ஜனவரி சிறந்த சிறுகதை : அசல் எழுதியவர் : கண்மணி ராசா
இதழ்: ஆனந்த விகடன் 8, ஜனவரி 2025
———————————————————————————————————-
சிறுகதைகளை நான் தேர்வு செய்ய எடுத்துக் கொண்ட பல்வேறு காரணிகளில் ஒன்று அதனுடைய அடர்த்தி. அது மிகவும் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக தங்களுடைய எண்ணங்களை சரியாக சொல்வதாக, சரியான வாக்கியங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் வாசிப்பு எளிமையாக இருக்க வேண்டும். வாசிப்பவனுக்கு தான் சொல்ல வந்த செய்தியை கதை சொல்லி சரியாகக் கடத்த வேண்டும் என்பதை அளவீடாகக் கொண்டிருந்தேன்.
கண்மணி ராசா `அசல் “ஆனந்த விகடன் 8 ஜனவரி 2025
2025 ஜனவரி மாதக் கதைகளில் நான் மிகவும் ரசித்து படித்த கதை முதலாவது இடத்திற்கு தகுதியான கதை என்று நான் நினைப்பது திரு கண்மணி ராசா அவர்கள் எழுதிய அசல் என்கின்ற ஒரு சிறுகதை. இது ஆனந்த விகடனில் வந்த கதை. தொடக்கமே மிகவும் சிறப்பாக இருக்கின்றது. “காசு இருக்கிறவன் இல்லாதவன் எல்லோரையும் ஒரே பூமியில் படைச்சான் பாரு அவனை சாத்தனும் என்று வந்ததும் வராதுமாய் சலித்துக் கொண்டார் இருளப்பன்”. இதிலிருந்தே நமக்கு இந்த கதையானது வாழ்க்கையின் விளிம்பில் இருக்கக்கூடிய துயரங்களை பேசப்போகிறது என்று தெரிகிறது. இருந்தாலும் கூட அந்த விவரிப்பு என்பது, நாமும் ஏதோ அந்த இடத்தில் நின்று கொண்டு பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.
அதைப் போன்ற நிலையுடைய வாழ்க்கையை பெற்ற அத்தனை சிறு வியாபாரிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு இடத்தில் தேநீர் அருந்திவிட்டு தங்களுடைய வியாபார பொருட்களை குறித்து மெகாபோனில் விளம்பரம் பதிந்து கொண்டு செல்வது மற்றும் யார் யாரெல்லாம் எந்எதேந்த கிராமத்திற்கு செல்கிறார்கள் என்பதை எல்லாம் விவரமாக சொல்கிறார்கள்.
இது போன்ற தெரு வியாபாரிகளை, நாம் வாழ்வில் நிறைய முறை சந்தித்திருக்கின்றோம். இருளப்பனை பற்றி சொல்லும் பொழுது அவர்களுடைய துயரம் அவருடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் (அவர் உழைத்தால் மட்டுமே வீட்டில் அடுப்பு எரியும்; பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கு தங்கம் வாங்க வேண்டும்; ஆன்லைன் மோகம் மற்றும் பிரம்மாண்டமான கடைகள் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை சிதைப்பது இத்யாதி) அவ்வப்போது நினைவுக்கு வரும் அவருடைய மனைவி ரெபேக்காவின் பேச்சு மற்றும் அவரே நினைப்பது போன்ற தொனியிலே கதை சொல்லப்படுகிறது.
மலிவான விலையிலா தரக்கூடிய ஒரு மிகப்பெரிய கடை அருகில் உள்ள ஊரில் திறக்கப்படுகிறது. கதையின் முடிவில் இருளப்பனும் அவரது சக வியாபாரியும் நண்பருமான ஆரோக்கியமும் ஒன்றாக சேர்ந்து கண்மாய்க்கு பக்கத்தில் சென்று மது அருந்தி கண்ணில் நீர்வழிய சிரித்து உருள்கிறார்கள். அவர்களின் மெகாபோன் முள்மரத்தில் தொங்கியவாறு கத்துகிறது “ஓடியாங்க ஓடியாங்க அம்பதே ரூபா தங்கம், தங்கம் ஒரு பவுனு அம்பதே ரூபா ஒரு பவுனு அம்பதே ரூபா” இந்த இடம் ஒரு நகைமுரண் என்று சொல்லலாம்.
