From Grassroots to Pro: The journey of an Indian football coach

நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனை பல சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தது.‌ அவற்றில் என்னைப் போன்ற ஐந்து ஸைக்காட்ரிக் சோஷியல் வர்கரின் பங்கேற்பும் இருந்தது. நலிந்த சமூகத்திற்கான திட்டங்களை நாங்கள் மிக நேர்த்தியாகச் செய்வதை அந்த சமூகத்தினர் அறிந்ததே.

அதில் ஒரு திட்டம், உறவுகளில் இன்னல்கள், மற்ற மனநலம் சார்ந்த திறன்கள் இவற்றை சமூகத்தினர் மேம்படுத்திக் கொள்வதற்காக.  நானும் மனநல மருத்துவரும் இணைந்து அங்கேயே ஸெஷன்களுக்கு இடம் அமைத்துச் செய்தோம்.

பக்கத்தில் உள்ள எளிய சமூகத்தில் வாழ்ந்து வந்த உதயப்பிரகாஷ் இதை அறிந்திருந்தார். இருபது வயதான கால் பந்து விளையாட்டு வீரர். எங்களை ஆலோசிக்க வந்தார்.

அன்றைய தினம் நான் இருந்ததால் எங்கள் அணுகுமுறையை விளக்கினேன். உதயப்பிரகாஷுடன் என்னுடைய செஷன்கள் ஆரம்பமானது.‌ வெட்கத்தால் சொல்ல வந்ததை வெளிப்படுத்தத் தவித்தார். கஷ்டப்பட்டு கண்ணீர் மணித்துளிகளோடு நிலைமையை   விவரிக்க ஆரம்பித்தார்.

தன் வயதினரான ஏழு பேருடன் உதயப்பிரகாஷ் சமூகத்திற்கு உதவும் நற்பணி மன்றம் நடத்தி வந்தார்கள். இவர்கள் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ செய்யாததால் எல்லோரும் இவர்களை மதித்தார்கள்.

பல கேள்வி பதில்களுக்கிடையே அவர்களது மற்றொரு போக்கைப் பற்றியும் விவரித்தார், கேலி செய்வதும் உண்டு என்றதை.

அப்படித்தான் உத்ரகலா என்பவளை விளையாட்டாக உதயப்பிரகாஷ் ஓரிரு முறை கேலி செய்தார்.

அப்போதிலிருந்து உத்ரகலா தன்னை உற்றுப் பார்ப்பதாக நண்பர்கள் கூறும்போது இது சாத்தியம் இல்லை என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதேபோல மற்ற பெண்கள் வராத கால்பந்து பயிற்சி இடத்தில் இவள் வந்து நிற்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

உதயப்பிரகாஷ் நண்பர்களுடன் கேரம் போர்டை வெளியே வைத்து விளையாடும் போதெல்லாம் இப்படி அப்படி அவள் சைக்கிளில் போய் வருவதைக் கவனித்தார்கள். சரியென்று தோன்றவில்லை. இது எச்சரிக்கை மணி என எண்ணி அவளைக் கேலி செய்வதை  நிறுத்தி விட்டார்கள்.

இவ்வாறு செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என உதயப்பிரகாஷ் அவளிடம் சொன்னார். உத்ரகலா கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போய்விட்டாள்.

அப்போதிலிருந்து உதயப்பிரகாஷை எங்குப் பார்த்தாலும் புன்னகை புரிந்தாள். கேலி செய்வதை நிறுத்தியதை அவள் வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள் என அஞ்சினார். அவளுக்கு மனப்பிரமை என நினைத்தார்.

பள்ளிக்கூடங்களிடையே போட்டிகளோ, வசிக்கும் பக்கத்தில் கால்பந்து போட்டிகளோ நடந்தால் உத்ரகலா வந்துவிடுவாள். அங்குப் பெண்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தென்படுவாள். இப்படித் தொடர்வது, தனக்கு வெட்கத்தையும் தடுமாற்றத்தையும் உண்டாகியதாகக் கூறினார் உதயப்பிரகாஷ்.

ஸெஷன்கள் நகர்ந்தது. உதயப்பிரகாஷ் தனது சூழல் மற்றும் மனக்குழப்பங்களைப் பகிர்ந்தார்.

உதயப்பிரகாஷ் வீட்டின் மூத்த மகன். தந்தை தொழிற்சாலைத் தொழிலாளி. வேலை விபத்தில் கால் அடிபட்டதால் மேற்கொண்டு வேலை செய்ய முடியவில்லை. கருணை கொண்ட முதலாளி உதயப்பிரகாஷை வேலையில் சேர்த்துக் கொண்டு, அஞ்சல் வழிக் கல்வி படிக்க ஊக்குவித்தார்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியோடு உதயப்பிரகாஷ் படிக்க ஆரம்பித்தார். முதல் ஆண்டு எண்பத்து ஐந்து சதவீதம் பெற்றார். இதைப் பார்த்து நண்பர்களும் மேற்படிப்பைப் படிக்கத் தொடங்கினார்கள்.

