Pandava - Wikipediaமேகவர்ணன் அரசவை உள்ளே நுழைந்ததும் யுதிஷ்டிரர் முறைமைகள் எல்லாவற்றையும் மறந்து அரியணையிலிருந்து எழுந்தார். அவையில் மெல்லிய ஒலி எழுந்தது. யுதிஷ்டிரர் தன் செயலை உணர்ந்தார். அடுத்த நொடியே அவையையும் முறைமைகளையும் அலட்சியம் செய்து விரைந்து சென்று மேகவர்ணனை ஆரத் தழுவிக் கொண்டார்.

மேகவர்ணன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற பருமனுமாக இருந்தான். அவனது தலையில் அவன் அணிந்திருந்த சிறகுகளாலான அணி அவனை இன்னும் அரை அடி உயரமாகக் காட்டியது. வழக்கமாக அணியும் தோலாடைகளைத் தவிர்த்து நீலப் பட்டாடை உடுத்தி இருந்தான்; அதை சரி செய்து கொண்டே இருந்தான். யுதிஷ்டிரர் மேகவர்ணனின் மார்பளவுதான் உயரம். அவரது உடல் சுற்றளவும் மேகவர்ணனில் பாதிதான் இருந்தது. அவரது வழுக்கைத் தலையை கிரீடம் மறைத்தாலும், முதுமை அவரது முகத்திலும் கால் மூட்டுக்களின் இறுக்கத்திலும் தெரிந்தது. ஆனால் அவரது முகத்தின் பிரகாசம் அவரது வயதைக் கொஞ்சம் குறைத்திருந்தது.

திரௌபதியும் அரியணையிலிருந்து எழுந்து வந்து யுதிஷ்டிரருக்கு பின்னால் நின்றிருந்தாள். அரசர் கொஞ்சம் நகர்ந்ததும் மேகவர்ணன் முழு உடலும் தரையில் படும்படி அவள் காலில் விழுந்து வணங்கினான். யுதிஷ்டிரர் “என்ன இது? என்ன இது? நீ இடும்ப அரசின் பிரதிநிதி, இப்படி வணங்குவது முறைமை அல்ல” என்று பதறினார். சபையே வெடித்துச் சிரித்தது. யுதிஷ்டிரரும் நகைத்துக் கொண்டார்.

மேகவர்ணன் திரௌபதியை அப்படியே தூக்கி தன் தோளில் வைத்துக் கொண்டான். திரௌபதி விளையாட்டாக அவன் தலையில் அடித்தாள்.  “சிறகணியை சரியாக வைத்துக் கொள்ள மூன்று நாழிகை ஆயிற்று, கலைக்கிறீர்களே!” என்று மேகவர்ணன் சிரிப்பு ததும்பும் குரலில் சொன்னான். திரௌபதி அவனை உச்சி முகர்ந்தாள், பிறகு இறக்கிவிடுமாறு சைகை காட்டினாள். மேகவர்ணன் அவள் சைகையை லட்சியமே செய்யவில்லை, அரியணை வரை தூக்கிச் சென்றான்.

பீமன் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நகுலன் எழுந்து வந்து அவன் தோளை அழுத்தினான். யுதிஷ்டிரர் சிரமத்துடன் ஒவ்வொரு படியாக ஏறி அரியணைக்கு வந்தார். கொஞ்சம் எக்கி செங்கோலால் மேகவர்ணனின் தலையில் தட்டினார். “கால் வலி எனக்கு, தூக்கி வருவது அவளை!” என்று சிரித்தார்.

மேகவர்ணன் குந்தியின் முன் நெடுஞ்சாண்கிடையாகப் பணிந்தான். குந்தி அவன் தலையைக் கோதினார். “என் தலை அலங்காரத்தைக் கலைக்கவே இங்கே ஒரு கூட்டம் அலைகிறது” என்று மேகவர்ணன் குறும்பாகச் சொன்னான். குந்தி அவன் கன்னங்களைத் தன் இரு கைகளாலும் தடவினார். “இளமையின் உன் தாத்தனைப் பார்ப்பது போலவே இருக்கிறது, கண்கள் மட்டும் உன் பாட்டியின் கண்கள்” என்று மகிழ்ந்துகொண்டாள். பல பற்கள் விழுந்துவிட்டிருந்ததால் குந்தியின் குரல் தெளிவாக இல்லை, ஆனாலும் புரிந்தது.

