Why Is It Cold on Airplanes in 2024? | The Experts Explain

போயிங் விமானம் நிமிடத்திற்குப் பல கிலோ மீட்டர்களை விழுங்கிக் கொண்டு பறந்தது. மரியா ஜன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.  மேலே இளநீல வானம்   , கீழே வெள்ளை முகில்கள் பலதரப்பட்ட வண்ண உருவங்களில் உலா சென்றன. அந்தி சாய்ந்து கொண்டு வந்தது. கதிரவன் தன் இடம் நோக்கி மேற்கில் மறையவும்  வானமும் முகில்களும் பல வர்ணச் செந்நிறமாக மாறின. மரியா இந்த இயற்கை அழகை ரசித்ததாகத் தெரியவில்லை. அவள் கருவண்டை ஒத்த விழிகளில் சோகமும், தாபமும்  தேங்கி நின்றன. தன் சுருண்ட கேசத்தை வாரி சிறு முடிச்சாகக் கட்டியிருந்தவளின் சங்குக் கழுத்தில் மெல்லிய வெள்ளிச் சங்கிலியில் ஓர் சிலுவை தொங்கியது. வேறு எந்த ஆபரணமோ, அலங்காரமோ இல்லை. 

 ‘தடாம் கிடாம், தடாம் கிடாம் , என ஒலியுடன் சேர்ந்து மரியாவின் இருக்கையும் குலுங்கச் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த அரேபிய குதிரையை ஒத்த உயர்ந்த உடலமைப்போடு ஒரு மனிதன் கைகள் கால்களை உதறித் துடித்துக் கொண்டிருந்தான்.  பயத்தில் திக்திக்கென அடித்த தன் நெஞ்சின் மேல் வலது கையை வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.  அவன் வாயிலிருந்து நுரை வழிந்தது. மிரட்சியுடன் பார்த்து நின்ற மரியாவிற்கு அது காக்கா வலிப்புத்தான் எனப் புரிந்துவிட்டது. சட்டென்று விமானத் தாதியை அழைக்கும் மணிக் குமிழியை அழுத்தினாள்………. ஒருவரும் வரவேயில்லை.

மரியாவின் ஆறு வயது மகன் பீதியுடன் வாய் திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கட்டி அணைத்து, “குஞ்சு, பயப்படாதே. கண்ணை மூடிக் கொண்டிரு,” என்றாள்  அவள் மேலும் தாமதிக்காது தன் கைப்பையை திறந்து ஒரு வெள்ளிப் பேனாவை எடுத்து வலிப்பினால் துடித்துக் கொண்டிருந்தவனின் பற்களுக்கிடையே பிரயாசைப்பட்டு வைத்தாள். அதன்பின் தான் ஒரு விமானத் தாதி ஓடி வந்தாள்.

 “விமானத்தில் வைத்தியர்கள்  யாருமிருந்தால் தயவு செய்து உதவிக்கு வரவும” என  தலைமை விமான ஓட்டுநரின் குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது.

அன்று விமானத்தில் வைத்தியர் எவரும் பயணம் செய்யவில்லைப் போலும். தாதிகள்  தங்களுக்குத் தெரிந்த முதலுதவியை அளித்தனர்.

வலிப்புக் குறைந்த களைப்பில் அந்த மனிதன் மயக்கமாகவிருந்தான்.  அவன் வாயிலிருந்த பேனாவைக் கழுவிக் கொண்டு வந்து கொடுத்த தாதி, “மிக்க நன்றி. சரியான நேரத்திலே பேனாவை வாயில் வைத்து அவர் நாக்குக் கடிபடாமல் காப்பாற்றி இருக்கிறீர்கள்,”  புன்முறுவலுடன் ஆங்கிலத்தில் கூறினாள்.

“நன்றி,” எனக்கூறிய மரியா பேனாவைப் பெற்றுக் கொண்டாள்.

ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின் ஒருவன் அங்கு வந்து, ஆழ்ந்து தூங்கிக்  கொண்டிருந்தவனைச் சற்று நேரம் நின்று பார்த்து விட்டுப் போய்விட்டான்.  இவனின் நண்பனாக இருக்கலாமென மரியா எண்ணினாள். அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் அவன் வந்தான்.

“ஸ்டிவ் ஸ்டிவ்,” எனப் பெயர் சொல்லித் தட்டி எழுப்பப் பார்த்தான்.

