![]()
அன்பால் ஆளலாம் !!
அவள் …வறண்ட பாலையில் வற்றாத நதியாய் வருவாள்
வண்ணமற்ற வாழ்வில் வானவில்லாய் வலம் வருவாள்
காரிருளில் வழி காட்ட மின்னும் சுடர் ஒளியாவாள்
கை கோர்த்து உடன் நடக்க உற்ற தோழியும் ஆவாள்
பொருளற்ற வாழ்வுக்குப் புது அர்த்தம் தந்திடுவாள்
பெருமையும் உயர்வும் வாழ்வில் சேர்த்திடுவாள்
இல்லம் ஒளிர என்றும் அணையா விளக்காவாள்
இல்லறம் எனும் இனிய கூட்டைச் சிதையாமல் காப்பாள்
பெரும் மனத் துயரைத் தீர்க்க அரு மருந்தாக மாறிடுவாள்
பெருகும் விழி நீர் துடைக்க அன்புக் கரங்கள் நீட்டுவாள்
அன்பெனும் நீரை அனுதினமும் வார்த்திட
அன்றலர்ந்த மலராய் என்றும் புது மணம் வீசுவாள்
பெருமையாய் வைத்துக் கொள்ளும் பொருள் அல்ல.. அவள்
பிடிக்கவில்லை எனத் தூக்கி எறியும் பொம்மையும் அல்ல
மலரும் சிலையும் .. சிறகு இல்லா தேவதையும் அல்ல அவள்
மனமும் உணர்வுகளும் ஒன்றாய் இணைந்த உன்னத உயிர்
உணர்வுகள் ஒன்றே அவளுக்கும்… உன்னில் பாதிதானே அவள்
உனக்கு வலிக்கும் எனில் அதே வலிதானே அவளுக்கும்
சீரோடும் பொருளோடும் வா எனக் கடுமை காட்டாதே
சேர்ந்து நடப்போம் சிறப்பாய் வாழ்வோம் என்று கனிவு காட்டு
அடிமை என நினைத்தால் அலையெனச் சீறுவாள்
அன்பால் ஆள அத்தனையும் தந்திடுவாள் !!
அவள் நினைத்தால் முடியாதது என ஏதும் இல்லை
அவளை என்றும் மதித்துப் போற்றுவோம்
அன்புக் கரங்கள் கொண்டு அரணாய்க் காத்திடுவோம் !!
நெடிய மரங்களை
நொறுக்கித் தின்ற மயக்கம்!!
நீட்டிப் படுத்திருக்கிறது
நெடுஞ்சாலை!!
அலைபேசிக் கோபுரத்தில்
அமர வழியில்லை
சின்னக் கூடு கட்ட
சிங்கார மாடமில்லை
அலைந்து தேடித் தேடியே
தொலைந்து போனது
சிட்டுக் குருவி !!
விரிந்த மணலில்
விரையும் யந்திரம்
சுரண்டும் ஓசையில்
சுத்தமாய்ப் புதைந்து போனது
ஆற்றின் மரண ஓலம் !!
அடுக்கக அறை ஒன்றில்
அவசர உணவை
அள்ளி விழுங்கும் குழந்தை
அறியாது – அதன் அஸ்திவாரம்
வயல் என்பதை !!
