சில பயணங்கள் சில பதிவுகள் - முதல் பகுதி

  

புத்தகம் :  சில பயணங்கள் சில பதிவுகள் ( முதல் பகுதி )

எழுதியவர் :  சுப்பு

ஆதாரம் வெளியீடு, 362 பக்கங்கள், விலை ரூ.540

       புத்தகங்கள் பல வழிகளில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. இங்கேயும் அங்கேயும் கண்ணில் பட்டு வாங்கும் புத்தகங்களைத் தவிர, புத்தக வெளியீட்டு விழாக்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்பாமல் புதிது புதிதாக புத்தகங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன. படிக்கும் வேகமும் சூழ்நிலையும் குறைந்து வருகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். படிக்காமலேயே பல புத்தகங்கள் பல நாட்களாக என் தொடுதலுக்குக் காத்திருக்கின்றன.

   போன முறை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது இப்படி படிக்காமல் இருப்பதற்கு புத்தகங்கள் வாங்காமல் இருப்பதே மேல் என்று எனக்கே நினைவூட்டிக் கொண்டு சென்றேன். பல நேரங்களில் பேராசை ஏற்பட்டும் கட்டுப்படுத்திக் கொண்டு புத்தகங்களை வாங்காமல் விரைந்து சென்றேன்.

   இதையெல்லாம் மீறி நான் ஆசையுடன் வாங்கிய புத்தகம்தான் சுப்புவின் “சில பயணங்கள் சில பதிவுகள்” ( முதல் பகுதி ). அட்டையில் சுப்புவின் முகத்தைப் பார்த்தவுடனேயே “இதை விட்டு விடக்கூடாது” என்று தோன்றியது.

   சுப்புவை எல்லோரும் “திராவிட மாயை சுப்பு” என்றுதான் அறிவர். அப்படி ஒரு புரட்சிக்கு வித்தான புத்தகத்தை எழுதி பேரும் புகழும் பெற்றவர் ஆயிற்றே அவர் ! ஆனாலும், மிகவும் எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர்.

  அவர் எழுத்தும் அவர் பேச்சைப் போன்றே இனிமையானது. “திராவிட மாயை” தமிழர்களின் வாசிப்பு உலகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் ஆய்வு நூல் என்பதை நாம் அறிவோம். இது மூன்று பகுதிகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது. இந்தப் பிரதேசத்தில் நசுக்கப்பட்டு வரும் இந்துக்களின் குரலாக இது ஒலித்தது.

   இந்த நூலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, திரு சுப்பு தன் வரலாற்றை “சில பயணங்கள் சில பதிவுகள்” மூலம் நமக்கு தந்திருக்கிறார். நவீன தமிழ் சினிமாவின் சாகசங்களும் பலதரப்பட்ட வண்ணங்களும் உள்ளடக்கிய இந்தத் தொடர் நிகழ்வின் ஊடே ஆன்ம விடுதலைக்கான முயற்சியும் அங்கங்கே.

  • விடலையாக இருந்தவனை வழிமறித்து சீர் செய்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் பற்றி…
  • காஞ்சி சங்கர மடத்து எதிரே ஈவெராவின் சிலையை வைக்க வேண்டும் என்ற மு.கருணாநிதியின் கோரிக்கையை முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் எப்படி எதிர்கொண்டார் என்பதையும்…..
  • இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் கபில்தேவிடமிருந்து கோப்பை எப்படி கைமாறியது என்பதையும்…..
  • இன்னும் பல சுவாரசியங்களையும் படித்து மகிழ சுப்புவின் இந்நூலைக் கையிலெடுங்கள் !

 சுப்புவுக்கு வாழ்த்துக்கள் !