Kumudam - Wikipedia

நான் மீட்டிங்கில் அப்படிச் சொல்லவேயில்லை

Kumudam by Kumudam Publications Pvt Ltdஒரு பிரபலமானவரின் செயலால் குமுதம் கோர்ட் வாசற்படியை மிதிக்க வேண்டியிருந்தது (குமுதம் பல வழக்குகளைச் சந்தித்திருந்தாலும் இந்த அத்தியாய நிகழ்வில் நாங்கள் இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் விஷயத்தின் தீவிரம் மனசுக்குப் புரிந்தது. அல்லது மனசுக்குள் ஊடுருவியது.)

எந்தப் பொறுப்பில் அல்லது பதவியில் இருந்தாலும் பத்திரிகை வேலை என்பது எந்த அளவுக்கு சுவாரஸ்யமும் சுவையும் நிரம்பியதாக உள்ளதோ.. அதே அளவுக்கு ரிஸ்க்கும் பயங்கரங்களும் நிறைந்ததாக இருக்கும். காதலிப்பதுபோல்.. கல்யாணம் செய்து கொள்வதுபோல்.. விமானம் ஓட்டுவதுபோல் த்ரில் பாதி திகில் பாதி கலந்து செய்த உத்யோகம் இது.

எங்களின் (அதாவது என் பிளஸ் என் கணவரின்) ஒவ்வொரு குமுத அனுபவத்தையும் குறிப்பிடும்போது, அதை எங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சந்தோஷமாக… அல்லது கவலையாக நினைக்க முடியவில்லை. ஒட்டு மொத்தக் குமுதமும் எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது …பின் புலத்தில் இருந்தது.

அதென்ன கோர்ட் சம்பவம்?

குமுதம் ஆசிரியர் புத்தகப் பிரியர். ஏ…..கப்பட்ட புத்தகங்கள் வாசித்தவர். இன்ன வகைதான் படிக்க வேண்டும் என்ற வரைமுறை ஏதும் வைத்துக்கொள்ளாமல்.. தனிப்பட்ட பற்றோ வெறுப்போ கொள்ளாமல் கண்டதைப் படித்துப் பண்டிதரானவர். இப்போது மாதிரி அப்போதெல்லாம்  ஆடியோ புத்தகம்.. இ – புக்ஸ் என்று எதுவும் கிடையாது என்பதால், கனம் கனமாய் நூல்கள் வாங்கிக் குவித்தவர். அனைத்து வகைகளிலும் குறைந்தது நூறு புத்தகமாவது வைத்திருந்தார் என்பார்கள்.

வீட்டில் இருந்த லைப்ரரி அறை போதவில்லை. எனவே லைப்ரரி வைக்கவென்றே ஒரு பங்களா வாங்கினார். பக்காவான லைப்ரரி. வகைப்படுத்தி.. வரிசைப்படுத்தி.. நம்பர்  போட்டுப் பராமரிக்க லைப்ரேரியன் உள்பட சகல விதங்களிலும் அது ஒரு டிபிகல் லைப்ரரி. குமுதம் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பொது நூலகம் போலவே. ரெஃபரன்ஸ் எடுக்கச் சிறந்த புத்தகங்கள் இருந்தன.

வரிசை வரிசையான ஷெல்புகளிலும் பீரோக்களிலும், அத்த்த்த்தனை புத்தகங்களையும் அடுக்கிய பிறகும், விஸ்தாரமான ஹாலில் நிறைய இடம் இருந்தது. எடிட்டரின் மனசில் ஓர் ஐடியா. இந்த ஹாலை வித்தியாசமாகப் பயன்படுத்தினால் என்ன?

அந்த ஐடியா…

மாதம் ஒரு முறை (கடைசி வெள்ளிக்கிழமை என்று நினைவு) லைப்ரரி மீட்டிங் என்ற ஒன்றை நடத்துவது. ஏதேனும் ஒரு துறையின்  பிரபலமாக விளங்கும் நபர் ஒருவரை அழைத்துத் தன் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்வது. அதன் சுருக்கத்தை அடுத்த குமுதம் இதழில் பிரசுரிப்பது.

தன் இணை, துணை ஆசிரியர்களிடம் இது பற்றிக் கலந்தாலோசித்துச் செயல்படுத்த ஆரம்பித்தும்விட்டார்.

சில பல துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் அனுபவம் வாய்ந்த.. புகழின் உச்சியில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். லிஸ்ட் போடுவது, எடிட்டர் டிக் செய்த அந்த நபரை அணுகி விஷயத்தைச் சொல்லித் தேதி கொடுத்து ஃபிக்ஸ் செய்வது, கேஸட்டில் அந்த ஒன்றரை மணி நேர சிற்றுரையை ரெகார்ட் செய்வது என்ற அனைத்தும் என் கணவரின் வேலை. அந்த கேஸட்டைக் கொண்டு வந்து கொடுத்தவுடன் நான்  டைப் செய்ய ஆரம்பித்துவிடுவேன்.

என்ன ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள். (இது ஒரு பெரிய அதிர்ஷ்டமாக்கும் என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்). அந்த லைப்ரரி மீட்டிங்கில் குமுதம் எடிட்டோரியலில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உண்டு.

அதிகபட்சம் பத்துப் பேர்.

ஆனால் வரும் பிரபலத்துக்குத் தெரியும். அந்தப் பத்துப் பேரிடம் பேசுவது பத்துலட்சம் பேருக்கு எதிரில் பேசுவதற்குச சமம்.

