அட்டகாசமான இசை விழா !

அமெரிக்கையான கிருஷ்ணசரிதம் உபன்யாசம்!

அமைப்பாளர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும், பாடியவர்களுக்கும் ,  பகவான் கிருஷ்ணன் கதையை  மனதை உருக்கும் வகையில் வழங்கிய ரம்யா வாசுதேவன்  அவர்களுக்கும், இசைக் குழுவினருக்கும் , தொகுத்து வழங்கிய இந்திரா ராமநாதன் அவர்களுக்கும்,  நினைவில் நிற்கும் பரிசு வழங்கியவருக்கும் , கேட்டு ரசித்த நல்ல உள்ளங்களுக்கும், வயிறார   உணவு அளித்தவர்களுக்கும், அரங்க அமைப்பு செய்தவர்களுக்கும்,  காணொளி மற்றும் புகைப்படம் பதிவிட்டவர்களுக்கும்  குவிகத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

 

 

விழாவைப் பற்றி ரேவதி பாலு அவர்களின் தொகுப்பு : 

இசைப் புதிது குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
துள்ளல் திரையிசையும் – பக்தி பரவச உபன்யாசமும்.

எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் பதிப்பாளர் என்று பன்முகங்களை உடைய திரு அழகியசிங்கர் அவர்கள் புதிது புதிதாக வாட்ஸப்பில் குழுக்களை ஆரம்பித்து வைத்து, சில வருடங்களாகவே கதை புதிது, சொல் புதிது, இசை புதிது, கலை புதிது போன்ற குழுக்கள், இலக்கியம், கவிதை, இசை பிற கலைகளுக்காக நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் ‘இசை புதிது’ குழு ஆரம்பித்த விதமே சுவாரசியமானது. திருமதி ரம்யா வாசுதேவன் தன்னுடைய ‘அண்டர் த ட்ரீ’ மூலம் சொல்லும் கதைகளில் ஒருமுறை தி.ஜா.வின் ‘செய்தி’ என்னும் கதையை சொன்னார். அதில் ‘சாமா’ ராகத்தில் அமைந்த ‘சாந்தமுலேகா’ கீர்த்தனையைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டன. கதை புதிது, சொல் புதிது குழு உறுப்பினரான நாகேந்திர பாரதி அவர்கள் அதைப் பற்றி தன் சந்தேகங்களைக் கேட்கப் போக சாந்தி ரஸவாதி அதற்கு விளக்கம் அளிக்கும் முகமாக அழகியசிங்கர் மூலம் ‘இசை புதிது’ என்னும் குழு இரண்டு வருடங்களுக்கு முன் உருவானது.

இந்தக் குழுவில் கர்நாடக சங்கீதம், திரையிசை என்று இரண்டிற்கும் களம் அமைத்துக் கொடுத்து சாந்தி ரஸவாதியும், நாகேந்திர பாரதியும் இதை நிர்வகித்து வருகிறார்கள். அநேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள் அங்கத்தினர்களாக இருக்கும் இந்தக் குழுவில் தினமும் ஒரு ராகம் குறிப்பிடப்படும். அந்த ராகத்தில் அங்கத்தினர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை பாடுவார்கள். தினமுமே காலை வேளையில் திருமுறைப்பாடல்களான தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாமே அங்கத்தினர்களால் ஆர்வத்தோடு இசைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இதைத் தவிர மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை. காலையில் கர்நாடக சங்கீதம், பக்திப் பாடல்கள், பிற்பகலில் திரையிசைப் பாடல்கள் என்று நெறிமுறை வகுத்துக் கொண்டு, அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு உலா வரும் குழு இது. அவர் உருவாக்கிய எல்லா குழுக்களிலும் ‘இசை புதிது’ தான் சுறுசுறுப்பான அங்கத்தினர்களைக் கொண்டு மிகவும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக அமைப்பாளர் திரு அழகியசிங்கரிடமே சான்றிதழ் வாங்கிய குழு இது. சமீபத்தில் ‘ராகம் புதிது’ என்று ஒரு புதிய குழு ஆரம்பிக்கப்பெற்று கர்நாடக சங்கீதத்தின் பால பாடமான சரளி வரிசையிலிருந்து, விரும்புவர்கள் கற்றுக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இசை புதிது குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 27.03.25 அன்று தி.நகர் மத்ஸ்யா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவை இரண்டு பிரிவாகப் பிரித்து முதலில் திரையிசைப் பாடல்கள் ஆர்க்கெஸ்ட்ராவோடு இணைந்து, ‘மாறும் குரல்களும் மயங்கும் ரசிகர்களும்’ என்னும் தலைப்பில் இந்திரா ராமநாதன் அவர்களின் அற்புதமான இணைப்புரையோடு நடைபெற்றது. கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.டி பாகவதர் பாடல்களில் ஆரம்பித்து டி.எம்.எஸ்., பானுமதி, சந்திரபாபு, ஜமுனா ராணி என்று பயணித்து மிக சமீப கால பாடகர்களான சித் ஸ்ரீராம், அனன்யா பட் போன்றவர்களின் பாடல்களையும் பாடி முடித்தார்கள் அங்கத்தினர்கள். இணப்புரை வழங்கிய இந்திரா ராமனாதன் இடையிடையே கொடுத்த தகவல்கள் நாம் கேள்விப்படாதவை, படு சுவாரசியமானவை. உதாரணத்திற்கு திருமதி கே.பி.சுந்தராம்பாள் தான் அரசியலில் பிரவேசித்த முதல் நடிகை என்றும் அவர் அந்த காலத்திலேயே மேல் சபை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்றும் கூறி வியக்க வைத்தார். இதே போல ஒவ்வொரு பாடகர், பாடகி, இசை அமைப்பாளர் பற்றிய மிக மிக சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து அவருக்கு குழுவில் செல்லமாக சூட்டப்பட்டிருக்கும் ‘பிலிம் ந்யூஸ் ஆனந்தி’ என்னும் பட்டப்பெயருக்கு ஏற்றவாறு ‘இந்தா பிடி!’ ‘இந்தா பிடி!’ என்று அரிய தகவல்களை வீசிப் போட்டார்.

