“சொல்றேன்! முடிஞ்சா சரியா கேட்டுக்கங்க! உங்க ஜூசில மயக்க மருந்து கலந்திருக்கேன். இன்னும் ரெண்டு நிமிஷத்தில ரெண்டு பேரும் மயங்கி விழப் போறீங்க. அதுக்கப்பறம் என் திட்டப்படி எல்லாம் நடக்கப் போகுது ” என்று அண்ணன் வில்லன் மாதிரி ஹா ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் பிசிற்.
சிரிக்கும் போது கொஞ்சம் கூட பிசிர் தட்டவேயில்லை.
முதலில் வைஜயந்தி மயங்கி விழ , எனக்கு வயிறு கலங்கியது.
ஆனால் நான் ஜூஸ் குடிக்கவே இல்லையே! அது அவனுக்குத் தெரியாது.
எத்தனை எம் ஜி ஆர் படக்காட்சியை நம்ம மாமனார் அதான் இலக்கிய வாத்தி சொல்லியிருக்கு. ஒரிஜினல் வாத்தியார் குடிக்கறதப் போல நடிச்சு பக்கத்தில இருக்கிற பூந்தொட்டியில கொட்டிடுவார். நான் பக்கத்தில இருக்கிற சிங்க்கில் கொட்டிவிட்டேன். நானும் மயங்குவது போல விழுந்ததும் அவன் வைஜயந்தியின் மேலே கையை வைக்கப் போனான். அப்படியே பின்னாலிலிருந்து அவனை கிக் பாக்ஸிங் செய்தேன். அமெரிக்காவில் ராக் பாக்ஸில் கற்றுக்கொண்டது வீணாகவில்லை. ஒரே உதையில் சுருண்டு விழுந்துட்டான். அவ்வளவு பவர். சத்தம் கேட்டு கடை முதலாளி -அவனோட கஸின் தொல்காப்பியராகத்தான் இருக்கும். ஓடிவந்தார்.
பாத்த உடனேயே விஷயத்தைப் புரிந்து கொண்டார். மயக்க மருந்து பற்றி நானும் அவரிடம் சொன்னேன்.
இந்த அயோக்கியனை நம்பி கடையை விட்டுட்டுப் போனது எவ்வளவு தப்பு! தம்பி என்னை மன்னிச்சிரு தம்பி ! இவன் இந்தக் கடைப் பக்கம் என்ன இந்த ஊர் பக்கமே வராத மாதிரி செஞ்சிடறேன். நம்ம டிரில் மாஸ்டர் பொண்ணுதானே இது! நீயும் அந்தப் பள்ளிக்கூட வாத்தியார் தானே! உங்க ரெண்டு பேரையும் கடையில அடிக்கடி பாத்திருக்கேன். அவளுக்கு ஏத்த பையன் நீன்னு தோணிச்சு அதனால டிரில் மாஸ்டர் கிட்டே உங்களைப் போட்டுக் கொடுக்கலை. இந்தத் தடியானோட அப்பா கிட்டேயும் சொன்னேன் . அந்தப் பொண்ணுக்கு இவன் லாயக்கில்லேன்னு. அவரு கேட்க மாட்டேங்கிறாரு. ஆனா இந்தத் தீவட்டித் தடியன் இப்படி ஏடா கூடம் பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலே !
நான் வைஜயந்தியைப் பார்த்தேன். அவளும் ஜூசை அதிகமாக குடிக்கவில்லை. மயக்கம் தெளிஞ்சு இலேசா அசைஞ்சா ! அவளை எப்படியாவது எழுப்பி சரி பண்ணி வீட்டுக்கு அனுப்பி விடணும். இல்லேன்னா இந்த இலக்கிய வாத்தி நம்மளை உண்டு இல்லை பண்ணிடுவார் என்று நான் அவள் முகத்தில் தண்ணீர் தெளிச்சேன்.
அதற்குள் தொல்காப்பியர் நம்ம இலக்கிய வாத்திக்கு போன பண்ணி உடனே வரச் சொல்லிட்டார்.
நம்ம வில்லங்கம் தெரிஞ்சு வாத்தி என்ன பண்ணப் போகுதோ என்ற கவலை இப்போது என்னைப் பிடிச்சுது.