“அவர் அசதியில் தூங்குகிறார், தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்,” என மரியா கேட்டுக் கொண்டாள்.

அவன் மரியாவை முறைத்துப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாது போய் விட்டான். பெரிய  மீசையும், தாடியுமாக அவன் அப்படிப் அவளைப் பார்க்கவும் அச்சத்தில், அவள் உடல் நடுங்கியது.

மகனுக்குத் தாதி இரவு உணவைப் பரிமாறியதும் அதை மரியா ஊட்டிவிடத் தொடங்கினாள்.  அந்நேரம் அந்தப் பெரிய மீசைக்காரன் மறுபடியும் வந்து, “ஸ்டிவ் ‘ஸ்டிவ்” என அழைத்து அவனைத் தட்டி எழுப்பினான்.  மரியா திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்குப் புரியாத பாசையில் இருவரும் பேசினார்கள். அவர்களின் பேச்சுக் குரலின் தோரணையிலிருந்து அவர்களுக்குள் ஏதோ விவாதம் நடைபெறுகிறதென்பதை மட்டும் அவள் புரிந்து கொண்டாள்.

பிள்ளைகள்  சாப்பிட்டு முடிந்ததும் மற்றச் சக பிரயாணிகளுக்கும் உணவு பரிமாறப்பட்டது. மரியா தன் மகன் முன்னால் இருந்த தொலைக்காட்சியில் டிஸ்னி அலைவரிசையை இயக்கிவிட்டுச்  சாப்பிடத் தொடங்கினாள்.

                 தாதி கொண்டு வந்த தட்டிலிருந்து எதுவுமே எடுத்துச் சாப்பிடாது ஸ்டிவ்  மிகவும் சோர்வாக இருந்தான். மரியாவிற்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“நீங்கள் தனியாகவா பயணம் செய்கிறீர்கள்?” மெதுவாக ஆங்கிலத்தில்; பேச்சுக் கொடுத்தாள்.

“ஓம். நீங்கள் தக்க தருணத்தில் உங்கள் பேனாவை என் வாயில் வைத்தீர்கள். இல்லையேல் இப்போ உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?”  இதைச் சொல்லும் போது அவனின் வாடிய முகத்தில் இலேசாகப் புன்னகை படர்ந்தது. அவன் நன்றாக ஆங்கிலம்; பேசினான். ஆனால் பேசும் போது உச்சரிப்பில் ஒருவிதமான ஒலியழுத்தம் தொனித்தது.

மரியா உணவை அருந்தியபடி,  “எனக்கு ஒரு தம்பியிருக்கிறான். அவனுக்கு வலிப்பு வருவதுண்டு.  அதனால்; தான் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை உணர்ந்து உதவினேன். சாப்பிடவில்லையா?”

“எனக்குப் பசியில்லை. ஒரே களைப்பாகவிருக்கிறது.”

“சூடான தேநீரில் மூன்று கரண்டி சீனியைக் கலக்கிக் குடியுங்கோ, தெம்பாகவிருக்கும்.”

“அப்படியா?” எனக்கேட்டவன் தேநீரில் சீனியைக் கலந்து குடித்தான்.

சிறிது நேரத்தின் பின், “நீங்கள் சொன்னது சரிதான். இப்போ மிகவும் உசாராக இருக்கிறது,” எனக் கூறினான். பின்பு பிள்ளையைக் காண்பித்து, “உங்கள் மகனா? எங்கே போகிறீர்கள்?”  மரியாதைக்காகப் பேச்சுக் கொடுத்தான். பேச வேண்டும் என்பதற்காகப் பேசினானேயன்றி அவன் கவனம்  பேச்சில் இருக்கவில்லை. மரியாவின் பதில் அவன் காதுகளில் விழவுமில்லை.

“எங்கே என்று சொன்னீர்கள்?” திரும்பவும் கேட்டான்;.

“நியுவ் யார்க்கிற்கு.”

“சொந்தக்காரர்களைப் பார்க்கப் போகிறீர்களா?” 

“இல்லை. என் மகன்……..”  தன் மகனின் தலை முடியைக் கோதியபடி தொடர்ந்தாள்.

“என் மகனின் சிகிச்சைக்காகப் போகிறோம்.” அவள் குரலில் லேசான நடுக்கம்.

