
6. விடுகணை நுதலினுங்க வேழமும் வெகுண்டு மற்றோர்
தொடுகணை தொடாமல் அந்தப் புற்றின்மேல் ஓடி ஏறிப்
படுகணை உருவப் பாயப் பாம்புஅழல் உமிழ்ந்து பொங்கிக் கொடு
விலும் கணையும் வீழக் குறவற்கொன் றிட்டதன்றே.
[அழல்- நெருப்பு; நுதல்=நெற்றி]
நெருப்பு என்பது இங்கே நஞ்சை உணர்த்தியது “கொடுவில்” என்பதற்கு, கொடுமையானவில்” எனவும் பொருள் கொள்ளலாம்.
அவ்வாறு வேடன் ஏவிய அம்பானது அந்த யானையின் நெற்றியில் பாய்ந்தது. அந்த யானையும், சினம் கொண்டது. அந்த வேடன் தன் வில்லில் அடுத்த அம்பைத் தொடுத்துவிடாதபடிக்கு விரைந்து சென்றது. அவ்வேடன் நின்ற அந்தப் பாம்பின் புற்றின் மேல் ஏறியது. தன்நெற்றியில் பட்டுத் தங்கியிருந்த அம்பானது, அப்புற்றின் நடுவில் செல்லும்படி, மோதியது. உடனே அந்தப் புற்றிலிருந்த பாம்பானது, சினத்துடன் வெளியில் வந்து வேடனைக் கடித்து நஞ்சைக் கக்கியது. வில்லும், கையிலிருந்த அம்பும், கையைவிட்டு நீங்கி விழும்படி அந்தவேடனைக் கொன்றது.
- நாகத்தைக் குறவன் நல்ல பத்திரம் உருவிக் கொண்டு
பாகத்தைப் படுத்து வீழ்ந்தான் வீழ்தலிற் பசியின் வாடி.
மோகத்தாற் சென்று கண்டோர் முழைநரி முழுதும் தின்பான்
ஆகத்தான மைக வென்ன வாய்ந்தது வகுக்கு மன்றே.
[பத்திரம்=வாள்; பாகம்=துண்டு; மோகம்=பேராசை; ஆகம்=உடல்]
அவ்வாறு வேடன் பாம்பின் நஞ்சால் இறக்கும்போது அந்த நாகத்தின் மேல் கோபம் கொண்டான். அவன் தன் வாளை உறையிலிருந்து உருவி அந்தப் பாம்பை இரண்டு துண்டுகளாக்கிவிட்டுத் தானும் வீழ்ந்து இறந்தான். குகையில் வசிக்கின்ற ஒரு நரியானது பசியால் வாடிக்கொண்டிருந்தது. அந்த நரி அங்கு வந்தது. வேடன் உடலைக் கண்டது. பேராசையினாலே எல்லாவற்றையும் தின்றுவிட்டால் தன் உடலுக்கு ஆகாரம் கிடைத்து வயிறு நிரம்பிவிடும் என்று ஆராய்ந்தது.
8 களிறுஅறு திங்கட்கு ஆகும் கானவன்ஆகு மேஏழ்நாள்
ஒளிறுவாள் எயிற்று நாகம் உண்டோர்நாட்கு இரையென்று எண்ணி
வெளிறு இலாச் சிலையில் கோத்த தாரிவாய்க் குதையைக் கவ்விக்
குவிறுபேழ் வாயில் உய்ப்பக் கொடுவில் கோத் திட்டது அன்றே.
[களிறு=யானை; அறு திங்கள்=ஆறு திங்கள்; ஒளிறு வாள்=ஒளிவிடும் வாள் போன்ற கூர்மையாகிய; எயிறு=பல்; வெளிறு=குற்றம்; தாரி=நாண்; குதை=அம்பின் அடிப்பாகம்; உய்ப்ப=செலுத்த]
”இந்த யானை, ஆறு மாதங்களுக்கு இரையாகும். வேடனோ ஏழு நாள்களுக்கு ஆகாரமாவான். ஒளிவிடும் வாள் போன்ற கூர்மையான பற்களை உடைய, பாம்பு ஒரு நாளைக்கு உணவாக இருக்கின்றது. எனவே இப்பொழுது இந்த வில்லில் அகப்பட்டுள்ள நரியாகிய சிற்றுண்டியைத் தின்போம். மற்றவற்றைத் தினந்தோறும் சிறிது சிறிதாக உண்டு அதிக நாள்கள் தள்ளுவோம்.” என்று நரி பேராசை கொண்டது.