மேகவர்ணன் பீமனின் தாள் பணிய வந்தான். பீமன் அவனைத் தடுத்து தழுவிக் கொண்டான். மற்ற மூவரும் எனக்கு எனக்கு என்று தழுவ வாய்ப்பை எதிர்பார்த்து நின்றார்கள். நகுலன் “நேற்றிரவே தழுவி இருப்போம், அரசப் பிரதிநிதியை சந்திக்கும் முறைமை அது இது என்று சொல்லி எங்களைத் தடுத்தீர்கள், இன்று எங்கே போயிற்று முறைமை எல்லாம்?” என்று பொய்க்கோபத்துடன் யுதிஷ்டிரனைக் கடிந்தான். யுதிஷ்டிரர் புன்னகைத்தார்.

பரீத்க்ஷித் மேகவர்ணனின் தாள் பணிந்தான். “நீ யாரென்று உன் மூக்கே சொல்லிவிட்டது. என்ன இத்தனை மெலிந்திருக்கிறாய்? பேசாமல் நான் கிளம்பும்போதே என்னுடன் இடும்பவனம் வந்துவிடு, நாலு நாள் கரடி ஊனைத் தின்றால் உடல் தேறிவிடும்” என்று மேகவர்ணன் அவனை அணைத்துக் கொண்டான்.

அவையின் ஆரவாரம் மெதுவாக ஓய்ந்தது. சகதேவன் யுதிஷ்டிரரின் காதில் ஏதோ முண்முணுத்தான். யுதிஷ்டிரர் “அதுவும் சரிதான், மேகவர்ணா, செய்தியை அறிவிக்கலாமே!” என்றார். பீமன் “ஆமாம், யாருக்கும் தெரியாது, இனி மேல்தான் சொல்ல வேண்டும்” என்று வாய்க்குள் முனகினான்.

அர்ஜுனனின் காலடியில் அமர்ந்திருந்த மேகவர்ணன் எழுந்தான். ஒரு முறை செருமினான். பிறகு உயரந்த குரலில் “இடும்ப அரசர் பார்பாரிகர் சார்பாகவும் என் சார்பாகவும் மூத்த அரசர் திருதராஷ்டிரர், அன்னை காந்தாரி, ராஜமாதா குந்தி, மூத்த அமைச்சர் விதுரர், சக்கரவர்த்தி யுதிஷ்டிரர், சக்கரவர்த்தினி திரௌபதி,  பீமசேனர், பார்த்தர், நகுல சகதேவர், அரசிகள் தேவிகை, பலந்தரை, சுபத்ரை, கரேணுமதி, இளவரசர் யுயுத்ஸு மற்றும் மூத்தோர், சான்றோரின் பாதம்  பணிகிறேன்” என்று ஆரம்பித்தான். அரசிகள் அமர்ந்திருந்த மாடத்திலிருந்து மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. “உன் பேரை விட்டுவிட்டானடி” என்று சுபத்ரை விஜயையின் இடுப்பைக் கிள்ளினாள். சகதேவனும் மெலிதாக சிரித்தான்.

மேகவர்ணன் தன் அறிவிப்பைத் தொடர்ந்தான் – “இடும்பர், கடோத்கஜர், பார்பாரிகர் என்ற வரிசையில் திமாச அரசின் அடுத்த வாரிசான பீமசந்திரன் மேஷ மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தசி அன்று பூச நடசத்திரத்தில், கடக ராசியில் பிறந்திருக்கிறான். முதல் ஊன் உண்டாட்டு விழா மிதுன மாதத்தின் முதல் சப்தமி அன்று நடைபெறும். ஹஸ்தினபுரியின் சக்ரவர்த்தியும் சக்ரவர்த்தினியும் மற்ற தாதைகளும் அரசியரும் மூத்தோரும் சகோதரரும் நிகழ்ச்சிக்கு வந்து அருளுமாறு இடும்பர் குலத் தலைவர் பார்பாரிகரின் அழைப்பை என் வார்த்தைகளில் சொல்லும் நல்லூழ் எனக்கு வாய்த்திருக்கிறது.”

