DSC01555 சுழிக்காற்று- (மர்ம)நாவல்- கௌசிகன் என்கிற வாண்டுமாமா 

சுழிக்காற்றுஇந்த மேற்கூறிய நாவலை ஒரு தொடராக நான் என் இளம் பருவத்தில் படித்துள்ளேன். அந்தக் காலத்திய வழக்கமாகப் (1971-72) பக்கங்களை எடுத்து வைத்துக் கொண்டு ‘பைண்டு’ செய்து வைத்த நூலாக இன்னமும் என்னிடம் உள்ளது. எத்தனை முறை படித்திருப்பேன் எனவும் தெரியாது. அத்தனைமுறை படித்ததற்குக் காரணம் ஆசிரியரின் கதைசொல்லும் பாணியும், விறுவிறுப்பான சம்பவங்களும், வயது முதிர முதிர, ஒரு நாவலை நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுதலாலும் என்பேன்.

வி. கிருஷ்ணமூர்த்தி என்பவரே கௌசிகன் எனும் பெயரில் எழுதிவந்தார் என விக்கிபீடியா கூறுகிறது. இவரே கல்கியில் பாமினிப்பாவை எனும் புதினத்தையும் எழுதியவர். சிறுவர்களுக்காக வாண்டுமாமா எனும் பெயரிலும் எழுதினார். இந்த நாவல் தொடராக வெளிவந்தபோது அடுத்தடுத்த கல்கி இதழ்களுக்காக ஆவலாகக் காத்திருப்போம்.  எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் – இன் பெரி மேஸன் (Earl Stanley Gardner- Perry Mason) தொடர்பான நாவல்களுக்கு இணையானது இது எனலாம். அத்தனை விறுவிறுப்பு. நாற்காலியின் நுனியில் நம்மை உட்கார வைக்கும் சாமர்த்தியமான திருப்பங்கள்.

கதையின் களன் ஒரு பெரிய ஜமீன் – முல்லைவாசல் எனப்பெயர். கதாநாயகி மஞ்சுளா ஜமீனின் செல்லப்பெண். தான் விரும்பி மணந்து கொள்ளப்போகும் காதலனும் ‘டிடெக்டிவ்’வுமான சேகருடனும், தங்கள் மற்றொரு நண்பனான கோபாலுடனும் (Paul Drake-இன் மறு அச்சோ?) தாத்தா தர்மலிங்கம், அப்பா கந்தசாமி இருவரும் உடல்நிலை சரியில்லாது இருக்கிறார்கள் எனச் சிற்றன்னை கொடுத்த தந்தியால் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறாள். அவ்வூரில் அவளை எல்லாருக்கும் தெரியும். அவர்கள் ஊரை வந்தடையும் முன்பே மர்மங்கள் அவர்களைக் கொலை வடிவில் எதிர்கொள்கின்றன. ஒரு முடிச்சு அவிழும் முன்பே மேலும் முடிச்சுகள் ஒவ்வொன்றாக இறுக விழுகின்றன. சேகர் வேண்டாவிட்டாலும் கூட இவற்றைத் துப்புத்துலக்குவதில் அவன் ஈடுபடுத்தப்படுகிறான்.

கந்தசாமியின் மனைவி கோகிலா தாயை இழந்த மஞ்சுளாவின் சிற்றன்னை. தற்சமயம் ஜமீன் நிர்வாகம் அவள் கையில்தான் இருக்கிறது.

மஞ்சுளா தங்கள் ஜமீனில் தனக்கு விருப்பமான திராட்சைக்கொடி வீட்டில் தங்க ஆவலாக உள்ளாள். ஆனால் சமீபத்துப் புயலில் அவ்வீடு மிகவும் சேதமடைந்து விட்டது எனக்கூறி சிற்றன்னை அவர்களை வேப்பமரத்துப் பங்களா எனும் வேறொரு இடத்தில் தங்க வைக்கிறாள். அதனை ஏன் பழுது பார்க்கவில்லை என மஞ்சுளா கேட்கிறாள். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சேகர் விடைகளைத்தேடிச் சிந்திக்க முற்படுகிறான். இதற்குள் வரிசையாகக் கொலைகள்!

மஞ்சுளாவின் தோழியும் அவளுடைய தந்தை ஜமீந்தார் கந்தசாமியைக் கவனித்துக் கொள்ளும் நர்சுமான நிர்மலா வேலையைவிட்டு நீக்கப்படுகிறாள். காணாமல்போன தன் காதலன் ராமுவைத்தேடி அலைகிறாள் நிர்மலா. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்தார்கள். அவன் புயலடித்த இரவில்தான் காணாமல் போயிருந்தான்.