தன் நிலையின் மூலகாரணங்களை உதயப்பிரகாஷ் கண்டுகொள்ளாததால் தன்னுள் நேரும் மாற்றங்களைக் குறித்து மேலும் பகிர வைத்தேன். நிலையைச் சுதாரிக்க வழிமுறையை வகுத்தோம். கவனமாகப் படிக்க வேண்டும் என்ற உறுதி தொடர்ந்தது. திரும்பவும் நல்ல மதிப்பெண்! தொண்ணூறு சதவீதம் பெற்றதில் முதலாளி பரிசளித்தார். நோக்கம் உறுதியானதால், மறுமுறை உத்ரகலாவைப் பார்த்தபோது தன்னைப் பின்தொடருவதை விடச் சொன்னார் உதயப்பிரகாஷ். அவளோ ஏளனமாகச் சிரிக்க, இந்த நடத்தை நன்றாக இல்லை என்று எச்சரித்துச் சென்றுவிட்டார்.

உதயப்ரகாஷின் பரீட்சை வெற்றியையும், வெளிப்படையாகச் சொல்லும் தைரியத்தையும் கொண்டாட‌ நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். உற்சாகமும் சந்தோஷமும் அவர்களிடையே பொங்கி வழிந்த நிலையில் அங்கு உத்ரகலா வந்தாள். பூச்செண்டு ஒன்றை நண்பனிடம் கொடுத்துத் தரச்சொல்லி, வெட்கச் சிரிப்புடன் ஓடிவிட்டாள். உதயப்பிரகாஷ் தாம் திகைத்துப் போனதைக் கூறினார். உறைந்து போன உதயப்பிரகாஷைப் பார்த்த நண்பர்கள், கூட்டத்தை‌க் கலைத்து‌ச் சென்று விட்டார்கள்.

அப்போதிலிருந்து உத்ரகலா இந்த நண்பர்கள் கூட்டமாகச் சந்தித்த போதெல்லாம் அங்கு வந்துவிடுவாள்.‌ இதனால் குழப்பம் அடைந்த நண்பர்களும் சிலர் செஷன்களுக்கு வந்தார்கள். ஓரளவு தெளிவு பெற்றார்கள். ஒருசிலருடன் இருக்கும்போது நாம் நாமாக இருக்கமுடியும், மனதிற்கு அமைதி தரும். ஊக்கப் படுவோம், அவர்களின் வெற்றி தோல்வி தமக்கே ஆனது போல இருக்கும், மனம் நிம்மதி உணரும். தம்முடைய நட்பு இவ்வகை, வெளி நபர்கள் குறுக்கிடுவது ரசிக்காது என்ற தெளிவு பிறந்தது. மேலும் விளக்கினேன், உண்மையான காதல் என்றால் மற்றவரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் மனது புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

கால்பந்தாட்டத்திலும் படிப்பிலும் நேர்ந்த தடுமாற்றத்தைப் பற்றி உதயப்ரகாஷும் நானும் ஆராய்ந்தோம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் தாம் உணரும் உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்ணம் அளித்து, இதன் மூலம் தனக்குள் நேர்வதைக் கண்டுகொள்வது என அமைத்தோம்.

உதயப்பிரகாஷ். கால்பந்து பயிற்சியின் போது உத்ரகலா எங்குத் தென்படுகிறாள் எனத் தேடுவார். கண்ணில் படும் வரை தேடல் தொடரும். பார்த்து விட்டால், உடல் வெடவெடக்குமாம். கவனம் சிதறும்.

தடுமாற்றங்களின் அடிப்படை, உத்ரகலாவின் செயல்பாட்டைத் தடுக்க தெரியாததே என்று புரிந்தது. மேலும் இதனால் தன் சுயமதிப்பீடு குறைந்ததை உணர்ந்தார். தனக்கு ஏதோ குறை இருக்கிறதோ எனத் தோன்றியதைக் கூறினார்.  ஸெஷன்களிலிருந்து இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறனில்தான் குறைபாடு என விளங்கியது.

உத்ரகலா எப்படியாவது உதைப்பிராகஷை ஆகர்ஷிக்க ஏதேதோ செய்தாள். அவரின் கொள்கைக்கு இது எதிராக இருந்ததால் எதுவும் உதைப்ரகாஷை ஆகர்ஷிக்கவில்லை என்பதை அவள் பார்க்க மறுத்தாள். அதனால் தான் உறவு மலரவில்லை.