இந்த கதையினுடைய கட்டமைப்பு, இது எடுத்துக் கொண்ட செய்தியும், மிகச் சிறப்பாக சொல்லப்படும் கதை என்பதால் இந்த கதையை சிறப்பான கதையாக நான் தேர்ந்து எடுத்துள்ளேன்.
இன்னும் சில கதைகள்
எஸ் ராமகிருஷ்ணன் ” வெயில் வரைந்த ஓவியம்” `குமுதம் 22 ஜனவரி 2025
தெருவோரத்திலிருந்து சாலைகளில் படம் வரையக்கூடிய ஒரு ஓவியனை பற்றிய ஒரு அருமையான சித்திரத்தை அளிக்கின்றது. நாமும் இதை போன்றவர்களை நிறைய இடங்களில் பார்த்திருக்கின்றோம். அவர்களின் வாழ்க்கை பற்றி நாம் எப்பொழுதும் சிந்தித்ததே கிடையாது. அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பதை இந்த கதையானது மிகவும் நுட்பமாக எடுத்துச் சொல்கிறது.
கதை ஆரம்பிக்கும் போதே நாம் அத்துடன் ஒன்றி விடும் மாயம் நிகழ்கிறது . அந்த ஓவியன் பெயர் கூட சொல்லப்படவில்லை. அவனிடத்தில் வந்து எப்பொழுதும் பேசி விட்டு செல்லக்கூடிய ஒரு சின்ன பெண் மீனாவுடன் ஓவியனின் உரையாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. “வெயில் தரையிலே வரைகிறது” என்ற உவமை மிகவும் அருமை.
அந்த சிறுமி குடும்பத்தோடு வேறு இடத்துக்கு சென்றுவிடுகிறாள். வரைந்த ஓவியத்திற்கு அருகிலேயே இறந்து விடுகின்றான். டெலிபோன் துறை சார்ந்த ஒரு பெண் கண்ணீரோடு அந்த இடத்தில் வந்து அங்கு இருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம் “இவர் குறித்து எந்த விதமான கையெழுத்து போடுவதாக இருந்தாலும் நான் போடுகிறேன்” என்று சொல்கின்றார்.
“ஒரு கபூரின் பெருநாள் தொழுகை” கா மூர்த்தி வாசகசாலை 04 ஜனவரி 2025
இந்த கதை விவரிப்பு வறுமையில் வாடும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினுடைய மோசமான சூழலை விவரித்து அது எவ்வாறு இயற்கையாக சரி செய்யப்படுகிறது என்பதை கூறுகிறது.
அல்லாஹ் பிச்சை என்பவர் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கும் போது இறந்துவிட்ட விடுகிறார். அல்லாஹ் பிச்சை என்பவரின் சடலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அவருடைய மனைவி பாத்திமா குடியிருப்பது குடிவாசல். என்னும் கிராமம். அந்த ஊரின் குலசாமியின் பெயர் அவதாரம், அவதாரம் கோயில் என்பதுதான் அந்த ஊர் மக்கள் வணக்கும் அவதாரம் சாமி இருக்கும் இடம். பாத்திமாவின் எதிர் வீட்டுக்காரன் பெயரும் அவதாரம்!
ஆன் கிராமத்தில் அடக்கம் செய்ய இடம் அளிக்கக் கூடாது என்று அவன் பணம் கட்டி பெரிய பஞ்சாயத்து கூட்டுகிறான். அவன் நோக்கம் பாத்திமாவை குடும்பத்தோடு ஊரைவிட்டு துரத்தி அந்த இடத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே..
அந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் போது, அந்த இரவு நேரத்தில் சவுதியில் இருந்து அல்லாபிச்சை சடலமானது நன்றாக இறுக கட்டப்பட்டு அந்த பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்து விடுகிறது.
அப்பொழுது அந்த சடலத்தின் மீது எழுதி இருக்கக்கூடிய முகவரிதான் இந்த கதையின் மிக முக்கியமான கட்டம்.