விஜயை “பாவம் எத்தனை முறை ஒத்திகை பார்த்துக் கொண்டானோ!” என்று பொய்யாக அலுத்துக் கொண்டாள். அவள் முகம் முழுவதும் சிரிப்பால் நிரம்பி இருந்தது.

மேகவர்ணனின் கனத்த கட்டையான குரல் அவையின் கடைசி வரிசை வரை தெளிவாகக் கேட்டது. திருப்பிச் சொல்லிகளுக்கு அவன் சொன்னதை பின்னால் இருந்தவர்களுக்கு தெளிவாகப் புரிய வைக்க மீண்டும் அறிவிக்க வேண்டிய தேவையே இல்லாமல் போனது. அவையில் கரகோஷம் பெரிதாக எழுந்தது.

திரௌபதி “உங்கள் குரலேதான்” என்று பீமனைப் பார்த்துச் சொன்னாள். “இல்லையே, இனிமையாக இருக்கிறதே!” என்று பீமன் பதிலளித்தான். “உங்கள் குரல்தான், ஆனால் எப்படியோ இனிமையாகவும் ஒலிக்கிறது” என்று திரௌபதி வியப்போடு சொன்னாள். “ஆமாமாம், குழலினிது யாழினிது என்பர்” என்று நகுலன் புன்னகைத்தான்.

குந்தி தன் பின்னால் நின்றிருந்த சேடி அனிகாவிடம் ஏதோ முணுமுணுத்தார். அனிகா திரௌபதியிடம் சென்று ஏதோ சொல்ல, யுதிஷ்டிரர் குழப்பத்தோடு குந்தியை நோக்கினார். பிற்கு யுயுத்ஸுவை அருகில் அழைத்தார். “பெரிய தந்தையும் தாயும் வர மறுத்துவிட்டார்களா?” என்று கேட்டார். யுயுத்ஸு பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் பீமன் பக்கம் நோக்கினான். யுதிஷ்டிரர் முகத்தில் சினக்குறி எழுந்தது. பீமன் அதைக் காணாதது போல் எங்கோ வெறித்தான்.

யுதிஷ்டிரர் “பீமசந்திரன் இடும்பர் குலத்துக்கு மட்டுமல்ல, பாண்டவர்களின், குரு வம்சத்தின் வாரிசு. மூன்று நாள் விழாவாக இந்த செய்தியைக் கொண்டாடுவோம். நாளையிலிருந்து மூன்று நாட்கள் அரசின் சார்பாக வருபவர்க்கெல்லாம் விருந்தளிக்கப்படும். ஹஸ்தினபுரியில் எந்த வீட்டிலும் மூன்று நாள் அடுப்பெரியக் கூடாது. பார்பாரிகரின் அழைப்பை ஏற்று சடங்குக்கு ஐவரும் ராணிகளும் இளவரசர்களும் இடுமபவனம் செல்கிறோம்” என்று அறிவித்தார். அவையில் பெரிய வாழ்த்தொலி எழும்பியது.

“நாளை மறுநாள் அரச வம்சத்தினர் வழிவழியாக வழிபடும் சக்தி கோவிலில் மூத்த அரசரும் பெருந்தந்தையும் பெருமல்லருமான திருதராஷ்டிரர் தலைமையில் பதினெட்டு எருமைகள் பலி கொடுக்கப்படும். மூத்த அரசர்  தங்கள் கையால் விளையாட்டுப் பொற்கதை ஒன்றை பீமசந்திரனுக்கு பரிசாகக் கொடுப்பார்.  பரிசு வழங்குவது பெருவிழாவாகக் கொண்டாடப்படும்” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். அவை ஒரு நொடி மௌனமாகியது. யாரும் பீமனை நோக்கவில்லை, ஆனால் அனைவர் கவனமும் பீமன் மேல் படிந்திருந்தது. யுதிஷ்டிரர் சினத்துடன் நிமிர்ந்து பார்த்ததும் கொஞ்சம் தயக்கத்துடன் வாழ்த்தொலி மீண்டும் எழும்பியது.

