Amma Appa Old Age Home In Chennai - Chennai - Click.in

‘ரகு சீக்கிரம் வாங்கோ பிளைட்டுக்கு டைம் ஆயிடுச்சு’

 ‘இதோ வரேன், பாஸ்போர்ட் செக் பண்ணிட்டு இருக்கேன், குழந்தைகள் எல்லாம் ரெடியாயிட்டாங்களா?’

 ‘ஆஹா அவங்க காரிலேயே ஏறிட்டாங்க, நீங்க தான் பாக்கி’

 ரகுராமும் ஜானகியும் நியூயார்க்கில் இருந்து சென்னைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு வருகிறார்கள். ஜானகிக்கு ஒரே குஷி. தனது அப்பா, அம்மாவைப் பார்க்கப் போகிறோம், இதை நினைத்தவுடன் முகம் முழுக்கப் பிரகாசம். 

 சென்னை ஏர்போர்ட்டில் அப்பா ராமமூர்த்தியைப் பார்த்தவுடன் குழந்தைகள் ‘தாத்தா’ என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டனர்.

ஜானகியும் ‘எப்படி இருக்கிறீர்கள் அப்பா’ என்று விசாரித்துக் கொண்டு காரில் சாமான்களை ஏற்றினாள்.

 வழி நெடுக ‘அம்மா எப்படி இருக்கா, தம்பி சாரதியும் அவள் மனைவி புவனமும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்களா, பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிக்கு கால் வலி குணமாகிவிட்டதா, அடுத்த வீட்டு அம்புஜத்திற்கு கண் ஆபரேஷன் ஆகிவிட்டதா, வெள்ளத்தில் நமது வீடு ரொம்பவும் சேதம் ஆகாமல் உள்ளதா, ரோஜா செடியில் மொட்டுகள் விட்டுள்ளனவா, ஜிம்மிக்கு காலில் முள்ளு குத்தி இருந்தது, சரி ஆகிவிட்டதா’.

இதையெல்லாம் கேட்டவள் ரகுராமனின் அம்மாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. எப்படி பேசுவாள்? அவளது கணிப்பில் தான் அவளை ஒரு முதியோர் இல்லத்தில் நன்றாக பாதுகாப்பாக  வைத்துள்ளாளே!

ரகுராமின் அப்பா சாம்பசிவம் போஸ்ட் ஆபீஸில் குமாஸ்தாவாய் இருந்தார். சாதாரணமாகப் போன அவர் வாழ்க்கை திடீரென்று ஒரு நாள் மத்தியானம் மார்பு வலி என்று வந்தவர்தான், இரண்டே நிமிடத்தில் எல்லாமே முடிந்து விட்டது. அப்பொழுது ரகுராம் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அம்மா பார்வதி இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். 13 நாட்கள்தான். சுப சுவீகாரம் ஆனவுடன் ரகுராமிற்காக எழுந்து விட்டாள்.  தன் கவலைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

 வாழ்க்கைப் பாதையை சீராக்கிக் கொண்டு ஊறுகாய் போடுவது, அப்பளம் இடுவது, சமையல் செய்வது என்று தனக்குத் தெரிந்த கலைகளை விஸ்தரித்து பணமீட்ட ஆரம்பித்தாள். யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்து தர ஆரம்பித்தாள். இதனால் அவளுக்குப்  போதிய வருமானம் சேர ஆரம்பித்தது.

ரகுராமையும் அவன் இஷ்டப்பட்டபடியே ஐஐடியில் படிக்க வைத்து அவனுக்குத் தகுந்த வேலை வந்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டாள். ரகுராமும் அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்து நடந்து கொண்டான்.

 தனது அலுவலகத்திலேயே வேலை செய்யும் ஜானகியைப் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் பார்வதி வேறு எதையும் யோசிக்காமல் அந்த சம்பந்தத்தைப் பேசி முடித்து திருமணம் செய்து வைத்தாள். குழந்தை ஆதித்யாவும் பிறந்து விட்டான். அம்மாவும் ஆதித்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு தனது கவலைகளை சிறிது மறக்க ஆரம்பித்தாள்.

 ஜானகி தன் வாழ்க்கையை வளப்படுத்த ரகுராமை வற்புறுத்தி வெளிநாட்டு வேலைக்கு மனு போடச் செய்தாள். ஐஐடி படித்த ரகுராமின் திறமைக்குக் கேட்கவா வேண்டும்! நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு கம்பெனிகள் அவனை வரவேற்றன. இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதாக முடிவு எடுத்தார்கள்.

