‘குரல் தட்டச்சி’ல் ஓர் உரையாடல்!
வாரம் தவறாமல் என்னைப் பார்க்க வந்துவிடுவார் அந்த முதியவர்!
சன்னமாக ஓரிழை சரிகை வேட்டி. காலர் வைத்த முழுக்கை சட்டை. காலில், பளபளக்கும் கருப்பு ‘பாட்டா’ செருப்பு, கையில் அந்தக் காலத்து ஹெச் எம் டி கடிகாரம், கையைத் திருப்பி, உள்பக்கம் தெரியும் டயலில் மணி பார்க்கும் அந்த கால மனிதர்! ‘ப’ வடிவில் ‘வாக்கர்’ அதை பிடித்துக் கொண்டு ஊன்றியபடி நடந்து வருவார்! வயது 98! ஆனாலும் பார்வையில் பழுதில்லை – கையில் இருக்கும் செய்தித்தாளை கண்ணாடியின்றிப் படிக்க முடியும். நெற்றியில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை. இருக்கும் சில முடிகளைத் தூக்கி பின்புறமாக வாரி இருப்பார்.
காதுகள் இரண்டும் கேட்காது. அருகிலேயே அணுகுண்டு வெடித்தாலும், தீபாவளிக் கேப்பு சத்தம் அளவு கூடக் கேட்காது! முகத்திற்கு அழகு செய்யும் ஆபரணமாக இரண்டு காதுகள்.
அவருடன் வந்திருந்தவருக்கு முப்பது வயதிருக்கலாம். பச்சை கலர் சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.
‘அவருக்கு காது கேட்காதா?’
‘கேட்காதுங்க. முழுச் செவிடு. செவிட்டு மிஷின் வாங்கி கொடுத்தாங்க, ‘போட்டுக்க மாட்டேன்னு’ பிடிவாதமாச் சொல்லிட்டாரு. அது ஏதோ அவருக்கு கௌரவ கொறச்சலா தெரியுது போல. அப்படியே மாட்டிக்கிட்டாலும், சுத்து முத்தும் பார்த்துட்டு, ‘ஒரு எழவும் கேட்கல’ என்று சொல்லி கழட்டி வைத்து விடுவார் சார்’
‘அது சரி…. நீங்க யாரு? அவருக்கு என்ன வேணும்? அவங்க பசங்க யாரும் இல்லையா?’
‘நான் தாங்க அவரை வீட்டில பார்த்துக்கிறேன். ரெண்டு பசங்களும் அமெரிக்காவுல இருக்காங்க.அவங்களும் கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. இவரும் ‘போகணும்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாருங்க’
‘இவர் மனைவி இல்லையா?’
‘இல்லீங்க ஐயா, மூணு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க’
‘அப்போ, சாப்பாடு?’
‘ரெண்டு மாமிங்க வீட்டிலிருந்து வேளா வேளைக்கு வந்துரும் சார். தினமும் மெனு கேட்டு, எங்க நல்ல மெனுவோ, அங்கிருந்து வந்து விடும் சார்’.
பெரியவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கையால் ‘என்ன?’ என்பது போல செய்கை செய்து வாயால் ‘என்ன பிராப்ளம்?’ என்றேன். அருகிலிருந்த நர்ஸ், என் நாட்டிய பாவத்தைப் பார்த்து, சிரித்தாற்போல இருந்தது.
‘ஒண்னும் இல்ல, டாக்டர். கொஞ்சம் உட்கார்ந்து எழுந்தா தலை சுத்துது, மயக்க்க்…கமா இருக்குது’. அவர் குரல் கேட்டு, வெளியே காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ‘ஒருவேளை டாக்டருக்குக் காது கேட்காதோ’ என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.
‘வாந்தி?’ செய்கையில் தான் கேட்டேன்.
‘இல்ல டாக்டர்! தூக்கம் வரல, கால் முட்டிகள் ரெண்டும் வலிக்குது. பிரஷர், சுகர் எல்லாம் கிடையாது. எப்பவாவது காதுல ‘கொய்ங்’ ன்னு என்று சத்தம் கேட்கும். அவ்வளவுதான்!’
‘தலைவலி எப்போதாவது சொல்வாரா? நினைவிழந்து, கீழே விழுந்து இருக்கிறாரா?’ என்று உடன் இருந்தவரைக் கேட்டேன்.
‘அதெல்லாம் கிடையாது சார்’
‘நீங்க எப்படி அவர் கூடப் பேசுறீங்க?’
உடன் இருந்தவர் என்னை ஒரு சந்தேகத்துடன் பார்த்தார். பிறகு, புரிந்து கொண்டவராக, ‘அவர் செல்லுல ஒரு ஆப் டவுன்லோட் செய்து வச்சிருக்காங்க. நாம் பேசுவதை அப்படியே அது தமிழ்ல டைப் அடிச்சிடும். ‘வாய்ஸ் டைப்பிங்’ன்னு சொல்வாருங்க. அதைப் பார்த்துப் படிச்சு, பதில் சொல்லுவார் சார்!’
அட, 95 வயசுல ‘குரல் தட்டச்சா?’ ஆச்சரியமாக முதியவரைப் பார்த்தேன்.
‘சுவாரஸ்யமா இருக்கு தம்பி. நான் பேசுறத வாய்ஸ் டைப்பிங் ல அவருக்குச் சொல்லலாமா?’ என்றேன் நான்.
எங்கள் உரையாடலைப் புரிந்து கொண்டு அவரே தன்னுடைய சட்டைப் பையில் இருந்து ஒரு அரைச்செங்கல் அளவு இருந்த செல்லை எடுத்து ஆன் செய்து, தன் ஆட்காட்டி விரலால் அதன் முகத்தில் இரண்டு மூன்று முறை கொத்தி, வாய்ஸ் டைப்பிங் ஆப் பைத் திறந்தார்!
