நெருநல் உளனொருவன்-1  

SRN doc found dead in car: Three fellow docs to be quizzed - Hindustan Times

“வி. வி. எஸ் !  யூ ஸிட் இன் த ஃப்ரண்ட் ! யாரு கூட வராங்க ? நடராஜன்? சரி லெட் ஹிம் ஸிட் இன் த பேக். வொர்ரி பண்ணிக்காதீங்க .. ஜாக்கிரதை யூ ஆர் டூயிங்க் ஆ க்ரேட் சர்வீஸ். நம்ம டிபார்ட்மெண்ட் சார்பா நீங்க போறீங்க. ஓகே.. போய் சேர்ந்த பிறகு ஃபோன் போடுங்க.. காட் பி வித் யூ ! “

“புரொஃபசர் எஸ். கே. என் தோளை அணைத்து , மெதுவாக, பல்கலைக்கழக வளாகத்தின் போர்டிகோவில் நின்று கொண்டிருக்கும் பழைய அம்பாசடர் காரில் ஏறச் சொன்னார்.

காலை ஏழு மணி என்றாலும் ஒரு சிறிய மாணவ மாணவியர் கூட்டம் எங்களை வழியனுப்பியது.

இறுக்கமான முகத்துடன் டிரைவர் வண்டியை எடுத்தார். வண்டியில் டிரைவரைத் தவிர  நாங்கள் மூன்று பேர். நான், நடராஜன், தாமஸ். நான் பின்னால் திரும்பிப் பார்க்க, என் கண்களை சந்திக்கக் காத்திருந்தவன் போல, நடராஜன் ஒரு கேவலுடன் விம்மி அழ ஆரம்பித்தான். அவனை சமாதானப் படுத்த, கொஞ்சம் வளைந்து பின் திரும்பி ஆறுதல் சொல்லத் தொடங்கினேன். இதையெல்லாம் கவனிக்காமல், இந்த சூழலுக்குக் காரணமான தாமஸ், நடராஜன் மடியில் பின்னிருக்கையில் உயிரற்ற சடலமாகப் படுத்திருந்தான்.  

பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயிலை விடுத்து, கார் நெடுஞ்சாலையில் திரும்பி மதுரை நோக்கி விரைய ஆரம்பித்தது. மதுரை பஸ் ஸ்டாண்டே இங்கிருந்து பதிமூன்று  கிலோ மீட்டர்.  அதன் பிறகு கட்டபொம்மன் சிலையைச் சுற்றித் திரும்பி சென்னை போகவேண்டும். தலை இலேசாக வலிப்பது போலிருந்தது. இரவு முழுதும் தூக்கமில்லாததால் சிவந்திருந்த கண்களை மெல்ல முடிக்க கொண்டு இருக்கையில் சாயந்துகொண்டேன்.

நான் நடராஜன் தாமஸ் தவிர மொத்தம் இருபது பேர்கள் கொண்ட எங்கள் வகுப்பில் ஒருவரை ஒருவர் கடந்த மூன்று மாதங்களாகத்தான் அறிவோம். முப்பது வயதுக்கு உட்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கான நான்கு மாத பயோகெமிஸ்ட்ரி ஆய்வுப் பட்டயப் பயிற்சி வகுப்பு அது. மதுரைப் பல்கலைக்கழகம் நடத்துவது. உணவு, விடுதி வசதிகள் தவிர சம்பளத்தோடு கூடிய விடுப்பும் உண்டு என்பதாலும், ஆல் இந்தியா அளவில் தேர்வு என்பதாலும், போட்டி கடுமையாக இருந்தது.

