ஏற்கனவே தலை சுத்தற நிலைமையில இருந்த எனக்கு வாசலில் அம்மா அப்பாவைப் பார்த்ததும் தலை வெடிக்கிற நிலைமைக்குப் போயிட்டேன்.
அதை விட அதி பயங்கரமான காட்சி, அம்மா அப்பாவிற்குப் பின்னாடி தெரிந்தது. ஒரு பெரிய வேட்டை நாய் அம்மாவோட புடவைத் தலைப்பைப் பிடிச்சுக்கிட்டு இருந்தது. அதோட கயிர் பின்னால ரோட்டில இருக்கிற ஜீப்பில் ஒரு ரவுடி கையில் இருந்தது. ஜீப்பில் இன்னும் மூன்று ரவுடிகள் கையில் அருவாளோட நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் பிசிற் பாஸ் மாதிரி போஸில் உட்கார்ந்திருந்தான். நான் கொடுத்த கிக் பாக்ஸ் அடியிலிருந்து அவன் சாதாரணமா நடக்க இன்னும் ரெண்டு நாளாகும். அதனால தன்னால முடியலைன்னு ஆளு வைச்சு அடிக்கக் கூட்டிட்டு வந்திருக்கான் போல இருக்கு.
சரி நம்ம கதைக்குக் கிளைமாக்ஸ் வந்திடுச்சு நாம ஹீரோயிஸம் காட்ட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.
“டேய் ! என்னாடா இதெல்லாம்? உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு தேடி வந்தா இப்படி ரவுடிங்க கையில நாம எல்லாரும் மாட்டிப்போம் போல இருக்கு. உன்னையும் இந்த வீட்டில ஒரு பொண்ணு இருக்காமே அதையும் வெளியில வந்து ஜீப்பில ஏறச் சொல்றானுக ! இல்லைன்னா எங்க ரெண்டு பேரையும் இந்த வாசல்ல நாயை வைச்சு கடிக்க விடுவானுகளாம். எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ! நீ அவனுக கிட்டே மாட்டிக்காதே!”
சரி! நாய்க்குக் கிக் பாக்ஸ் ஷாட் கொடுக்கவேண்டியதுதான் என்று யோசிக்கும் போது, எனக்குப் பின்னாலிருந்து எட்டிப்பாத்த வைஜயந்தி ‘ஹை ரோஸி’ என்று கூப்பிட அம்மாவைப் பிடித்துக் கொண்டிருந்த நாய் அந்தப் பழகிய குரலைக் கேட்டு சைக்கிள் கேப்பில் கதவுக்கு உள்ளே வேகமாய் வர கயிரைப் பிடித்துக் கொண்டிருந்தவன் கயிரை விட்டு ரோட்டில் தலை குப்புற விழுந்தான்.
வைஜயந்தி ஒரு நாய்க்கு அடிக்கடி பிஸ்கட் போடும் கதையைப் பலமுறை விலாவரியா சொல்லியிருக்காள். பிஸ்கட் போட்டப்புறம் அது அவ கையை நக்கி முத்தமிடுமாம். நான் அவள் கையயில முத்தமிடும் போதெல்லாம் இதைச் சொல்லி என்னைக் கடுப்பேத்துவா ! பரவாயில்லை. இப்ப இந்த நாய் கட்சி மாறி நம்ம கூட சேர்ந்திடுச்சு. மூணு வேளை கறி சோறு போட்டவனை விட்டுட்டு என்னிக்கோ பிஸ்கட் போட்டவ கட்சியில சேரும் நாயின் லாஜிக் எனக்குப் புரியலை. ஒண்ணு மட்டும் புரியுது. கிளைமாக்ஸ் வந்தால் எது வேணுமுன்னாலும் நடக்கும்.
‘பிடிங்கடா அவங்களை ‘ என்று பிசிற் கத்த எல்லா ரவுடிகளும் கையில் அருவாளோட ரோட்டிலேர்ந்து வீட்டு வாசல் கிட்டே வந்தானுக ! கீழே விழுந்தவனும் எழுந்து அவங்க கூட ஓடி வந்தான். கதவுக்கும் அவங்களுக்கும் இன்னும் பத்துப் பதினைஞ்சு அடிதான் இருக்கும்.