“அவனுக்கு என்ன?” சாய்ந்திருந்தவன் நிமிர்ந்து இருந்து கொண்டான்.   அவன் முகத்தில் புருவம் உயர ஆர்வம் நிழலாடியது.  தன் மனக்குதிரையைக் கடிவாளம் போட்டு நிறுத்திக் கொண்டான்.

பதில் கூறப்  போன மரியாவின் கண்கள்  கலங்கின.

“உங்களுக்கு சொல்ல விருப்பமில்லை என்றால் வேண்டாம.”

 “அப்படி ஒன்றுமில்லை. என் கவலை எதிர்பார்ப்புகளை மனதிலே வைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதை விட்டு உங்களிடம் சொன்னால் இப் பயணத்தின் போது கொஞ்சம் ஆறுதல் பெறலாம். என் மகனுக்கு புற்று நோய். இது ஒரு அரிய புற்று நோயாம். எலும்பு மச்சை டிரான்ஸ்பிலான்ட (அயசசழற வசயnளிடயவெ) செய்து தான் குணமாக்க முடியுமாம்.  ஆதைத் தானம் செய்யத் தகுந்த தொண்டரும், சத்திரசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்யக் கூடிய வைத்திய நிபுணர்களும் நியுவ் யார்க்கில் தான் கிடைத்திருக்கிறார்கள்.”

“அதற்கு நிறையச் செலவாகுமே?”

“ஓம். நாங்கள் பணக்காரர் இல்லை. எனதும் என் பெற்றோரினதும் சொத்துக்களையும், நகைகளையும் விற்று, வட்டிக்கும் பணம் எடுத்துத்தான் இச்சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைத் சேர்த்தோம்.  எனக்கென்று இருப்பது என் மகன் மட்டும் தான். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.”

“உங்கள் துணைவர்?”

“அவர் இறந்திட்டார். என் கவலையெல்லாம் மகனின் சிகிச்சை வெற்றிகரமாக முடியவேண்டும் என்பது தான். நான் வேண்டாத தெய்வமில்லை.  நீங்களும் அவனுக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களா? உங்களைப்போன்ற நல்லவர்களின் பிராத்தனை அவனுக்குத் தேவை.”  

                 அவள் கோரிக்கை அவன் நெஞ்சைத் தொட்டது. அவனால் உடனே பதில் கூற முடியவில்லை.

      “உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” எனக்கேட்ட மரியா தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ‘ஐயோ முன் பின் தெரியாதவரிடம் அதிக உரிமை எடுத்து இப்படி கேட்டு விட்டேனே,’ என எண்ணியவள்,

“நான் உங்களிடம் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது,  தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.”  

மரியாவின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அவன் மனதைக் கசக்கிப் பிழிந்து,  நெஞ்சின் ஒரு மூலையில் சுரீரென வலித்தது. 

“நிச்சயமாக என் கடவுளிடம் வேண்டுகிறேன்.” அவனையும் மீறி வார்த்தைகள் வெளிவந்தன.

“மிக்க நன்றி.  நீங்கள் வேலையாகவா போகிறீர்;கள்?”

“ஓம்.” அவன் ஒரு வார்த்தையில் பதிலளித்தான்.

மரியா சற்றே கண்களை மூடிக் கொண்டு சாய்ந்திருந்தாள்.  அவள் மனத்தில் நம்பிக்கை எழுந்தது.  அதன் அடிப்படையில் அவள் எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் உயரப் பறந்தது. அந்தச் சிந்தனைகளை யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்பினாள். அருகிலிருந்த ஸ்டீவிடம் அவற்றைக் கொட்டினாள்.

                 “ஸ்டீவ், சிகிச்கைக்குப் பின் என் மகன்  திடமாகக் குணமாகிவிடுவான். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் எங்கள் பிராத்தனைகளைச் செவிமடுத்து ஏற்று நல்ல பலனைத்தருவார். இவன் நோய் குணமாகி ஊருக்குத் திரும்பியதும் மகனின் படிப்பில் கவனத்தைச் செலுத்தப் போகிறேன். அவன் நல்ல புத்திக் கூர்மையுடையவன். படித்துப் பெரிய பதவியில் சேர வேண்டும் என்பதே என் ஆசை.”

