மூன்று மைதானங்களும் முப்பத்து சொச்சம் ரன்களும்..
திருச்சி டவுன் சார்ந்த பகுதிகளில் மூன்று மைதானங்கள் 1975~80 களில் புகழ் பெற்றவை. அவையாவன; St. Joseph கல்லூரி, Bishop Heber பள்ளி மற்றும் National பள்ளி மைதானங்கள்.
1. St. Joseph கல்லூரி மைதானம் :

இங்கு கால் பந்து ஆடியிருக்கிறோம்; ‘சுண்டு’..வும் நானும் இங்குதான் சைக்கிள் விட கற்றுக் கொண்டோம். எங்களை விட உயரமான சைக்கிளை மகா அலட்டலுடன் ‘கிட்டா’ ஏதோ ஏரோபிளேன் ஓட்டக் கற்றுக் கொடுப்பதைப் போலச் சொல்லிக் கொடுத்தான்.
கீழே விழுந்து அடிபட்டுத் திரும்பிப் பார்த்தால், மரத்தடியில் கடலை கொறித்துக் கொண்டிருப்பான். தட்சணையாக, தெப்பக்குளம் தபால் ஆபீஸ் அருகிலுள்ள மைக்கேல் ஐஸ்கிரீம் கடையில் இவனைக் குளிப்பாட்டியிருக்கிறோம்.
பள்ளி இறுதி வகுப்பு ஸ்டடி லீவு விட்டதும் காலை 10 மணிக்கெல்லாம் புத்தகத்துடன், நண்பர்கள் புடை சூழ இங்கு வந்து மைதான ஸ்டேடியத்தின் மேல் படிக்கட்டுகளில், மர நிழலில் உட்கார்ந்து படிப்போம் (அ) படிக்க முயற்சி செய்வோம். வெய்யில் ஏற, ஏற, கொஞ்சம் கொஞ்சமாக படி இறங்கி, பின் மர நிழலில் சற்று(!) ஆயாசப் படுத்திக்கொண்டால், காவிரி தென்றல் சுகமான தூக்கத்தைக் கொண்டு வரும். மாலையில் ‘சர்ச்’ பெல் எழுப்பும். Lawley Hall மர நிழலில் அமர்ந்து படித்தால் பேப்பர் எளிதானதாக இருக்கும் என்று ஐதீகம் உண்டு.
2. Bishop Heber பள்ளி மைதானம் :
NSB ரோடு மற்றும் சிங்காரத்தோப்பிற்கு இடையே சிக்கித் தவிக்கும், இந்த மைதானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நண்பர்கள் அனைவரும் கோடை பள்ளி விடுமுறை மாலைகளில் இங்குதான் AVK (தெரியாதவர்களுக்கு – ‘அவிழ்த்து விட்ட கழுதை’) யாக திரிவோம். ‘கைத்தறி கண்காட்சி’ மாலையில் நடக்கும். இங்கு நாடகங்கள், குன்னக்குடி அவர்கள் வயலின், காமேஷ் – ராஜாமணி திரை இசைக் கச்சேரி என்று ஒன்று விடாமல் ஆஜர்..!
அதுவும், பக்கத்துத் தெரு ‘ஸ்ரீதேவி..யின்’ வருகையென்றால், பசங்கள் கமலஹாசனாக பாவித்து, காரணமின்றி (பைசாவும் இன்றி) கடை கடையாய் தேடித் திரிவார்கள்.
இந்த மைதானத்தில் நடைபெறும் இன்னொரு முக்கிய நிகழ்வு ‘மதுரம் புட்பால் டோர்னமெண்ட்’. அதுவரை கிரிக்கெட் பேசிக் கொண்டிருந்த பையன்கள் தடம் மாறி,
“அந்த ‘மக்கன் சிங்’ அடித்த வாலி ஷாட்டைப் பார்த்தேன் மாப்பிள்ளை.. இந்த முறை JCT தான் ஜெயிக்கும், Salgaocar – கோவா உதை வாங்கும்..!” – என அளப்பார்கள். அடிக்க வரும் கலரில் பிங்க் அட்டை பாஸ் வைத்துக்கொண்டு நான் ‘Mohun Bagan’ ஆளு, என்று அலட்டுவார்கள்.
இறுதிப் போட்டி நடக்கும் நாளில் மேட்ச் பார்க்கப் போக மாட்டார்கள். “மாப்பிள்ளை, டிக்கெட் விற்பனைக்காக இன்னிக்கி ‘ட்ரா’ பண்ணிடுவாங்கடா. நாளைக்கு Re-match..லதான் ரிசல்ட் கிடைக்கும்” – என சரியாக ஜோசியம் சொல்லுவார்கள்.
3. National பள்ளி மைதானம் :
காவேரி பாலம் தாண்டியதும், இறக்கத்தில் இருக்கும் (இருந்த) இந்த மைதானத்தில்தான் வெய்யிலை வீணாக்காமல் கிரிக்கெட் ஆடுவோம். சிந்தாமணி, சுப்பையா ஸ்டோர், ஆண்டார் தெரு என ரகம் வாரியாக கும்பல், கும்பலாக ஒரே மைதானத்தில் ஆடுவது வழக்கம். கேட்ச் வரும் போது, இது நம்ம மேட்ச் இல்லை பக்கத்தில் நடக்கும் மேட்ச் பேட்ஸ்மேன் அடித்ததா..? எனப் பலதடவை குழப்பம் ஏற்பட்டதுண்டு.