தேர்ந்தெடுக்கப் பட்டபோது நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கோர்ஸ் முடித்த பிறகு அப்படியே பிஹெச்டி பட்டத்துக்கும் ரிஜிஸ்டர் செய்யலாம் என்றும் திட்டமிட்டேன். கல்லூரிப் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தன. டிபார்ட்மெண்டில்  நான்தான் கடைசி நபர். நான்கு மாதங்கள் நான் விடுப்பில் சென்றால் கல்லூரி வகுப்புகள் பாதிக்கப்படும் என்று, எனது துறைத் தலைவர் ஒரு தடை வைத்தாலும், ஆய்வுத் துறையில் உலகப் புகழ் பெற்றிருந்த எங்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் என். வெங்கடசுப்பிரமணியன், ஆய்வுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு உடனே அனுமதி அளித்துவிட்டார்.

சனிக்கிழமை கல்லூரிப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பி மதுரையில் திங்கட்கிழமை விடியல் காலையில் போய்ச் சேர்ந்தேன். காலை பதினோரு மணிக்குத்தான் ரிப்போர்ட் செய்யவேண்டும். ( இடைப்பட்ட நேர அனுபவங்கள் வேறொரு கட்டுரைக்கு ரிசர்வ் செய்யப்படுகிறது)

கட்டபொம்மன் சிலையிருக்கும் மதுரை பேருந்து நிலையத்தில் பெட்டி படுக்கையுடன் பல்கலைநகருக்கு பயணச்சீட்டு எடுத்து, எப்படியோ கும்பலில் உட்கார இடம் கிடைத்து ,ஒருவழியாக பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தேன். நிறைய வெய்யில் , நிறைய நடை.: ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் இருந்தது ; பெரிய தார் சாலைகளின் இரு மருங்கும் மரக்கன்றுகள்; இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நிழல் தர ஆரம்பிக்கும்.

ஒருவழியாக “School of Biological Sciences “ என்று எழுதப்பட்ட கட்டடம் கண்ணில் பட்டது. வரவேற்பு ஹாலில் ஒரு கரும்பலகையில்  “ Welcome to all C.C,B.C. participants. Go to Bio Chemistry Lab “ என்று எழுதப்பட்டிருந்தது. அங்கே நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி  என் அழைப்புக் கடிதத்தையும். அடையாள அட்டையையும் சரி பார்த்துவிட்டு, ஒரு பெரிய ரிஜிஸ்டரில் கையெழுத்து இடச்சொன்னார்.

“ சார்! நீங்க பக்கத்தில இருக்கற ரூமில் போய் உட்காருங்க.. புரொஃபசர் ஜே. ஜே. வர இன்னும் அரைமணி நேரம் ஆகும்”

மூடியிருந்த அறையின் பெரிய கதவை தள்ளித் திறந்துகொண்டு கையில் பெட்டி படுக்கையுடன் உள்ளே நுழைந்தேன். ஐம்பது பேர் அமரக்கூடிய பெரிய அறை. நடுவே செவ்வகமாக ஒரு பெரிய நீ.. ள மேசை. சுற்றி இருபது பேர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு புறம் பெரிய செவ்வக வடிவில் சுவற்றில் பதிக்கப்பட்ட கண்ணாடிக் கரும்பலகை. பலகையின் மேற்புறத்தில் இரு ஓரங்களில் சிறிய ஃபோகஸ் விளக்குகள். பக்கத்தில் புரொஜெக்ஷன் செய்ய வசதியாக ஸ்டாண்டில் வெள்ளைத் திரை.  இது ஒரு கான்பரன்ஸ் ஹால் என்று புரிந்துவிட்டது.

காலை பதினோரு மணி மதுரை வெய்யிலிலிருந்து நிழல் சூழ்ந்த ஏ. சி. அறைக்குள் நுழைந்தவுடன் சில நிமிடங்கள் உள்ளே எத்தனை பேர் அமர்ந்துள்ளனர் என்றே தெரியவில்லை. காலியாய் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன். மொத்தம் ஆறு பேர் அமர்ந்திருந்தனர். ஒருவர் பெண். யாரும் பேசவில்லை. அமைதியாக யாரையோ எதிர்பார்ப்பது போலப் பதுமைகளாய் அமர்ந்திருந்தனர். நாலைந்து நிமிடங்கள் சென்றன,

