நாதஸ்வரம் என்றால் நினைவிற்கு வரும் பெயர்களில் முக்கியமான பெயர்களில் ஒருவர்
கரிசல் மண் தந்த காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள். நாதஸ்வரம் என்பது ராஜவாத்யம், ராட்சஸ வாத்யம், பெரிய மேளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. எத்தனை கருவிகள் இசைக்காக என்று இருந்தாலும், கோவில்களில் சுவாமி வீதி உலா நாதஸ்வரத்தில் தான் தொடங்கும் .கல்யாணங்களில், கெட்டி மேளம் என்றால், அது நாதஸ்வரம் தான். அவ்வளவு பெருமை வாய்ந்தது. பாரம்பரியம் மிக்கது.
ஷெனாய் பிரபலம் தான். இனிமைதான். ஆனால் நாதஸ்வரத்துக்கு அது இணையாகாது அதற்கு உதாரணம் பிரபல ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான் அவர்கள் நாதஸ்வரத்தை எடுத்துப் பார்த்தார்.அவரால் வாசிக்க முடியவில்லை.ஆனால், காருகுறிச்சி அவர்கள்,ஷெனாய் வாத்தியத்தை எளிதாக வாசித்தார். நாதஸ்வரம் எவ்வளவு ஒரு முக்கியமான மிக சிறந்த வாத்தியம் என்பது விளங்கும்.
காருகுறிச்சி அவர்களுக்கு வாய்ப்பாட்டும் நன்கு தெரியும். வாய்ப்பாட்டு களக்காடு நாராயண பாகவதர் உள்ளிட்ட பல சங்கீத வித்வான்களிடம் முறையாகச் சங்கீதம் கற்றவர்.
ராஜரத்தினம் பிள்ளை உடன் வாசித்துக் கொண்டிருந்த கக்காயி நடராஜசுந்தரம் அவர்களுக்கு உடல் நலமில்லை என்பதால், யாராவது உடன் வாசிக்கக்
கிடைப்பானா என்று கேட்டபோது, அருணாச்சலம் என்ற ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்ல அப்படித்தான் 1935 வாக்கில் அவரோட சீடரானார். சீடர் என்றால் தனியாக குரு சொல்லிக்கொடுக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. குரு வாசிப்பதை சீடர் கேட்கவேண்டும் – கச்சேரிகளில் கவனிக்கவேண்டும். இவைதான் பயிற்சி. கற்பதைக் காட்டிலும், இந்தப் பயிற்சிகள் தனக்கு நல்லதொரு ஞானத்தைத் தந்ததாக அருணாச்சலம் கூறுவாராம்.
கரிசல் மண் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்கள், காருகுறிச்சி அருணாச்சலத்தின் நெருங்கிய நண்பர். திருச்செந்தூர் கோயில் கச்சேரிகள் முடிந்தபின் இருவரும் நடந்து பேசியதும், அவருடன் டி கே சி தீபனும் செல்வாராம். காருகுறிச்சியாருக்கு நாயன வாசிப்பைப் போலவே, புத்தக வாசிப்பிலும் மிகவும் பிரியம். அவரது அறையில் பல்வேறு இலக்கியப் புத்தகங்கள் இருக்கும். இதனை நேரில் கண்டு சொன்னவர்,அவருடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர் திரு கி ராஜநாராயணன்.
அன்றைய காங்கிரஸ் கட்சியிலும் அவர் இணைந்து இருந்தார் நேரு, காமராஜர், சிவாஜி கணேசன், மபொசி இவர்களிடம் தொடர்ந்து நல்ல பழக்கத்தில் இருந்தார். காமராஜர்,சிவாஜி கணேசன் போன்றவர்கள் கோவில்பட்டி மற்றும் காருகுறிச்சிக்கு வந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் .
19 62 இல் சென்னையில் மெரினாவில் காங்கிரஸ் கூட்டம். காருகுறிச்சி நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.அன்றைய ஒரிசா முதல்வர் பட்நாயக் மேடைககு வர, அருணாச்சலம் அவர்கள் கச்சேரியை முடிக்க போயிருக்கிறார். தொடர்ந்து வாசியுங்கள் அந்த கீர்த்தனை முழுவதும் கேட்க வேண்டும் என்று சொன்னவர் பட்நாயக்.