இப்படித்தான், ஒருமுறை பக்கத்து தெருவிற்குச் சென்றிருந்த சமயம் நண்பன் மாலி, “மாப்ளை நாளைக்கு எங்களுக்கும் மாந்துறை டீமுக்கும் மேட்ச், வந்து அம்பயரிங் பண்ணறயா?” என்றான், கிழிந்த க்ளோவ்ஸை தைத்தவாறே..
“நீங்க, எங்க டீம்கிட்டயே செம உதை வாங்குவீங்களே, போன மாட்ச்சில ஸ்டெம்ப் ரெண்டா ஒடைஞ்சதை மறந்துட்டீங்களா..? உங்களுக்கு எதுக்குடா மாந்துறை எல்லாம்..?” – என்றேன் அக்கறையுடன்.
“இல்ல மாப்பிள்ள, இங்க எவனும் பிச்சாண்டார் கோவில் தாண்டறதில்ல. வெளி ஆளை கூப்பிட்டு ‘அடிச்சு’ அனுப்பிச்சோம்னால், அதுக்கு பிறகு டவுன்..ல நாங்கதான் பேமஸ்!”
அடுத்தநாள், மைதானத்திற்கு வந்து ‘மாந்துறை’ வருகைக்காக காத்திருந்தோம்;
“பயந்துட்டாங்க மச்சான். 9 மணிக்கு வர வேண்டியவங்க 10.00 ஆச்சு, இன்னும் காணும். பத்தரைக்கு மேல வந்தா ‘conceded’..ன்னு எழுதி வாங்கிட வேண்டியதுதான்..!”
லால்குடி பாசஞ்சர், மைதானத்தையொட்டிய தண்டவாளத்தில் நின்று நீராவி மூச்சு விடுவதை அப்போதுதான் கவனித்தோம்.
“சாரி நண்பா, ட்ரெயின் ரொம்ப லேட் பண்ணிட்டான். டிக்கெட் வாங்கல. வாளாடி TTR வேற வண்டில பாத்தோம். ‘செயின் புல்’ செஞ்சு இங்கயே இறங்கினோம் “
எல்லாம் மாமா, மாமாக்களாக பையன்கள். நான் பாதுகாப்பாக ‘லெக் அம்பயரிங்’ பண்ணறேன்னு ஒதுங்கிக் கொண்டேன்.
மாலி, டாஸ் போட எத்தனிக்க, “நீங்களே எது வேணும்னாலும் எடுத்துக்கங்க..” – என்றார்கள்
மாலி டீம், பேட்டிங் ஆரம்பிக்க, கார்க் பால் சுழன்றது. அரைமணித் தியாலத்தில் 33 ரன் எடுத்து மொத்த டீமும் காலி..
தொடர்ந்து ‘மாந்துறை’ பேட்டிங் துவங்க, பந்து நாலாபுறமும் பறந்து நேஷனல் மைதானத்தின் பல மர்ம பிரதேசங்களைத் தொட்டுப் பார்த்தது..!
ஓப்பனிங் பேட்ஸ்மென்களை வைத்தே மாந்துறை டீம் மொத்த மேட்சையும் முடித்துவிட, “மச்சான், இந்த மாதிரி சப்பை டீமுக்கெல்லாம் என்னை ஏன் கூட்டிவந்தே..? என அதன் ஸ்டார் ஆட்டக்காரர்கள் கேப்டனை கோபித்துக் கொண்டார்கள்.
மேலும், அந்த கிரவுண்டில் அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்த ‘உப’ டீம்களையெல்லாம் ஜெயித்து, ‘சிகப்பு ரோஜா..’க்களுக்கு போனது மாந்துறை டீம்.
ஒருவாரம் கழித்து, மாலி தெருவுக்குச் சென்றேன். தெருவின் கிரிக்கெட் ஆடுகளம் காலியாக இருந்தது. பார்த்தால் மதில் சுவரோரம் ‘கண்ணாடி’ அரைத்துக் கொண்டிருந்தான்.
“வா மாப்பிள, ‘மாஞ்சா’ தயாரிக்கிறோம். சறுக்கு பாறை டீமோட ‘பட்டத்தை’ இதுவரை யாரும் அறுத்ததில்ல. நாங்க அறுக்கிறோம், அப்புறம் திருச்சிக்கு நாங்கதான் ராஜா..! “
பி.கு : – ‘மாலி’ என்கிற மஹாலிங்கம் வேணுகோபாலன் தற்போது, நியூயார்க் நகரின், மன்ஹாட்டனின் ஒரு செங்குத்து கட்டடத்தின் 42 ஆவது மாடியில் ஷேர் டிரேடிங் டிவிஷனில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான்(ர்).