அவை கலையும் வரை யுதிஷ்டிரர் காத்திருந்தார். அவரது பொறுமையின்மை வெளிப்படையாகத் தெரிந்ததால் அவையும் விரைவாகக் கலைந்தது. குந்தியும் திரௌபதியும் பாண்டவர்களும் மேகவர்ணனும் மட்டுமே எஞ்சினார்கள். பீமன் கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ வெறித்திருந்தான்.

யுதிஷ்டிரர் முகத்தில் எப்போதும் இருக்கும் சாந்தம் தொலைந்து போயிருந்தது. “பீமா, என்ன இருந்தாலும் அவர்கள் நம் குடும்பத்து மூத்தவர்கள். பெரும் இழப்புகளை சந்தித்துவிட்டார்கள்.  தீராத வலியோடு வாழ்கிறார்கள். பெயரளவில்தான் என்றாலும் இன்றும் அவரே மூத்த அரசர். எதற்காக அவர்கள் அவை வருவதைத் தடை செய்கிறாய்? ஏன் இன்னும் அவர்களை குத்திக் கிழிக்கிறாய்? சினம் தீது பீமா, அதுவும் செல்லிடத்து இல் அதனின் தீய பிற! ” என்று எரிச்சலோடு சொன்னார்.

“இந்த செல்லாவிடத்து சினம், செல்லிடத்து சினம் மாதிரி நீதி, நெறி, அறிவுரை எல்லாம் நிறையக் கேட்டு அலுத்துவிட்டேன். இதே மண்டபத்தில்தான் என் திருமகள் ஒற்றை ஆடையுடன் நின்றாள். அந்தக் குருடர் கையை எடடா என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவரைக் கண்டால் என் வாயிலிருந்து துரியோதனனையும் துச்சாதனனையும் பற்றி நாலு வார்த்தை வரத்தான் வரும், என்னால் அடக்க முடியாது. நீயேதான் நாவைக் கட்டுப்படுத்த முடியாதபோது அவர்கள் மாளிகை இருக்கும் பக்கமே போக வேண்டாம் என்று அறிவுறுத்தினாய், அதனால்தான் நான் அந்த வீதிப்பக்கம் தலை வைத்துப் படுப்பதையே நிறுத்திவிட்டேன். பாவம் வயதான காலத்தில் ஏன் என் இடித்துரைப்பைக் கேட்க வேண்டும் என்றுதான் இங்கே அழைக்கப்படுவதைத் தடுத்தேன். அவர்கள் ஆசியை நானே வெறுத்து ஒதுக்குகிறேன், என் பேரனுக்கும் கொள்ளுப்பேரனுக்கும் எதற்கு? இத்தனை பேசுகிறாயே, நீ கடைசியாக அவரகளை எப்போது சந்தித்தாய்? எத்தனை மாதம், இல்லை இல்லை எத்தனை வருஷம் இருக்கும்? கடந்த ஒரு ஆண்டில் அர்ஜுனனும் இருவரும் எத்தனை முறை சென்று நலம் விசாரித்தீர்கள்?  ஊருக்கு உபதேசமா?” என்று பீமன் ஆங்காரமாகக் கேட்டான்.

மேகவர்ணனின் சிந்தனையில் ஒரு பகுதி பாண்டவர்கள் மட்டும் இருக்கும்போது பீமன் தருமனை நீ வா போ என்று ஒருமையில் அழைப்பதையும் அவையில் நீங்கள் வாங்கள் என்று மரியாதையோடு அழைப்பதையும் குறித்துக் கொண்டது. தானும் பார்பாரிகனை அப்படியே அழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

திரௌபதி “எங்கள் அனைவரையும் தடுப்பது குற்ற உணர்ச்சி. புத்திரசோகம் என்றால் என்ன என்று நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். மூத்த அன்னை கண்ணனை சபித்தது போல் சோகத்தில் ஒரு வார்த்தை நம்மை சபித்தால் நம் குடியும் முற்றிலும் அழியும். நம் குடிவழியைத் தன் வம்சம் என்று அவர் நினைப்பதால்தான் கண்களை மட்டுமல்லாமல் வாயையும் கட்டிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இருக்கும் வலி போதும், நம்மால் இன்னும் துயரங்கள் வேண்டாமே! கர்ணனும் நீங்களும் ஒரு தாய் மக்கள் என்று தெரிந்ததும் அவர் மேல் இருந்த அத்தனை கோபங்களும் வருத்தங்களும் போய்விடவில்லையா? விருஷகேதுவே மறுத்திருக்காவிட்டால் அவனைத்தானே பட்டத்து இளவரசனாக்கி இருப்போம்? துரியோதனனும் நீங்களும் ஒரே குருதித் தந்தை மக்களாக இருந்தும் ஏன் அவ….” – பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று மௌனமானாள். தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

