காமுப்பாட்டி என்கிற காமாட்சி பாட்டி அந்த குடும்பத்தின் ஆணிவேர். தொண்ணூற்று இரண்டு வயது தான் ஆகிறது பாட்டிக்கு. கைகால்கள் எல்லாம் இன்னும் கெட்டி. யாருடைய தயவையும் எதிர்பாராமல், தன் காரியங்களை தானே செய்து கொண்டு விடுவாள். வேளா வேளைக்கு சாப்பாட்டை மட்டும் மசித்து கொடுத்து விட்டால் போதும்.
போன தடவை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த போது, பாட்டியின் மூன்றாவது பையன் கோபு அவளுக்கு ஐ-பேட் வாங்கிக் கொடுத்திருந்தான். பாட்டி அதை நோண்டி வெகு சீக்கிரமே உபயோகிக்க கற்றுக் கொண்டுவிட்டது.
கண்ணுக்கருகில் ஐ-பேடை வைத்துக் கொண்டு, உலகில் நடக்கும் அத்தனை அக்கப் போர்களையும் அரைகுரையாக படித்துவிட்டு, தன்னுடைய விபரீதமான கற்பனையையும் சேர்த்து பாட்டி செய்யும் அலப்பறையை தாங்க முடியாமல் தத்தளித்தது கொண்டிருந்தது அந்த குடும்பம்.
அந்தப் பக்கமாக தண்ணீர் குடிக்க வந்த லல்லு என்கிற லலிதாவை, அவளுடைய பேத்தியை, “டீ லல்லு, இங்கே வா” என்று கூப்பிட்டாள்.
பேப்பரை படிக்காமலேயே அன்றைய ராசிபலன் அவளுக்குத் தெரிந்துவிட்டது.
“சுனிதா திரும்ப வந்துட்டாளாமே” என்றாள்.
“இல்லே பாட்டி, அடுத்த மாசம் தான் அவளுக்கு டெலிவரி டைம்.”
“நான் பக்கத்து வீட்டு சுனிதாவை சொல்லல்லேடி. சுனிதா வில்லியம்ஸ் பத்தி பேசிண்டிருக்கேன்.”
ஓ, அமெரிக்கா பக்கம் போய்விட்டது பாட்டி.
“ஆமாம் பாட்டி, இன்னைக்கி காத்தாலே தான் வந்ததா டிவிலே பார்த்தேன்”
“என்னமோ. 287 நாளைக்கு அப்புறம் அவளும், அவளோட புருஷனும் பத்திரமா ஒண்ணா வந்து சேர்ந்துட்டாளே. அதை சொல்லணும்.”
நம்பரையெல்லாம் கரெக்டாகத்தான் சொல்கிறது. மற்ற விஷயங்களில் தான் கொஞ்சம் வீக்.
“ஐயோ, பாட்டி. அது அவங்களோட புருஷன் இல்லை. அவங்க கூட போன இன்னொரு ஆஸ்ட்ரோனாட், அவ்வளவுதான்.”
“என்னமோ, வந்து சேர்ந்தாளே. எலான் ரஸ்க்கோட ‘டைமெக்ஸ்’ கேப்ஸ்யூல் தான் வந்தாளாமே.”
“அது ரஸ்க் இல்லே பாட்டி. மஸ்க். எலான் மஸ்க்”
“அது என்னவோ இருந்துட்டு போகட்டும். இனிமே இந்த ‘போயிங்’காரளா நம்பி ப்ரோஜனம் இல்லை. தப்பித்தவறிக்கூட அவாளோட ப்ளேன்ல இனிமே ஏறிடாதே. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா கஷ்டம்”
“இந்த ‘டிரம்ப்’ வந்தப்பறம் நம்மளவா எல்லோரையும் டிபோர்ட் பண்ணிண்டு இருக்காளாமே. நம்ம கோபுவையும் திருப்பி அனுப்பிடுவானோ?”
அடுத்த வர்ஷன் ஐ-பேட் தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கவலை பாட்டிக்கு.
“அதெல்லாம் ஒண்ணும் அனுப்ப மாட்டா பாட்டி. டாகுமெண்ட்ஸ் இல்லாமே அங்கே போனவங்களை தான் திருப்பி அனுப்பறாங்க”
“டாரிப்ஃபை எல்லாம் வேறே ஏத்திட்டாளாமே. நம்ம ஊருலேயேயும் தக்காளி, வெங்காயத்திலேருந்து எல்லா வெலையும் இனிமே ஏறிடும்.”
“அதுக்கும் இங்கே தக்காளி, வெங்காயம் வெலைக்கும் ஒண்ணும் சம்மந்தம் இல்லே பாட்டி”
“உனக்கு தெரியாதுடி. இங்கே எல்லாரும் எதாவது ஒரு காரணத்துக்காக வெலையை ஏத்த காத்துண்டுருப்பா. நீ வேணா பாரேன்”
பாட்டி சொல்வதும் ஒரு வேளை நிஜமோ என்று தோன்றியது. ஒன்றும் இல்லாமலே எல்லா விலையும் எகிறிக் கொண்டிருக்கிறது.
“மாமாங்கம் மாமாங்கமா சண்டை போட்டுண்டிருந்தவா இப்போ ஒண்ணா சேர்ந்துட்டா பாத்தியா?”
“யாரை சொல்றே பாட்டி?”
“அமெரிக்காவையும் ரஷ்யாவையும் தான் சொல்றேன். இந்த ‘புதின்’ ரொம்ப சாமர்த்தியக்காரன். இவ்வளோ காலம் ஃப்ரெண்ட்ஸா இருந்த யூரோப்காரன் இப்போ பரம வைரி ஆயிட்டான்”
பாட்டி இந்தியன் ஃபாரிஸ் சர்வீசில் சேர்ந்திருந்தால், எல்லாரையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பாள். தப்பித்தவறி சாம்பசிவையருக்கு வாழ்க்கைப்பட்டு அடுப்படியில் காலத்தை வேஸ்ட் செய்து விட்டாள்.
“ஆமா, இப்போ அமெரிக்காவும் ரஷ்யாக்காரனும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டதாலே, இனிமே ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்துலே யாரை வில்லனா போடுவா? வழக்கமா ரஷ்யாக்காரனை தானே போடுவா.”
“சைனாக்காரனை போடுவாங்களோ என்னவோ? அவங்க ரெண்டு பேருக்கும் தான் ஆகாதே”
“அதுதான் ஏற்கெனவே ‘Dr.No’-லே வந்துடுத்தே”
ஏதேது, பாட்டி தன் வயதில் எல்லா ‘ஜேம்ஸ் பாண்ட்’ படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கும் போலிருக்கிறது.
“ஆமா, இங்கே ‘அர்பன்’ கம்பெனிக்காரா ‘சர்வெண்ட் மெயிட்’டை இப்போ அவர்லி பேஸிஸ்லே அனுப்பறாளாமே. நம்ம வீட்டு வேலைக்காரி சரோஜாயோட அட்டகாசம் தாங்க முடியல்லே. அவளை அனுப்பிச்சிட்டு இந்த அர்பன்காராகிட்டேருந்து இனிமே ஆர்டர் பண்ணணும்”
அப்பாடா, உலகமெல்லாம் சுற்றி விட்டு, ஒரு வழியாக பாட்டி இந்தியாவிற்கு வந்து விட்டாள்.
“அவளை அனுப்பிச்சுட்டா உனக்கு அக்கம்பக்கத்து அக்கப்போரை யாரு சொல்லுவா?”
“அதுவும் வாஸ்தவம்தான். போனா போறது. இவளே இருந்துட்டுப் போறா”
“ஆமா, இந்த தரூர் எங்கே? கொஞ்ச நாளா சத்தமே இல்லே. வழக்கமா யாருக்கும் புரியாத இங்கிலீஷ்லே பேசிக்கிட்டுருப்பானே. அவன் கட்சி தாவிடுவானோன்னு தோணுது”
“தெரியாது பாட்டி. எனக்கு பாலிடிக்ஸ்லே அவ்வளவா இன்டிரஸ்ட் இல்லே.”
“எல்லாம் தெரிஞ்சிக்கணும்டி. நாளைக்கு இன்டர்வியூ எதுக்காவது போனேன்னா கேள்வி கேப்பா”
அந்த சமயம் லல்லுவோட தம்பி அந்தப் பக்கமாக வந்தான்.
“டேய் அம்பி. இங்கே வா” என்றாள் பாட்டி.
அதுதான் சமயம் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் லல்லு.