சார்! இந்த விவகாரம் எல்லாம் டிரில் மாஸ்டருக்குத் தெரியாது. அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்ன்னு யோசிக்கவே நேரமில்லை. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.
அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இந்த ரெண்டு டிரில் மாஸ்டர்களும் நான் சொன்னா கேட்பாங்க! ஏன்னா இரண்டு பெருசுகளும் என்கிட்டே நிறைய கடன் வாங்கியிருக்காங்க! நீ அந்தப் பொண்ணை அப்படியே கைத்தாங்கலா பிடிச்சு பக்கத்து ரூமில இருக்கற சோபாவில உட்கார வை. அதுக்குள்ளே இந்த சவத்தைத் தூக்கிப் போட ஏற்பாடு பண்ணறேன்.
“சார்! பிரிற் போய்ச் சேர்ந்திட்டானா? நான் கொலை செஞ்சிட்டேனா ? ”
நான் அலற அவர் சிரித்துக் கொண்டே ‘”அட தம்பி! இவன் சாக இன்னும் ரொம்ப வருஷம் ஆகும். சவம்ன்னு எங்க ஊரில இந்த மாதிரி தடிப்பயலுகளைச் சொல்லுவோம். மாஸ்டர் இன்னும் அஞ்சு நிமிஷத்தில வந்திடுவாராம். பக்கத்திலதான் இருக்காராம் !
இன்னிக்கு நம்ம கதைக்கு ஒரு கிளைமாக்ஸ் வறப்போகுது. இலக்கிய வாத்தி நம்மை அட்டென்ஷன்ல வைப்பாரா இல்லே ஸ்டென்ட் அட் ஈஸ் பண்ணுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியா என் கண் முன்னால நிக்குது. உண்மையை நாமும் சொல்லிடுவோம். உங்களுக்கு இலக்கிய வாத்தி படம் வேணுமுன்னா வைஜயந்தி எனக்கு வேணும். இந்த டீலிங்கிற்கு ஒத்துப்பாரா! பெத்த அப்பாவையே போட்டுத் தள்ளினாவரு. அவர் கிட்டே பாசம் பந்தம் எதையும் எதிர்பார்க்கறது கஷ்டம்தான். இந்த டீக் கடையில நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய டவிஸ்ட் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மெல்ல வைஜயந்தி கண் விழித்து சோம்பல் முறித்தாள்.
“நான் எங்கேடியாய இருக்கேன்? “என்ற ஸ்டாண்டர்ட் கேள்விக்குப் பிறகு ” என்னடா பண்ணினே! என் மேல எல்லாம தண்ணி? என்று அவள் அலறினாள். நாம் விஷயத்தை மெல்ல அவளிடம் சொன்னேன். இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பா என்கிற ஆட்டம் பாம் வரப் போகிறது என்றேன்.
எங்க அப்பாவை என்னால டீல் பண்ண முடியும். முதல்ல அந்தக் கம்மநாட்டிப் பய ! பேரு என்ன சொன்னான்? பிசிற் ? அவனை நானும் ஒரு கிக் பாக்ஸ் பண்ணினாத்தான் எனக்கு திருப்தியாயிருக்கும்.
” பேசாம விடு! அவன் பொட்டுன்னு போயிட்டான்னா அப்பறம் நாம் ரெண்டு பேரும் ஜெயில்லதான் கல்யாணம் பணணிக்க முடியும். ஜெயில்ல பர்ஸ்ட் நைட்டுக்கு தனி ரூம் தருவாங்களா? “
வைஜயந்தி கல கல என்று சிரித்தாள். அவள் மயக்கம் முழுதும் போயிடுச்சு.
இந்தமாதிரி இடத்திலும் உன்னால ஜோக் அடிக்க முடியுது பார்! அதுதான் உன்கிட்டே எனக்கு ரொம்பப் பிடிச்சுது. என்று சொல்லி மெல்ல எழுந்தாள். கொஞ்சம் தடுமாறி கீழே விழப் போனாள். அவளைக் கைத்தாங்கலாஅணைக்கச்சு பிடிச்சேன்.
வாசலில் இலக்கிய வாத்தி நின்று கொண்டிருந்தார்.

OTT தொடர் போல் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் போகிறது ‘இலக்கிய வாத்தி’ தொடர்
LikeLike