விளாத்திகுளம் சுவாமிகள் என்று ஒருவர் இருந்தார். அவரை கரகரப்பிரியா ஸ்வாமிகள் என்று சொல்வார்கள். சுமார் 4 மணி நேரம் கரகரப்பிரியா ராகத்தை ஆலாபனை செய்வாராம். எம்கே தியாகராஜ பாகவதர், கே பி சுந்தராம்பாள், டி ஆர் மகாலிங்கம் ,காருகுறிச்சி அருணாசலம் ,டிஎன் ராஜரத்தினம்பிள்ளை என எல்லோருமே அவரது சீடர்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஸ்வாமிகள் அவர்கள் ஜமீன்தாராக இருந்து இசையிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவரிடம் எல்லா சங்கீத கலைஞர்களும் வருவார்கள் .முக்கூடல் சொக்கலால் ஹரிராம் சேட்,க கலைஞர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுப்பாராம்.
காருகுறிச்சி அருணாசலம் அவர்களுடன் வாசித்த திரு எம் அருணாச்சலம் அவர்கள்
தான், கச்சேரி கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக் கொண்டார். ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்று கேட்டால் காருகுறிச்சி திடீர் என்று இறந்த பிறகு அவர் யாருடனும்
வாசிக்கப் போவதில்லை என்று கூறியதுடன் இனி நாதஸ்வரத்தைத் தொடமாட்டென் என்றே வாழ்ந்தவர். காருகுறிச்சி பி அருணாச்சலம் அவர்களுடன் இணைந்து வாசித்த எம் அருணாச்சலம் ஒருமுறை கூறியது:சின்னஞ்சிறு கிளியே பாடல்தான் இன்னிக்கு சாதகம் பண்ணிட்டு வரச் சொல்லியிருக்கிறார் மாதத்தில் 30 நாள்ல 20 நாள் மேடையில் இந்த பாடல் வாசிக்கிறோம் ஆனால் அவருக்கு இன்னும் திருப்தியாக இல்லை. இப்படித்தான் அசுர சாதகம் செய்து ரசிகர் மக்களுடைய இதயத்திலே இன்றைக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். அந்த நாதஸ்வரத்தின் இனிமை குளுமை வேற எந்த கலைஞனுக்கும் வராது என்கிறார்..
சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் மறைந்த திரு நடராஜன் அவர்கள் ஒருமுறை சொன்னது. 1962 ஆம் ஆண்டு சென்னை தமிழிசை சங்கத்தின் சார்பில் நடந்த கச்சேரி இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணிக்குத் தான் முடிந்தது அப்பொழுது சென்னை மற்றும் திருச்சி வானொலி நிலையங்கள் அந்த இசை நிகழ்ச்சிகளை நேரடி அஞ்சல் செய்தனவாம். கச்சேரி முடிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே டவுன் பஸ் வசதி செய்தார்களாம்.
1962 ஜனவரியில் கோவில்பட்டியில் காருகுறிச்சியாரின் மகள் இந்திராவின் திருமணம் நடந்தது அது இந்திர விழாவாகவே நடந்தது கோவில்பட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.பல கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். ஈவி சரோஜா அவர்களின் நாட்டியம் நடந்தது. முதலமைச்சர் காமராஜர் மற்றும் நடிகர்திலகம் சிவாஜி அவருடைய துணைவியார் கலந்து கொண்டார்கள். நாள் முழுதும் விருந்து படைக்கப்பட்டது என்பார்கள்
அந்த காலத்தில் அவரின் கச்சேரி பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் திருச்சி வானொலி நிலையத்தில் இருந்தது. இன்னும் தேவைப்பட்டால் அங்கு விலாஸ் கம்பனி வந்து எடுத்துக் கொள்வார்களாம்.
இசை விமர்சிகர் சுப்புடு அவர்கள் ஒரு முறை நெல்லைக்கு வந்திருந்த பொழுது காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்தைக் கேட்டுவிட்டு, இந்தக் கலைஞரால் திருநெல்வேலியின் பெருமை சொல்லமுடியாதது. இதே தஞ்சாவூர் என்றால், நிலைமையே வேறு . ஆனால், நீங்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை என்றும் இந்த மண்ணின் பெருமைக்குரியவரை நீங்கள் இன்னும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்றும் கூறினாராம். .
சென்னையில், அசோகா ஹோட்டல் திறப்பு விழாவிற்கே காருகுறிச்சி அவர்களுடைய நாதஸ்வரம் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அதனால் அதற்கு அப்புறம் எப்பொழுது சென்னை வந்தாலும் அவருக்கென்றே அறை உண்டு. 31 , 32 என்று சொல்வார்கள். அங்குதான் தங்குவாராம். அன்றைய ஆபட்ஸ்பெரி கல்யாண மண்டபத்தில் , இயக்குனர் ஸ்ரீதர் திருமணத்திற்கு அவர் தான் கச்சேரி செய்துவிட்டு வந்தார் .அசோகா ஹோட்டல் வந்த மெல்லிசை மன்னர்கள், காருக்குறிச்சியாரைப் பார்க்க விரும்பினார்கள். எதற்குத் தெரியுமா – ஶ்ரீதர் திருமணத்திற்கு கச்சேரி செய்தவர், சன்மானமே வாங்காமல் வந்துவிட்டாராம். அதற்கென்ன என்றவரின் கைகளில் தொகையைத் திணித்துவிட்டுச் சென்றார்களாம் மெல்லிசை மன்னர்கள்.