திடீர்னு அவங்க அத்தனை பேரும் அப்படியே அசையாம நிற்க விவரம் புரியாம நான் திருப்பிப் பார்த்தா கையில் பெரிய துப்பாக்கியோட நம்ம இலக்கிய வாத்தி நின்னுக்கிட்டு இருக்கார். எங்க ரெண்டு பேரையும் சுடத் துப்பாக்கியை இவ்வளவு நேரம் தயார் பண்ணியிருக்ககார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இப்போ அந்த ரௌடிகளைப் பார்த்ததும் அவங்களை அட்டாக் பண்ணணும்னு முடிவு செய்திட்டார் போல இருக்கு.
“டேய் ! எருமை மாடுகளா ! அது பொம்மைத் துப்பாக்கிடா ! அந்த வாத்தியையும் சேத்து இழுத்துட்டு வாங்கடா “ – பிசிற் குரலில் பிசிர் அடித்தது.
“யாராவது ஒரு அடி வைச்சா அடுத்த அடி நேரா சுடுகாடுதான். இது வெத்து வேட்டா இல்லை கெத்து வேட்டான்னு இப்ப பாரு” என்று சொல்லி ஜீப்புக்கு குறிவைத்தார். உள்ளே இருந்த பிசிற் நடுநடுங்கிவிட்டான். சட்டென்று ஜீப்பின் டயரைப் பாத்து சுட்டார். டயர் வெடித்து உள்ளே நின்ற பிசிற் கால் தடுமாறிக் கீழே விழுந்தான்.
இப்பப் புரிஞ்சுதா? எவனும் ஒரு அடி கூட நகரக் கூடாது. அப்படியே அட்டேன்ஷன் போஸில நின்னு கையில இருக்கிற அருவாளை மட்டும் கீழே போடுங்கடா “ என்று மிரட்டினார்.
சும்மா சொன்னாலே செய்ய வைக்கும் கணீர் டிரில் மாஸ்டர் குரல் அது. கையில் துப்பாக்கி வேற. டயர் வெடிச்ச சத்தம் கேட்டு அங்கு வந்த போலீஸ் ஜீப் ‘ என்ன பி டி சார்! என் சி சி துப்பாக்கியை நீட்டிக்கிட்டு இருக்கீங்க ! நாங்க இந்த ரவுடிகளைப் பாத்துக்கறோம். நீங்க உங்க துப்பாக்கியை மூடி வையுங்க! வெடிச்சிடப் போறது” என்ற இன்ஸ்பெக்டர் அவர்களை ஜீப்பில் ஏத்திக் கொண்டுச் சென்றார்.
நீங்க உள்ளே வாங்க ! உங்க பையன் செஞ்ச காரியத்துக்கு இவங்க ரெண்டு பேரையும் சுட்டுப் போடணும்னுதான் துப்பாக்கி எடுத்து வந்தேன். ஆனால் நான் பாத்த மாப்பிள்ளை அந்தப் பரதேசி பிசிற் செஞ்ச வேலையைப் பாத்ததும் என் மனசு மாறிடுச்சு. இப்ப பெரியவங்க நீங்க வந்திருக்கீங்க ! நீங்களே ஒரு முடிவு எடுங்க!
எங்களுக்கு ஒண்ணும் புரியலை! இவனுக்கு கல்யாணம் செஞ்சு பாக்கணும்னு இவ ஆசைப்பட்டா ! சரி! அவன் என்ன சொல்றான்னு கேட்கலாம்னு வெள்ளிக்கிழமை வர்ரதா சொன்னோம். அமெரிக்காவில படிச்ச பொண்ணு இவனுக்கு நல்லா செட் ஆகும்னு நினைச்சோம் . ஆனா இன்னிக்கு எங்களுக்கு ஒரு லட்டர் வந்தது. அதில இவன் இந்த ஊர்ல உங்க பெண்ணை விரும்பறான்னு ஒரு உண்மை விளம்பி எழுதியிருந்தான். அதை விசாரிக்கத்தான் இன்னிக்கே வந்தோம்.
உண்மை விளம்பி எழுதியிருந்தான் இல்லே! எழுதியிருந்தாள்.
என்னம்மா சொல்றே?