மேகவர்ணன் பெரும் அதிர்ச்சி அடைந்தான், அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான். அனைவரும் அவனை நோக்குவதை கவனமாகத் தவிர்த்தனர். ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை.

பிறகு குந்தி தன் குனிந்த தலையை நிமிர்த்தாமல் மேகவர்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். “இடும்ப குலத்து மாவீரனை முறியடிக்கும் உடல் வலு உன் பாட்டனுக்கு எங்கிருந்து வந்தது என்பதை நீ தெரிந்து கொண்டது நல்லதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் குருக்ஷேத்ரப் போருக்கே அந்த நியோகம்தான் காரணம். உன் முதுதாதையின் தாள் பணிந்து அவர் ஆசியை நீ பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று முனகினாள்

“நான் பாண்டவன்! என் தந்தை பாண்டு மட்டுமே, திருதராஷ்டிரர் அல்லர். நிராதரவான பெண்ணை இழிவு செய்ய தார்த்தராஷ்டிரர்கள் மட்டுமே துணிவார்கள், பாண்டவர்களுக்கு, எங்கள் குருதியினருக்கு அப்படிப்பட்ட எண்ணமே எழாது” என்று பீமன் உறுமினான்.

“நம் குடி குருதியில் மட்டுமல்ல,  தருமனின், உன், பார்த்தனின், எங்கள் இருவரின் குணத்திலும் எழுந்தது. ஆனாலும் அவர் வயதில் மூத்தவர், பெருந்தந்தை. மூன்று நான்கு நாளாவது, பீமசந்திரனுக்கான விழா முடியும் வரைக்குமாவது நாவை கட்டில் வை. நீ இன்சொல் உரைக்க வேண்டாம். கடுஞ்சொல் கூறாமல் இருந்தால் போதும்.” என்று நகுலன் சொன்னான்.

“நகுலனே இன்று வாயைத் திறந்து பேசிவிட்டான். அவன் பேச்சைத் தட்டாதே” என்று யுதிஷ்டிரரும் சேர்ந்து கொண்டார்.

மேகவர்ணன் தன் முகத்தை ஆடையினால் துடைத்துக் கொண்டான். “குரு வம்சத்தின் ரகசியங்களையும் உறவுச் சிக்கல்களையும் புரிந்து கொள்வது என் போன்ற எளிய இடும்பர்களுக்கு இயல்வதல்ல” என்று பெருமூச்செறிந்தான். “என் மனதில் நிற்பது அவர் உறவு முறையாலும் சரி, குருதித் தொடர்பாலும் சரி, என் கொள்ளுத்தாத்தா என்பதுதான். நான் மூத்த அரசர்-அரசி இருவரையும் இன்றே சந்திக்க முடியுமா? அரச முறைமைகள் அனுமதிக்குமா?” என்று கேட்டான்.

சகாதேவன் “முறைமையா, அது எங்கே இருக்கிறது!” என்று சிரித்தான். அவன் சிரிப்பு அங்கே இருந்த அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்தது. பீமனே லேசாகப் புன்னகைத்தான். “வா, நானே உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்று சகாதேவன் மேகவர்ணனை இடுப்போடு அணைத்துக் கொண்டான்.

