
95 வயது தாத்தாவுக்கு திடீரென்று மூளையில் ரத்த கசிவு. ரத்தக்கொதிப்போ, சக்கரையோ அவருக்குக் கிடையாது. தினமும் காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் நடைப் பயிற்சி செய்வார். தன்னுடைய வேலைகளைப் பிறர் உதவியின்றித் தானே செய்து கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டிலும், சரியான நேரத்தில் தூங்குவதிலும் மிகக் கவனமாக இருப்பார். ஆனாலும் முதுமை அவருக்கு மூளையில் ரத்தக் கசிவை ஏற்படுத்தியது.
திடீரென மயங்கி விழுந்த தாத்தாவை, அவசர அவசரமாக அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள் உறவினர்கள். எல்லாப் பரிசோதனைகளும் – பிரெய்ன் ஸ்கான் உட்பட – செய்து, மூளையில் ஓரளவுக்குப் பெரிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். அவருடைய நினைவு தப்பி இருந்ததாலும், மூளையில் இரத்தக் கசிவினால், கபாலத்துக்குள் அழுத்தம் ஏற்பட்டிருந்ததாலும், அவருக்குச் சிறிது மூச்சுத் திணறலும் இருந்தது. பொதுவாக, இம்மாதிரி ரத்தக்கசிவு இளம் வயதுக்காரர்களுக்கு ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவின் அளவையும், மூளையில் இரத்தம் கசியும் இடத்தையும் பொருத்து, அவர்கள் இயற்கையாகவே தேறி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆனால், இந்த தாத்தாவுக்கு சிறிது பெரிய அளவிலான இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அதிலிருந்து மீண்டு வருவது என்பது நிச்சயமாக கூற முடியாத ஒன்று. அப்படி மீண்டு வந்தாரெனில் அதை ஒரு ‘மெடிக்கல் மிராக்கிள்’ (மருத்துவ அதிசயம்) என்று கூறலாம்! இந்த நிலையில் மருத்துவமனையில், தாத்தாவை ‘வென்டிலேட்டரி’ல் போட்டுவிட்டார்கள். தாத்தாவின் சுவாசம் சீரானது. மயக்கம் தெளியவில்லை. இரண்டு மூன்று நாட்களாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை – உறவினர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
‘வென்டிலேட்டர் சப்போர்ட்’ என்பது, மெஷின்கள் மூலம் செயற்கையாக நுரையீரல்களுக்குள் பிராணவாயு (ஆக்ஸிஜன்) செலுத்தி, நுரையீரல்களை இயங்க வைப்பது. அதன் மூலம், பிராணவாயுவை இரத்தம் மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்துவது. உயிர் காக்கும் (Life saving) ஒரு செயல் முறை இது. இயற்கையாக சுவாசிக்கும் நிலைமை திரும்பிவிடும் என்கிற வியாதிகளுக்கு, நோயாளிகளுக்கு இது அவசியம் செய்யப்பட வேண்டும். ஓரிரு வாரங்களில் படிப்படியாக வென்டிலேட்டர் சப்போர்டைக் குறைத்து, அதை நீக்கிவிடலாம்.
வென்டிலேட்டர்கள் நம்முடைய நுரையீரல்கள் செய்யும் வேலையைச் செய்வதால், அந்த நோயாளி உயிருடன் இருப்பார். ஓரிரு வாரங்களில் சரியாகிவிடக்கூடிய சில நோய்களில், வென்டிலேட்டர் அவசியமானது. ’அக்யூட் கிரைசிஸ்’ (Acute crisis) என்பார்கள் – அதிலிருந்து மீண்டவுடன், வென்டிலேட்டிலிருந்து நோயாளியைப் பிரித்து விடலாம். மிகவும் வயதானவர்களுக்கு இந்த வென்டிலேட்டரை உபயோகிக்கும் முன், உறவினர்களைக் கலந்து ஆலோசிப்பதுடன்,, வென்டிலேட்டரை நீக்கிவிட்டால் நோயாளிக்கு என்ன ஆகும், வென்டிலேட்டரே போடாவிட்டால் என்ன ஆகும், போன்ற விவரங்களை, உறவினர்களுடன் விவாதித்து, அதற்குப் பிறகு வென்டிலேட்டரில் இணைப்பது நல்லது.
வென்டிலேட்டர் இருப்பதால் வரும் குழப்பங்களைத் (complications) தவிர்க்க, ஓரளவிற்கு எளிதாக சுவாசிக்க உதவும் வகையில் செய்யப்படுவது ‘டிரகியாஸ்டமி’ எனப்படும் மூச்சு குழலில் துளையிடும் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை. தாத்தாவிற்கு, ‘டிரகியாஸ்டமி’ செய்வதற்கு, உறவினரின் அனுமதியைக் கேட்டனர் மருத்துவர்கள். இந்த நிலையில், உறவினர்களால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவு காலத்திற்கு வென்டிலேட்டரில் அவரை வைத்திருப்பது? என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக அவர்கள் முன் நின்றது. ‘டிரகியாஸ்டமி’ பயமுறுத்தியது.
தாத்தாவினுடைய வயதிற்கு, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அவரைப் போன்ற வயதானவர்களை, வென்டிலேட்டர் போன்றவற்றுடன் இணைத்து சிரமப்படுத்தாமல், ‘கன்ஸர்வேடிவ் மேனேஜ்மென்ட்’ என்ற வகையில், மிதமான சிகிச்சை அளிப்பதுதான் நல்லது.