அது குற்றமற்ற வில்லிலே கோக்கப்பட்ட அம்பின் அடிப்பாகத்தை தன்னுடைய வாயினுள் கடித்துச் செலுத்ததியது. உடனே நாண் அறுந்து வில்லின் வளைவு நிமிர்ந்தபடியினாலே அந்த வளைவாகிய வில்லானது, அதன் தொண்டையில் பாய்ந்து கோத்துக்கொண்டு அதனைக்கொன்றது.
- அத்தியும் அரவின் வீழ்ந்த வேடனும் வேடன் கொன்ற
துத்தி நாகந் தானும் கிடப்பவிற் குதையைக் கவ்விச்
செத்தஇந் நரியைப் போலச் செய்பொருள் ஈட்டு வார்கள்
சித்தம்வைத்து அறங்கள் செய்யார் தேர்ச்சியின் மாக்கள் அந்தோ.
அத்தி=யானை; துத்தி=நாகத்தின் படம்; குதை=அம்பின் அடிப்பாகம்; மாக்கள்=விலங்குகள்]
வேடனாலே கொல்லப்பட்ட யானையும், பாம்பின் நஞ்சினாலே இறந்த குறவனும் அவ்வேடனால் கொல்லப்பட்ட படத்தை உடைய பாம்பும் கீழே கிடக்கின்றன. இந்த உடல்களைத் தின்னாமல் தன்னுயிர் நிலையானது என்று எண்ணி வீண் ஆலோசனை செய்து, அம்பின் அடியைக் கடித்து, அதனால் இறந்துபோன இந்த நரியைப்போல சிலர் பொருள்களையும் பல செல்வங்களையும், ஈட்டு வார்கள். ஆனால் அவற்றை அனுபவிக்காமல் பாதுகாப்புச் செய்து சேர்த்து வைத்து விரைவில் அழிந்துபோவார்கள். அப்பொருள்களின் மூலம் தருமங்களும் செய்யமாட்டார்கள். இவர்கள் ஐயோ! வாழ்வு நிலையில்லாதது என்பதை அறியாத, தெளிவில்லாத மிருகங்களாவார்.
சுற்றின்ஆர் வில்லின் வீழ்ந்த சூழ்ச்சியின் நரியைப் போலப்
பற்றினார் பெரிதும் வவ்விப் பகுத்துணாது ஈட்டினார்கள்
மற்றுணா வெறுக்கை தன்னை மன்னரும் பிறரும் வவ்வத்
தெற்றென வெளிறு நீரார் செல்வழ மிழப்ப ரன்றே.
[சுற்றின் ஆர்=வலிமையாகக் கட்டப்பட்ட; வவ்வி=கவர்ந்து; உணா=உண்ணாது; வெறுக்கை=செல்வம்; தெற்றென-உறுதியாக; வெளிறு நீரார்=அறிவில்லாத தன்மை கொண்டவர்]
நன்கு கட்டப்பட்டவில் நிமிர்ந்ததாலே வீழ்ந்து மாண்ட அறிவில்லாத நரியைப்போல உலகப் பொருளில் மிக்க ஆசையுடையவராய், பிறரிடம் இருந்து பொருள்களை மோசத்தால் கைப்பற்றித் தம்மிடம் இருப்பவற்றைத் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தாமும் உண்ணாமல், பலவழியிலும் பொருளைச் சம்பாதித்தவர்கள், தங்களிடமுள்ள உணவாகும் தானியங்களையும், செல்வத்தையும், அரசர்களும், திருடர் முதலிய மற்றவர்களும், அபகரிக்க அறிவற்ற தன்மையராய், செல்வமும் இழப்பர்.

‘நன்றியில் செல்வம்’ குறட்பாக்களை ஞாபகப்படுத்தின நரிவிருத்தப் பாக்களில் விரியும் காட்சிகள்
LikeLike