
‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!
துன்பம் தீர்வது பெண்மையினாலடா’
பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான்
பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை’
‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
போற்றி தாய்’ என்று பொற்குழலூதடா!’
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே’
என்றெல்லாம் பாரதியார் பெண்மையைப் போற்றுகின்றார்.
‘சக்தி எனும் சிறகடித்து
சாதனை என்னும்
வானில் பற’
‘’பெண் பார்த்தால் தீ வருமே’
இராணுவ வீரர்களைக் காட்டிலும் அவர்களது மனைவிமார்கள் இந்த பூமியில் மிகவும் பலம் பொருந்தியவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு மெடலும் கிடைப்பதில்லை. வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள், ஒவ்வொரு நிமிடத்திலும் மிளிர்கிறார்கள்.
அதே போல் தமது தாய் நாட்டை விட்டு ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ என்று கணவர்களுடன் செல்லும் பெண்மணிகள், அல்லது தமது வேலை நிமித்தமாக அயல் நாட்டிற்கு பயணித்துள்ள மகளிர்கள் மென்மேலும் உயருகிறார்கள். எங்கேயும், எப்போதும் எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுகிறார்கள்.
தற்போது துபாய்க்குச் சென்றபோது இவர்களது வாழ்க்கை முறையைப் பார்த்து எதை நோக்கி, எதற்காக இந்த ஓட்டம் என்று வியந்த போதுதான் இவர்களிடம் இதைப் பற்றி பேச விழைந்தேன். எங்கும் இந்தப் பரபரப்பு இருந்தாலும், சொந்த பந்தங்களை விட்டு விட்டு இவர்கள் ஐந்து நாட்களும் ஒருவரிடம் ஒருவர் பேசக் கூட நேரம் கிடைக்காமல் மற்றொரு சாலையில் பயணித்து வாழ்கிறார்கள். இவர்களது சந்தோஷத்தை நுகரலாமா! வாருங்கள், எட்டு வீட்டுக் கதவைத் தட்டலாம், சாரி, மணி அடிக்கலாம்.
முதல் மணி – எம்பிஏ படித்த, கரூரைச் சேர்ந்த, தாய்லாந்து, சைனா, ஒமான் என்று சுற்றிவிட்டு கணவருடைய வேலை நிமித்தம் தற்போது இரண்டு வருடங்களாக துபாயில் இருக்கிறார் சுதா. பட்டு நூல்கள் செய்வதிலும், விதவிதமான வடிவங்களில் துணிகள் தைப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள இவர் வீராங்கனையாக மாறிய தருணத்தை சிரித்துக் கொண்டே விவரிக்கிறார். கணவர் அபுதாபி சென்று விட, மாமியாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஐந்து வயது பையன் கீழே விழுந்து முகமெல்லாம் அடிபட்டுக் கிடக்க வண்டி ஓட்டாத இவர் புது இடத்தில் அவனை மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பார்த்துள்ளார். இதனாலோ என்னவோ மாறுதல் கிடைத்தவுடன் சொந்த ஊருக்குப் பறந்து செல்லத் தயாராக இருக்கிறார். குடும்ப வேலைகளுக்கு நடுவில் இப்பொழுது எந்த ஒரு புதினத்தையும் படிக்க முடியவில்லை என்று கூறும் இவர் ரசித்த புத்தகம் பெங்குவின் பதிப்பகத்தில் சுதாமுர்த்தி அவர்களின் ‘த்ரீ தௌசண்ட் ஸ்டிச்சேஸ்’. வாழ்க்கையில் நடந்துள்ள சில சம்பவங்களைக் கூறி அதனை எப்படி கடப்பது என்று எழுத்தாளர் சொல்வதாகவும், அது ஒருவரது வாழ்க்கை முறையை மேலும் செம்மைப்படுத்துவதாகவும், அறிவு சம்பந்தமாக யோசிக்க வைப்பதாகவும் இவர் உணருகிறார்
இரண்டாவது மணி – கம்ப்யூட்டர் சயன்ஸில் பட்டம் பெற்ற 15 நாடுகள் சுற்றியுள்ள அபுதாபியில் பிறந்த அஷ்விதா டிமெல்லோ. புனாவைச் சேர்ந்த ஹிமான்ஷுவைத் திருமணம் செய்துள்ள இவர் தற்போது தனது 8 வயது மகளை கணவருடன் துபாயில் விட்டு விட்டு நெதர்லாந்தில் பணி புரிகிறார். கணவரின் சகோதரி பூனாவில் நாய் பாதுகாப்பு சங்கத்தில் உதவி புரிவதாக பெருமையுடன் கூறுகிறார். பணிப்பெண் ஒருவருடன் தன் பெண் வளர்வதே தனக்கு ஒவ்வொரு நிமிட சவாலாக இருப்பதாகக் கூறும் இவர் 5 வருடங்கள் மங்களூரில் படித்திருந்தாலும் பாதுகாப்பு, விதிகளைப் பின்பற்றுதல் இவைகளை நோக்குங்கால் வெளிநாடே சிறந்தது என்று இங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். பலதரப்பட்ட வாழ்க்கை வரலாறுகளையும் மர்மக்கதைகளும் விரும்பிப் படிக்கும் இவர் இப்போது படித்துக் கொண்டிருப்பது டபிள்டே பதிப்பகத்தின் ஜான் க்ரிஷம் அவர்களுடைய ‘ஜட்ஜ் லிஸ்ட்’ என்ற சுவாரஸ்யமான மர்ம நாவல் ஆகும். நீதிபதியே கொலைகாரன் என்று மனதத்துவ ரீதியாக கதை கொண்டு செல்லப்பட்டுள்ளது ஆச்சர்யப்படத்தக்கதாக உள்ளது என்று மர்ம முடிச்சை அவிழ்க்கிறார்.