இதில் உறவினர்களால், சில சமயங்களில் முடிவெடுக்க முடியாது! தாத்தாவின் மீது இருக்கும் அதீதமான பாசத்தினால், இவர்களால் ஒரு முடிவினை எடுக்க முடியாத நிலையில் மருத்துவர்கள்தான் உறவினர்களுக்குத் தெளிவாகச் சொல்லவேண்டும்.
என்னிடம் வந்த உறவினர்களிடம் (அவர்கள் எப்படி என்னைத் தேடி வந்தார்கள் என்பது இங்கு அவசியமில்லை என்பதால், தவிர்க்கப்படுகிறது!) நான் இந்த விவரங்களை எடுத்துக் கூறி, “தாத்தாவிற்கு வந்திருப்பது, வயதானவர்களுக்கு வரக்கூடிய ‘ஸ்ட்ரோக்’; இதிலிருந்து அவர் மீள்வது அவ்வளவு நிச்சயமாக சொல்ல முடியாது. அவரை அதிகமாக சிரமப் படுத்தாமல், சாதாரண மருந்துகள் கொடுத்து, வீட்டிலேயே பார்த்துக் கொள்வது தான் நல்லது. இவரது வயதிற்கும், இரத்தக் கசிவிற்கும், வென்டிலேட்டர் தேவையில்லை. அதனால் ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. நீங்கள் உங்கள் முடிவை, மருத்துவமனை டாக்டர்களிடம் சொல்லலாம். தாத்தாவை வென்டிலேட்டிலிருந்து விடுவிப்பது நல்லது. அவருடைய வாழ்வு நிறைவான வாழ்வு. அவரை அதிகமாகத் துன்புறுத்தாமல் இருப்பது தான் நாம் அவருக்குச் செய்யும் மிகச்சிறந்த சேவை” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
அவ்வாறே அவர் வென்டிலேட்டிலிருந்து டிஸ்கனெக்ட் செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். உறவினர்கள், நண்பர்களின் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், 24 மணி நேரத்தில் அமைதியாக இவ்வுலக வாழ்வை நீத்தார் அந்தப் பெரியவர். ஓம் சாந்தி.
என் மீது அன்பும், மதிப்பும் நிறைந்த பெரியவர் ஒருவர், என்னைப் பார்க்க வந்தபோது அவருக்கு 70 வயது இருக்கும். மிகவும் ஆரோக்கியமான உடலுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அவருக்கு, ஏதோ தலைவலி என்பது போல வந்ததால், அவரை சிடி ஸ்கேன் எடுப்பதற்கு அனுப்பி வைத்தேன். எடுத்துக் கொண்டு வந்த அவர், என்னை அன்புடன் கடிந்து கொண்டார்! சிடி ஸ்கேன் மெஷின் உள்ளே சென்று ஸ்கேன் எடுத்து, வெளியே வந்தவுடன் அவருக்கு இந்தமாதிரி பரிசோதனைகள் செய்வதெல்லாம் பிடிக்கவில்லை. “டாக்டர் நீங்க சொன்னதுக்காக இந்த டெஸ்ட் எடுத்து இருக்கேன். இனிமே இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் எனக்கு வேண்டாம். ஒருவேளை, நான் மயக்கமாக நினைவு இல்லாமல் இருந்தால், நீங்கள் தான் பார்க்கப் போகிறீர்கள்! எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுங்கள். அந்த நிலையில், எனக்கு எந்த விதமான ஊசியோ, பரிசோதனைகளோ செய்யக்கூடாது. எந்த விதமான புதிய சிகிச்சை முறைகளையும் – முக்கியமாக இந்த வென்டிலேட்டர் – என் மீது உபயோகப்படுத்தக் கூடாது” என்று கேட்டார்! நான் மையமாகச் சிரித்து வைத்தேன்.
வென்டிலேட்டரில் இருந்து எடுத்த பிறகு, ஒரு பயனுள்ள வாழ்வை அவர்கள் வாழ்வார்கள் என்ற சாத்தியம் இல்லாத போது தேவையில்லாமல் வென்டிலேட்டரில் போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது, அதுவும் 80 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு.
சில வருடங்கள் சென்று, என்னிடம் வந்த அந்த பெரியவர் காலையில் நடை பயிற்சிக்கு கிளம்பும்போது, தாகம் எடுக்க , அவர் மனைவியிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்து, திரும்பி ஒரு அடி வைப்பதற்குள் அங்கேயே மயங்கி விழுந்தார். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு எழுந்திருக்கவே இல்லை. எல்லோருக்கும் இப்படிப்பட்ட அனாயசமரணம் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்படுபவர்கள் புண்ணியம் செய்தவர்கள் !
நான் கூட அவருக்குக் கொடுத்த சத்தியத்தை மீறவில்லை – அவர் மீற விடவில்லை!

எங்கள் உறவு வட்டத்திலும் என் அம்மா, என் மாமா ஆகியோருக்கு ஏற்பட்டது. நண்பர்களுக்கு அறிவுரை சொல்லும் நான் என் விஷயம் என்று வந்தபோது குழம்பித்தான் போனேன்.
ஸ்ரீராம்
LikeLike