லேடீஸ் ஸ்பெஷல் நிறுவனர் திருமதி. கிரிஜா ராகவனுடன் சிறப்பு நேர்காணல் #puthuyugamtv
மனதில் தோன்றும் சில எண்ணங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. அது என்ன தேநீரும் சிந்தனையும் என்று கேட்கிறீர்களா? இதமான மணமான தேநீர் சுவையுடன் தொண்டையில் இறங்கும் போது, மனது கொஞ்சம் இளகி சிந்தனை வேகமாக பறப்பது போல் ஒரு எண்ணம்!!!
தொலைக்காட்சியில் ஒரு தொடர் ஓடிக் கொண்டிருந்தது. கழுத்து நரம்பு புடைக்க ஒரு மாமியார் மருமகளை வசை பாடிக் கொண்டிருந்தாள். எனக்கு சிரிப்பு தான் வந்தது .எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் இவர்கள்?
மாமியார் என்ற சொல்லே வில்லி போல சித்தரிக்கப்படுவது பார்க்கப்படுவது என்பதெல்லாம் அந்தக் காலம். அந்த பழைய பந்தா மாமியார் எல்லாம் டிவி சீரியலோடு சரி. இப்போதெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி,கப்-சிப் மாமியார்கள் தான் அதிகம். காலம் அந்த மாதிரி!!

இருந்தாலும் சில மாமியார்கள் என் பிள்ளை என்று கெத்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பாம்புகளுக்கெல்லாம் எப்படி பல்லைப் பிடுங்குவது என்று இந்தக்கால பெண்களுக்கும் (அவர்கள் அம்மாக்களுக்கும்) நன்றாகவே தெரியும்.

என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான் அண்டார்டிக்காவில் இருக்கிறான் என்று தரையில் கால் பரவாமல் குதிக்கும் அம்மாக்களுக்கெல்லாம் அவன் கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஆட்டமே ஆரம்பம். இந்த மாதிரி அம்மாக்களுக்கு மகன் திருமணத்திற்கு முன்னால் அம்மா ஹோதாவில் வெளிநாடு போகும் யோகம் கிடைத்தால் அவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். பிள்ளைக்கு கல்யாணம் ஆனபின் மாமியார் விசாவுடன் அமெரிக்கா போகும்போதுதான் ஆரம்பிக்கும் கச்சேரி. கல்யாணத்தில் புடவை ரவிக்கை மருதாணி என்று ஜொலித்த மருமகள், சுமங்கலிப் பிரார்த்தனை குல தெய்வம் கோவில் என்று சொன்னதையெல்லாம் கேட்ட மாட்டுப்பெண், அமெரிக்காவில் போய் பார்க்கும் போது, எட்டு மணிக்கு மேல் அரை டிராயருடன் தலைவிரி கோலத்தில் பெட் ரூமில் இருந்து வெளியே வரும்போது மாமியாருக்கு ரத்தக்கொதிப்பு 200 எட்டுவது நிச்சயம்.