மூன்றாவது மணி – பி டெக், எம் பி ஏ படித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வேலை பார்க்கும் பல நாடுகளைச் சுற்றியுள்ள, கலை, இசையில் ஆர்வம் உள்ள, ஆந்திராவைச் சேர்ந்த இப்போது 12 வருடங்களாக துபாயில் 2 குழந்தைகளுடன் வசிக்கும் சௌமியா. முதியவர்கள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளுக்காக சேவை செய்யும் ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இங்குள்ள தொழில்நுட்பம், வாழ்க்கை முறை இவைகளைக கருத்தில் கொண்டு தற்போது தாய்நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்கிறார். இரண்டாவது ஊரடங்கின் போது, கணவர் தொலைபேசி கூட இல்லாத இடத்திற்குச் சென்று விட, இரண்டு குழந்தைகளும் 104 டிகிரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், தானும் பணிப்பெண்ணும் கோவிட் தடுப்பூசி போட்டதால் சோர்வடைந்து எப்படியோ சமையலை சமாளித்தாலும், குழந்தைகளைப் பற்றி பயந்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்துக்கொண்டதால் தன்னைச் சுற்றி ஒரு நல்ல வட்டம் இருப்பது மகிழ்வைத் தந்ததாகக் கூறுகிறார். தான் பெரிய வாசகர் இல்லை, ஆனால் கட்டுரைகள், பாட்காஸ்ட்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து கற்றுக்கொள்வதாகவும் தன் குழந்தைகள் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக தற்சமயம் படிப்பது பிரான்செசகோ மிரல்ஸ் மற்றும் ஹேக்டர் அவர்களால் எழுதி இங்கிலாந்து ராண்டம் ஹவுசால் வெளியிடப்பட்ட ‘இக்கிகய்’ என்கிறார். இது வாழ்க்கையை முழுமையாக்கி, நீண்ட வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தி, வாழ்க்கையின் இரகசியத்தைத் தெரியப்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.
நான்காவது மணி – அமெரிக்கா, சிங்கப்பூர், பாலி, ஓமன் என்று சுற்றிய சிஏ படித்துள்ள 5 வயது குழந்தையின் தாய் ராஜலக்ஷ்மி. குழந்தையின் பொழுது போக்கு கீழே விழுதல்! ஒரு வயதில் தூளியிலிருந்து விழுந்த மகனை துபாயில் மருத்துவமனைக்குத் தனி ஆளாக சேர்த்து தைரியத்தைப் பெற்றுள்ளார். பாதுகாப்பான நாட்டை விட்டு செல்ல யோசிக்க வேண்டி உள்ளது என்று கூறுவது சிறிது வேதனையைத் தருகிறது. கார் ஒட்டிக் கொண்டு வெகு தொலைவிலுள்ள பணிக்குச் சென்றாலும், சினிமா பார்ப்பதும், புத்தகம் படிப்பதும் மனதுக்கு இதமாக இருக்கும் என்று சொல்லும் இவர் சமீபத்தில் கிராண்ட் சென்ட்ரல் பதிப்பகத்தின் பேட்டர்சன் எழுதியுள்ள ‘டெத் ஆஃப் தே பிளாக் விடோ’ மர்மம் தனக்குப் பிடித்துள்ளதாகக் கூறுகிறார்.