                 இதைக் கூறும் போது அவள் மனக் கண்முன் தன்  மகன், வாலிபனாக வளர்ந்து அழகான உடை அணிந்து கம்பீரமாக நடந்து வருவது போன்ற ஓர் பிரமை. அந்தக் கற்பனையின் உவகையில்; அவள் கரும் விழிகளின் ஓரம் நீர் கசிந்தது.

                 “உங்கள் நம்பிக்கை வீண் போகாது.” மரியாவின் முகத்தில் படர்ந்திருந்த சந்தோசத்தைக் கண்டதும் அவனையறியாமல் வார்த்தைகள் வெளி வந்தன.

                 “நன்றி. இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறோம்,”  எனக் கூறியவள் கலகலவெனச் சிரித்தாள்;. ஸ்டீவும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

“நான் ஒப்பனை அறைக்கு போறேன். என் மகனைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்,” எனக் கூறிவிட்டுச் சென்றாள். 

                 தன்னை மறந்து சிரித்ததை நினைத்து ஸ்டீவ் ஆச்சரியப் பட்டான். ‘இப்படிச் சிரித்து எத்தனையோ வருடங்களாயிற்று.’ டிஸ்னி படம் பார்த்துக் கொண்டிருந்த மரியாவின் மகனின்  பால் வடியும் முகத்தைப் பார்த்தான். ஒரு நிமிடம் அவன் இதயத்துடிப்பு நின்று மீண்டும் அடித்தது. அவன்  தோள் மேல் கையை வைத்து,

“ஹலோ! என் பெயர் ஸ்டீவ். உன் பெயர் என்ன?”

 ஸ்டீவ் பக்கம் திரும்பியவன், “ஜேகப்,” என்றவனின் கவனம்  திரும்ப டிஸ்னி படத்திற்கே போனது.

‘தனக்கு வந்திருக்கும் பொல்லாத நோயின் தாக்கம் தெரியாமலோ, அல்லது குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையிலோ நிம்மதியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். என நினைத்த ஸ்டீவின் மனதில் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. இருக்கையில் சாய்ந்து  கண்ணை மூடிக் கைகளால் முகத்தை வழித்துக் கொண்டான்.  இருக்கையில் இருப்பதும் எழுவதுமாக ஒரு நிலை கொள்ளாமல் தவித்தான். எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மரியா வந்த பின் தானும் ஒப்பனை அறை சென்று வந்தான்.

                 நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மரியாவை ஒலி பெருக்கியில் விமானத் தலைவரின்  அவசரக்குரல்  திடுக்கிட்டு எழ வைத்தது.

“தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்து வரும் விமான நிலையத்தில் இவ்விமானம் தரை இறங்க இருக்கிறது. ஆகையால் நியுவ் யார்க்கிற்குக் குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியாதிருக்கும். இதனால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம்,” என மிகத்தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார்.

பயணிகளிடம் மெதுவாக எழுந்த முணு முணுப்பு அலை அலையாக எழுந்து இரைச்சலாக விமானத்திற்குள் ஒலித்தது. பக்கத்தில் இருந்த ஸ்டீவிடம் என்ன காரணமாக இருக்குமென கேட்பதற்குத் திரும்பிப்; பார்த்தாள்.  ஸ்டீவைக் காணவில்லை.  ஒப்பனை அறைக்கு சென்றிருக்கலாம், வரட்டும் எனக் காத்திருந்தாள்.  வராது போகவே, ‘மீண்டும் வலிப்பு வந்து அங்கு விழுந்து விட்டாரோ?’  என அவள் தாயுள்ளம் ஸ்டீவைப் பற்றிக் கவலைப்பட்டது.

விமானம் தரை இறங்கிய சிறிது நேரத்திற்குப்பின் வாசற் கதவு திறக்கப்பட்டது.  இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். மரியாவைக் கடந்து விமானத்தின்  பிற் பகுதியில் உள்ள ஆசனங்களை நோக்கி நடந்தனர். முன்னர்  ஸ்டீவை வந்து பார்த்த மனிதனின்  கரங்களில் விலங்கை மாட்டி அழைத்துச் சென்றனர். அவன் ஆத்திரத்துடன் ஆங்கிலத்தில், “என்ன செய்கிறீர்கள்?  எதற்காக என்னைக் கைது செய்கிறீர்கள்?”  எனக் கத்தியபடி இழுபட்டுச் சென்றான். அவனின் உரத்த குரல்  கேட்டுப் பயந்த சில பிள்ளைகள் அழத் தொடங்கினர்.; மரியா பயத்தினால் அழத்தொடங்கிய தன் மகன் ஜேக்கப்பை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

