(ஓர் அடியார் – ஒரு வெண்பா)
54)புகழ்த்துணை நாயனார்

புகழ்த்துணையார், செருவிலி புத்தூர் என்ற ஊரில், சிவமறையோர் திருக்குலத்தில் தோன்றியவர்.இறைவன் அருகில் இருந்து அணுக்கத் தொண்டு செய்வதில் ஒப்பில்லாதவர். இவர் இறைவனுக்குச் சிறப்பாகத் தொண்டு செய்து வழிபட்டு வரும் நாளில் உலகில் கொடிய பஞ்சம் வந்தது. பசியால் வாடிய போதும், பல மலர்களைக் கொண்டும், குளிர்ந்த நீரைக் கொண்டும் அருச்சனையைத் தொடர்ந்து செய்து வந்தார்.
ஒரு நாள், இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்த பொழுது, பசியினால் வருந்தி, உடல் சோர்ந்து, நீர்க்குடத்தைச் சுமக்க முடியாமல் சிவபெருமான் முடி மீது விழுந்து தளர்ச்சியடைந்தார்.
பிறகு, சிவபெருமானின் திருவருளால் அவருக்கு உறக்கம் வந்தது். அவர் கனவில் வந்த இறைவன், பஞ்சம் தீரும் வரையில் இங்கு நாள்தோறும் உனக்கு ஒரு காசு வைப்பேன் என்று கூறியருளினான்.
நாயனார் துன்பம் நீங்கி எழுந்தார்.
சிவபெருமான், தினமும் ஒரு பொற்காசைப் பீடத்தின் கீழே வைக்க, அதைக் கொண்டு புகழ்த்துணையார் பசி நீங்கப் பெற்று முகமலர்ந்து மகிழ்ந்து தம் பணியைத் தொடர்ந்து வந்தார்.
இறைவன் நாள்தோறும் தந்த காசினைக் கொண்டு பசிப்பிணி நீங்கிய புகழ்த்துணையார், பஞ்சம் நீங்கிய பின்பும் இறைவனின் மெய்யடிமைத் தொழிலை ஈடுபாட்டுடன் செய்து, பின்னர் வானவரும் தொழும்படிச் சிவபெருமானின் திருவடி நிழலைச் சேர்ந்தார்.
“புடைசூழ்ந்த புலிய தள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது.
புகழ்த்துணை நாயனார் வெண்பா
பஞ்சத்தில் வாடிப் பசிவந்த காலத்தும்
செஞ்சடையான் பூசனையைச் செய்துவந்தார் – விஞ்சும்
நலிவகற்ற நாளுமொரு நற்காசு வைத்தான்
நிலவணியும் பெம்மான் நெகிழ்ந்து
55)கோட்புலி நாயனார்

நலம் பெருகும் சோழ நாட்டில் திருநாட்டியத்தான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தின் புகழ் விளங்கத் தோன்றியவர் கோட்புலியார்.
அவர் சோழ மன்னனின் படைத் தலைவராய்ப் பணியாற்றிப் போரிட்டுப் பெரும் புகழ் பெற்றவர்.
போர்த்தொழிலில் ஈடுபட்டு மன்னனிடம் பெற்ற சிறந்த செல்வ வளங்களைக் கொண்டு பிறை சூடிய பெருமானின் கோவில்களில் திருவமுதுத் திருப்பணிக்குச் செந்நெல்லை மலைச் சிகரங்கள் போல் குவித்து வைப்பார்.
ஒருமுறை போருக்குச் செல்லும்போது, அவர் திரும்பும் வரையில் கோவிலுக்கு வேண்டிய அளவு செந்நெல்லைக் கூடுகளாகக் கட்டி வைத்தார். பின்னர்த் தம் சுற்றத்தார்களை அழைத்து, “ இந்த நெற்கூடுகளைச் செலவழிக்க உள்ளத்தாலும் நினைக்கக் கூடாது. இது சிவபெருமான் மேல் ஆணை” என்று கூறி விட்டுச் சென்றார்.
அவர் சென்ற பின்பு சில நாள்களில் கொடிய பஞ்சம் உண்டானது.
அவரது சுற்றத்தார், உணவில்லாமல் இறப்பதை விட இறைவனின் அமுதுக்கென உள்ள நெல்லைக் கொண்டு உயிர் பிழைத்துக் குற்றம் இல்லாமல் பின்னால் திரும்பக் கொடுக்கலாம் என்று நினைத்து அக்கூடுகளைப் பிரித்து அவற்றில் உள்ள நெல்லை உணவுக்காக எடுத்துக் கொண்டனர்.
போர் முடித்துத் திரும்பிய கோட்புலியார், தம் சுற்றத்தார் செய்த பிழையை அறிந்தார். அவர்கள் அனைவருக்கும் புதிய ஆடையும், நல்ல நிதியமும் தருவதாகச் சொல்லி்த் தம் வீட்டிற்கு வரவழைத்தார்.
தந்தை, தாய், உடன் பிறந்தார், மனைவியர், பந்தம் உடைய சுற்றத்தார் என்று அங்கு வந்தவரையும் , இறைவனின் திருவமுதுக்கு உரிய படி நெல்லை உண்பதற்கு எண்ணி இசைந்து இருந்தவரையும் வாளால் வெட்டிக் கொன்றார்.
அவரது வாளுக்குத் தப்பிப் பிழைத்த ஒரு குழந்தையைக் காட்டி,” அரிசி உணவு உண்ணமுடியாத இக்குழந்தை, அந்தச் சோற்றை உண்ணவில்லை. அது மட்டுமின்றி,ஒரு குடிக்கு ஒரு புதல்வனாவான்.எனவே அவனைக் கொல்லாமல் விட்டு விடவும்”என்று ஒருவர் கூறினார்.
“குழந்தை, சோற்றை உண்ணாவிட்டாலும்,, அந்நெல்லை உண்டவளின் பாலை உண்டது” என்று சொல்லி நாயனார், அக்குழந்தையைத் தம்
வாளால் இரண்டு துண்டாகுமாறு வெட்டிக் கொன்றார்.
உடனே சிவபெருமான் கோட்புலியாரின் முன் வெளிப்பட்டு,
“ உன் கைவாளால் கொல்லப்பட்ட அனைவரும் பொன்னுலகத்திற்கும் மேலான உலகத்தை அடைந்து விட்டனர். புகழ் மிக்க நீ, இந்நிலையிலேயே , என்னைச் சேர்வாயாக” என்று கூறியருளினான்.
“அடல் சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கும் அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகையும்
“அத்தனாய் அன்னையாய் ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள் அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர்தார்க் கோட்புலியார் அடிவணங்கி”
என்று பெரிய புராணமும் கோட்புலி நாயனாரின் புகழைப் போற்றுகின்றன.
கோட்புலி நாயனார் வெண்பா
முந்துபசிப் பஞ்சத்தால் மொய்கோவில் செந்நெல்லைத்
தந்தைதாய் சுற்றத்தார் தாமுண்ண – நொந்துமனம்
வாளெடுத்துக் கொன்று வளர்பாச வேரறுத்துத்
தாளணைந்தார் பெம்மானைச் சார்ந்து.
56) பூசலார் நாயனார்

என்றும் நல்லொழுக்கம் உயர்ந்து விளங்கும் பெருமை மிக்க தொண்டை நாட்டில், நான்மறை தழைக்கும் தொன்மையான ஊர்
திருநின்றவூராகும்.
அருமறைகள் கற்று, வேதநெறி விளங்க வாழுவோர் நிறைந்துள்ள அவ்வூரில் தோன்றியவர் பூசலார்.
கங்கையைச் சடையில் கொண்ட இறைவன் மகிழ்ந்து எழுந்தருளித் தங்குவதற்கு ஒரு திருக்கோவிலைக் கட்ட நினைத்த பூசலாரிடம் அதற்குத் தேவையான பொருள் எதுவும் இல்லை.
எங்கெங்கும் சென்று முயன்று தேடியும் அவரால் ஒரு சிறிதும் பொருளைப் பெற முடியவில்லை.
இனி என்ன செய்வது என்று வருந்திய பூசலார், தம் நினைப்பினாலேயே கோவில் எழுப்பத் துணிந்தார்.
கோவில் கட்டுவதற்கு வேண்டிய பெரும் செல்வத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக தம் உள்ளத்தால் திரட்டிச் சேர்த்து வைத்தார்.
கோவில் கட்டத் தேவையான பொருட்களையும், பணி செய்யத் தச்சர்களையும் மனத்தால் தேடிக் கண்டார்.திருப்பணி தொடங்க நல்ல நாளைத் தேர்வு செய்து,அல்லும், பகலும் உறங்காமல் தம் மனத்தில் கோவில் கட்டலானார்.
கோவிலின் அனைத்துப் பகுதிகளும், விதிக்கப்பட்ட அளவுகளில், ஆகம முறைப்படி அமையுமாறு நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டு நுட்பமாகவும், செப்பமாகவும் மனத்திலேயே செய்யலானார்.
தூண்கள் பொருத்தினார்; சுதை வேலையும், சிற்ப அலங்காரங்களும் செய்தார்;கிணறு தோண்டினார்;சுற்று மதில் அமைத்தார்; தடாகம் வெட்டினார்; மேலும் வேண்டியவற்றை எல்லாம் திறமையுடன் முறைப்படிச் செய்து மனத்திலேயே ஒரு மாபெரும் திருக்கோவிலைக் கட்டி முடித்தார்.
சிவபெருமான் அங்குக் குடி புகுவதற்கு ஏற்ற நாளை முடிவு செய்து, அந்நாளைக் குடமுழுக்கு நாளாகக் குறித்து விட்டார்.
காடவர் தலைவனான பல்லவ மன்னன்(இராஜசிம்மப் பல்லவன்) காஞ்சி நகரில் மிகப் பெரிய பரப்பளவில், பெரும் செல்வம் கொண்டு சிவபெருமானுக்கு ஒரு கற்கோவில் கட்டி அதற்குக் குடமுழுக்குச் செய்ய ஒரு நாளை முடிவு செய்தான்.
குடமுழுக்குச் செய்ய மன்னன் முடிவு செய்த நாளும், பூசலார் குறித்த நாளும் ஒன்றாக இருந்து விட்டது.
முதல் நாள் இரவில் பல்லவ மன்னன் கனவில் தோன்றிய இறைவன்,
“ திருநின்றவூர்ப் பூசலன்பன் நீண்டநாள் எண்ணி எண்ணிச் செய்த நன்மை மிக்க ஆலயத்தில் நாளை நான் புகுவேன் .ஆகவே,. நீ கட்டிய கோவிலின் குடமுழுக்கை நாளைக் கழித்து வைத்துக் கொள்ளுக” என்று கூறினான்
உறக்கம் கலைந்து எழுந்த மன்னன்,”அந்தத் திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்க வேண்டும்” என்ற பெருவிருப்பத்தோடு் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநின்றவூரை அடைந்தான்.
அங்குச் சென்ற மன்னன்,,” பூசலார் என்ற அன்பர இங்குக் கட்டிய கோவில் எந்தப் பக்கத்தில் உள்ளது?” என்று அங்கு இருந்தவர்களைக் கேட்டான்.
அதற்கு அவர்கள்,” நீங்கள் கூறிய பூசலார் கோவில் எதுவும் கட்டியதில்லை” என்று விடையளித்தனர்.அவர்களிடம் பூசலார் பற்றிக் கேட்டறிந்த மன்னன், ஈசன் அன்பரான பூசலாரைப் போய்ப் பார்த்தான்.
அவரைத் தொழுத மன்னன், “எட்டுத் திசையில் உள்ளோரும் போற்றும் வண்ணம் இங்குத் தாங்கள் எழுப்பிய கோவில் எது? தேவர் தலைவனான சிவபெருமானை அக் கோவிலில் நிலைபெறச் செய்யும் நாள் இன்று என்பதைக் கண்ணுதல் பெருமானின் திருவருளால் அறிந்து கொண்டு தங்கள் திருவடியைப் பணிய வந்தேன்” என்றுரைத்தான்.
மன்னவன் கூறியவற்றைக் கேட்ட பூசலார், தம்மையும் ஒரு பொருளாய்க் கொண்டு அருளிச் செய்த இறைவனை எண்ணி வியந்தார். கோவில் கட்டுவதற்கு நிதியேதும் இன்மையால், தாம் மனத்தினால் முயன்று எழுப்பிய கோவிலைப் பற்றிக் கூறினர்.
அதைக் கேட்டு வியந்த மன்னன் அவர் பெருமையைப் போற்றி, நிலத்தில் விழுந்து வணங்கிப் பின் படைகளுடன் தன்னுடைய ஊர் போய்ச் சேர்ந்தான்.
அன்பரான பூசலார் தம் உள்ளத்தில் கட்டிய ஆலயத்தில் இறைவனை நல்ல பெரும் பொழுதில் நிலைபெறச் செய்து, அதன் பிறகு செய்ய வேண்டிய பூசைகளை எல்லாம் பல நாள்கள் விருப்பத்துடன் செய்து வந்தார்.பின்னர்ச் சிவபெருமானின் பொற்கழல் நிழலை அடையும் பேறு பெற்றார்.
“நீண்ட செஞ்சடையி னார்க்கு நினைப்பினால் கோயிலாக்கிப்
பூண்ட.அன் பிடைய றாத பூசலார் பொற்றாள் போற்றி”
என்று சேக்கிழார் பூசலாரைப் போற்றுகின்றார்
பூசலார் வெண்பா
நின்றவூர்ப் பூசலன்பர் நெஞ்சினில் கோவிலொன்றை
மன்றுளான் வாழ வடிவமைக்க – நன்றென
அக்கோவில் போக அரசன்செய் கற்றளிக்குத்
தக்கநாள் பாரென்றான் தான்
( தொடரும்)