மாமியார் மருமகள் உறவு

மாமியார் தன் மருமகளை “சீக்கிரம் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு, குளித்து முடித்து, பால் காய்ச்சி காபி போடும் மருமகள்” என்று தானாக கற்பனை பண்ணிக் கொண்டால் அது அவள் குற்றம் இல்லை. நம்மூரில் கூட நடக்கலாம், வெளிநாட்டில் முடியாது.
காரணம் இதெல்லாம் அங்கே நடைமுறையில் சாத்தியமில்லை. அங்கே நம் பெண்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும், சுமக்கும் வேலை பளுவுக்கும், அந்த ஊர் சீதோஷ்ணத்துக்கும், மருமகள் என்றில்லை மகளாகவே இருந்தாலும் செய்ய முடியாது.
இது ஏனோ மாமியார்களுக்குப் புரிவதில்லை.
தன் மகள் என்று வரும்போது அவளால் முடிந்தது முடியாதது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அம்மா தனக்கு ஒரு மாமியார் பதவி வரும் போது முற்றிலும் மாறிப் போவது யாருமே புரிந்துகொள்ளமுடியாத ஆச்சரியம்.
பதவி கிடைத்து விட்டது என்பதால் மாமியார் தர்பாரை, அங்கே போய் வெளிநாட்டில் வசிக்கும் மருமகளிடம் காண்பிக்க முயன்றால் காயம் கொஞ்சம் பலமாகத்தான் இருக்கும். முதலில் வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.2009ல் முதலில் நான் அமெரிக்கா போன போது என் மகனுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. இரண்டு மாதப் பயணம் அதில் மூன்று வார சுற்றுலாவாக அமெரிக்காவில் 12 மாகாணங்களை சுற்றிக் காட்டினான் என் மகன். வியந்து வியந்து ஊரைப் பார்த்தேனே தவிர, அந்தக் குளிரும் எல்லா வேலையையும் நாமே செய்து கொள்ள வேண்டும் (பாத்திரம் தேய்ப்பது உட்பட) என்பதும், வெறிச்சோடிய தெருக்கள் பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாதது தெருவில் இறங்கி நாமே எங்கும் போக முடியாது குளிர் தனிமை என்று நிறைய சலிப்புக்கள் தான் மனதில் மிஞ்சின . லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து மகன் அமெரிக்கா பூராவும் சுற்றிக் காட்டியதை விட இந்த சின்னச் சின்ன விஷயங்கள் தான் மனதில் மேலோங்கி இருந்தன.
பிறகு வருடாவருடம் போகும்போதும் அமெரிக்காவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். நிறைய கற்றல், விதவிதமான அனுபவங்கள். பிள்ளைக்கு சமைத்துப் போட்டுக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டு, டிவியிலும் AMC யிலும் சினிமா பார்ப்பது, Target,Doller Stores,Casco என்று ஷாப்பிங் செய்வது இதையெல்லாம் ரசிக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் கிடைத்தது மாமியார் பதவி!! அம்மாவாக அமெரிக்கா போவதற்கும், கூடவே மாமியார் பட்டம் சேர்ந்து கொண்டபின் அங்கே போவதற்கும் வித்தியாசம் இருந்தது. முதல் வித்தியாசம் தயக்கம். இதை செய்யலாமா சரியாக வருமா அவள் என்ன நினைத்துக் கொள்வாள் என்பதுதான் எப்போதும் மனதிற்குள் ஓடும்.
சமையலில் ஆரம்பித்து, பார்க்கும் சினிமா வரை அவளுக்கும் இது பிடிக்குமா என்று யோசித்து யோசித்து முடிவெடுத்து செய்வதில் ரொம்பவே இறுக்கமாக இருக்கும். இத்தனைக்கும் என் மாட்டுப்பெண் எனக்கு நேர் எதிர். மனதில் ஒன்றை நினைப்பதற்கு முன்னால் அதை வார்த்தையாக கொட்டிவிடும் ரகம் நான். என்ன நடந்தாலும் ஒரு சின்னப் புன்முறுவல் மட்டுமே காட்டும் பெண் அவள்!! அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ளவே முடியாமல் திணறுவேன் நான்.இந்தியாவில் ஒரு மாதிரியான வாழ்க்கைக்கு பழகிவிட்டதால், அங்கும், அதே மாதிரி தான் நடக்க தோன்றும் நமக்கு. காலை ஆறுமணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவதில் இருந்து, குளித்து சாமிக்கு அலங்காரம் செய்து, பூ வைத்து, விதவிதமாக சமைத்து, ஓடிஓடி நாளெல்லாம் வேலை இருந்து கொண்டே இருக்கும். வாரநாட்களில் மகன் மருமகள் இருவருமே படு பிசியாக இருப்பார்கள். இத்தனையும் தாண்டி ராத்திரி வந்து கிச்சன் சிங்கில் நான் குவித்து வைத்திருக்கும் பாத்திரத்தை பாவம் மாங்கு மாங்கு என்று தேய்த்து மீதி வேலையை செய்வாள் மருமகள். இருந்தாலும் அது கண்ணில் படாது. “You should learn to use less vessals amma “ என்று பிள்ளை அவளுக்கு எதிரில் அட்வைஸ் பண்ணினால் சுருக்கென்று கோபம் தான் வரும்
பிரிட்ஜில் ஹோட்டல் மாதிரி சாப்பாட்டு தினுசுகளை அடைத்து வைப்பதும், வாரத்துக்கு ஒருமுறை வாஷிங்மெஷின் போடுவதும், எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதை வீக் எண்டுக்கு மாற்றி விடுவதும் – ‘என்ன இது நம் கலாச்சாரமே கெட்டுப் போச்சே’ என்று திடுக்கிட வைக்கும்.
சனி ஞாயிறுகளில் 11 மணி வரை எழுந்திருக்காத அவர்கள் மேல் கோபமாக வரும். வீட்டிற்குள்ளேயே இருப்பது சலிப்பாக இருக்கும். மூச்சு முட்டும். இதெல்லாம் ஆரம்ப கால அவஸ்தைகள்.