                 மறுபடியும் விமான ஒலிபெருக்கியில், விமானத்தலைவர், “இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.  பயணிகள் தயவு செய்து உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு கிழே இறங்கி விமான நிலையத்தின் ஓய்வு அறைக்குச் செல்லவும். அங்கே உங்களுக்கு வேண்டிய உணவுகள், பானங்கள் பரிமாறப்படும். அடுத்த பன்னிரண்டு மணித்தியாலங்களுக்குள்  எல்லோரையும் வேறு விமானம் மூலம் நியுவ் யார்க்கிற்கு அனுப்பி வைப்போம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தயவு செய்து எங்களுடன் ஒத்துழையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு மீண்டும் மன்னிப்புக் கோருகிறோம்,” என அறிவித்தார்.

**************

நியுவ் யார்க் போய் சேர்ந்த மரியா பிரயாண அலுப்புப் போக நன்றாக நித்திரை கொண்டு  எழுந்தாள்.  சிநேகிதி கொடுத்த ஆவி பறக்கும் தேநீரைச் சுவைத்து அருந்தியபடி நடந்து வந்தவள், மேசை மேலிருந்த பத்தரிகையில் ஸ்டீவின் புகைப் படத்தைப் பார்த்து திகைத்துப்  போனாள்.  பாதி அருந்திய தேநீர்க் கோப்பையை நடுங்கும் கரங்களால் மேசை மேல் வைத்து விட்டுப் பத்திரிகையை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.

                 “யுனைடெட் ஏர் லைன்ஸ் பிரயாணிகள் அதிசயமாக உயிர் தப்பினர்.” தலைப்பை வாசித்த மரியாவிற்கு உடல் பட்டென்று குளிர்ந்து வியர்த்தது, கண்கள் இருண்டன, கால்கள் துவண்டன. நிற்க முடியாமல் சோபா மேல் அமர்ந்தவள் மிகுதியைப் படித்தாள்.

“நேற்று இரவு நியுவ் யார்க் வந்திறங்கிய யுனைட்டட் ஏர் லைன்ஸ் போயிங் 777 ஐ குண்டு வைத்துத் தகர்க்க இருந்த தற்கொலைப் பயங்கரவாதியின் மனமாற்றத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிர் தப்பினர்.  இப் படத்தில் இருக்கும் ஸ்டீவ், மத்திய கிழக்கு நாட்டவரின் தோற்றம் கொண்டவர். இவரது உண்மையான பெயர் தெரியவில்லை. அவருடைய மனமாற்றத்தின்  காரணத்தைக் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

“விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் எனக்குப் பல வருடங்களாக வராதிருந்த வலிப்பு நோய்  வந்தது. நான் சுய நினைவை இழந்து விட்டேன்.  அருகிலிருந்த ஒரு பெண் அளித்த முதலுதவியினால் எனக்கு எந்த வித விபத்தும் இன்றித் தப்பினேன்.

 அவளின் மனித நேயத்தைக் கண்டு வியந்தேன். அது சாதி மத பேதங்களைத் தாண்டிய நேயம். நான் யாரோ, அவள் யாரோ.  அவள் எந்த ஊரவளோ, அவள் தாய்  மொழி யாதோ எதுவுமே எனக்குத் தெரியாது. அவள் சொல்லவுமில்லை நான் கேட்கவும் இல்லை.  என் வாயிலிருந்து நுரை கக்கியும் அருவருப்பின்றி, தன் பேனாவை வாய்க்குள் வைத்து, என்  நாக்குக் கடிபடாமல் பாதுகாத்தாள்.  பயணத்தின் போதும் அவள் என்னை அன்போடு கவனித்துக் கொண்டாள். என்னைப் பெற்ற  தாயே என் அருகில் இருப்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.

 அந்தப் பெண் தன் சொத்துக்கள் எல்லாம் விற்று,  புற்று நோயினால் வருந்திக் கொண்டிருக்கும் தன் ஒரே பிள்ளைக்குச் சிகிச்சை பெறுவதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தாள்.   தன்  மகனின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கனவுகளை என்னிடம் சொல்லி மகிழ்ந்தாள்.

