பொன்னியின் செல்வன் (புதிய வடிவில்) ஆங்கிலப் புத்தக வெளியீடு

பொன்னியின் செல்வன்- பெயரைக் கேட்டாலே மனம் அதிரும்.

அமரர் கல்கி அவர்களுக்கு குவிகம் சுந்தரராஜனின் மீது ஆதங்கம் ஏற்பட்டிருக்கா விட்டால் நான் ஆச்சரியப் படுவேன்.

ஏனா? அவருக்கான விழாவில் அவர் அமர இருக்கையின்றி நாற்காலி கிடைக்காது நின்றவர்களில் ஒருவராக அமரர் கல்கியையும் கால் கடுக்க நிற்க வைத்து விழாவை இரசிக்க வைத்து விட்டாரே.

சுந்தரராஜனை சொல்லியும் குற்றமில்லை. ஏனைய நண்பர்கள் அனைவரும் உறுதியாக 40-50 விருந்தினர்களை எதிர்பார்த்த பொழுது அவர் ஒரு எண்பது  பேராவது தேறும் என நம்பினார். முந்தைய இரவு கூட 70-80 விருந்தினர் கனவில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் வந்த விருந்தினர் எண்ணிக்கையோ 120 ஐ தாண்டியது.அவர் என்ன செய்வார் பாவம்.

விருந்தினர் வருகை குவிகத்திற்காகவா, நூல் ஆசிரியருக்காகவா இல்லை அமரர் கல்கிக்காகவா என அடுத்த வாரம் குவிகத்தில் ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம்.

நாம் விழாவிற்குள் வரலாம். அழகான அரங்கமே ஒரு விழாவை சிறப்பானதாக ஆக்கி விடும். அமரர் கல்கியின் ராசி ஐந்து நட்சத்திர தகுதியுடன் அரங்கம் அமைந்து விட்டது.
அறிவிக்கப் பட்ட நேரத்திற்கு முன்னரே நண்பர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

மாலை மணி 4.30, சற்று தொலைவில் இருந்து வந்தவர்களுக்கு அரங்கில் வழங்கிய காபி அமிர்தமாய் தெரிந்தது.

இருக்கையில் விருந்தினர் அமர்ந்து இளைப்பாரத் துவங்கும் பொழுது ஒரு குரல் அருணகிரியின் திருப்புகழை தேனாய் வடித்தது. மூன்று பாடல்களைப் பாடி முருகனை அரங்கத்திற்குள் வரவழைத்து அமர்த்தி விட்டாள் சிறுமி அதிதி.

கடந்த சில ஆண்டுகளாக மேல் நாட்டில் வசிப்பதாலோ என்னவோ குவிகம் சுந்தர்ராஜன் அவர்கள் சரியாக மணி ஐந்தை தொட்டவுடன் மைக்கைத் தொட்டு விழாவைத் துவங்கி விட்டார்.
சிறுமிகள் அதிதி மற்றும் ஶ்ரீமையி, அவர்களின் இனிமையான குரலால் வாழ்த்தக் கேட்டு தமிழ்த்தாயும் அரங்கில் வந்து அமர்ந்து விட்டாள்.

பின்னர் துவங்கியது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுந்தர்ராஜனின் சரவெடிகள். ஒவ்வொரு பேச்சாளரைப் பற்றியும் தெளிவான அறிமுகம் நகைச்சுவை கலந்து நிகழ்ச்சியை கலகலப்புடன் நகர்த்திச் சென்றார்.

வரவேற்புரை நிழ்த்த கோவை சந்திரசேகர் மைக்கைப் பிடித்தவுடன் அவர் கையிலிருந்து நீண்ட குறிப்புடன் கூடிய பெயர்களைப் பார்த்து பயம் ஏற்பட்டது. ஆனால் இரத்தினச் சுருக்கமாக விருந்தினர்களை பெருமையுடன் அறிமுகப்படுத்தி கை தட்டலை வாங்கிக் கொண்டார்.

பின்னர் நூலின் முதல் பிரதியை ஜயா முனைவர் ஞான சுந்தரம் வெளியிட இந்நூலைப் பதிப்பிட பாடுபட்ட டாக்டர் ஆனந்த் சாதனை புரிந்த மனதுடனும் மலர்ந்த முகத்துடனும் பெற்றுக் கொண்டார்

டாக்டர் ஆனந்த் , நூலாசிரியர் சிந்தாமணி, குவிகம் சுந்தர்ராஜன் ஆகியோரின் கடும் உழைப்பால் வெளி வந்த நூலிற்கு அணில் போல் சிறு பங்கு ஆற்றிய உரிமையில் மேடையில் இருந்த பெரியவர்களுடன் இணைந்து கிருத்துவக்கல்லூரி நண்பர்கள் குழுவான சந்திர சேகரன், ஜகன்னாதன், தனசேகரன், நடராஜன் மற்றும் சந்திரமோகன் சம்பிராதயமாக நூலை மார்பில் அணைத்து படம் எடுத்துக் கொண்டார்கள்.

பொன்னியின் செல்வன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் படிக்க இயலாதவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவல் எப்படி தோன்றியது என்பதை, தன் ஆவல் நிறைவுற்ற தருணத்தில் டாக்டர். ஆனந்த் தன் துவக்க உரையில் அழகாக எடுத்துரைத்தார்.

முனைவர் ஜெயசக்திவேல் நூல் ஆசிரியர் சிந்தாமணியின் மாணவர் பல கலை வித்தகர். அவர் பேசுவதற்கு ஒதுக்கப் பட்ட நிமிடங்களுக்குள் ஓர் ஆராய்ச்சி கட்டுரையை பேச்சாக வழங்கி அனைவரையும் யோசிக்க வைத்து விட்டு அமர்ந்தார்.