நான் கேட்பதை, பேசுவதை அப்படியே தமிழில் அது தட்டச்சு செய்தது. இடையிடையே சாலையில் செல்லும் கார் ஹார்ன் சத்தங்களையும் அது பதிவு செய்தது.
நான் கேட்க வேண்டியவற்றை சாதாரணமாகப் பேசி, அவரிடம் செல்லைக் காண்பித்தால் அதற்கு அவர் பதில் சொல்வார்;
‘காலையில் என்ன சாப்பிட்டீங்க?’ பெரியவர் செல்லை பார்த்துவிட்டு, ’காலையிலேயே கல்லு மாதிரி ரெண்டு இட்லி, கொஞ்சம் நீர்த்த சாம்பார்’ என்று சொல்லிச் சிரித்தார். நாக்கு நான்கடி நீளம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
விரைவாகப் பரிசோதித்து விட்டு, ‘வயதுதான் வியாதி; மேலும் தனிமையும்’ என்று கூறி, ‘சில மருந்துகள் எழுதித் தருகிறேன் சாப்பிட்டு வாருங்கள்’ என்றேன்.
செல்லை வைத்துக்கொண்டு, நான் பேசியதைப் படித்து, எனக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்! ஆனால் அவ்வப்போது அவருடைய முகம் சந்தேகத்திலும், கோபத்திலும் மாறிக் கொண்டேயருந்தது.
எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை. . ‘எனக்கு காப்பி வேண்டாம் டாக்டர்’ என்றா சம்பந்தம் இல்லாமல்!
‘சரி, வயதானதால் ஏதும் மாற்றிப் பேசுகிறார் போல’ என்று நினைத்து, என் மருந்துகளை பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
பெரியவர் முகம் மாறி, ‘என்ன டாக்டர் நீங்க, என்னை எதுக்கு இந்தத் தரையைத் துடைக்கச் சொல்றீங்க?’ என்றார்.
எனக்குப் புரியவில்லை. ‘வயதுக் கோளாறினாலும், தனிமையினாலும் மனப்பிறழ்வு ஏதாவது இவருக்கு இருக்குமோ?’ என்று சந்தேகப்பட்டேன்.
கையில் வைத்திருந்த செல்லை பார்த்துக் கொண்டிருந்தவர், ‘எனக்குதான் இரத்த அழுத்தம் பார்த்துட்டீங்களே, எதுக்கு திரும்பி ‘பிபி’ செக் பண்ணனும்?’ என்று கேட்டார்.
நான் கேட்காத கேள்விகளுக்கும், சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதேதோ சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டு, அவர் செல்லை வாங்கிப் பார்த்தேன்.
‘ஏய், உனக்கு காபி வேணுமா?’ என்று டைப் அடித்து இருந்தது. மேலும் ‘அந்தப் பக்கம், இந்த பக்கம் தரை துடைக்கல பார், சரியா ‘மாப்’ போடுங்க’ என்றும் டைப் அடித்திருந்தது!
ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை நான் சொல்லாததை இது எப்படி டைப் பண்ணி இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
‘அடுத்த பேஷண்டிற்கு பிபி எடுங்க’ என்று அடுத்ததாக அதில் டைப் அடிக்கப்பட்டிருந்தது.
அருகில் இருந்த அசிஸ்டன்ட் நர்ஸ், ஆயாவிடமும், தன்னுடைய ஜூனியர் நர்சுடனும் பேசுவதை எல்லாம் இது டைப் செய்து இருந்தது. சொல்வது யார் என்பது அந்த ‘ஆப்’புக்கும் தெரியாது, பெரியவருக்கும் தெரியாது!
அவர் என்னை முறைத்ததின் அர்த்தம் இப்போது எனக்கு விளங்கியது. சிரித்துக் கொண்டே அருகே இருந்த நர்சிடம் இந்த குரல் தட்டச்சு பற்றிக் கூறிவிட்டு, ‘இந்த பேஷன்ட் வெளியே செல்லும் வரை தயவு செய்து ஊமைகளாக இருங்கள்’ என்றேன்!
நல்ல வேளையாக, வழக்கமாகத் தனக்கு கீழே உள்ளவர்களை மிரட்டும் சீனியர் நர்ஸ், ‘உங்களுக்கெல்லாம் மூளையே கிடையாதுய்யா’ போன்ற சொற்றொடர்களை அன்று பயன்படுத்தவில்லை என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது!
நல்ல ‘ஆப்’ தான், உரையாடுபவர் மட்டும் கேள்விகளை கேட்கும் வரையில்!
போகும்போது பெரியவர், தன்னுடன் வந்தவரிடம், ‘இந்த டாக்டருக்கு வாய்ஸ் டைப்பிங்கே தெரியலை, தப்புத் தப்பாக் கேள்வி கேட்கிறார், பாவம்’ என்று அவர் குரலில் சத்தமாகச் சொல்லிச் சென்றது, எனக்கு கொஞ்சம் சன்னமாகக் கேட்டது – நானும் அந்த ‘ஆப்’ பை டவுன்லோட் செய்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்!

நல்ல குப்பாச்சு குழப்பாச்சு டாக்டர். ஒரு மருத்துவரிடம் வரும் மனிதர்களில்தான் எத்தனை வகைகள்!
LikeLike
காமெடியா எழுத வல்ல ஜினியூன் டாக்டர் ஐயா, நீர்! ரசித்தேன்.. ..!
அந்தப் பெரியவரின் பாதி நான்…ஆம் ஒருக்காது கேட்காது…!😜🫢😁
LikeLike
technology advances with both merits and demerits.
LikeLike