அம்மா தனது கவலைகளை மறக்க ஆரம்பித்த இந்த நேரத்தில் இந்த வெளிநாட்டுப் பயணம், ரகுராம் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்க ஆரம்பித்தான். அம்மாவை தனியாக எப்படி விடுவது?

 அப்பொழுது ஜானகி மெதுவாக ‘கோயம்புத்தூரில் இருக்கும் அப்பா வீட்டை விற்று விடலாம், அம்மா தனியாக என்ன செய்வார்கள், ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம், நாம் பணம் கட்டி விட்டால் முதியோர் இல்லத்தில் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள், நாமும் கவலையின்றி வெளிநாட்டிற்குச் செல்லலாம்’ என்று ஆறுதலாகக்  கூறுவது போல் தனது பாரத்தை இறக்க நினைத்தாள்.

 வெளி நாட்டுக்காரன் உடனே வந்து சேர விடுத்ததால் ரகுராமும் வேறு வழி ஏதுமின்றி ஜானகி சொன்னவாறே வீட்டை விற்றப் பணம் மூன்று லட்சத்தைக் கொடுத்து ஒரு முதியோர் இல்லத்தில் அம்மாவை பாதுகாப்பாக இருக்கும்படி செய்துவிட்டு, அந்த நிர்வாகிகளிடமும் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அரை மனதோடு நியூயார்க் கிளம்பினான்.

 ஆயிற்று இரண்டு வருடங்கள். ஜானகியின் தம்பி குழந்தைக்கு ஆண்டு நிறைவு. இதற்காக சென்னை சென்று 15 நாட்கள் தனது அம்மா அப்பாவோடு விடுமுறை கழிக்க ஜானகி விரும்பினாள். அந்தப் பயணம் தான் இது. வீடு வந்து சேர்ந்தாயிற்று.

ஜானகி அம்மா மங்களத்திற்கு ஒரே சந்தோஷம். ஜானகி இறங்கியவுடனேயே அம்மாவிற்காக சென்ட் பாட்டில், கைப்பைகள், அப்பாவிற்கு கூலிங் கிளாஸ், வாக்மேன், தம்பி சாரதிக்கு லேப்டாப், அவள் மனைவி புவனத்திற்கு அலங்காரப் பொருட்கள், குழந்தைக்கு தங்க செயின் என்று பார்த்து பார்த்து வாங்கி வந்ததை எல்லோருக்கும் சந்தோஷமாகக்  கொடுத்தாள்.

     மங்களம் பெண்ணும் மாப்பிள்ளையும் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறார்கள் என்று தடபுடலாக பாயசம், வடை என்று விருந்து வைத்தாள். சாயந்திரம் பஜ்ஜி, சொஜ்ஜி, இராத்திரி பால் கொழுக்கட்டை, கல் தோசை என்று அவர்களுக்கு வெளிநாட்டில் கிடைக்காத உணவுகளை அதுவும் ஜானகி விரும்பி சாப்பிடும் உணவுகளை சமைத்துக் கொடுத்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மெதுவாக ரகுராம் ‘அம்மாவை போய்ப் பார்த்துவிட்டு வரலாம் ஜானகி’ என்று ஆரம்பித்தான்

 ‘எனக்கு இன்னும் சில வேலைகள் இருக்கின்றன, இங்கே என் நண்பர்களை எல்லாம் பார்க்க வேண்டும், அவர்களுக்கு வாங்கி வந்ததைக்  கொடுக்க வேண்டும், பெரிய கோயிலில் பூஜை, ம் ம்..’

 ‘இப்படி சொன்னால் எப்படி? அம்மாவைப் போய் பார்க்க வேண்டாமா?’

 ‘சரி சரி, கோவிச்சுக்காதீங்க, ரெண்டு மூணு நாள் கழித்துப்  பார்க்கலாம்’

 இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆண்டு நிறைவு முடிந்து விட்டது. ஆனாலும் ஜானகி மாமியாரைப் போய் பார்ப்பது பற்றி வாய் திறக்கவே இல்லை.

 ரகுராம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ‘ஜானகி நாம் ஊருக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது, அதனால் நாளைக்கு நான் கிளம்பி அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கோபமாகச் சொன்னான்.

 ‘அதுதான் சரி போயிட்டு வாருங்கள்’ என்று ஜானகி மாமியாரைப்  பார்ப்பதைத் தவிர்த்து விட்டாள்.

 ரகுராம் ஒரு கார் எடுத்துக்கொண்டு அந்த ஆசிரமத்தை நோக்கிப்  போனான். ஆசிரமத்திற்குச் சென்றவுடன் ‘பார்வதி அம்மாவைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னவுடன் புதிதாக வந்த ரிசப்ஷனிஸ்ட் ‘அந்த பெயரில் யாரும் இல்லை’ என்று கூறிவிட்டாள்.  