பெறுதல் :- சாமி, அவதாரம் கோயில், அவதார வில் மண்டபம், அவதார தெரு, குடிகாடு பட்டினம்.
இறந்த பின்னால் அவன் மதம் இனம் மொழி சாதி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவன். அவருக்கு கட்டாயமாக ஒரு ஆறு அடி நிலம் உலகத்தில் உண்டு என்பதை மிகவும் ஆணித்தரமாக சிறப்பாக இந்த கதையிலே அந்த வட்டார வழக்கில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
“நான்சி” பிரிம்யா கிராஸ்வின் நடுகல் பிப்ரவரி 2025
இது கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்த ஒரு கதை என்று சொல்லலாம். கதாசிரியர் அந்த வட்டார வழக்கிலேயே மிகவும் சிறப்பாக கதை சொல்லி செல்கிறார். அந்த ஊரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தனக்கே உரியப பாணியில் விவரமாக எடுத்துரைக்கின்றார். இந்த கதையில் ஒரு ஃபேண்டஸி போன்ற தோற்றம் வருகின்றது. இதைப் போன்ற நம்பிக்கைகள்( குறி கேட்பது மாந்தரிகம் சூனியம்) எல்லா மதத்திலும் இருக்கின்றன. எனவே அதை ஒரு கதை கருவாக எடுத்துக்கொண்டு ஆனால் முடிவை வேறு மாதிரியாக கொண்டு போகக் கூடிய ஒரு கதை இது.
தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ மக்களுடைய நம்பிக்கை சார்ந்த செய்தியாக சொல்லப்படுவது ஜாதி அடிப்படையில் பிரித்து அடக்கம் செய்வது, இதை மாற்ற கிறிஸ்தவ பாதிரிமார்கள் எடுத்த முயற்சிகள். நடைபெற்ற பல்வேறு வழக்குகள், கல்லறைகள் நிரம்பி வழியும்போது வெளிநாட்டிலே செய்யப்படுவது போல இங்கேயும் ஒரே கல்லறையில் பல்வேறு நபர்களை அடக்கம் செய்யலாம் என்ற ஒரு வழக்கத்தை கொண்டு வருவது.
ஒரு சுற்றுச்சூழல், ஒரு நம்பிக்கை (அடக்கம் செய்யப்பட்டவர்ஆண்டவர வரும் பொது மீண்டும் உயிரோடு எழுவார்) சம்பந்தப்பட்ட, மேலும் பிளாக் மேஜிக் குறித்த ஒரு நல்ல கதை. இதை எழுதியவர் தன்னுடைய வட்டார வழக்கை சிறப்பாக கையாண்டு எழுதியிருக்கிறார்.
ஒருசேர சிறுகதைகளை வாசிக்கும் ஒரு புதுமையான அனுபவம் எனக்கு கிடைக்க வழிசெய்த குவிகத்திற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். மேலும் சிறுகதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தன்னம்பிக்கையோடு சிறுகதைகளை எழுதும் மற்றும் எழுத முயற்சிக்கும் அனைவரும் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கின்றனர் என்பது பாராட்டுக்குரியது.

சிவசங்கரி அவர்கள் காட்டும் ‘சிறுகதையின் ‘ விளக்கம், நம் எழுத்துக்கு ஒளி கூட்டும் விளக்கு
LikeLike
அந்த விளக்கின் ஒளியோடு நேச ராஜ் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள சிறுகதைகளின் சுருக்கம், அந்தப் பத்திரிகைகளைத் தேடித் பிடித்து படிக்கத் தூண்டுகின்றன. அதுதானே குவிகம், சிவசங்கரி அவர்களின் நோக்கமும் கூட.
LikeLike
spelling mistake in the above comment corrected here .
சிவசங்கரி அவர்கள் காட்டும் ‘சிறுகதையின் ‘ விளக்கம், நம் எழுத்துக்கு ஒளி கூட்டும் விளக்கு அல்லவா. அந்த விளக்கின் ஒளியோடு நேச ராஜ் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள சிறுகதைகளின் சுருக்கம், அந்தப் பத்திரிகைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தூண்டுகின்றன. அதுதானே குவிகம், சிவசங்கரி அவர்களின் நோக்கமும் கூட.
LikeLike