பளிங்கு போன்ற அவள் உள்ளத்தில் ஒளிவு மறைவு எதுவுமே இல்லை. தன்னைப் போலவே என்னையும் எண்ணி  கள்ளம்; கபடமின்றிப் பழகினாள். அவளுடைய அன்பு, பரிவு, சக மனிதர்கள் மேல் இருந்த நம்பிக்கை என்னை உருக்கிற்று. என்னை ஆக்கிரமித்திருந்த துவேசம், இன வெறி எல்லாவற்றையும் மழுங்க வைத்து ஒரு மூலையில் மடிந்து கிடந்த பரிவு,  அன்பு,  இரக்க உணர்வுகளை உயிர் பெற்று எழச் செய்து விட்டது. 

விமானத்தில் சில புதுத் தம்பதிகள்  தங்களை மறந்து இன்பக் கடலில் மிதந்து தேன் நிலவு கொண்டாடச் சென்று கொண்டிருந்தனர். முதற் பேரப் பிள்ளையை ஆவலோடு பார்க்கப் பெருமையோடு பயணிக்கும் பாட்டன் பாட்டி. வாழ்க்கையை சுவைக்கத் துடிக்கும் முகை அவிழ்ந்த மொட்டுகளை ஒத்த பாலர்கள்.  பல எதிர்பார்ப்புகளுடனும் ஆசைகளோடும்  பல இன மக்கள் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  அவர்களுக்கும் என் இனத்திற்கும் என்ன பகை? இவர்களின் உயிரை நான் ஏன் அழிக்க வேண்டும்?

பலம் பொருந்திய நாடுகள், எம்போன்ற பலம் குன்றிய நாடுகள் மீது படையெடுப்பு நிகழ்த்துகின்றனர். ஆக்கிரமிப்புகளையும் நடாத்துகின்றனர். இதனால் எம் மக்களின் இரத்தம் பூமித்தாயின் மடியில் ஆறாக ஓடுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்து  சுதந்திரத்தையும், தனித்துவத்தையும் நிலைநாட்டக் கிளர்ச்சியும், பயங்கரவாதமும் எழுதல் யதார்த்தம். ஆனால் இந்தக் கண்மூடித்தனப்  பயங்கரவாதத்தால்,  அப்பாவி மக்களும் தாக்கப்படுகின்றனர். அழிந்தொழிவது பெறுமதி மிக்க மனித உயிர்கள.  பயங்கரவாதத்தின் உச்சக் கட்டத்தில் நின்ற எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. போரில் தருமம் இருப்பது போல் பயங்கரவாத முறைகளிலும்  ஒரு தருமம் இருக்க வேண்டுமென உணர்ந்தேன்;.  

 அறிவும் சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட நான்,  அப்பாவி மக்கள் மீது மேற் கொள்ளவிருந்த வன்முறையை நினைத்து வெட்கப்பட்டேன். ஒரு முடிவுக்கு வந்தேன்.

 என்னுடன் வந்த கூட்டாளியின் மனதை மாற்றுவதென்பது இயலாத காரியம். அதனால் நானும் சரணடைந்து அவனையும் காட்டிக் கொடுத்தேன்.  பில்! என்னை மன்னித்து விடு.  உனக்கு என் மேல் ஆத்திரமாக இருக்கும். என்னைத் துரோகி எனவும் நீ நினைக்கலாம். ஆனால்,  நுற்றுக் கணக்கான அப்பாவி மனிதர்களினதும் குழந்தைகளினதும் உயிர்களைக் காப்பாற்றிய திருப்தி எனக்குக் கிடைத்திருக்கிறது,” என் றான்.

                 இதை வாசித்த மரியாவின் நா வரண்டது,  கைக் குட்டையினால் முகத்திலும் கழுத்திலும் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.  எழுந்தோடிப் போய் அடுத்த அறையில் தொலைக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்த ஜேக்கப்பை கட்டி அணைத்து முத்தமிட்டாள். கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனக் கன்னங்களில் வழிந்து அவள் மேலாடையை நனைத்தது. சாவின் விளிம்பில் நின்ற மகனையும் தன்னையும் காப்பாற்றிய கடவுளுக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக்கி நன்றி செலுத்தினாள்;. தடுப்புக்காவலில் சித்திரவதைக்கு உள்ளாகப் போகும் ஸ்டீவுக்காகவும் அவள் அழுதாள்.