அதை எழுதியதே நான் தான் !
வைஜயந்தி சொன்னதும் அங்குள்ள அனைவரது கோபப் பார்வைகள் அவள் மீது விழுந்தன. ஆனால் அவள் அதை லட்சியம் செய்யவில்லை.
அடிப்பாவி!
என் பொண்ணை நான் சரியா வளர்க்கலே ! ஆனா என் கூடவே இருந்து தினமும் என்னை வைச்சு படம் எடுக்கறேன்னு சொல்லி ஒரு போட்டோ கூட எடுக்காமல் என்னை ஏமாத்தி என்னை முட்டாளாக்கி எனக்குத் தெரியாம என் பொண்ணை லவ் பண்ணின இந்தக் குட்டி வாத்தியை என்னால மன்னிக்கவே முடியாது.
என்னை மன்னிக்கச்சுடுங்க சார்! உங்களாலே முடியும். இந்த ஊருக்கு வந்து உங்களை நான் பார்க்கறதுக்கு முன்னாடியே இவளைப் பார்த்தேன். அப்பவே இவதான் எனக்கு எல்லாம்தான்னு தோனிச்சு! ஆனா அவள் ஓகேன்னு சொன்னப்பறம்தான் உங்க கிட்டேயும் என் அம்மா அப்பா கிட்டேயும் சொல்லலாம்னு நினைச்சேன். உங்க சம்மதம், எங்க அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணற எண்ணம் துளிக்கூடக் கிடையாது.
ஆனா இந்தக் கழுதை கொஞ்சம் முன்னாடி என்ன சொல்லிச்சு ? ஓடிப்போய் கல்யாணம் பணணிக்கலாம்னு ! புள்ளை குட்டி பொறந்தா அப்பா ஓகே சொல்லிடுவேணாம் !
சார்! இதெல்லாம் அவ என்னை டீஸ் பண்ணறக்காகச் சொன்னது. உண்மையில உங்க சம்மதம் எங்க அம்மா அப்பா சம்மந்தமில்லாம நான் கூப்பிட்டாக் கூட வரமாட்டா உங்க பொண்ணு! அவளைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்!
ஆமாம்ப்பா ! இவன் சொல்றது சத்தியம்ப்பா – கண்ணில் நீர் வழிய இலக்கிய வாத்தி காலில் விழுந்தாள் வைஜயந்தி.
தன் மகள் கோபப்பட்டு, சிரித்து, நக்கலாப் பேசி, துச்சமாப் பேசிப் பார்த்திருந்த இலக்கிய வாத்தி அவள் அழுது காலில் விழுந்ததை இதுவரை அவர் கண்டதே இல்லை. அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டியது.
ஐயா! உங்க பையன் தங்கக் கம்பி. என் மனசில அவனுக்குத் தனி இடம் உண்டு. என்னை – என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைச்சவன். என் கிட்டே இருக்கிற உணர்ச்சிகளை- கலை ஆர்வத்தை -இலக்கிய ஈடுபாட்டை வெளியில கொண்டுவர்ரதற்கு வேண்டிய எல்லாத்தையும் செஞ்சான். அவனுக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன். அது மட்டுமல்லாமல் என் பொண்ணை அந்தப் படுபாவி பிசிற் கிட்டேயிருந்தும் காப்பாத்தியிருக்கான். அதுக்கு ஈடா என் மகளை மட்டுமல்ல என் உயிரையும் கூடத் தரலாம் ! என் மகளை உங்க மருமகளா ஏத்துப்பீங்களா?
இவ்வளவு நல்ல பெண் எங்களுக்கு மருமகளா வர்றது நாங்க செஞ்ச அதிர்ஷ்ட்டம்தான். ஆனா ஒரு சின்னச் சிக்கல் இருக்கு! நாங்க மூணு பேரும் அமெரிக்க சிடிசன்ஸ். இவனைக் கல்யாணம் செஞ்சுகிறதினாலே இவளுக்கும் சிடிஜன்ஷிப் கிடைக்கும். கொஞ்சம் லேட்டா ஆனாலும் கிடைச்சுடும். அதனால நாங்க எல்லாரும் அமெரிக்காவிற்குப் போகணும். அது அவளுக்குத் தெரியுமா? உங்க மகளைப் பிரிஞ்சு இருக்க உங்களுக்குச் சம்மதமா? கொஞ்சம் முன்னாடி விளையாட்டா சொன்ன மாதிரி இவ இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப் போயிடுவா? அதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்களுக்குப் பரிபூரண சம்மதம்.
