுகிறார் : “லா.ச.ராவின் மனதில் யாருக்கும் தோன்ற முடியாத விஷயங்கள் தோன்றுவது பெரிதல்ல. அவர் மனதில் தோன்றியதை தோன்றியபடியே அப்பழுக்கில்லாமல் நம் மனதிற்கு எழுத்து மூலம் மாற்றிவிடும் ரசவாதம்தான் மிகப்பெரிய விஷயம். அவருடைய கற்பனை கற்பனைக்கெட்டாதது.

Anna Centenary Library | லா.ச.ராமாமிர்தம் (1916 - 2007)– “தூரத்தில் இருந்து பார்த்தால் கோபுரமே வானத்துல சாய்வா போடப்பட்ட கையெழுத்து மாதிரிதானே இருக்கு”

– “அள்ளிச் சொருகின கொண்டையாட்டம் கருக்கல் திரண்டு தன் உள்ளுக்கே வளையுது. அதுல திருகி பில்லையாட்டம் நிலவு சின்னதா பதியுது”

– “விஷத்தில் தோய்ந்த அமிழ்தம் போல் இருந்தது என் மனநிலை”

– “மரங்களிலிருந்து இலைகளின் ஓசைகள் ஆசி அக்ஷதையை தூவினாற் போல் உதிர்ந்தன”

இத்தகைய தேன் துளிகளைத் தவிர, பிற புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் லா.ச.ராவின் எழுத்து நடை பற்றிப் பகிர்ந்துள்ள கருத்துக்களையும் நமக்கு தொகுப்பாசிரியர் வழங்கியுள்ளார்.

லா.ச.ராவின் “கறைபட்ட இலை”, “மஹாபலி”, “சோம சன்மா”, “கிரஹணம்”, “அம்முலு” போன்ற கதைகளை நூல் வழங்கும் வரிசையிலே படிக்கப் படிக்க நாம் கதை படிக்கிறோமா, கவிதைதான் படிக்கிறோமா, இயல்பான பூலோக வாழ்க்கை எங்கே, இவர் சிருஷ்டிக்கும் தேவ, கந்தர்வ லோகங்கள் எங்கே என்று ஆயிரம் குழப்பங்களும் இருந்தாலும், நாம் தேன் குடித்த நரி போல் அவருடைய தேவாம்ருத நடையில் திக்குமுக்காடிப் போய் விடுகின்றோம்.

நீங்களும் லா.ச.ராவின் சிறுகதைகளில் மீண்டும் மூழ்கி எழுங்களேன் !