அதன் பின் ஆரம்பித்தது இசை புதிது குழுவின் கர்நாடக சங்கீதப் பகுதி. இந்த வருடம் வித்தியாசமாக ‘அண்டர் த ட்ரீ’ மூலம் 2500 கதைகளுக்கு மேல் சொல்லி மிகப் பிரபலமான ‘கதை சொல்லி’யாக விளங்கும் ரம்யா வாசுதேவன் ‘கிருஷ்ண சரிதம்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டு விழாவில் உபன்யாசம் செய்ய இசைந்தார். இடையிடையே உபன்யாசத்திற்குத் தகுந்தவாறு கர்நாடக இசைப் பாடல்கள் இசை புதிது குழுவினரால் பாடப் பெற்றது. முதலில் மேடையில் தன் சரிதத்தை சொல்ல வந்தவருக்கும், கேட்க வந்தவர்களுக்கும் ஆசி வழங்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா குழலூதும் கிருஷ்ணனாக பொம்மை வடிவத்தில் எழுந்தருளினார்.

பொதுவாகவே மனிதர்களுக்கு இருக்கும் தேடல் அவர்களை வாழ்க்கையில் அடுத்த உயரத்தை எட்ட வைக்கும். அந்த வகையில் ரம்யா வாசுதேவனின் ஆன்மிகத் தேடல் அவரை சிறந்த குருமார்களை தேடித் தேடி கண்டுபிடித்து பாகவதம், பகவத் கீதை, திவ்ய பிரபந்தம் போன்ற சிறந்த கிரந்தங்களை கற்க வைத்திருக்கிறது. தான் கற்று உள்வாங்கிய சத்தான விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக மேடையேறி உபன்யாசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கிருஷ்ண சரிதத்தை கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து சொல்ல ஆரம்பித்து, பிறகு மிக அழகாக, பிருந்தாவன லீலைகள், காளிங்க நர்த்தனம் கோவர்த்தன கிரியை ஏந்தியது, ராசலீலைகள், குசேலர் கதை என்று தன் உரையின் மூலம் நம்மை பக்தி பரவசத்தில் கட்டிப் போட்டார் ரம்யா.

‘சிறந்த கதை சொல்லி’ என்று பெயர் பெற்ற ரம்யா வாசுதேவனின் இன்னொரு பரிமாணத்தை இதன் மூலம் இசை புதிது குழு எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு அல்லாமல், இந்தக் குழுவும் கர்நாடக சங்கீதத்தைத் தாண்டி ‘உபன்யாசம்’ என்னும் பரிணாம வளர்ச்சி பெற்றது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ஊனக் கண்களைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கும் நம் ஞானக்கண்ணைத் திறக்கும் முயற்சியாக அமைந்தது இந்த உபன்யாசம் என்றால் அது சற்றும் மிகையில்லை.

மிகச் சிறப்பான ஆர்கெஸ்ட்ராவோடு உறுப்பினர்களின் துள்ளல் திரையிசை, பக்தி பரவசமாக உபன்யாசம் கர்நாடக இசைப் பாடல்களோடு, என்று பல்சுவையில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற இசை புதிது குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி மிக சிறப்பான இரவு விருந்தோடு முடிவுற்றது. இதற்காக பெங்களூரிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் வந்த உறுப்பினர்கள் திருமதி மீனாட்சி பாலகணேஷ், திரு சாய் கணேசன் ஆகியோரின் ஆர்வமும், ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை. சிறப்பு விருந்தினராக குவிகம் திரு சுந்தரராஜன் கலந்து கொண்டு இசை புதிது குழு உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்தினார்.

இசை புதிது குழுவின் 63 ஆக்டிவ் உறுப்பினர்களின் புகைப்படங்கள் கலை புதிது குழுவின் நிர்வாகி திருமதி சுகன்யா சம்பத்குமாரால் அற்புதமாக கொலாஜ் செய்யப்பட்டு அதன் பின்புறம் ஒரு காந்தம் அமைக்கப் பெற்று வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் ஒட்டி வைக்கும்படி எல்லோருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.