மாகாளி மகாத்மியம் –
‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினம் படித்தவர்கள், சொல்வார்கள். வாசகர்களில் மொத்தம் இரண்டே பிரிவினர்தான் இருக்கிறார்களாம். ஒரு சாரார் பொ.செ படித்தவர்கள் ; மற்றவர், பொ .செ படிக்காதவர்கள் என்று. பிறகு திரைப்படமாக வந்த பின்னும் பொ.செ படம் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று இருபிரிவினர் ஆயினர் என்பர்.
இந்த கணக்கு ‘மாகாளிக் கிழங்கு’ ஊறுகாய்க்கும் பொருந்தும். அதாகப்பட்டது, மாகாளி ஊறுகாய் நிரம்பப் பிடித்தவர்கள். மாகாளி, சுத்தமாகப் பிடிக்காதவர்கள்.
பொதுவாகக் குளிர் காலத்தில், தலை தூக்கும் ‘மாகாளிக் கிழங்கு’, மயிலாப்பூர் மாட வீதி, திருச்சி ஆண்டார் வீதி முனை போன்ற இடங்களில் பிரசித்தம். மற்ற ஊர்களில் எங்கு கிடைக்கும் என்பதை மாகாளி ரசிகர்கள் அறிவார்கள்.
செய்முறை என்னோவோ சிம்பிள்தான் ;
‘இதுக்கா இத்தனை விலை?’ என்று, அடாவடியாகப் பேரம் பேசி வாங்கி வந்த இந்த பழுப்பு நிறக் கிழங்குகளை நன்கு கழுவி, தண்ணீரில் போட்டு கணவரிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
அதுவும் அந்த ஐந்து பேர், காரசாரமாக நரம்பு முறுக்கேற தொலைக்காட்சியில் விவாதம் என்கிற பெயரில் உரத்த குரலெடுத்து வார்த்தைகளால் போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது கொடுத்தால் – தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, கிழங்கைக் கசக்கி, சீவி தோலெடுத்து, உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி, நறுக்கிக் கொடுத்து விடுவார்.
பிறகு துண்டங்களை, கெட்டி மோரில் இட்டு, உப்பு, மஞ்சள் பொடி, தேவையான அளவு மிளகாய்ப் பொடி போட்டுக் கலந்து குலுக்கி, கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைக்க வேண்டும். சிலர் அதில் எலுமிச்சை துண்டுகளை நறுக்கிப் போடுவதுண்டு. அவ்வப்போது கிளறினால் ஐந்து நாட்களுக்குள் ரெடி.
இவ்வளவு சிம்பிள் ஒன்னும் கிடையாது, என்று மகளிர் அணி சண்டைக்கெல்லாம் வரக்கூடாது. பார்த்ததைச் சொன்னேன். அம்புட்டுதான். நாளாக நாளாக ‘சன்செட் யெல்லோ’வில் மெருகு கூடும். பிடித்தவர்களுக்கு தயிர் சாதத்தின் பெஸ்ட் துணை.
சிலர், அதில் இருக்கும் மாகாளியை எடுக்காமல், வெறும் எலுமிச்சை துண்டை மட்டும் எடுத்துத் தொட்டுக் கொள்வார்கள். அவர்கள் வில்லங்கமான போஸ்ட்..களுக்கு, கமெண்ட் போட்டு வம்பில் மாட்டாமல், வெறும் ‘லைக்’ மட்டும் போட்டு ஒதுங்கிக்கொள்ளும் ரகம். சிலருக்கு உள்ளே இருக்கும் மாகாளி காலியானாலும் கரைசலை விட மனசிருக்காது..
பிடிக்காதவர்களுக்கு , அடுத்த நாளே Expiry தேதி வந்து விட்டது போலத் தோன்றும். பிடித்தவர்களுக்கு அடுத்த மாகாளி சீசன் வரைத் தாங்கும்.
கல்வராயன் மலை, ஜவ்வாதுமலை, கொல்லிமலை என மலைப்பிரதேசத்தில் பொதுவாக பாறைகளின் இடுக்குகளில் வளரும் இவை, உடம்பு சூட்டைக் குறைக்கவும், இரத்த சுத்திகரிப்புக்கும் சிறந்தது என்கிறார்கள். இதன் மூலப் பொருட்கள், அழகு சாதன தயாரிப்புகளில் இடம் பெறுகின்றன. பயாலஜி படித்தவர்கள் இதை Decalepis hamiltonii என்று கூறுவார்கள். சிறிய மஞ்சள் நிற பூக்கள் கொண்ட மரக்கொடித் தாவர வகையைச் சேர்ந்த இவை ஒரு கிளையில் இரட்டை காய்களைக் கொண்டதாக இருக்கும்.
இப்படித்தான், புதிதாக வேலைக்குச் சேர்ந்த சமயம், நானும் என் நண்பனும் , எங்கள் பாஸ்..ஸின் அழைப்பை ஏற்று, அவர் வீட்டுக்கு மதிய உணவுக்குப் போனோம். அவர் மனைவி அன்பாகப் பரிமாற துவங்கி, ஆரம்பத்திலேயே ஓரமாய், சிறிய அளவு மாகாளிக் கிழங்கு ஊறுகாய் வைத்தார்.
என் நண்பனைப் பார்த்து, “உங்களுக்கு பிடிக்குமோனோ..?” என்று கேட்க, பாஸ் அவனைப் பார்க்க, மாகாளி பற்றி முன்பின் அறியாத அவன், பிற்கால ப்ரோமோஷனை உத்தேசித்து, ‘ம்’ என்று தலை ஆட்டி விட்டான். மாமி நகர்ந்ததும்,
கெமிஸ்ட்ரி மேஜரான அவன், “என்னடா இது, எத்திலீன் – டை – க்ளோரைடை, furnace’ ல போட்டு பொசுக்கிற மாதிரி ஓர் அசுர வாடை வர்ரது, என்று ரகஸ்யமாக சொல்லியபடி உடனடியாக அதிலிருந்து விடுபட, ‘லபக்’ என்று ஒரு நொடியில் முழுங்கினான்.
மாமி, தயிர்சாத முறை வரும்போது, “கவனிச்சேன், நீங்க நம்ம ரகம் போலாயிருக்கு..(!)” என, மோர் கரைசலோடு மாகாளியை, மீண்டும் தாராளமாகப் போட அது கங்கை பிரவாகமாக எடுத்து தயிர் சாதத்துடன் கலக்க “ஙே.” என விழித்தான்.
‘ஙே’ என விழிக்க காப்பி ரைட் ஒன்றும் கிடையாதுதானே..!