ஒருமுறை கால்பந்தாட்டத்தின்போது உதயப்பிரகாஷ் ஏதோ சரியாக ஆடவில்லை. அப்போது உத்ரகலா மிக நெருக்கமாக வந்து எல்லோருக்கும் கேட்கும் படி சமாதானம் சொன்னாள். உதயப்பிரகாஷிற்கு கூச்சமாக இருந்தது. சுற்றியுள்ளவர்களின் கேள்விக்குறி‌ பாவனையில் மேலும் வெட்கம் சூழ்ந்தது. சமாளித்துக்கொண்டு உத்ரகலாவை தள்ளி நிற்கச் சொல்லி, இதுபோல நடந்துகொள்வது அறுவறுப்பைத் தருவதாகச் சொன்னார்.

அவளுடைய சூழலைப் பற்றிப் பகிர்ந்தார் உதயப்பிரகாஷ். உத்ரகலா வீட்டின் மூத்த மகள். ஐந்து கூடப்பிறந்தவர்கள்.‌ தாயார் ஜெயலட்சுமி கண்டிப்பானவள். தந்தை சுந்தர் எதையும் கூற மாட்டார். வீட்டில் உள்ள எல்லா வேலை பொறுப்பும் உத்ரகலாவுடையதே. வேலைகளை முடித்து விட்டு சைக்கிளில் உலாப் போவாள்.

உத்ரகலா பற்றிய பல தகவல்களை அறிந்துள்ள உதயப்பிரகாஷ் அவள் மீதான உணர்வைப் பார்க்க வைத்தேன். அனுதாபம், தினசரி இன்னல்களைக் கண்டு பச்சாதாபம்.‌ சைக்கிளில் சுற்றி வருவதினாலும் பின்தொடர்வதினாலும், தன்னுள் நிலைத் தடுமாற்றத்தை அவள் உண்டாகியதாலும் அவள்மீது இருந்த இந்த நல்லுணர்வுகள் தவிடு பொடியானது.

சமீபகாலமாக அவள் உதயப்பிரகாஷிற்குக் கடிதங்கள் எழுதி நண்பர்களிடம் பலமுறை திணித்தாள். அவர்கள் கொடுக்க மறுத்து வந்தார்கள். கடைசியில் ஒருவர் தந்தார். உதயப்பிரகாஷுக்குப் பிரிக்க மனம் வராததை செஷனில் ஆழ்ந்து ஆராயச் செய்தேன். அவள் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் கரைந்தோடி விட்டதென்று உத்ரகலாவிற்குத் தான் சரியாகப் புரியவைக்கவில்லை என்ற தெளிவு பிறந்தது. தன் சுயமதீப்பீடு மேலோங்குவதையும் அடையாளம் காண ஆரம்பித்தார்.

செஷன்களின் மூலம் தன்னுள் எதிர்மறை எண்ணம், உத்ரகலாவை பழிவாங்கும் எண்ணம் தோன்றுவதை அடையாளம் கண்டுகொண்டதும் வெட்கப் பட்டார். உத்ரகலா செய்கையை நிறுத்த, ஸெஷனில் பல விதமான வழிகளைப் பற்றிப் பேசப்பேச தன்நிலை மற்றும் இந்தச் சூழலைச் சந்தித்துச் சரிசெய்யும் மனநிலைக்கு உதயப்பிரகாஷ் வந்தார்.

மனம் திடமாயிற்று. தன் வாழ்வின் குறிக்கோள் மற்றும் தன் கோட்பாடுகளைத் தொலைக்காமல் உத்ரகலாவைப் புரிய வைத்தார். உத்ரகலா தானாக ஏதோ கற்பனை செய்து அதுவே நிஜம் என்பது போல் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். தன்னுடைய  உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதது அவளுடைய சுய‌நலத்தை வெளிப்படுத்துகிறது, இதுவும் தன் மனத்திற்கு ஒப்பாத விஷயம் என்றார். மேலும் தன் ஏக்கத்தை வெளிப்படையாகக் காட்டியதில் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டாள் என்ற கசப்பான உண்மையை அவள் முன் வைத்தார். உத்ரகலா கேட்டுவிட்டு, வேறொருவரைத் தேடத் தெரியும் எனச் சொல்லிச் சட்டென்று சென்று விட்டதாக உதயப்பிரகாஷ் கூறினார்.‌ அவள் இன்னொருவனைப் பின்தொடரும் விஷயம் தெரிய வந்தது.

நாட்கள் சென்றது. என் ஸெஷன்களும் முடிவடைந்தன.

உதயப்பிரகாஷ் விளையாட்டில் நன்றாகப் பயின்று முன்னேற்றம் பெற்றுப் பல கோப்பைகளை வென்றார். படிப்பிலும் வேலையிலும் முழுமனதோடு ஈடுபட்டு வருவதாக அவருடைய விளையாட்டுப் பயிற்சியாளர் பெருமையுடன் கூறிவிட்டுச் சென்றார்.

பின்தொடர்தல் குறைவின் பிரதிபலிப்பு!

வன்முறையை

எதிர்கொள்ள

வளங்களை அறிந்து உபயோகிக்க வேண்டும்!