பதைபதைத்த மனத்துடன் ரகுராம் வார்டனைத் தேடி ஓடினான். இவனை வரவேற்ற அந்த வார்டன் ‘அம்மா இங்கே ஒரு நாள் கூட இல்லை, நீங்கள் கொண்டு வந்து விட்ட மறுநாளே ‘நான் என் ஊருக்கு திரும்பிப் போகப் போகிறேன், எனக்காகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று பணத்தை வாங்கிக் கொண்டு போய் விட்டாள், நீங்கள் வெளிநாடானதால் தெரிவிக்க முடியவில்லை’ என்று சொன்னார்.

ரகுராமிற்கு ஒன்றுமே புரியவில்லை.

     ஜானகிக்குப் போன் பண்ணி சொன்னபோது ‘உங்க அம்மா அந்தப் பைசாவை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்களா’ என்று கேலி செய்தாள்.

கோபம் வந்தது வீட்டுக்கு வந்து ஜானகியையும் கூட்டிக்கொண்டு தன் சொந்த ஊரில் அம்மாவைத் தேடலாம் என்று சென்றான். அவன் விற்ற வீட்டை நோக்கிச் சென்றபோது அங்கே வீடு பெயிண்ட் அடிக்கப்பட்டு மாவிலைத்தோரணம் எல்லாம் கட்டியிருந்தது. வாசலில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு அப்பளம், வடாம் இட்டுக் கொண்டிருந்தார்கள். ‘பார்வதி இல்லம்’ என்ற போர்டு இருந்தது. ரகுராமிற்கு குழப்பமாக இருந்தது. ஆனால் மெதுவாக உள்ளே சென்றான் அவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை அவனுடைய அம்மா பார்வதி ஒரு நாலைந்து பெண்மணிகளுடன் அடுப்பில் முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தாள் அவள் முகம் பூராவும் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை பிரகாசித்தது.

கொஞ்சம் ஆசுவாசப்பட்டவனாய் ரகுராம் ‘அம்மா’ என்று கூப்பிட்டான்.

‘வாப்பா ரகு, வா ஜானகி, எப்படி இருக்கிறீர்கள், குழந்தை சௌக்கியமா? கூட்டிக்கொண்டு வரவில்லையா/’

‘நாங்கள் ஜானகி வீட்டுக்கு வந்திருக்கிறோம், அவருடைய தம்பி குழந்தைக்கு ஆண்டு நிறைவு, அது சரி, நீங்கள் எப்படி இங்கே? நாங்கள் அந்த ஆசிரமத்திற்கு போய்த் தேடினோம், நீங்கள் அங்கு இருந்து கிளம்பி விட்டீர்கள் என்று சொன்னார்கள், இதெல்லாம் என்ன, என் கண்களை நம்ப முடியவில்லை’.

 ‘ஒன்றுமில்லை கண்ணா, நான் உன்னிடம் சொல்லாமல் அந்தப் பணத்தை அந்த ஆசிரமத்தில் திருப்பி வாங்கினது தப்புதான், இந்தா அந்தப் பணம்’

அழுது கொண்டே ‘அம்மா இது உன் பணம் தான், என்னிடம் ஏன் தருகிறாய், நீங்கள் தனியாய் இருக்க வேண்டாமே என்று தான் நான் அந்த ஏற்பாடு செய்தேன், ஆனால் நீங்கள் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது’

‘ஆமாம் ரகு,  இவர்கள் எல்லாம் அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் தான், இவர்களுக்குப் பணம் கொடுக்க யாரும் இல்லை, அந்த ஆசிரமத்தில் எதுவும் சொல்லாவிட்டால் கூட பணம் கொடுக்காமல் இலவசமாக சாப்பிட இவர்களுக்கு மனசு ஒப்பவில்லை, என்னிடம் வந்து அழுத பொழுது எனக்கு இந்த யோசனை தோன்றியது, நான் இந்த வீட்டை மறுபடியும் வாங்கி இவர்கள் எல்லோருக்கும் சுய தொழிலும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இதனால் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’

 ஜானகிக்கு அப்போதுதான் புரிந்தது பாசம் என்பது ரத்த பந்தத்தில் மட்டுமல்ல, பாச வலையை வீசத் தெரிந்தால் எந்தவிதமான மீன்களும் அந்த வலையில் சிக்கிவிடும், பணமா பாசமா இந்தத் தராசில் பாசமே இறங்கி நிற்கும்!

 

 

                                     ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி