லக்ஷ்மி(டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி) (1921 – 1987) – நாட்டுடமையான எழுத்துக்கள் 22 | கூட்டாஞ்சோறு

பண்ணையார் மகள் Panaiyar Magal

இந்த மேற்கூறிய நாவலையும் ஒரு தொடராக ஆனந்தவிகடனில் நான் என் இளம் பருவத்தில் படித்துள்ளேன்.  பூங்கொடி பதிப்பகம் பின்பு புத்தகமாக வெளியிட்டது. அதையும் வாங்கிப் பலமுறை படித்துள்ளேன். சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவலாசிரியை லக்ஷ்மி எனும் டாக்டர் (மருத்துவர்) திரிபுரசுந்தரி தென்னப்பிரிக்காவில் பலகாலம் வாழ்ந்தவர். அருமையான மணிமணியான குடும்பக் கதைகளின் எழுத்தாளர். தெளிந்த நீரோட்டம் போலச் செல்லும் சுவாரசியமான கதைகளை எழுதிய பெண்மணி. ஸ்ரீமதி மைதிலி, மிதிலா விலாஸ், ஒரு காவிரியைப்போல, காஞ்சனையின் கனவு ஆகிய புதினங்கள் இவருடைய எழுத்துக்கள்.

           ‘பண்ணையார் மகள்’ எனும் புதினமே நான் முதலில் படித்த இவரது நாவலாகும். அதனால் இவர் மர்ம நாவல் எழுதுவதில் வல்லவர் என எண்ணிக்கொண்டேன். ஆம். இது மர்ம நாவலாகவே திகழ்கிறது. தீர்க்கதரிசனம் வாய்ந்த ஒரு சிறு முன்னுரை ஆசிரியருடையது. அவர் கூறுவார்: ‘காலத்தால் குன்றாத, இளமை மங்காத, கற்பனை நயம் ஒரு கதையில் இருந்தால் அது காலமெல்லாம் நிலைத்து நிற்கும் என நான் எண்ணுகிறேன்.’ உண்மை. இன்றுமே இந்தப் புதினத்தைப் படிக்கும்போது பல பொழுதுகளில் புல்லரிக்கின்றது; அட, எத்தனை சாதுரியமாகக் கதையைத் தொய்வின்றி நகர்த்திச் செல்கிறார் என வியக்க, பிரமிக்க வைக்கிறது. வாசகர்கள் எப்படி வாராவாரம் அடுத்தடுத்த ஆனந்தவிகடன் இதழ்களுக்குக் காத்திருந்திருப்பார்கள் என ஆச்சரியப்பட வைக்கிறது.

           சரி; கதையைப் பார்ப்போமா?

           தாயால் வளர்க்கப்பட்ட உமா மகேஸ்வரி, தன் தாய் வைதேகி காசநோயில் இறந்தபின், தந்தையான பண்ணையார் ஏகாம்பரத்தின் ஊரான அழகர்நத்தத்திற்கு ரயிலில் வருகிறாள். பண்ணை மானேஜர் வரதராஜன் அவளை வரவேற்று அழைத்துப் போக வரவேண்டும். ஒருவழியாக மானேஜரின் மகனான ரங்கதுரை எனும் ஷோக்குப் பேர்வழி வந்து அவளை அழைத்துச் செல்கிறான். தந்தை ஏகாம்பரம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். உமாவின் மனம் படாதபாடு படுகிறது. அவளுடைய சின்னஞ்சிறு வயதிலேயே ஏதோ பெரியதொரு மனஸ்தாபத்தால் தந்தையைப் பிரிந்து வந்துவிட்ட தாயிடம் வளர்ந்தவள் அவள். வீட்டினுள் நுழைந்ததும் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது என்று டாக்டர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். நினைவுதப்பி ஆறுமணி நேரமாகிறது என்றார். தந்தை மூலமாவது தாயும் தந்தையும் கொண்டிருந்த மனஸ்தாபம் எதனால் என அறிந்து கொள்ளலாம் என எண்ணியிருந்த உமாவிற்கு அடுத்தநாள் நிகழும் அவரது மரணம், ஒரு இடியாக இறங்குகிறது.

           பின் பண்ணையிலேயே தங்கியிருந்து பண்ணை விவகாரங்களைக் கவனித்துக் கொள்வது அவள் கடமையாகி விடுகிறது. ஏனெனில் தந்தை ஏகாம்பரம் அனைத்துச் சொத்துக்களையும் அவள் பெயரில் எழுதிப் பதிந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார். மானேஜரின் உதவியுடன் பண்ணையின் நிர்வாகம் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து கொண்டிருந்தாள் உமா. ஒருநாள் மாந்தோப்பு பங்களா என ஒன்றிற்கு அவளை அழைத்துச் செல்கிறார் வரதராஜன். அது பண்ணையாரின் பெரிய வீட்டைப்போல் இல்லாமல் நவீன வசதிகளுடன் உள்ளதனைக் காண்கிறாள் உமா. பண்ணையார் ஆண்டிற்கு மூன்றுமாதம் கோடை காலத்தில் அங்குதான் தங்குவார் என்கிறார் மானேஜர்.

           வயது முதிர்ந்த கட்டையன், அஞ்சலை தம்பதிகள் முப்பதாண்டுகளாக அதனைப் பராமரித்து வந்தனர். சமையலையும் அஞ்சலையே கவனித்துக் கொண்டாள் என அறிகிறாள் உமா. அவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில், தங்களை அப்பணியிலிருந்து விடுவித்து அனுப்பி விடுமாறு உமாவிடம் கண்ணீருடன் வேண்டிக் கொள்கிறாள் அஞ்சலை.

           இதற்கிடையே உமா, சிவகுமாரன் எனும் ஒரு இளைஞனைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் வரதராஜன் அவனைப் பற்றி அவளிடம் எச்சரிக்கை செய்கிறார். உமாவுக்கு இவையெல்லாம் குழப்பமாக உள்ளன.

           வரதராஜனுக்கு எப்படியாவது தன் மகன் ரங்கதுரையை உமாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது எண்ணம். பண்ணையின் அத்தனை சொத்துக்களும் அவர் ஆளுமைக்கு வந்துவிடுமல்லவா? அவருக்கு ஷண்பகவல்லி எனும் ஒரு விதவைச் சகோதரி உண்டு.

           பேரழகியான அவள்மூலம் உமாவைத் தங்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார்கள். அந்த ஊரில் ஏழைகளுக்கு வைத்தியம் செய்பவரும், சிவகுமாரனின் நண்பராகவும் உள்ள அறுபது வயதான டாக்டர் குருமூர்த்தியைப் பற்றி தப்பான கருத்துக்களை உமாவின் உள்ளத்தில் விதைக்கின்றனர் அக்குடும்பத்தினர். உமா மிகவும் குழம்பிப் போய்விடுகிறாள். அங்கு தனது புகுந்த வீட்டார் கொடுத்த் நகைகளை ஷண்பகம் உமாவிற்குக் காட்டும்போது அவற்றிடையே இருந்த அழகானதொரு நீலக்கல் வளையலைப் பார்க்கிறாள் உமா. அவளிடமிருந்து பிடுங்காத குறையாக அதனை வாங்கி உள்ளே வைக்கிறாள் ஷண்பகம்.

           சிவகுமாரும் உமாவும் மிகுந்த நட்புக் கொள்கின்றனர். ஊரில் அவர்களைப் பற்றிப் பலவிதமான பேச்சுக்கள் எழுகின்றன. டாக்டர் குருமூர்த்திக்கும் பண்ணையாருக்கும் உண்டான மனஸ்தாபத்திற்கும் தன் தாய் தந்தையருக்கு உண்டான பிரிவுக்கும் ஏதோ காரணமிருக்குமென உமா சந்தேகிக்கிறாள். அதனை அறிந்துகொள்ள சிவகுமாரனின் உதவியை நாடுகிறாள்.

           இதற்குள் ஒரு கிளைக்கதையும் சுவாரசியமாகத் தொடர்கிறது. இது ரங்கதுரையின் லீலைகளைப் பற்றித்தான். அது தற்சமயம் நமக்குத் தேவையில்லை.

           சுருக்கமாகக் கூறிப் புதினத்தை நிறைவுசெய்ய வேண்டுமெனில், இதோ, முக்கியமான நிகழ்வுகள். மாந்தோப்புப் பங்களாவில் கட்டையன் திடீரென மனப்பிராந்தியால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிறான். அவனைப் பார்க்கச் செல்லும் சிவகுமாரனிடமும் உமாவிடமும் அழுதபடியே அஞ்சலை சில நிகழ்வுகளைக் கூறுகிறாள்.

           பல ஆண்டுகளுக்கு முன்பு மாந்தோப்பு பங்களாவில் ஓரிரவில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ளது; கட்டையன் வெறிபிடித்தவனாக அஞ்சலையிடம் கத்திக் கொண்டிருக்கிறான். ஒரு துணியில் சுற்றப்பட்டு, கூடையில் வைத்தபடி, புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் சவத்தைக் கொண்டுவந்து வெறிபிடித்தவன்போல கிணற்றடியில் ஒரு குழியைத் தோண்டிப் புதைக்கிறான். பின் அஞ்சலையிடம் எரிந்து விழுகின்றான். இரண்டாண்டுகளின் பின்பு, மீண்டும் ஒரு இரவின் இருட்டில், ஒரு பிறந்த குழந்தையின் அழுகுரல் சிலநொடிகளே கேட்கிறது. திகைப்பில் அஞ்சலை என்னவென்று காண வருகிறாள். கட்டையன் ஒரு புத்தம்புதிய குழந்தையைத் துணியில் சுற்றிக் கொண்டு வருகிறான். அவன் காணாமல் நழுவி அப்புறம் சென்று அஞ்சலை பார்த்ததும் ஒரு பெண்மணி ஒரு கட்டிலின் மீது போர்வையால் போர்த்தபடி படுத்திருக்கிறாள். அவளுடைய போர்வை சிறிது விலகியதும் அவள் யாரென அறிந்து கொள்கிறாள் அஞ்சலை.

           முழுமையாகக் கூறுமுன் வெறிபிடித்தவனாக எழும் கட்டையன் அவளைத் தாக்குகிறான். அவள் மயங்கிச் சாய்கிறாள். அவளை மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்கின்றனர். அவளோ சிகித்சை பலனளிக்காமல் இறந்து விடுகிறாள். கட்டையனும் சில தினங்களின் பின் இறந்துபோகிறான். பின் அகஸ்மாத்தாக ஓரிடத்திலிருந்து, சண்பகத்திடம் பார்த்த நீலவளையலின் தொலைந்துபோன ஜோடி உமாவிற்குக் கிடைக்கிறது. அதனுள் வைதேகி எனப் பொறித்திருக்கிறது. உமா பிறகு டாக்டர் குருமூர்த்தியைச் சந்தித்துச் சில விஷயங்களை வற்புறுத்தி அறிந்து கொள்கிறாள். பண்ணையாருக்கும் சண்பகத்திற்கும் உண்டான கள்ளத்தொடர்பையும் நிறைகர்ப்பிணியான ஷண்பகத்தை தான் மாந்தோப்பு பங்களாவில் கண்டதையும் பற்றி எழுதிவிட்டு தான் குழந்தையுடன் கணவரைப் பிரிந்து போவதாகத் தாய் வைதேகி டாக்டருக்கு எழுதியிருந்த கடிதத்தைக் காட்டுகிறார் அவர்.

           உமா சண்பகத்தைச் சந்திக்க அழைக்கிறாள். வந்தவளிடம் அவள் தன் தந்தையான பண்ணையாருடன் கொண்டிருந்த கள்ள நட்பைப் பற்றிக் கூறிவிட்டு நீலக்கல் வளையலைக் காட்டி தனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறுகிறாள். ஷண்பகம் அதிர்ந்து போகிறாள்.

           இதன் உச்சகட்டமாக, பண்ணையாரின் மாளிகைக்கு ஓரிரவில் நெருப்பு வைக்கப்படுகிறது. சிவகுமாரன் ஓடோடிவந்து உறங்கும் உமாவைக் காப்பாற்றுகிறான்.

           போலீசார் இதற்குக் காரணமான ரங்கதுரையைக் கைது செய்கின்றனர். வரதராஜன் இதயம் நின்று மரணமடைகிறார். ஷண்பகம் ஷேத்ராடனம் செல்கிறாள். பண்ணையாரின் வீடு எரிந்து போகிறது. அங்கு சிறியதொரு புது வீட்டைக் கட்டுகிறார்கள். அதுவரை டாக்டர் குருமூர்த்தியின் வீட்டில் தங்குகிறாள் உமா.

           கடைசியில் உமாவும் சிவகுமாரனும் திருமணம் செய்துகொள்வதாக முடிகின்றது புதினம்.

           அருமையான கதை! எத்தனையோ முறை படித்திருக்கிறேன். அருமையான உரையாடல்களாலும் திடுக்கிடும் திருப்பங்களாலும் கதையைக் கொண்டு செல்லும் பாங்குதான் பிரமிப்பை ஊட்டுகின்றது. ஆசிரியை லக்ஷ்மியை இன்னும் ஒரு உயர்பீடத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. இவருடைய புதினங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுவே!

           நீங்களும் வாங்கிப் படியுங்கள். ரசியுங்கள்!