பொதுவாக ஒரு நல்லிணக்கப் புன்னகையோடு “ஹலோ குட் மார்னிங் ஐ அம் சுப்பிரமணியன் ஃப்ரம் சென்னை” என்று ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசத் தொடங்கி அனைவருமே அறிமுகமாகிவிட்டோம். அப்போது தெரியவில்லை. பிறகே தெரிந்தது. அங்கிருந்த அத்தனை மாதங்களும், எங்கள் குழுவில் நான்தான் எதற்கும் முதலில் பேசுபவனாக ஆகிவிட்டேன்; அறிவிக்கப்படாத குழுத் தலைவனாகவும் மாறிவிட்டேன்.  

உத்திரப் பிரதேசம் , கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தவிர தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், மதுரையிலிருந்தும்  பங்கேற்பவர் இருந்தனர். அங்கிருந்த நான்கு மாதங்களில் எத்தனை அனுபவங்கள் எத்தனை மறக்கமுடியாத நினைவுகள் !.

“ சார் ! மதுரை அவுட்டர்ல இருக்கம்.. பக்கத்துல ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. கண்ணாடிய ஏத்திட்டு அமைதியா இருங்க.. வண்டியில டெட் பாடி இருக்குன்னா போட மாட்டான்”

டிரைவர் குரல் கேட்க “ம்” என்று தலையாட்டினேன். கையில் உள்ள பையில் மதுரையின் சிறந்த ( பேர் சொல்ல விரும்பவில்லை) தனியார் மருத்துவமனை கொடுத்த இறப்பு சான்றிதழ். மற்றும் தாமஸ் தொடர்பான ஆவணங்கள் , எங்கள் அடையாள அட்டைகள் இருப்பதை பத்தாவது முறையாக உறுதிசெய்து கொண்டேன்.

பெட்ரோல் நிரப்பிக் கொண்ட வண்டி நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

வந்திருந்த இருபது பேரும் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்கள்.

“ ஹேய் ஒண்லி  வி டூ ஆர் ஃப்ரம் சென்னை.  “என்று மலையாள வாசனையில் கை கொடுத்தவன் தாமஸ். ஒல்லியான உருவம்; நல்ல கறுப்பு. கொஞ்சம் உயரம். மிகக் கவர்ச்சியான சிரிக்கும் கண்கள். குறுந்தாடி. ஸ்டைலான டிரஸ். மொத்தத்தில் “கையில் கிடார் எங்கே “ எனக் கேட்கத் தோன்றும் உடல் நெளிவு. பார்த்தவுடனேயே எனக்கு அவனைப் பிடித்துவிட்டது. மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பணிபுரிபவன்.

பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கட்டடம் ,துணைவேந்தர் அலுவலகம் உட்பட மிகப் பெரிது. அதைச் சுற்றிலும் பல துறைகளின் கட்டடங்கள். வலது புறத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆண்கள் விடுதி. துணைவேந்தர் அலுவலகத்தின் இடது புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெண்கள் விடுதி. அதன் எதிர்ப்புறம் விரிந்த காலனியில் பேராசிரியர்களின் குடியிருப்புகள். அதையும் தாண்டி அதன் பின்புறம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான “குவாரட்டர்ஸ்” . ஒரு ஹால் பெட்ரூம் சமையலறை கொண்டது. திருமணமான , ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆய்வுப் பட்டத்திற்கு பயிலும் பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்படுவது.

மாணவர் விடுதியில் இடமில்லை என்பதால் இது போன்ற ஒரு வீடு நான், தாமஸ், பழனியைச் சார்ந்த சின்னு  என்ற சின்னசாமி, பெல்காமில் இருந்து வந்த  மயன்னவர் ஆகிய நால்வருக்கும் ஒதுக்கப்பட்டது. நானும் தாமஸும் இதனால் இன்னும் நெருக்கமாகிவிட்டோம். விடுதியை விட இங்கே இடம் அதிகம். மொட்டை மாடியில் ஏறிப் படுத்துக் கொண்டால் அசத்தலாகத் தூக்கம் வரும்.

ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. உணவுக்கு நாங்கள் விடுதிக்குத்தான் செல்லவேண்டும். போக வர கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர். காலையில் ஓகே. சாப்பிட்டுவிட்டு அப்படியே டிபார்ட்மெண்டுக்கு போய் விடுவோம். இரவு நேரம் கஷ்டம். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தாமஸ் வந்து எங்களிடம் ஸ்வீட் பாக்ஸை நீட்டி,

“ ஹாய் ஃபிரண்ட்ஸ் ஐ அம் ப்ளெஸ்ட் வித் எ பேபி சன்” என்று மகிழ்ச்சியோடு அறிவித்தான். எங்கள் கூட்டத்தில் இருந்த மணமான நால்வருள் அவனும் ஒருவன் என்றாலும் அவன் மனைவி “எக்ஸ்பெக்டிங் “ எங்களுக்குத் தெரியாது. “பார்ட்டி கொடு” என்ற நண்பர்களின்  கூச்சலுக்கு இடையே

“நான் உடனே கிளம்பி சென்னை போகணும் டா! இன்னிக்கு வெள்ளிக்கிழமை. நான் சனி  ஞாயிறு போய்ட்டு வந்திடுவேன். என்  ப்ராஜக்ட் டேட்டா நீ தான் பாத்துக்கணும்  “ என்று என்னிடம் கேட்டுக் கொண்டான். நாங்கள் மேற்கொள்ளும் பரிசோதனைகள் சில ஒன்று இரண்டு நாட்கள் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கவேண்டும். நான்கு மணி நேர இடைவெளிகளில் ரீடிங் எடுக்கவேண்டும். பயோ கெமிஸ்ட்ரி பரிசோதனைகளுக்கு சனி ஞாயிறு தெரியாது. நான்கு மாத தீவிர பயிற்சி வகுப்பு என்பதால் இடையில் விடுப்பு எடுப்பது இயலாது.

“ ஓகே தாமஸ்.நீ போய்ட்டு வா! நான் டிபார்ட்மெண்டில் சொல்லிக்கறேன். உன் எக்ஸ்பெரிமெண்ட் பற்றிக் கவலைப்படாதே நான் பாத்துக்கறேன் ஒரு லெட்டர் எழுதி வச்சிடு! “

“ தாங்க்ஸ் டா .. ஆமாம் சென்னைல ஒன் ஸ்கூட்டர் இருக்கு இல்ல. ஒங்க வீட்டுல சொல்லு. நான் வரும் போது “ப்ரேக் வேன்” ல போட்டு டிரைன்ல எடுத்துண்டு வரேன். இங்க போக வர யூஸ் ஆகும்  “ என்றான்.

மூன்று நாட்கள் கழித்து திரும்பிய போது என் ஸ்கூட்டர் அவனோடு வந்து சேர்ந்தது. அந்த ஸ்கூட்டரில் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் மதுரையிலும் அலையாத இடமில்லை.

அதுதான் தாமஸ்!. தானே முன் வந்து உதவி செய்யும் இயல்புடையவன்; பாசக்கார நண்பன். பல ஆண்டுகள் பழகியவன் போல்  ஒட்டிக்கொண்டுவிட்டான். பாவி! இவ்வளவு அவசரமாகப் போவதற்காகவா இத்தனை “ஈஷி”க்  கொண்டாய்!. மனசு வலித்தது.

திடீரென்று “டமார்” என்று ஒரு சத்தம். கண் விழித்தால் எங்கள் கார் வளைந்து நெளிந்து சாலை ஓரத்தில் தஞ்சமடைந்திருந்தது.

“ சார் ! பேக் வீல் பஞ்சர்” என்றார் டிரைவர்.  

(தொடரும்)