கொஞ்சம் பொறுமை சார்

 

குவிகம் அன்பர்களுக்கு வணக்கம்.

கடைசிப் பக்கம் என்று டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் குவிகம் மின்னிதழில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

குவிகம் நடுப்பக்கத்தை திரு. சந்திரமோகன் தொடர்ந்து ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார்.

சரி.. இவர்களுடன்   பந்தயத்தில் ஓடினால் பத்தடி கடப்பதற்குள் நுரை தப்பிவிடும் என்ற உள்ளுணர்வு எச்சரிக்கையோடு ஏதாவது ஒரு பக்கத்தில் கிறுக்கலாம். என்று முடிவுக்கு வந்திருக்கிறேன்.

வேண்டுமானால் ஒன்று பண்ணலாம். நான் எந்தப் பக்கத்தில் கிறுக்கப் போகிறேன் என்று ஒவ்வொரு மாதமும் வாசகர்களுக்கு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நூறு டன் என் அன்பையும் பாசத்தையும் பரிசாக வழங்கலாம் என்ற பொன்னான திட்டத்தை விமர்சையாக அறிவிக்கலாம். பரிசளிக்க் நான் தயாராக இருக்கிறேன்.

கிறுக்கல்கள் என்று தலைப்பு இருப்பதனால் இன்னது என்று ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல் என் மனதை ஆக்ரமித்துக் கொண்ட ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கிறுக்கலாம் என்று இருக்கிறேன்.All books by SL Naanu

நிச்சயமாக அரசியல் கிடையாது. நான் மேதாவி என்று காட்டிக்கொள்ள வரட்டு விமர்சனங்கள் இருக்காது.

வாழ்க்கையில் நான் சந்தித்த.. என்னை பாதித்த விஷயங்களைப் பற்றி எழுதப் போகிறேன்.

அதனால் ரொம்ப சீரியஸாக யோசிக்காமல் ஜாலியாகப் படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்குத் தாவுங்கள்.

வாழ்க்கையில் நமக்குப் பொறுமை அவசியம் இருக்க வேண்டும்.

Have patience in life, but first of all with yourself..

எப்போதே படித்தது. மனதில் பதிந்துவிட்ட வாசகம்.

பொறுமையைப் பற்றி சொல்லும்போது நான் சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு காணொளி நினைவுக்கு வருகிறது.

 

வெளிநாட்டில் ஒரு திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் உலகளவில் விருது பெற்ற பத்து நிமிட குறும்படத்தைத் திரையிடுவதாக அறிவித்திருந்தார்கள்.

மக்களும் விருது பெற்ற அந்தக் குறும்படத்தைக் காண ஆவலோடு வந்திருந்தார்கள். முதல் காட்சியே ஹவுஸ்-புல்.

குறும்படமும் திரையில் தோன்ற ஆரம்பித்தது.

ஒரு அறையின் உத்திரம் திரையில் தெரிந்தது.

உத்திரத்தில் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று பார்வையாளர்கள் ஆவலோடு பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.

ஒரு நிமிடம்.. இரண்டு நிமிடங்கள்..

இப்படியே ஐந்து நிமிடங்கள்வரை வெறும் உத்திரம் மட்டுமே திரையில் தெரிந்தது.

ஒருவேளை இயந்திரக் கோளாரோ.. அதனால்தான் கேமரா வேலை செய்யவில்லையோ என்று பார்வையாளர்கள் முதலில் நினைத்தார்கள்.

ஆனால் தொடர்ந்து உத்திரம் மட்டுமே திரையில் தெரிய அவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள். பொறுமை இழந்தார்கள்.

வெறும் உத்திரத்தைக் காட்டும் இந்தப் படத்துக்குப் போய் விருது கிடைத்திருக்கிறது. அதையும் திரையரங்கு உரிமையாளர் துணிந்து திரையிடுகிறார்.. இதை இப்படியே விடக்கூடாது என்று பார்வையாளர்கள் கொதித்தெழுந்து கூச்சல் போட ஆயத்தமானார்கள்.

அந்த ஒன்பதாவது நிமிடம் கேமரா உத்திரத்திலிருந்து மெதுவாக கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

இறுதியாக கட்டிலில் படுத்திருக்கும் இளைஞனைக் காட்டியது. அவன் உடல் முழுதும் செயலிழந்து மரக்கட்டைபோல்..

முகத்தில் மட்டும் சில அசைவுகள்..

அப்போது திரையில் ஒரு வாசகம்..

உங்களால் ஒன்பது நிமிடங்கள்கூட பொறுமையாக உத்திரத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லையே. இதோ கட்டிலில் படுத்திருக்கும் இளைஞனைப் பாருங்கள்.. ஒரு விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு உடம்பு முழுவதும் செயலிழந்து கிடக்கும் இந்த இளைஞன் இருபத்தி நான்கு மணிநேரமும் உத்திரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். அவனுடைய நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

இந்த வாசகத்தைப் படித்தவுடன் கொதித்தெழுந்த பார்வையாளர்கள் மௌனமாக மறுபடியும் இருக்கையில் அமர்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலிருந்தும் நீர் துளிர்த்தது.

இந்த காணொளியைப் பார்த்த எனக்கு அதிலிருந்து மீண்டுவர சில நிமிடங்கள் பிடித்தன.

இப்போதெல்லாம் நமக்கு வாழ்க்கையில் எதற்குமே பொறுமை இருப்பதில்லை. முக்கியமாக இளைஞர்களுக்கு.

டிவி ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு சேனலை இரண்டு நிமிடங்களுக்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

கடைக்குப் போய் பொருட்கள் வாங்க பொறுமையில்லாமல் எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுகிறார்கள்.

வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் இரண்டு வார்த்தை பேசக் கூடப் பொறுமை இல்லாமல் காதில் ஹெட்-போனை மாட்டிக் கொண்டு நழுவுகிறார்கள்.

இவ்வளவு ஏன்.. காதலில் கூட பொறுமையைக் கடைப்பிடிக்காமல் அடிக்கடி “பிரேக்-அப்” களுக்கு ஆளாகிறார்கள்.

”நிறைவுடமை நீங்காமை வேண்டின் – பொற்யுடைமை

போற்றி யொழுகப் படும்”

இது வள்ளுவன் வாக்கு.

இதற்கு பொருள் கூறும் மு. வரதராசனார்..

“நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்”

மறுக்க முடியாத உண்மை.

சோதனைகளைத் தாங்கி நிற்கும் பொறுமைதான் நிரந்தர வெற்றிக்கு அஸ்திவாரம்.

இதைப் பொறுமையாகப் படித்த உங்கள் பொறுமைக்கு வாழ்த்துகள்..

 

(கிறுக்கல்கள் தொடரும்)