ஐந்தாவது மணி – நிறைய வெளிநாடுகளைச் சுற்றியுள்ள, பெயிண்ட்டிங்கில் ஆர்வம் உள்ள 12 வருடங்களாக துபாயில் வசித்து வரும் இரு குழந்தைகளின் தாய் பத்மா. தனது தாய்மைப் பேறு போது இரு குடும்பங்களின் பிரச்சனை, கணவர் அருகில் இல்லாமை என்று இருந்ததால், வயிற்றில் இருக்கும் சிசுவிடம் பேசிக் கொண்டே ஆண்டவனை வேண்டிக கொண்டே அந்த நாட்களை எதிர் கொண்டுள்ளார்.. இதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மனிதத்தன்மையை உணர்ந்து கொண்டேன் என்று முதிர்ந்த வாக்கு சொல்கிறார். இத்தனை வேலைகளுக்கு நடுவிலே புத்தகப் புழுவான இவர் பான் மாக்மிலன் பதிப்பகத்தின் சித்ரா பனர்ஜியின் ‘பாலஸ் ஆஃப் இல்லூசன்ஸ்’ ஒரு மாறுபட்ட கோணத்தைக் காட்டுகிறது, திரௌபதியின் பிறப்பு, வளர்ப்பு, அவளது கணிப்பில் மகாபாரதம் என்று வியத்தகு முறையில் விவரிக்கப்பட்டுள்ளது என்று விவரிக்கிறார்.
ஆறாவது மணி – எம் ஏ படித்த, ஓவியத்தில் ஆர்வம் உள்ள 20 வருடங்களாக துபாயில் இருக்கும் 14 வயது பெண்ணின் தாய். சென்னையில் கண் தெரியாதவர்களுக்காக ‘ஸ்கரைப்’ ஆக இருந்துள்ளார். துபாயில் பாதுகாப்பாக உணரும் இவர் தற்சமயம் தாய் நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்கிறார். அபுதாபியில் இருந்த போது இரவில் கடுங் காய்ச்சலில் துடித்த பெண்ணை எப்போதோ வண்டி ஓட்டும் இவர் அன்று துணிச்சலுடன் வண்டி ஓட்டி மருத்துவமனை சென்றதை இப்போதும் நினைத்து நடுங்குகிறார். தன்முனைக் கதைகளை விரும்பிப் படிக்கும் இவர் தற்போது புளூபர்ட் பதிப்பகத்தின் டாக்டர் அமீர் லேவின் அவர்களால் எழுதின ‘அட்டாச்டு’ தன்னை மிகவும் கவர்ந்துள்ளது எனவும் மற்றவர்களுடன் நமது சேர்க்கை நம்மைப் பலப்படுத்தும் என்று யதார்த்ததை எடுத்துரைக்கிறது என்றும் கூறுகிறார்.
ஏழாவது மணி – ஆர்இசி, திருச்சியில் பிஇ படித்த, சிங்கப்பூர், மலேசியா சுற்றி விட்டு தற்போது 13 வருடங்களாக 14 வயது இரட்டையர்களுடன் துபாயில் இருக்கும் வசுதா. தாய் நாட்டிற்குத் திரும்பி உறவினர்களுடன் சேரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். தோட்டக்கலையில் ஆர்வம் உள்ள இவர் தன் வீட்டையே பசுமைப் புரட்சியாக்கி, நாய், பூனைகளுக்கு அடைக்கலம் தருகிறார். தங்களுடன் இருந்த மாமனார் திடீரென்று காலமாகி விட, துபாயில் அதற்கான முறைகளை செய்து இந்தியாவிற்குத் திரும்ப மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு துண்டு பேப்பரையும் விடாது படிக்கும் இவர் தற்போது சைமன் பதிப்பகத்தின் ஜில் மன்செல் எழுதியுள்ள கலகலப்பான, மனதைக் கவரும் ‘வெட்டிங் ஆஃப் தே இயர்’ படித்துக் கொண்டிருக்கிறார்.
எட்டாவது மணி – மும்பையைச் சேர்ந்த, பிகாம்படித்த அநேக நாடுகளுக்குச் சென்றுள்ள, பேக்கிங்கில் ஆர்வம் உள்ள, 5 வயதுப் பையனின் தாய் டிசில்வா. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். 21 வருடங்கள் துபாயில் பாதுகாப்பை உணர்ந்தாலும் இவர் தமது தாய்நாட்டை நேசிக்கிறார்.
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்’
என்று சொந்த நாட்டை விட்டுப் போனாலும்
‘சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா,
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா’
என்றுதான் எல்லோரும் நினைப்பது கண்கூடு.
‘காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழவமடி’
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்’
என்ற இவர்களது உறுதி பாராட்டுக்குரியது.
எனவே இவர்களை
‘போற்றி போற்றி! ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்!’
என்று வாழ்த்துகிறோம்!