இதற்குள் சென்னை விலாசத்திற்கு சேகருக்கு ஒரு பார்சலாக அனுப்பப்பட்ட ஒரு டிரங்குப்பெட்டி கைதவறுதலாகக் கீழேவிழுந்து பூட்டு உடைபடுகிறது. அதனுள் ஒரு சடலம், நிர்மலாவின் அண்ணன் ராமுவினுடையது திணித்து வைக்கப் பட்டுள்ளது. அனைவரும் திடுக்கிட, சேகர் தனது துப்பறியும் வேலையைத் துவங்குகிறான். போலீசார் இதனை விரும்பவில்லை. இவ்வாறு கதை நகர, அல்ல அல்ல, ஓடத் தொடங்குகிறது.

தன் தந்தையையும் தாத்தாவையும் சந்திக்க மஞ்சுளாவைக் காத்திருக்க வைக்கிறாள் சிற்றன்னை கோகிலா. மங்கிய ஒளியுள்ள அறையில் தந்தையைக் கிடத்தியுள்ளனர். ஒரே அறையில் இருந்த தாத்தாவையும் தந்தையையும் இருவரையும் பிரித்துவிட்டாள் கோகிலா. தாத்தா இதைப்பற்றி மஞ்சுளாவிடம் குறைப்பட்டுக் கொள்கிறார்.

அன்று இரவிலேயே ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் செல்லும் வழியில் நிர்மலா கொலை செய்யப்படுகிறாள். கோபாலும் சேகரும் மஞ்சுளாவும் முகமறியா நபர்களால் தாக்கப் படுகின்றனர். இவற்றையெல்லாம் சமாளித்து சேகர் துப்புத் துலக்க முயலுகிறான்.

அவளுடைய தகப்பனார் கந்தசாமியைச் சந்திக்க மஞ்சுளா அவளுடைய சிற்றன்னையால் அனுமதிக்கப் படுவதேயில்லை. அவர் அதிர்ச்சியைத் தாங்க மாட்டார்; இரவு தூங்கவில்லை என்றெல்லாம் கூறி அச்சந்திப்பை நிகழ விடாமல் தடுத்த கோகிலா கடைசியில் ஒருமுறை மட்டும் மங்கிய அறையின் விளக்கொளியில் பார்க்க அனுமதிக்கிறாள். சேகருக்கு இதனாலெல்லாம் என்னவோ ஒரு உறுத்தல்.

இவர்களுக்குப் பழக்கமான பண்ணை டாக்சி டிரைவர் காளியப்பன் காணாமல் போகிறான். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். முடிச்சின் மேல் முடிச்சு. [இப்போது இந்த நாவலைப் படிக்கும்போது கௌசிகன் எப்படி இவ்வாறு ஒரு மர்ம நாவலை எழுதியுள்ளார் என வியப்புத்தான் மேலிடுகிறது. அது பிரமிப்பாக மாற வெகுநேரம் வேண்டியிருக்கவில்லை.]

இவர்கள் இருக்கும்போதே தாத்தா தர்மலிங்கம் காலமாகிறார். அவருடைய உயில் படிக்கப்படுகிறது. இருவிதமான சொத்துப் பிரிவுகளைப் பதிந்துள்ளார் அவர். தமக்கு முன் மகன் காலமாகிவிட்டால் எப்படிப்பிரிக்க வேண்டுமெனவும், தனக்குப் பின் காலமானால் என்ன செய்ய வேண்டுமெனவும் தெளிவாகக் கூறியிருந்தார். எல்லாப் பிரச்சினைகளுக்கும் இதுவே காரணம்; இதனை நாம் தெரிந்து கொள்ள வெகுநேரம் ஆகின்றது. அதுவே கதாசிரியரின் எழுத்து சாதுரியம் எனலாம்.

மஞ்சுளா – சேகர் குழு இதன்பின் சென்னைக்குத் திரும்ப ரயில் நிலையத்தில் இருந்தபோது மஞ்சுளாவின் தந்தை கந்தசாமியும் அப்போதுதான் காலமானது தெரிய வருகிறது. நமது குழு திரும்ப முல்லைவாசலை அடைகிறது.

இப்போது சேகர் பலவிதமான தனது ஊகங்களைத் தொடர்பு படுத்திப் பார்க்கிறான். பல முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கின்றன. இதனை நான் இப்போதே இங்கே கூறிவிட்டல் ஒரு அருமையான நாவலைப் படிக்கும் சுவாரசியத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

சேகர் தனது பலவிதமான ஊகங்களை ஒன்றுபடுத்தி கோர்வையாகச் சம்பவங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறான். புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழ அவிழ, நாம் அம்மாடி என பிரமித்துத்தான் போகிறோம். பெரிமேஸனை விட விறுவிறுப்பு, சம்பவத் தொடர்கள் எங்கெல்லாமோ போடப்பட்ட முடிச்சுகள் எப்படிக் கச்சிதமாக சேகரின் கூர்மையான மூளையில் ‘அனலைஸ்’ செய்யப்பட்டு ஒரு கட்டுக்கோப்பான திகில் கதையாக உருக்கொள்கிறது என்பது மிகுந்த வியப்புக்குரியது.

