பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட சிறுகதைகளைப் படித்ததில், எனக்கு மிகவும் பிடித்த கதையாக நான் தேர்வு செய்துள்ளது வாசகசாலை-யில் திரு. இரக்க்ஷன் கிருத்திக் அவர்கள் படைத்துள்ள இளவட்டக்கல் என்ற சிறுகதை.
இதை நான் தேர்வு செய்த நாளானது, மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினமாகும்.
ஒரு பெண்ணின் ஆளுமையை அருமையான விதத்தில் பதிவு செய்துள்ள இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
#1 – இளவட்டக்கல் – (வாசகசாலை) – ஆசிரியர்: திரு.இரக்க்ஷன் கிருத்திக்
இன்றும் சில கிராமங்களில் புதைந்திருக்கும் சில அசைக்க முடியாத ஜாதிய உணர்வுகள், சில நம்பிக்கைகள், பெண்கள் மீதான சமூகப் பார்வைகள் போன்ற சிலவற்றை ஒரு புதைந்த கல் ஒன்றைக் குறியீடாகக் கொண்டு எழுதியுள்ளதாக நான் நினைக்கிறேன்.
அருமையான சொற்றொடர்களை பயன்படுத்தியுள்ளார்.
ஒரு உதாரணம்:
“அங்கிருந்து அவள் எடுத்து வைத்து சென்ற ஒவ்வொரு எட்டின் ஓசையும் அங்கிருந்த காளையரின் காதுகளில் இடியோசையைப் போல கேட்டது.
சில வரிகளில் எதார்த்தமாக நையாண்டியைக் கலந்துள்ளார் ஆசிரியர்.
“மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைப் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்”, “கூட்டத்தில் ஒருவன் இறுதியாகப் பேசியது ஒருவனுக்கு ஞாபகத்துக்கு வரவே, அவன் மூக்கைப் பிடித்துக்கொண்டு பார்த்தான்” போன்றவை அவை.
““உன் வீட்டுக்காரன் வந்துட்டான், போடி, போயி சாப்பாடு போடு. இல்லேன்னா கோவிச்சுக்கப் போறாரு…” என்று எழுதப்பட்டிருப்பது அவள் தன்னையே பரிமாறத் தாயாராக இருப்பதை குறியீடாகவும் புரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில், ஆசிரியர் ஒரு நல்ல கதையை படைத்துள்ளார் என்பது என் அபிப்ராயமாக உள்ளது.
என்னுடைய தேர்வில் இடம்பிடித்த மற்ற இரண்டு கதைகள், செவகாளி (நடுகல் – வெற்றிச்செல்வன், சிங்கப்பூர்) மற்றும் ஒரு துரோகம் ஒரு தண்டனை – (சொல்வனம் – கங்காதரன் சுப்ரமணியம்) என்ற
கதைகள் ஆகும்
மற்ற சில கதைகளிலிருந்து நான் ரசித்த சொற்றொடர்கள்
வேர்நோனின் மனைவி – விஜயலக்ஷ்மி
அது என்னவோ இரவில் பாத்திரங்கள் கூட கூடுதல் ஒலி எழுப்புமோ
தேக்கம் – பர்வீன் பானு
பெயரைச் சொல்வதைவிட, இப்படி அடைமொழிகளை சொன்னால் சட்டென்று ஞாபகம் வந்து விடுகிறது.
சொர்க்கவாசல் – சுரேந்தர் செந்தில்குமார்
நம் தேவைக்கு எது ஏதுவாக இருக்கிறதோ அதன் பக்கம் சாய்வதுதானே மனித இயல்பு.
சுழல் சிவநேசன்
“உள்ளூர் சாமிக்கு கற்பூரம் காட்டாம உலக சாமிக்கு பூஜை போட்டா இப்படித்தான் ஆகும்” என சொலவடை போட்டு அவருக்கு அவரே சிரித்தார்.
நான் ரசித்த சில வித்தியாசமான தலைப்புகள்
சலிப்பாறுதல்
உடற்கூறுகள்
இளிவரல்
இளவட்டக்கல்
எரிதழல்
நன்றி
சாய் கோவிந்தன்
