இலவசமாய் பொக்கிஷம்!
லண்டனில் ‘தமிழ்’ சிவா! கலைமகள் மாத இதழ் 94-ஆவது ஆண்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அயல் நாட்டு அறிஞர் பிரிவில் 84 வயதாகும் லண்டன் சிவா பிள்ளைக்கு துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி விருது வழங்கினார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரான சிவா 1967-ல் லண்டன் சென்றார்.கணினி படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.தமிழை கணினி வழி மூலம் கற்றல் கற்பித்தலில் முக்கிய பங்காற்றி வருகிறார். தமிழக முதல்வரின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது இவருக்கு 2024-ல் வழங்கப்பட்டது. தமிழ் மொழி கலைக்கழகத்தின் மூலம் லண்டனில் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகிறார்.
காந்தி கணக்கு! வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றி விட்டார் என்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. வாராக் கடனுக்கு காந்தி கணக்கு என்றும் சிலர் கேலியாக கூறுவதுண்டு. வ.உ.சி.குறித்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி. அவருக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.347 ரூபாய் 12 அணாவை காந்தி வ.உ.சி.க்கு அனுப்பி விட்டதையும் வ.உ.சி. அதைப் பெற்றுக் கொண்டதையும் இருவருக்கிடையிலான கடிதப் போக்குவரத்து தெளிவாக்குகிறது என்று தனது உரையில் சுட்டிக் காட்டினார் வேங்கடாசலபதி.கணக்கை நேர் செய்ய வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