இந்த நாவல் கவிதா பதிப்பாக பனுவல் பதிப்பகத்தில் கிடைக்கிறது.

வேண்டுவோர் வாங்கிப் படியுங்கள்.

 

சுழிக்காற்று: முடிவு

 

இந்தப் புத்தகம் சுலபமாகக் கிடைக்கக் கூடியது இல்லை. அதனால் குவிகம் ஆசிரியரின் வேண்டுகோளின்படி இதன் முடிவைக் கூறிவிடுகிறேன்.

தாத்தா தர்மலிங்கத்தின் உயில்படி தாம் முதலில் இறந்தால் பேத்தி மஞ்சுளாவிற்கு மூன்று லட்சமும் மற்ற சொத்துக்கள் தன் மகனான கந்தசாமிக்கும் பாத்தியதை என எழுதியிருந்தார். (1970-களில் நாம் இந்த சொத்தின் மதிப்புகளை எண்ணிப்பார்க்க வேண்டும்!) தன் மகன் கந்தசாமி முதலில் இறந்து விட்டால், பலகோடி பெறுமானமுள்ள தன் சொத்துக்கள், பண்ணை, அனைத்தும் மஞ்சுளாவைச் சேரவேண்டும் எனவும் கோகிலாவிற்கு வெறும் ஐம்பதினாயிரம் ரூபாய்கள் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் எனக் கண்டிருந்தது.

இவருக்கு வீராசாமி எனும் ஒரு இளையமகனும் இருந்தார். அவர் கெட்ட சகவாசத்தினால் தர்மலிங்கத்தால் வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டு விட்டார்.

கந்தசாமி அவர்களின் உயில்படி தமது இறப்பின்பின் சொத்துக்களை சரிபாதியாக மஞ்சுளாவும், கோகிலாவும் பிரித்துக்கொள்ள வேண்டுமென எழுதியிருந்தார்.

ஆகவே புயலடித்த இரவிலேயே இறந்துவிட்ட கந்தசாமியின் உடலை பெரிய ராட்சத குளிர்பதனப் பெட்டியில் (திராட்சைக்கொடி வீட்டில்) பத்திரப்படுத்தி விட்டார்கள் கொலை/ சதிகாரர்கள். இதில், கோகிலா, வீராசாமி, அவள் தம்பி டாக்டர் ரகுநாத் இன்னும் சிலர், ஆகியோர் அடக்கம். கந்தசாமி இன்னும் உயிரோடிருப்பது போல் நடிக்க, அறையின் மங்கிய விளக்கொளியும், மஞ்சுளா தந்தையைச் சந்திக்க வந்தபோது வீராசாமியை அவர் படுக்கையில் படுக்கவைப்பதும் நடந்தன.

முதலில் தாத்தா தர்மலிங்கம் இறக்கிறார் (எனக் காட்டப்படுகிறது.) பின் ஒரு வாரத்திலேயே கந்தசாமி அவர்களின் பதனப்படுத்தப்பட்ட உடலை எடுத்து வெளியில் வைத்து அவர் பிற்பாடு இறந்ததாகக் கதை பண்ணுகிறார்கள் சதிகாரர்கள். இதையெல்லாம் தற்செயலாகக் கண்டுவிட்ட சில அப்பாவிகள் (நர்ஸ் நிர்மலா, டிரைவர் காளியப்பன், காரியதரிசி ராமு, நிர்மலாவின் அண்ணன் பாலு) ஆகியோர் கொலை செய்யப்படுகின்றனர். ஆங்காங்கே மறைவாக அவர்கள் உடல்கள் புதைக்கப் படுகின்றன.

பெரும் சொத்தை அடைய எப்படிப்பட்ட திட்டம்!!

இவற்றைத்தான் வெகு திறமையாக சேகர் துப்பறிந்து கண்டுபிடிக்கிறான்.

சேகரின் துப்புத் துலக்கும் திறமையும் விளக்கங்களும் அபாரம்!!

கௌசிகன் எழுதியது அதைவிட அபாரம்.

ஆறு மாதங்கள் கழித்து இன்னுமொருமுறை படிக்க வேண்டும்!!

யாராவது இந்தப் புத்தகத்தைத் திரும்பவும் வெளியிட வேண்டும்.

 

(விரைவில் மீண்டும் சந்திப்போம்)