அடுத்து பேச வந்த முனைவர் தைலாம்பாள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் இலக்கணத்தை எடுத்துக்கூறி அவை நம் ‘பொன்னியின் செல்வன்’ ஆங்கில மொழியாக்கத்துடன் நூறு சதவிகிதம் எவ்வாறு ஒத்துப் போகிறது என்று விளக்கிக் கூற மெய்மறந்து கேட்டோம். நான் சும்மாவரவில்லை, இந்நூலின் இரண்டு பகுதிகளின் முதல் அட்டை துவங்கி கடைசி அட்டை வரை இரசித்து சுவைத்து வந்துள்ளேன் என அவர் கூறாமல் கூறியதை அவர் இரசித்த பக்கங்களைச்  சுட்டிக் காட்டிய பொழுது நாம் அறிந்தோம்.

முத்தாய்ப்பாக பேச வந்தார் தலைமை ஏற்று நூலை வெளியிட்ட ஐயா முனைவர் ஞான சுந்தரம். நிறை குடம் தளும்பாது என்பது உண்மைதான் போலும். காட்சிக்கு எளிமையாய் தோன்றிய அவர் வகித்த பதவிகளும் பெற்ற பட்டங்களையும்  கூறி முடிக்க பல மணித் துளிகள் ஆகுமென சிலவற்றை சுந்தர்ராஜன் கூறத் துவங்கும் முன்னரே தன்னடக்கத்தால் மைக்கை பிடுங்கி பேசத்துவங்கி விட்டார். நூலாசிரியர் சிந்தாமணியின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளின் புலமையை சிலாகித்துப் பேசினார்.

தான் எழுதிய ஒரு தமிழ்க் குறிப்பை ஆங்கிலத்தில் மூலத்தை விட சிறப்பாக மொழிபெயர்த்து தன் மனதைக்  கவர்ந்தவர் சிந்தாமணி என நூலாசிரியரை பெருமைப் படுத்தினார்.

முத்தாய்ப்பாக இவ்வாண்டு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது  சிந்தாமணிக்கு கிடைக்க வேண்டும் என வாழ்த்திய பொழுது எழுந்த கரவொலி, கண்டிப்பாய் விருது கிடைக்கும் என அங்கீகரிப்பது போல இருந்தது.

இறுதியாக நூலாசிரியர் திரு. சிந்தாமணி தனது ஏற்புரையில் தன்னடக்கத்தின் எல்லை எதுவெனக் காட்டினார். தனக்கு நாவில் தமிழை எழுதுவித்த தன் ஆசிரியர் திரு வைத்தியலிங்கம் ஐயா மீது அவர் கொண்ட காதல் வார்த்தைகளால் வழிந்தோடியது. நூல் வெளிவருவதில் தன் பங்கு மிகச்சிறிதே எனக்கூறி தனது பெரிய மனதை வெளிக்காட்டினார்.

திரு சிந்தாமணிபால் கொண்ட அன்பால் அவர் இளங்கலை படித்த திருச்சி புனித ஜோசப் கல்லூரி, அவர் பணியாற்றிய வேலூர், உடுமலைப் பேட்டை போன்ற ஊர்களில் இருந்து வந்திருந்த நண்பர்கள் நூலாடை படைத்த நண்பருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பேசினார்கள்.

வழக்கமாக நகைச்சுவை சொட்டப் பேசும் ஜகன் அமரர் கல்கி முன் தன் நகை உணர்வை அடக்கி சுருக்கமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அரங்கருகே விற்பனைக்கு வைத்திருந்த நூல்கள் அனைத்தும் விற்று நூலுக்கு கிடைக்கவிருக்கும் வரவேற்பைக் கட்டியங் கூறியது.

இறுதியாக நாட்டுப் பாடலுடன் விழாநிறைவுற்றது.

செவிக்கு மட்டுமே உணவு படைத்தால் போதாது என வந்திருந்த விருந்தினர்க்கு இரவு சிற்றுண்டியும் வழங்கி விழாக் குழுவினர் மகிழ்வுற்றனர்.

விழாவின்  காணொளிகள்

Part 0

திருப்புகழ் பாடியவர் அதிதி, தமிழ் தாய் வாழ்த்து பாடியவர்கள். அதிதி மற்றும் ஶ்ரீமயி
https://www.youtube.com/watch?v=0IyZV-nzxPI

Part 1 

https://youtu.be/aZWdM6o_5pY?si=TRMmOrkBnFmARhIQ

Part 2

https://youtu.be/zYZ32rUgz-I?si=_ctZmgY8bXWxbBm5https://youtu.be/zYZ32rUgz-I?si=_ctZmgY8bXWxbBm5

Part 3

https://youtu.be/UErwSOMrUoY?si=aLj_qhd85waVK_vHhttps://youtu.be/UErwSOMrUoY?si=aLj_qhd85waVK_vHhttps://youtu.be/UErwSOMrUoY?si=aLj_qhd85waVK_vH

Part 4

https://youtu.be/9rqMKp6PmTY?si=Nlqf8ZSxThJ2W59Ehttps://youtu.be/9rqMKp6PmTY?si=Nlqf8ZSxThJ2W59Ehttps://youtu.be/9rqMKp6PmTY?si=Nlqf8ZSxThJ2W59E

Part 5

https://youtu.be/uxLScc1_Zlc?si=QEIJFJ_2lFIH-jGMhttps://youtu.be/uxLScc1_Zlc?si=QEIJFJ_2lFIH-jGMhttps://youtu.be/uxLScc1_Zlc?si=QEIJFJ_2lFIH-jGM

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்ப்புப் போட்டி விடை:

 

சென்ற இதழில் வெளியிட்ட கதையில் மொத்தம் 23 பிழைகள் உள்ளன.