
“ஏம்ப்பா இவ்வளவு அலுப்பா இருக்க?” என்றார் ராமசாமி பெரியப்பா. அவர் இன்று தான் மதுரையிலிருந்து புது கருப்பூருக்கு தன் தம்பி வீட்டுக்கு வந்திருந்தார்.
“ஆமாம் பெரியப்பா. தஞ்சைக்குப் போய் சாமான் கொள்முதல் செஞ்சு திரும்பறபோது, நம்ம ஸ்டேஷன்ல வண்டி நிக்காம போறதால, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி, திரும்ப அங்க நிறுத்தி வச்சிருக்கிற சைக்கிள்ள பொருட்களை ஏத்தி, 10 கி.மீ மிதிச்சிக்கிட்டு நம்மூருக்கு வர்றதுக்குள்ளே மூச்சு முட்டுது.” என்றான் கதிர்வேலன், அவர் தம்பி லட்சுமணனின் புதல்வன். அவன் அந்த ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கிறான்.
“இந்த பக்கமா வர்ற எல்லா வண்டியும் புது கருப்பூர்ல நிக்குமே? நானே பாத்திருக்கேனே? இப்போ என்ன ஆச்சு?” என்றார் பெரியப்பா.
“நீங்க சொல்றது உண்மைதான் பெரியப்பா. நாலு மாசம் முன்னால ஏதோ ஒரு புது அதிகாரி வந்து நிறைய வண்டிங்க டைம் டேபிளை மாத்தி, சில ஸ்டேஷன்ல நிப்பாட்டறதை நிறுத்திப் போட்டுட்டாராம். அதுல நம்ப தஞ்சை-சென்னை ரயிலும் அடி வாங்கிடிச்சி. ரயில்வே ஆபிஸ்ல போய் கேட்டா, ஏதோ தவறு நடந்து போச்சு. நாம எடுத்து சொன்னா சரி செஞ்சிடுவாங்கன்னு தான் சொல்றாங்க!”
“கட்சிக்காரங்க, எம்.எல்.ஏ., இல்லே எம். பி. இருப்பாங்களே அவுங்க கிட்ட சொல்லி பாக்குறது தானே?”
“அவுங்க எல்லாம் ஒரு போராட்டம் நடத்தலாம்னு சொல்றாங்க. ரயில் மறியல் போராட்டமாம்!”
“ஏற்கெனவே நிறுத்திக் கிட்டிருந்த ஸ்டேஷன்ல வண்டி நிக்கலேன்னா நெதமும் போற வர்றவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? புது கருப்பூர்லேந்து தஞ்சாவூர் போலாம். ஆனா திரும்பறச்சே இறங்க முடியாதுன்னா இது என்ன…..புரியலியே? இங்கேயிருந்து போனவங்க ஊருக்கு திரும்ப வேண்டாமா…லாஜிக்கே இல்லாம இப்படி கூட செய்வாங்களா…..” என்று யோசித்த பெரியப்பா,
“இரு! பார்க்கலாம். எதுக்கும் நீங்க எல்லாம் கையெழுத்து போட்டு ஒரு மனு ரெடி பண்ணுங்க. நம்ப மாப்பிள்ளை மூலமா விசாரிச்சு பார்க்கலாம்.” என்றார். பெரியப்பாவின் மூத்த மகள் திருமணமாகி டெல்லியில் தான் இருக்கிறாள். மாப்பிள்ளை மத்திய அரசாங்க அதிகாரி.
கதிர்வேலன் ரயில்வே மந்திரிக்கு ஒரு மனு தயார் செய்து ஊர்க்காரங்க 50 பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தான். எதேச்சையாக ஒரு வாரம் கழித்து ராமசாமியின் பெண்ணும் மாப்பிள்ளையும், மாப்பிள்ளையின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு தஞ்சை வந்தவர்கள் அப்படியே ராமசாமியும் அவர் மனைவியும் புது கருப்பூருக்கு வந்திருப்பதை அறிந்து அவர்களைப் பார்க்க காரில் அங்கே வந்தார்கள்.
“நல்ல வேளை மாமா! நீங்களும் அக்காவும் கார்ல வந்திட்டீங்க. தஞ்சையிலிருந்து வர்ற வண்டி இங்கே இப்போ நிறுத்தறது இல்ல.” என்றான் கதிர்வேலன்.
“போகும்போது நிறுத்தறாங்க. ஆனா திரும்பி வர்ற ரயில் நிக்குறது இல்லியா? இதில ஏதோ தவறு இருக்கு..” என்று யோசித்த மாப்பிள்ளை அவர்கள் மனுவை வாங்கிக் கொண்டு டெல்லியில் ரயில்வே அமைச்சகத்தில் பார்க்க வேண்டியவரை பார்த்து ஆவன செய்வதாக உறுதி கூறி புறப்பட்டார்.
அடுத்த வாரம் மாப்பிள்ளையிடமிருந்து கதிர்வேலனுக்கு அலைபேசியில் அழைப்பு.
“மச்சான்! இங்க ரயில்வே துறையில உயர் அதிகாரி கிட்ட உங்க மனுவைக் கொடுத்து, ஏதோ தவறு நடந்திருக்கு. இதை கூடிய சீக்கிரம் சரி செஞ்சிடுங்கன்னு விளக்கி சொல்லியிருக்கேன். அவர் ரயில்வே மந்திரியிடம் கலந்து பேசி நிச்சயம் நமக்கு உதவறேன்னு சொல்லியிருக்காரு! கவலைப்படாதே! நிச்சயம் ஊர் ஜனங்களுக்கு நல்லது நடக்கும்!” என்றார்.