நடிகர் திலகம் சகோதரர் சண்முகம் அவர்களின் திருமணமும் மவுண்ட் ரோடு ஆபட்ஸ்பரியில் தான் விமரிசையாக நடந்தது. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் – காருகுறிச்சி அவர்களின் நாதஸ்வரத்துடன் நடந்தது. (இதை ரசித்தவர்கள் எவ்வளவு கொடுப்பினை உள்ளவர்கள் !!)
காஞ்சிபுரத்தில் திரு அண்ணாதுரை அவர்களின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்குத் திருமணம் நடந்தது. கச்சேரி வேண்டி, காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களுக்கு, திரு அண்ணாதுரை ஒரு கடிதம் எழுதினார். அவரின் பயணத்திட்டம் என்னவென்று தெரியப்படுத்தினால் வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறேன் என்று. இந்த கடிதம் யாரோ ஒரு நிருபருக்கு தெரிந்து அதை அப்படியே போட்டோ எடுத்து அறிஞர் அண்ணா காருகுறிச்சி அதற்கு அனுப்பிய மடல் என்று தலைப்பிட்டு, அதை மாலைமுரசு வெளியிட்டார்கள். ஆனந்த விகடன் பத்திரிகையும் இரண்டு பேருடைய படத்தையும் போட்டு அந்தச் வெளியிட்டிருந்தார்கள். அப்போது அது மிகவும் பரபரப்பானது.
காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் தனது 43 ஆவது வயதிலேயே மறைந்து விட்டார்.
அவருக்கு .நிறைய குழந்தைகள். புகழும், வசதியும், செல்வாக்கும் கூடி வரும் நேரத்தில் அவர் மறைந்தது ரசிகர்களுக்கு, சங்கீத உலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு.
அவருடைய இறப்பு கூட மிகவும் அதிர்வானது என் தந்தை சொல்லி இருக்கிறார். (எனது தந்தை அவரின் கச்சேரிகள் மற்றும் கோயில் திருவிழாக்கள் – இரவு தொடங்கி அதிகாலை வரை வீதிகள் உலாவில் வெவ்வேறு ராகங்கள் இணைய சப்பரத்துடன் ஊர்வலம் என ரசித்ததாக என்னிடம் கூறி இருக்கிறார்).
பாளையங்கோட்டையில் ஒரு அரசு அதிகாரி அவர்களின் திருமண வரவேற்பில் மாலை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதி வாசிப்பில், குழலிலிருந்து இரத்தம் வடிய, உடன் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவருக்குக் கடுமையான இதய வலி இருந்தது என்பார்கள் அப்பொழுது கூட ஆஸ்பத்திரியிலும், அவருடைய இரண்டு கை விரல்களும் அவருடைய நெஞ்சில் தாளம் போடுவது போலவே இதயத்தை தட்டிக் கொண்டே இருந்தார்கள் என்று சொல்வார்கள். சில நாட்களில் அந்த தேவ இசை, வானில் கலந்தது.
கொஞ்சும் சலங்கை படத்தின் சிங்கார வேலனே தேவா பாடலின் அபார வெற்றிக்குப்,பின், ஒரு சில படங்களில் இவரின் நாதஸ்வரம் பவனி வந்தது. ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் அவரகள், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் எழுதிய தில்லானா மோகனாம்பாள் வெற்றித் தொடரைத் திரைப்படமாக எடுக்க நினைத்து, காருகுறிச்சி அவர்களை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அதற்குள், இவர் மறைந்துவிட , படம் கைவிடப்பட்டது. சில வருடங்கள் கழித்து, இந்தப்படம் ஏ பி நாகராஜன் அவர்கள் தயாரிப்பில் நடிகர் திலகம் நடிப்பில், மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்கள் நாதசுவர இசையுடன் வெளிவந்தது, அபார வெற்றியும் பெற்றது. படத்தின் தொடக்கத்தில், காருகுறிச்சி அவர்களுக்கு சமர்ப்பணம் என்று போட்டிருப்பார்கள்.

அருமையான தேடல்
LikeLike