“இல்லை, நான் உங்களுடன், உங்களுடன் மட்டுமே, அவரை சந்திக்க விரும்புகிறேன். இடும்பிப் பாட்டி பரிசாக அனுப்பி இருக்கும் உலர்த்தப்பட்ட கரடி ஊன் பட்டைகளையும் இடும்பவன மதுவையும் அவருக்கு நீங்களே உங்கள் கைகளால் தர வேண்டும்” என்று மேகவர்ணன் பீமனைப் பார்த்துச் சொன்னான். பீமனின் புருவம் சுருங்கியது. “மல்லன் மாட்டிக் கொண்டான்” என்று சகாதேவன் நகைத்தான். பீமனும் “இடும்பியின் பெயரைச் சொல்லி என் வாயை அடைக்கிறாய்” என்று சிரித்தான். அர்ஜுனன் “உன் தாத்தனின் வாயை அடைக்க இத்தனை சுலபமான வழி இருப்பது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே!” என்று மேகவர்ணனின் பின் தலையில் அறைந்தான். “எல்லாருக்கும் என் தலையணியைக் கண்டு ஏன் இத்தனை பொறாமை?” என்று மேகவர்ணன் கேட்க அனைவரும் வெடித்து சிரித்தனர்.

மேகவர்ணன் தங்கி இருந்த குடிலிலிருந்து பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு பீமனும் மேகவர்ணனும் கிளம்பினார்கள். “அவர் நினைத்திருந்தால் சூதாட்டம் அத்தனை தூரம் போகாமல் தடுத்திருக்கலாம். பீஷ்மரும் துரோணரும் விதுரரும் கிருபரும் அரச முறைமைகளுக்கு அடிமைகள், அவர்களுக்கு குருட்டு அரசரின் ஒரு கண்ணசைவு கிடைத்திருந்தால் அவர்கள் தடுத்திருப்பார்கள். எல்லாரும் அடக்கிப் பேசு என்கிறார்கள், பாஞ்சாலி நின்ற காட்சியை நினைத்தால்…” என்று பீமன் பேசிக் கொண்டே வந்தான். மேகவர்ணனுக்கு அரை கவனத்தோடுதான் கேட்டான், அவனுக்கு திருதராஷ்டிரர் எப்படி இருப்பார், பீமனை விடவும், கடோத்கஜனை விடவும் உயரமாக இருப்பாரா, தசைகள் எப்படி திரண்டிருக்கும், முதுமை அவரை பலவீனராக்கி இருக்குமா என்ற எண்ணங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன.

திருதராஷ்டிரர் தன் மாளிகை உப்பரிகையில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் காந்தாரி ஒரு இருக்கையில் சாய்ந்திருந்தார். உதவிக்கு யாரும் பணியாட்கள் இல்லை. இருவருமே மிக எளிமையான உடைகளைத்தான் அணிந்திருந்தனர், திருதராஷ்டிரரின் தலைப்பாகையில் கறைகள் தெரிந்தன. தேரின் சத்தத்தையும், மாளிகை வாசலில் நிறுத்தப்பட்டபோது குதிரைகள் கனைத்ததையும் கேட்ட திருதராஷ்டிரர் “யார் தருமன் வந்திருக்கிறானா என்ன?” என்று வினவினார்.

அதற்குள் பீமன் “இதுதான் அந்த தீயவர்களின் பெற்றோர்களின் மாளிகை! என் குலமகளின் தலைமுடியைப் பற்றியவனின் மார்புக்கூட்டை என் இரு கைகளாலேயே பிளந்து அவன் ரத்தத்தைக் குடித்தேன்! நூற்றுவரையும் துடிக்கத் துடிக்க நிணமும் ரத்தமும் தெறிக்கத் தெறிக்கக் கொன்றேன்!” என்று யானை போல பெருங்குரலெடுத்து முழங்கினான். மேகவர்ணன் திகைத்துப் போய் “வேண்டாம்” என்று பீமனின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

திருதராஷ்டிரனின் கருமணி அற்ற வெண்ணிற விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. காந்தாரி எழுந்து தட்டுத் தடுமாறி ஊஞ்சலின் அருகே வந்து திருதராஷ்டிரனின் தோள்களை அமுக்கினார்.  “எத்தனை நாளாயிற்று பீமனின் இனிய குரலைக் கேட்டு!” என்று திருதராஷ்டிரர் மிருதுவான குரலில் முணுமுணுத்தார். “குழலினிது யாழினிது என்பார் பீமனின் கழுதைக் குரல் கேட்காதவர்” என்று காந்தாரி மெலிதாக நகைத்தார்.