அடுத்த வாரம் முதல் தஞ்சையிலிருந்து வரும் ரயில் புது கருப்பூரில் நிற்க ஆரம்பித்து விட்டது. ஊர் மக்கள் மகிழ்ந்து போனார்கள். இதற்கு முயற்சி எடுத்த கதிர்வேலனை வீடு தேடி வந்து நன்றி தெரிவித்தார்கள். கதிர்வேலனுக்கும் தான் எடுத்த முயற்சி பலித்ததில் சந்தோஷம் தாங்கவில்லை. தன் மாமாவை அலைபேசியில் அழைத்து ஊர் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தான்.
அன்று மாலையே எம். எல். ஏ. வின் ஆட்கள் ஒரு பத்து பேர்கள் திடுதிடுவென்று கதிர்வேலன் வீட்டிற்கு வந்தனர். “தலைவர் தான் ரயில் மறியல் போராட்டம் நடத்தலாம்னு சொல்லிக்கிட்டிருந்தாரே? நீங்க அவரைக் கலந்து பேசாம தன்னிச்சையா இப்படி செஞ்சிட்டீங்களே? அப்புறம் ஊர்ல அவருக்கு என்ன மரியாதை?” என்றனர் கோபமாக.
அதற்குள் எம்.எல்.ஏ. சோமசுந்தரத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வர, தொண்டர்களுள் ஒருவன் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்து கிசுகிசுப்பாக ஏதோ சொன்னான். எல்லோரும் அவசரமாக கலைந்து போனார்கள்
மறுநாள் ரயில் புது கருப்பூருக்கு வரும் நேரத்தில் ஊரெங்கும் போஸ்டர்கள்!
“தஞ்சையிலிருந்து வரும் ரயிலை புது கருப்பூரில் மீண்டும் வெற்றிகரமாக நிற்க வைத்த நம் அருமை அண்ணன் எம்.எல்.ஏ. சோமசுந்தரத்திற்கு ஊர் மக்களின் நன்றி!” என்ற வாசகங்களுடன் எம்.எல்.ஏ. வின் கை கூப்பிய சிரித்த முகத்துடன் கூடிய படத்துடன்.
“அடப் பாவிகளா! இந்த அரசியல் வாதிகள் எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலிகள்! ஊர் மக்கள் மனு கொடுத்து, நாம முயற்சி செய்து சாதித்ததை தங்கள் பெயரில் போஸ்டர் அடித்துப் போட்டுக் கொள்கிறார்கள்!” என்று அங்கலாய்த்துப் போனார் ராமசாமி.
“விடுங்க பெரியப்பா! ஊருக்கு நல்லது நடந்ததே, அது தானே நம்ம நோக்கம்!” என்றான் கதிர்வேலன்.
ஜனவரி பிறக்கப் போகிறது. ஊரின் நடுவே பந்தல் போட்டு ஒரு டேபிள் சேர் போட்டு டேபிளில் தட்டு நிறைய சாக்லேட்டுகள்! எம்.எல்.ஏ. இருக்கும் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் போட்டோக்களை போட்டு அத்துடன் கூப்பிய கரங்களுடன் சிரித்த முகமாகக் காட்சியளிக்கும் சோமசுந்தரத்தின் போட்டோவையும் போட்டு பெரிய பெரிய போஸ்டர்கள்!
“புத்தாண்டே வருக! புதுப் பொலிவு தருக!” என்னும் வாசகங்களுடன்.
அந்த பக்கமாக போவோர் வருவோரை எல்லாம் அழைத்து தொண்டர்கள் சாக்லேட்டை கை நிறைய அள்ளி கொடுத்தனர், ‘புத்தாண்டே வருக! புதுப்பொலிவு தருக!’ என்னும் கோஷத்துடன்.
அப்போது அந்த வழியாக கதிர்வேலன் தன் சைக்கிளில் வர, அவனைப் பார்த்ததும், அவர்கள் வீட்டுக்கு வந்த தொண்டன் ஒருவன் “இந்த ஊருக்கு நன்மை செய்பவர் எங்க தலைவர் ஒருவர் தான். அவர் தான் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார். புத்தாண்டே வருக! புதுப் பொலிவு தருக! என்று. உங்களுக்காகவே உழைக்கிற எங்க தலைவர் சொன்னால் சொன்னபடி நடக்கும். தஞ்சையிலிருந்து வர்ற ரயிலை நம்ம ஊர்ல அவர் எப்படி போராடி நிக்க வெச்சாருன்னு நீங்க பார்த்தீங்க தானே? இந்த புத்தாண்டு உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கப் போகிறது, எங்க தலைவரு உங்களுக்கெல்லாம் என்னவெல்லாம் செய்யப் போறார்னு பார்க்கத்தானே போறீங்க!” என்று உரத்த குரலில் கூவினான்.
கதிர்வேலன் அவர்கள் இருக்கும் பக்கம் கூட திரும்பாமல் சைக்கிளை விரைவாக மிதித்தான்.

அரசியல்வாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தும் கதை
LikeLike