பிறகு அமெரிக்கா செல்லும் பொழுது நானே தனியாக பல நண்பர்களின் அழைப்பின் பேரில் பல மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வாழும் இந்தியப் பெண்களின் அழுத்தமான வாழ்க்கைமுறை புரிய ஆரம்பித்தது.

உண்மையில் இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு வாழ்க்கை சொர்க்கம். உதவி செய்ய மனிதர்களிலிருந்து உறவினர்கள் வரை இங்கே கிடைக்கும் வசதி வெளிநாட்டில் கிடையாது. வீட்டுக்குள்ளும் சரி வெளியே செல்ல வேண்டிய செய்ய வேண்டிய வேலைகளும் சரி, ஒவ்வொன்றும் தானே செய்து கொள்ள வேண்டும். கடைக்குப் போக வேண்டும். கார் ஓட்ட வேண்டும். பனி பெய்யும் நாட்களில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். சமைக்க வேண்டும். பாத்திரம் தேய்க்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பாத்ரூம் கழுவ வேண்டும்.இதற்கு நடுவில் பண்டிகை கொண்டாட வேண்டும். வாரக் கடைசியில் நம்முடைய மக்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு போன் பேச வேண்டும். குழந்தைகள் இருந்தால் பள்ளி மற்ற வகுப்புகள் என்று அவர்களோடு ஓடி ஆட வேண்டும். சொந்த வீடு கார் என்று கடன் பட்டியல் பெரிதாக இருப்பதால் தானும் வேலைக்குப் போகவேண்டும். இதற்கு நடுவில் இந்தியாவிலிருந்து மாமியார் இடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி இந்தியப் பெண்களின் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி நிறையப் புரிந்து கொண்டேன். எழுத ஆரம்பித்தேன்.

அதற்குள் மாமியாராக பயந்து என்னைத் தள்ளி வைத்திருந்த மருமகள் நெருங்கி வர ஆரம்பித்தாள். மகன் மருமகள் இருவருமே எனக்குப் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்கள். சமையலறையிலேயே உழலாமல் எனக்கென்று ஒரு உலகத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுத்தார்கள். அவளும் நானும் நிறைய பேசி நெருக்கமானோம். என் மருமகள் அமெரிக்க வாழ்க்கையின் பல பரிமாணங்களை எனக்கு அறிமுகப்படுத்தினாள். வியெட்னாமீஸ், மெக்ஸிகன், திபெத்தியன் உணவுகளை சுவைத்துப் பார்க்க வைத்தாள். Swimming,library, Senior citizen clubs என்று சுவாரஸ்யம் காட்டினாள்.

அமெரிக்கா போனால் அங்கே எனக்கு என்று ஒரு உலகத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு அவர்கள் உலகத்தில் வாழும் சுதந்திரத்தை அளிக்கத் தெரிந்துகொண்டேன்.

அங்கே போனால் இந்திய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதும், இங்கே வந்தால் அமெரிக்க வாழ்க்கைக்கு ஏங்குவதையும் தவிர்க்க ஆரம்பித்தேன்.

நாம் மாமியாரோ பெற்றோரோ, தெரிந்து கொள்ளவேண்டியது இதுதான். நிச்சயம் இக்கரைக்கு அக்கரை பச்சை தான். அதை நினைத்து வருத்தப்பட்டு நிகழ்காலத்தை சிடுக்காக்கிக் கொள்ளாமல், சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்வது தான் முக்கியம். இப்படி வாழ்வது ஏதோ தியாகம் என்று நினைக்காமல், இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவசியம்.

என்றுமே இளைஞர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கான இடைவெளியை,சுதந்திரத்தை, மரியாதையை !! சொல்லப்போனால் நாம் கூட நம் இளைய வயதில் இதைத்தான் எதிர் பார்த்திருப்போம். அன்றைக்கு வெளியே காட்டும் தைரியமில்லை. அதனால் அடங்கிப் போனோம். ஆத்திரத்தை மனதிற்குள் ஒளித்து வைத்திருந்தோம்.
இன்று இளைஞர்கள் தைரியமாக வெளியே சொல்கிறார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் மாமியார் பதவியும் ஜாலிதான்!! “நான் உனக்கு அம்மா மாதிரி” என்று டயலாக் பேச வேண்டாம் அதை இன்றைய பெண்கள் விரும்புவதும் இல்லை.