இலக்கிய வாத்தி என்னையும் வைஜயந்தியையும் பார்த்தார். அந்தப் பார்வையில் 11000 KV மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒரு வார்த்தையும் பேசவில்லை. போனில் அழைத்த அந்த டீ ஷாப் அதிபருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வைஜயந்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். ‘அப்பா’ என்று பேச ஆரம்பித்த அவளை ‘ஒரு வார்த்தையும் பேச வேண்டாம்’ என்று கோப ஜாடையில் கூறிவிட்டு வாசலுக்கு விரைந்தார். நானும் அவர்கள் பின் நடந்தேன்.
அவர்கள் இருவரும் பைக்கில் செல்ல நான் என் ஸ்கூட்டரில் பின் தொடர்ந்தேன். வைஜயந்தி என்னைத் திரும்பிப் பார்க்க முயற்சி செய்து கொண்டே சென்றாள். பைக் நேராக வாத்தியின் வீட்டை அடைந்தது.
அவர் பைக்கிற்கு அருகிலேயே நானும் ஸ்கூட்டரை நிறுத்தினேன்.
அவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். நான் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வைஜயந்திக்கு ஏதாவது ஆகுமோ என்ற கவலை என் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. நானும் அவர்களைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றேன்.
நீங்கள் இரண்டு பேரும் இந்த சேர்ல தனித்தனியே உட்காருங்க! நான் திரும்பி வர்ற வரை ஒரு வார்த்தை பேசக்கூடாது’ என்று கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டு தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார்.
பெருசு எப்ப வேண்டுமானாலும் நரசிம்மர் மாதிரி கதவை வெடித்துக் கொண்டு வரலாம்.
நானும் அவளும் எதிர் எதிரே சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஜாடை பாஷையில் பேசினோம்.
ஒண்ணு ஒண்ணா பிரச்சினை பெருசா ஆகுதே!
ஒண்ணும் கவலைப் படாதே ! அப்பாவை நான் கவனிச்சுக்கறேன்!
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போகுது!
ஒண்ணும் ஆகாது! ரெண்டில ஒண்ணு இன்னிக்கு தெரியணும்!
ஒன்னை நினாச்சாதான் கவலையா இருக்கு
ஒன்னை நினைச்சா பாவமாயிருக்கு
ஒண்ணை மறந்திட்டோமே?
என்னது?
வெள்ளிக்கிழமை பொண்ணு பாக்க அந்த பிசிற் வருவானா?
வெள்ளிக்கிழமை எங்க அப்பா அம்மா வேற வர்ராங்களே
ஒண்ணு பண்ணலாம் ?
என்னது?
பேசாம ரெண்டுபேரும் ஓடிப்போயிடலாம்
ஓடிப்போய் என்ன பண்ணறது?
கல்யாணம் கட்டிக்கலாம்! குழந்தை பொறந்தா அப்பா சமாதானமாயிடுவார்!
நீயும் உன் பிளானும்! என்ன வாத்தியை இன்னும் காணோம்? என்ன பண்ணப் போறார் ?
அந்த சமயம் வாசல்ல காலிங் பெல் அடிச்ச சத்தம் கேட்டது.
கதவைத் திறந்து பார்த்தா என் அப்பா அம்மா நின்று கொண்டிருக்கிறார்கள்!