அவன் அம்மாவும் அவர் சொல்வது சரி என்று தலை அசைத்தாள்.
இலக்கிய வாத்திக்கும் வைஜயந்திக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அவளைப் பிரிஞ்சு இருக்கிறது கஷ்டம்தான். ஆனா அவளுக்குப் பிரியமானது கிடைக்க நான் பிரிஞ்சு இருக்கணும்னா அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்!
என்னது?
கல்யாணம் ஆகி அமெரிக்கவிற்குப் போகுமுன் என்னோட குறும் படத்தை எடுத்து முடிக்கணும்.
நிச்சயம் சார்! அது என்னோட பிராமிஸ்! உங்களோட இலக்கிய வாத்தி குறும்படத்தை உங்களுக்குப் போட்டுக் காட்டினப்பறம்தான் நாங்கள் ஹனிமூன் போவோம்! அடடா! முக்கியமானது ஒண்ணை மறந்திட்டேனே ! அப்பா அம்மா ! நீங்களும் அதை ஞாபகப் படுத்தலே! இதோ ஐந்து நிமிஷத்தில வர்றேன்!
என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தேன்.
திரும்ப வந்து பார்த்தால் வீடு பூட்டிக் கிடக்கிறது. என் அம்மா அப்பா வாத்தி வைஜி யாரையும் காணோம்.
பக்கத்து வீட்டு பையன் ‘ அவங்க நாலு பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏத்திக்கிட்டு ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க!’ என்று சொன்னான்.
இது என்னடா ! புதுப் பூதமாயிருக்கு என்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் பைக்கில் பறந்தேன்.
அங்கே போலீஸ் ஸ்டேஷனில் அவங்க நாலு பேரையும் இன்ஸ்பெக்டர் உட்கார வைத்து பிசிற் மேலே கேஸ் போட புகார் மனுவில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அந்த இன்ஸ்பெக்டர் இலக்கிய வாத்தியின் தோஸ்த். நல்ல இலக்கிய ரசிகர். எனக்கும் நன்றாகப் பழக்கம் !
வா குட்டி வாத்தியார் தம்பி! உங்க கையெழுத்தும் வேணும். போடுங்க !
போட்டேன்.
வாழ்த்துக்கள் தம்பி! எல்லாம் கேள்விப்பட்டேன். எங்க ஊருப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு அமெரிக்கா போகப் போறீங்களாமே! பி டி மாஸ்டர் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம். அது சரி, எங்க அவ்வளவு அவசரமா ஓடிட்டீங்க ? என்றார்.
கல்யாணத்துக்கு முன்னாடி நான் செய்யவேண்டிய ஒரு முக்கியமான கடமை பாக்கியிருந்தது. அதுக்குத்தான் போய்ட்டு வந்தேன்.
இங்கேயே அதைச் செஞ்சுடுங்களேன்!
இங்கேயேவா! போலீஸ் ஸ்டேஷனிலா?
அதிலென்ன தப்பு? அம்மா ,அப்பா, இலக்கிய வாத்தி, வைஜயந்தி ,இன்ஸ்பெக்டர் சொன்னார்கள்.
ஸ்டேஷனுக்கு வந்த போலீஸ்காரர்கள் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்தார்கள்.
லாக்கப் ரூமிலிருந்து பிசிற் மற்றும் ரவுடிகள் எல்லாரும் எட்டிப் பார்த்தார்கள்.
சரி என்று தீர்மானித்து வைஜயந்திக்கு முன்னாடி மண்டியிட்டுக் கேட்டேன்.
“என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா?”
கொஞ்சம் முன்னால் ஓடிப்போய் வாங்கிவந்த மோதிரத்தை நீட்டி அவளிடம் புரபோஸ் செய்தேன்.
போலீஸ் ஸ்டேஷனில் புரபோஸ் செய்த முதல் காதலன் நானாகத்தான் இருக்கும்.
முற்றும்.