அதனால்தான் சுஜாதா அந்த லைப்ரரி மீட்டிங்கில் பேசியபோது “என் எதிரில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டுக்கு வணக்கம்.” என்றதோடு, தொடர்ந்து குமுதம் = தமிழ்நாடு என்றும் சொன்னார்.

இந்த லைப்ரரி மீட்டிங்கில் பேசிய பிரபலங்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும் என்றாலும் உற்சாகமிகுதியால் அவர்கள் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல்தான் பேசுவார்கள். அதில் நான்கில் ஒரு பங்குதான் பிரசுரமாகும். உண்மையில் முழுவதையும் டைப் செய்தால் முப்பது பக்கத்துக்கு வரும். அதில் ஆறேழு பக்கங்கள்தான் பிரசுரமாகும்.

இப்போது சொல்லுங்கள். முழுவதும் கேட்ட குமுதத்துடன் இணைந்து நாரும் மணந்ததுதானே? நான் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாமல்  வேறு எப்படிச் சொல்வதாம்?

இந்தக் குமுதம் லைப்ரரி மீட்டிங்கில் ஒரு பிரபல இயக்குநர் வந்து பேசினார். வழக்கம் போல், குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி, ராகி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன், புனிதன், லேனா தமிழ்வாணன் (இவர்தான் பிரபலத்துக்கு  மாலை  போட்டு, குளிர்பானம் திறந்து வைப்பார்), பிரியா கல்யாண ராமன். பிரசன்னா என்கிற ரவி, பால்யூ, பாமா கோபாலன், சந்துரு, புகைப்பட நிபுணர் என்ற வழக்கமான குமுதம் குழு இருந்தது.

அந்த இயக்குநர் பேசப் பேச.. அந்தச் சிறு கூட்டம் ரசித்துக் கைதட்டத்தட்ட.. உற்சாக மிகுதியில் சில ரகசியங்களை வெளிப்படுத்தினார். அவர் எந்தப் பிரபல இயக்குநரிடம் உதவியாளராகப் பயிற்சி பெற்று உயர் நிலையை அடைந்தாரோ அவர் தன் உதவியாளர்களை எவ்வளவு கடுமையாக நடத்துவார் என்பதைக் குறிப்பிட்டார். (வேண்டுமென்றே மட்டம் தட்டவில்லை. சில நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது தன்னிச்சையாக அவர் திட்டும் வார்த்தைகளை இயல்பாகக் குறிப்பிட்டுவிட்டார்.)

வழக்கம்போல் அன்றைக்கு காஸட் என்னிடம் வந்தது. வழக்கம்போல் டைப் செய்தேன்.

மறுநாள் கட்டுரையைப் படித்துப் பார்த்த  துணை ஆசிரியர் “தைரியமாய்ப் பேசிவிட்டார். உங்க மிஸஸ்ஸூம் ஒரு வார்த்தைகூட விடாமல் டைப் செய்துட்டாங்க. ஆனால் இப்படியெல்லாம் நான் பேசலைன்னு அவர் மறுத்துட்டா வம்பாயிடும். எனவே என்ன செய்யறீங்க… அந்த டைரக்டர்கிட்ட போய், இதுல ஒரு கையெழுத்து வாங்கிட்டு வந்துடுங்க” என்றார்.

அதன்படியே கையெழுத்தும் வாங்கியாயிற்று. கட்டுரை பிரசுரமாயிற்று. லைப்ரரி மீட்டிங் கட்டுரை படிப்பதற்கென்றே ஒரு பெரிய ரசிகர்கூட்டம் காத்திருக்கும். குமுதம் வந்தவுடன் அந்தப் பகுதியை அவசரமாய்த் தேடிப் படித்தவர்களும் உண்டு. ‘இந்த மீட்டிங்கை வாரா வாரம் நடத்துங்களேன். பிரசுரித்தால் சுவாரஸ்மாய் இருக்குமே’ என்று ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள்.

அந்த வாரம் அந்த இயக்குநரின் கட்டுரை பிரசுரமான இரண்டு நாட்களில் வக்கீல் நோட்டீஸ் வந்தது. ‘நான் மீட்டிங்கில் இப்படிச் சொல்லவேயில்லை’ என்றும் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் காணப்பட்டது.

பாமா கோபாலனை அழைத்து எடிட்டர் விசாரிக்க, கையெழுத்தைக் காண்பித்தார்.

போன் செய்து விசாரித்தபோது… தான் அந்தக் கையெழுத்தைப் போடவில்லை என்று டைரக்டர் மறுத்தார். நிருபரே  போட்டுவிட்டார் என்றதோடு தன் கையெழுத்து இப்படியே இருக்காது என்றார். அடுத்து காஸட்டில் உள்ளது தன் குரல் இல்லை என்றும் யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

இதற்காகப் பிரசுரகர்த்தா பி வி பார்த்சாரதி, எடிட்டர் எஸ் ஏ பி பாமா  கோபாலன் மூவரும் கோர்ட்டுக்கு இரண்டு மூன்று முறை போக வேண்டியிருந்தது. கூசிக்குறுகிப் போய்விட்டார் என் கணவர். கோர்ட் படி ஏறியதைத் தன் வாழ்நாள் அவமானம் என்று கடைசி வரைக்கும் மன உளைச்சலுடன் மறுகியது எனக்கு மட்டுமே தெரியும்.

கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கியது தெரியுமா?

குமுத நாட்கள் தொடரும்